Wednesday, 20 February 2013

சில செங்கமலங்கள் இப்படித்தான்...

* இந்தக் கட்டுரையில்  வருகின்ற சம்பவங்கள்  உண்மையானவை . கதாபாத்திரங்களின் பெயர்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன .  

எனக்கு நன்றாக விவரம் தெரிய ஆரம்பித்த காலங்களில் இருந்தும், அரும்பு மீசை முளைக்கத் தொடங்கிய காலங்களில் இருந்தும் ஒரு விஷயத்தில் நான் அசைக்காத நம்பிக்கை வைத்து இருந்தேன். அது பெண் இனத்தைப் பற்றிய என்னுடைய புரிதல் பற்றியது எனலாம். ஓர் ஆணாக இருந்ததாலோ நான் சந்திக்க நேரிட்ட ஆண்களில் அக அழகு என்ற ஒன்றைப் பார்க்க முடியாததாலோ ஆண்களில் விரும்பத்தக்க விஷயங்கள் என்றவை என் பார்வைக்கு வந்தது இல்லை. அதுவே அவர்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்ராயமோ, அவர்களிடம் ஆத்மார்த்தமான ஒட்டுதலோ இல்லாமல் போனதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதே சமயம் பெண்களிடன் நான் பேசாமல் இருந்த போதினும், அவர்களுடன் சந்தித்துப்பேச வாய்ப்பு கிடைக்காத போதினும் அவர்களைப் பற்றிய ஓர் உயர்வான எண்ணம் எனக்கு என்றுமே இருந்து கொண்டுதான் இருந்தது. பார்க்காத ஒன்றை பார்க்காத வரை நமக்குள் திமிறிக்கொண்டிருக்கும் சில அரிப்புகளின் நாசூக்கான வெளிப்படாத, வெளிப்படுத்தப் படாத ஓர் உணர்வாக அது இருந்திருக்கலாம். பெண்கள் ஒரு புதிரைப்போன்றவர்கள், காதல் கொள்ளத் தகுந்தவர்கள், ஆண்களின் அடிப்படை வாழ்வுக்கு ஆதாரமானவர்கள், அவர்கள் பங்களிப்பு ஒருவரின் வாழ்வில் எந்த அளவுக்கு இன்றியமையாதது என்ற பெண்கள் பால் இருந்த என்னுடைய மதிப்பையும் ஆச்சரியத்தையும் சில தினங்களுக்குள் உடைத்து நொறுக்கி இப்படியும் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள் என்ற விழிப்புணர்வைத் தந்தது செங்கமலம்தான் .  

