தமிழும் ஞானபீடமும்
வங்கத்தின் உலகப்புகழ் பெற்ற இயக்குனர் சத்யஜித்ரே ஒருமுறை ஆஸ்கர் விருதைப் பற்றிச் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. ''ஆஸ்கர் என்பது அமெரிக்க அரசால் சிறந்த ஆங்கில மொழி குறிப்பாக அமெரிக்க ஆங்கில மொழித் திரைப்படங்களுக்காகக் கொடுக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட விருது. அதனைப் பெற்றால்தான் நம் திரைப்படங்களின் தரம் உலகத் தரத்தில் உள்ளது என்று சொல்லுவதற்கில்லை'' என்பதுதான் அவருடைய கருத்து. தற்போது வெளி நாட்டுத் திரைப்படங்களுக்கும் தனியாக ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. அனேகமாக அதனைப் பெற்றால்தான் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கிறது என்ற நிதர்சனமான உண்மையும், வேறு பல காரணிகளும் அந்தத் தனி வகை ஆஸ்கர் வழங்கப்படுவதற்குக் காரணமாக இருக்கலாம். சமமான தரத்தைக் கொண்ட பல திரைப்படங்கள் ஒருசேரப் போட்டிபோடும்பொது ஒரே ஒரு திரைப்படம் அந்த மிகப் பிரசித்தி பெற்ற விருதைப் பெறுகிறது. அவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்ற திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களை விட எல்ல வகையிலும் சிறந்திருந்த காரணத்தால்தான் விருதைப் பெற்றன என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். ஏறக்குறைய இதே போன்ற நிலைதான் தமிழ் ஞானபீடப் பரிசை வெல்லுவதிலும் நிலவுகிறது.
இந்தியாவில் மாநில மொழிகளில் வெளிவரும் இலக்கியப்படைப்புகளுக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த விருதாக ஞானபீடம் கருதப்படுகிறது. இதைத் தவிர்த்து இந்திய அரசால் தரப்படுகின்ற சாகித்ய அகாதமி விருதும் அந்தந்த வருடங்களில் வெளியாகின்ற சிறந்த மாநில மொழி படைப்புகளுக்குத் தரப்படுகிறது. இவ்வாறு இந்த விருதுகள் வழங்கப்பட்ட படைப்புகள் இந்தியாவின் இதர மொழிகளிலும் சில சமயம் மற்ற உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் அந்தஸ்தையும் பெருமையையும் அடைகின்றன. இந்த விருதுகளால் அறியப்ப்படும் அடையாளத்திற்காகவே இந்த நாட்டின் ஒவ்வொரு இலக்கியவாதியும் தன் இலக்கியப் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக இந்த விருதுகளைக் குறிப்பாக ஞானபீடப் பரிசைக் கருதுகிறார். ஆனால் தமிழுக்கு இதுவரை கிடைத்த ஞானபீடப்பரிசு இரண்டே இரண்டுதான். 1977 ல் அகிலனின் ''சித்திரப்பாவை'' ஞானபீடத்தைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு இருபத்து மூன்று வருடங்கள் கழித்து 2000 த்தில் ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்ட ஞானபீடபரிசு. அவ்வளவுதான். ஆனால் அதே சமயம் மற்ற மொழிகளுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நோக்கும்போது தமிழ் இலக்கியப் போக்கு பின் தங்கி விட்டது என்று சொல்லுவதை விட தமிழ் இலக்கியத்தை சந்தைப்படுத்தும் திறன் குன்றி விட்டது என்று சொல்வதே பொருந்தும். மலையாளத்திற்கு ஐந்து விருதுகள், ஹிந்திக்கு ஒன்பது விருதுகள், கன்னடத்திற்கு எட்டு விருதுகள், உர்து மொழிக்கு நான்கு விருதுகள், குஜராத்தி மொழிக்கு மூன்று விருதுகள் என்ற நிலையைப் பார்க்கும்போது, தரமான இலக்கியப்பயணத்தில் இருந்து தமிழ் விலகிச் செல்ல ஆரம்பித்துவிட்டது போலத் தோன்றலாம். ஆனால் அது உண்மை என்று கூறுவது பித்துக்குளித்தனம்.