செங்கமலத்தை தெரியாதவர்கள் எங்கள் ஊரில் இருந்திருக்க வாய்ப்பில்லை. குள்ளமான உயரத்துடன், வெற்றிலையை குதக்கிக்கொண்டுபுளிச்’ ‘புளிச்என்று எச்சிலைத் துப்பிக்கொண்டு அந்த அம்மணி வரும்போது  சேர்ந்தவாறே வரும் பிசாசைப் போன்ற ஓர் ஆவியையையும் மக்கள் சேர்ந்தே கவனித்திருப்பார்கள். அந்த அம்மணியின் கணவர் ராசப்பன் ஓர் அப்பாவி மனிதன். விவசாயி. மிகவும் நேர்மையான,  அதிகம் பேசாத யாவரும் கெட்டு தான் மட்டும் வாழவேண்டும் என்ற பேய் இதுவரைக்கும் பிடிக்காத மனிதன். அனேகமாக அவரை அந்தப்பேய் பிடிப்பதற்கு வாய்ப்பில்லை. அவர் வாழ்ந்த முறை அந்த மாதிரியானது. காகம் கரைவது போல நாள் முழுவதும் கூவிக் கொண்டிருக்கும் செங்கமலத்தை திருமணம் செய்யும்போது அவருடைய கண்கள்  தற்காலிகமாகக் குருடாகி விட்டனவோ என்று கூட எனக்கு எண்ணத் தோன்றும். அவர் அழகைப் பார்த்து மயங்கி விட்டார் என்று சொல்ல கடுகளவும் வாய்ப்பே இல்லை. ஏதாவது சொத்து சுகம் என்றாலும் அதற்கும் போதுமான காரணங்கள் இல்லைசெங்கமலத்தை அவர் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் என்றால் அது அவருடைய சக்திக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒன்று அசந்தர்ப்பமாக அவர் கண்ணை மூடிக்கொண்டு சரி என்று சொல்ல வைத்திருக்கும் என்று நினைத்தேன். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இரு வேறு துருவங்கள் ஏதோ ஒரு புள்ளியில் தம்மை மறந்த தருணம் அவர்கள் இணைந்த தருணமாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு அவர் அதற்காக வருந்தினாரா அல்லது செங்கமலத்துடன்  தன்னால் எப்படி அவருடன் சில கணங்களை சுயம் இழந்து கழிக்க முடிந்தது என்ற ஆச்சரியம் ஏற்பட்டதா  என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே வெளிச்சமான உண்மை. அவர்கள் மகன் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் எப்படியோ தன் போக்கில் வாழ்ந்துகொண்டு தனக்கென ஒரு பொண்டாட்டியையும் கட்டிக்கொண்டு தன்போக்கில் எவருக்கும் எந்த பிரச்சினையையும் தராமல் வாழ்ந்து கொண்டிருப்பவன். தான் செங்கமலத்தின் மகன் என்ற அடையாளம் தவிர்த்து வேறு எதுவும் தனக்குத் தேவையில்லை என்ற கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பவன் என்று அவனைப் பார்த்தால் தெரியும்.


செங்கமலத்துக்கு  என்ன ஆகுமோ தெரியாது. யாரையாவது திட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதுவும் அசிங்கமாகத் திட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது ரயில் பாதைக்கு அருகில் தூங்கும் சேரி மக்களுக்கு ரயிலின் ஓலத்தைக் கேட்காவிட்டால் தூக்கம் வராததைப் போல அம்மணிக்கு தினமும் காலையில் எதாவது கெட்ட வார்த்தைகளில் ஒப்பாரி வைக்காவிட்டால் அன்றைய பொழுது விடிந்த பாடாக இருக்காது. ‘முதல் மரியாதைபடத்தில் வரும் வடிவுக்கரசி கதாப்பாத்திரம் பேசுவதைப்போல எதைப் பற்றியும் ஒரு சுரணை இல்லாமல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிராணி அது . எப்போது பார்த்தாலும் தனது கணவனுடன் எதையாவது சொல்லிச் சண்டை போட்டுக்கொண்டே இருப்பது அம்மணிக்கு பிகவும் பிடித்தமான விஷயம் . அந்தப்பெண்  ஏன் இப்படிக் கத்திக்  கொண்டிருக்கிறாள், எதற்காகக் கத்திக்கொண்டு இருக்கிறாள் என்று அவருக்கு இதுநாள் வரை தெரிந்ததே இல்லை என்பதைப் போல உட்கார்ந்திருப்பார் அவர். உதாரணமாக அதிகாலை எழுந்தவுடன்இப்படி உட்கார்ந்திருக்கியே....எங்காவது போய் செத்துத் தொலைத்தால் என்ன...! நானும் தலை முழுகிவிட்டு நிம்மதியா இருப்பேன்லஎன்று விடிந்து விடியாததுமாய் திடீரென்று கத்தத் தொடங்கினால் அவருக்கு என்ன புரியும்? தான் என்ன செய்துவிட்டதற்காக இவள் தன்னைச் சாகச் சொல்கிறாள் என்பது அவருக்குப் புரிந்ததே இல்லை. கத்துவது அவள் குணம்...சும்மா கேட்டும் கேட்காமல் இருப்பது என் குணம் என்பதைப்போல அவர் இருப்பார்.


செங்கமலத்திடம்  யாரும் அவள் பேசுவது தவறு என்று மட்டும் சொல்லிவிடக்கூடாது. சொன்னவன் அதோடு செத்தான். “ஏன் உன் பொச்சைப் பொத்திக்கிட்டு சும்மா போக மாட்டியோஎன்று கொச்சையாக  செங்கமலம் திருவாய் மலர்ந்து அருளிவிட்டால்  என்ன செய்வது என்ற பயம் ஆட்கொண்ட தருணமே ராசப்பன் அண்ணனுக்கு உதவ எண்ணும் எவரும் அக்கணமே பின்வாங்கி விடுவர்செங்கமலம்  மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை. ஆனால் உபயோகிக்கும் வசவு வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால் புரியும். தகாத மனித உறவுகளையும், ஆண் பெண் அந்தரங்க உறுப்புகளையும் எவ்வளவு துல்லியமாக கணக்கிட்டு அலசி ஆராய்ந்து அதை எப்படியெல்லாம் வசவு வார்த்தைகளாகக் கணவனை நோக்கியும் பிறத்தியாரை நோக்கியும் சமய சந்தர்ப்பம் என்ற எதையும் பார்க்காமல் மனசாட்சியே இல்லாமல் பிரயோகம் செய்யலாம் என்று அவள் பிரயத்தனம் செய்துள்ளமை புலனாகும்.


இப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ராசப்பன்  அண்ணனைப் பார்க்கும்போது எனக்கு ஒரு மரியாதையும் மதிப்பும் ஏற்படும். ஒரு மிகச் சிறந்த பண்பாளனால் மட்டுமே இந்த மாதிரியான ஒரு பெண்ணை சமாளித்து வாழ்க்கை நடத்த முடியும். அவரளவில் இதை அவர் நன்றாகப் புரிந்தே வைத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். என்ன கத்தினாலும் தான் பொறுமை இழந்து திருப்பிக் கத்திவிடக்கூடாது என்பதில் மட்டும் அவர் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தார். அவர் சத்தமாகப் பேசியே நான் கேட்ட்தில்லை. கத்திக்கேட்பது என்பது நடக்கப் போகாத விஷயம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் இருவரின் நாடகங்களை நான் என் வீட்டில் இருந்தே பார்க்க முடியும். வீட்டின் உள்ளே இருந்தால் குரலை மட்டும் கேட்க முடியும்.