ஓர் இலக்கியத்தின் தரம் என்பது அது சார்ந்த சமுதாயத்தையும் மரபையும் இயல்பையும் அதன் பிறப்பின் காலத்திற்குத் துரோகம் செய்யாமல் பதிவு செய்து பிற்காலச் சந்ததிக்கு அவர்கள் பயணித்த பாதையின் பண்பை மறக்கவியலாதவர்களாக மாற்றுவதில் இருக்கிறது. அப்படி தத்தம் கடமைகளைச் செம்மையாகச் செய்த தமிழ் இலக்கியங்கள் ஐம்பதுகளுக்குப்பின் ஏராளமாகவே வெளிவந்திருக்கின்றன. கடந்த அறுபது வருடங்களில் இரண்டே படைப்பாளிகள்தான் ஞானபீடக் குழுவின் கண்களில் பட்டிருக்கிறார்கள் என்றால் இந்தப் பரிசைப்பற்றி பெரிய அளவில் யாரும் அங்கலாய்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறென். புதுமைப்பித்தன் போன்ற ஒரு படைப்பாளன் மிக அபூர்வமாகவே பிறப்பதுண்டு. ஞானபீடப்பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் புதுமைப்பித்தனுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக நான் நினைக்கவில்லை. கா. ந. சு, லா.ச. ராமாமிர்தம் ( இந்தியாவின் மிக முக்கியமான இலக்கியகர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்று கமில் சுவலபிலால் புகழப்பட்டவர்), தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி , கு. அழகிரிசாமி, கு.பா. ராஜகோபாலன், கி. ராஜநாராயணன்,மௌனி, நா. பிச்சமூர்த்தி என்று பழைய பட்டியலில் உள்ள படைப்பாளிகளும், இந்திரா பார்த்தசாரதி, பொன்னீலன், அசோகமித்திரன், பிரபஞ்சன் மற்றும் தற்போது எழுதிவரும் ஜெயமொகன் என்று புதுப்பட்டியலில் இருக்கும் படைப்பாளிகளும் ஞானபீடப்பரிசு தரப்படாததினால் மற்ற மொழிகளின் படைப்புகளை விட தரம் தாழ்ந்த படைப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள் என்பதாக அர்த்தம் கொள்ள வேண்டும் என்று நம்மை நிர்ப்பந்திக்கிறது ஞானபீடப்பரிசின் புறக்கணிப்பு மனப்பான்மை. ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டபோது போது கூட ஜெயகாந்தன் அந்த பரிசை ஜனாதிபதிக்கு முன்பாகவே அதை நிராகரிக்க வேண்டும் நான் மானசீகமாக எண்ணியதுண்டு. அதை அவரே ஒரு பேட்டியில் வேறு விதமாகக் கூறியிருந்தார். ''இது அங்கீகாரமல்ல; அங்கீகாரத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்'' ( it is not a recognition; but an endorsement). அந்தப் பரிசை அவர் நிராகரித்திருந்தால் தமிழின் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.
இதையும் தாண்டி நமக்கு இந்தப்பரிசு கிடைத்தேயாக வேண்டும் என்று புலம்பும் தமிழ் படைப்பாளிகளுக்கு என் பக்கத்தில் இருந்து ஒரு சிறு விண்ணப்பம். நம் மொழியின் படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றியும் ஆங்கிலமொழி வாயிலாக உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள். காட்டையும் கட்டாந்தரையையும் மிக அழகாகச் சொல்லத் தெரிந்த நம் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் செல்வாக்கு பெற்ற ஓர் இலக்கிய ஆளுமையாக உருவெடுக்க வேண்டுமானால் தேசிய அளவிளான வாசகக்கூட்டத்தையும் சர்வதேச அளவிலான தெரிதலையும் கவர்ந்திழுக்கக் கூடிய வல்லமை பெற்றிருந்தாக வேண்டும். தமிழின் சல்மா மலையாளத்தின் கமலா தாஸின் படைப்பாற்றலையும் ஆங்கிலப் புலமையையும் பெற்றிருந்தால் அவருடைய படைப்புகள் கமலா தாஸின் படைப்புகளுக்கு நிகராகப் பேசப்பட்டிருக்கும். கமலா தாஸ் தான் செய்யவில்லை என்றால் எம்.டி.வாசுதேவன் நாயரோ அனந்தமூர்த்தியோ உலகுக்கு அவரை அறிமுகம் செய்துவைக்கத் தயாராக இருக்கிறார்கள். தமிழில் அப்படி யாரும் இல்லை.மலையாளத்தின் எம்.டி. வாசுதேவன் நாயர், தகழி, கன்னடத்தின் யு.ஆர். அனந்தமூர்த்தி, க்ரீஷ் கர்னாட் போன்றோர் அந்த மாதிரியான ஆளுமைக்குச் சான்றுகள். இது கைகூடாதவரை இந்த மாதிரியான பரிசை பெறுவதற்கரிய பரிசாக எண்ணி மயங்க வேண்டிய அவசியம் இல்லை.
கா. சரவணன்.
You may visit www.solitaryindian.blogspot.com to read my blogs in English.