அன்று சத்தம் வேறு மாதிரியாகக் கேட்டது. இந்த முறை செங்கமலம்  அவரைச் சாகச் சொல்லிக் கத்தவில்லை. மாறாகஅய்யோ செத்துப் போயிட்டீகளாஎன்று அவள் கத்தியதுதான் கேட்டது. “அய்யோ நான் என்ன செய்வேன்...? மருந்தைக் குடிச்சிட்டாரே! நான் என்ன செய்வேன்?” என்ற வழக்கத்துக்கு மாறான கூக்குரலைக் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு விஷயம் புலபட்டு விட்டது. அசம்பாவிதம் ஏதோ நடந்துவிட்டது. சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் திடீரென்று எழுந்தேன். கைலியை மடித்துக்கொண்டு செருப்பைக் கூட அணியாமல் அவர் வீட்டை நோக்கி ஓடினேன். வீட்டைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்த்து. வீடு முழுவதும் பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்தின் வாடை நிறைந்திருந்தது. ராசப்பன்  அண்ணன் மூச்சு விட யத்தனிக்கும் எக்கிப்போன வயிருடன் நிலைகுத்திய பார்வையுடன் தலையை ஒருபக்கம் சாய்த்தவாறு படுத்துக்கிடந்தார். பக்கத்தில் செங்கமலம்  தலைவிரிக்கோலமாய் அவர் உடல் மீது விழுந்து புரண்டு கொண்டிருந்தாள். “என்ன விட்டுப்புட்டுப் போயிட்டிங்களே...இன்னமே நான் என்ன செய்வேன்...அய்யோ கடவுளே....நான் என்ன செய்வேன்என்று புலம்பிக்கொண்டு இருந்தாள். அவர் மகன் என்ன செய்வது என்று தெரியாமல் பக்கத்தில்அப்பா’... ‘அப்பாஎன்று புலம்பிக்கொண்டிருந்தான். ராசப்பன்  அண்ணன் இன்னும் உயிருடன்தான் இருந்தார். ஆனால் செங்கமலம் அவர் செத்துப் போய்விட்டதைப்போலவே கத்திக்கொண்டு இருந்தாள். அவர் பக்கத்தில் சென்ற நான் அவருடைய ஏறி இறங்கும் வயிற்றைப் பார்த்ததுடன் சுதாரித்தேன். அவரை மருத்துவமனை கொண்டு செல்ல எந்த சாதனமோ வாகனமோ அந்த இடத்தில் இல்லை. வெறி கொண்டவனைப் போல ஊருக்கு உள்ளே சென்று பதினைந்து நிமிடங்கள் அங்கும் இங்கும் அலைந்து வாடகை வேன் வைத்திருப்பவர்களிடம் நிலைமையைச் சொல்லி ஒரு வண்டியை அழைத்து வந்தேன். என்னுடன் அவர் மகனும் இருந்தான். விட்டுக்கு வந்தவுடன் செங்கமலத்தை ஒரு புறம் தள்ளிவிட்டு அவரை அப்படியே தூக்கிக் கொண்டு வேனுக்குள் வைத்து ராமனாதபுரம் அரசு மருத்துவமனையை நோக்கி செல்லுமாறு டிரைவரிடம் சொன்னேன். வண்டி அதிக பட்சமான வேகத்துடன் பறந்தது. கோப்பேரிமடம் சோதனைச் சாவடியைக் கடந்த போது ஓர் ஆட்டுக்குட்டி எதிரே வந்த பேருந்து ஒன்றின் சக்கரத்துக்குள் மாட்டிக் கொண்டு கால்களை உதறிக்கொண்டு கண் முன்னே மடிந்து இறந்தது. அதைப் பார்த்த எனக்கு என்னவோ போல் இருந்த்து. ஈசனை அவ்வப்போது தேவைப்பட்டால் மட்டும் நினைக்கும் என் மனம் அப்போதுஎப்படியாவது இந்த நல்ல மனிதனைக் காப்பாற்றி விடடா கடவுளேஎன்று அரற்றத் தொடங்கியது.


கொடுத்திருந்த சோப்பு நீரின் காரணமாக வழி நெடுகக் கொஞ்சம் கொஞ்சமாக பூச்சி மருந்து அவர் வாயில் இருந்து வெளியே வரத் தொடங்கியிருந்தது. என் மடியில் அவர் தலை கிடத்தப் பட்டு இருந்தது. அவர் எடுத்த வாந்தி என் கைலி முழுவதையும் நனைத்தது. அதன் வீச்சம் எனக்குக் குமட்டலை வரவழைத்த்து. எப்படி இதை இவரால் குடிக்க முடிந்தது?  பூச்சி மருந்தின் நாற்றம் செங்கமலத்தின்  வார்த்தைகளின் நாற்றத்தைக் காட்டிலும் குறைவுதான் என்று அவர் நினைத்திருக்க்க் கூடும் என்று நினைத்தேன்.


அண்ணே....உங்களுக்கு ஒண்ணும் இல்ல...நல்லாத்தான் இருக்கீங்க....இந்தா ஆஸ்பத்திரி வந்திருச்சு...எல்லாம் சரியாகிப்போகும்....” என்று நான் பிதற்றிக்கொண்டு வந்ததெல்லாம் அவருடைய செவிகளுக்குள் நுழைந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. இறுதியாக மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து விட்டோம். விஷயத்தின் வீரியத்தைப் பார்த்த மருத்துவர்களும் தங்களால் ஆனமட்டும் பார்த்தார்கள். என்னவோ தெரியவில்லை. என்னிடம் எஃப் ஆர் வாங்கி வாருங்கள், போலீஸ் கேஸ் அது இது என்று மருத்துவர்கள் என்னை எரிச்சல் செய்யவில்லை. அவர் அளவுக்கதிகமாக பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார் என்றும் அது ரத்தத்தில் கலந்து விட்டது என்றும் அவர் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் சிரமம் என்றும் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் போராடிய பிறகு மருத்துவர்கள் என்னிடம் சொன்னார்கள். நான் வந்த வேகத்தின் காரணமாக என்னுடன் யாரும் வரவில்லை. அவர்  கொஞ்சம் கொஞ்சமாக என் கண் முன்னே மடிந்து கொண்டிருந்தார். எங்களைச் சுற்றி நான்கு மருத்துவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர் வாயிலிருந்து ஒரு குழாய் கீழே ஒரு தொட்டியில் விடப்பட்டிருந்தது. அந்தத் தொட்டி பாதிக்கும் மேலாக பூச்சி மருந்தால் நிறைந்திருந்தது. அவரை நான் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த போதே எந்த அசைவும் இல்லாமல் தனது பயணத்தை முடித்துக்கொண்டார் அவர். எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. அவருடைய நெஞ்சை ஒரு முறை வருடிவிட்டேன். வயிற்றுப் பகுதியை நீவி விட்டேன். கைகளின் மேற்புறத்தை ஒரு முறை பரிவாகத் தடவி விட்டேன். பீறிட்டு வந்த அழுகையை எதற்காகவோ அடக்கிக் கொண்டேன். காப்பாற்ற முடியாமல் போய்விட்ட்தே என்ற கழிவிரக்கம் என்னை அவ்விடத்தை விட்டு அகலச் சொன்னது.


அவரைக் கொண்டுவந்த இரண்டு மணி நேரங்களில் அவரைப் பிணமாக வீட்டிற்கே திரும்பக்கொண்டு வந்தேன். பலர் உடனிருந்தார்கள். எப்படிச் செத்தார் என்பதை அறிந்து கொள்வதில் பலருக்கு மிகவும் ஆவலாக இருந்ததுசெங்கமலம்  ஒன்றும் பேசவில்லை. ஏதோ பித்து பிடித்தவளைப் போல உட்கார்ந்து இருந்தாள். அவருடைய இறப்பாவது அவளுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அது தவறு என்பது பின்புதான் தெரிந்த்து.


ராசப்பன் அண்ணன் இறந்து இரண்டு நாட்கள்தான் இருக்கும். ஒருமுறை  அவள் வீட்டைக்  கடந்து சென்றபோது என்னை வழி மறித்து நின்றாள் செங்கமலம் . “ ஏம்பா சரவணா...ஏதோ இன்சூரன்சு இந்த ஆள் பண்ணியிருக்காராமே...அது எனக்குத்தானப்பா வரும்...இல்ல வேறு எவனுக்காவது எழுதிக் கிழுதி வச்சிருக்கானா இந்த மனுஷன்...செத்தப்ப நீதான் பக்கத்தில் இருந்தியாமே...கொஞ்சம் உதவுப்பாஎன்று சொன்ன போது நான் ஒன்றும் சொல்லிக்கொள்ள வில்லை.


கிரியைக் காரியங்கள் இன்னும் நிறைவு பெறாமல் இருந்தன. நான்காம் நாளே வழக்கமான கத்தல் சத்தம் கேட்ட்து. “கொள்ளையிலே போறவன்...செத்துத் தொலஞ்சுட்டான்...நீ மட்டும் என்ன புடுங்குறதற்கா இருக்கே...நீயும் போய் தொலைய வேண்டியதுதானேஎன்று பழைய பல்லவி மீண்டும் கேட்கத் தொடங்கியபோது நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். “அடக் கேவலமே! உன்னுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர் இறந்து போனதே மேல்


பெண்களும் கூட இந்த அளவுக்கு ஒரு சனியனாக, தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும் அளவுக்கு கருணையற்றவர்களாக இருக்க முடியும் என்பதை எனக்கு உணர்த்திய செங்கமலத்துக்கு  நான் அவ்வப்போது நன்றி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன்.