நான் சென்ற வாரம் அலுவலக வேலையாக கோயம்புத்தூர் சென்றுவிட்டு
திருச்சிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்த நேரம். ரயிலில் பயணம் செய்ய
விருப்பமின்றி பேருந்தில் பயணிக்க விரும்பி நான் எடுத்த முடிவு நான் வெகுநாட்களாக மீண்டும்
ஒருமுறை படிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஒரு குறிப்பிட்ட குறுநாவல் குறித்து
நான் கொண்டிருந்த ஏக்கத்தை போக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. கோயம்புத்தூர்
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பேருந்துகள்
புறப்படும் இடத்தில் நடைபாதையில் விஜயா பதிப்பகம் என்ற பெயரில் ஒரு புத்தகக்கடை
கண்ணில்பட்டது. பேருந்து பயணம் குறித்த என் முடிவை மிகுந்த பயனுள்ளதாக்கி இரண்டு முக்கியமான
புத்தகங்களை என் பார்வைக்குக் கொண்டுவந்த அந்த புத்தகக்கடைக்கு என்னுடைய நன்றிகள்.
அந்த இரு புத்தகங்கள் புதுமைப்பித்தனின் அனைத்து சிறுகதைகளும் அடங்கிய தொகுதி (மொத்தம்
103 சிறுகதைகள். சத்தியமாக இது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட பதிப்பு இல்லை)
மற்றும் சி.சு.செல்லப்பா என்ற ஒரு மகத்தான, சுயமரியாதை தொய்யாத, வறுமையிலும்
மிகச்செம்மையாக வாழ்ந்த எழுத்தாளன் எழுதிய “வாடிவாசல்” என்ற குறுநாவல். (இது
காலச்சுவடு வெளியிட்ட நவீன கிளாசிக் வரிசையில் அடக்கம்). கரூர் வந்து சேர்வதற்குள்
படித்துமுடித்தேன். இவற்றை நான் முக்கியமான புத்தகங்கள் என்பது என் சொந்தக்
கருத்தல்ல. இந்த இரு எழுத்தாளர்களைப் பற்றி கொஞ்சமேனும் அரசல் புரசல் அறிந்தவர்கள்
அதை ஆமோதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நான் தில்லியில்
படித்துக்கொண்டிருந்தபோது “இந்தியா டுடே” வெளியிட்ட சிறப்பிதழ் ஒன்றில் இந்த நாவலைப்
படித்ததாக நினைவிருக்கிறது. இரவலில் வாங்கிப் படித்த நாவல் நினைவில் மட்டும்
தங்கிப்போனது. கடந்த காலத்தை நினைவூட்டி, கதைகுறித்த களிப்பையும் வற்றாமல் தந்து
நினைவுகளை அவ்வப்போது வருடும் புத்தகங்கள் சில நமது நிகழ்காலத்தையும்
எதிர்காலத்தையும் மரித்துப்போய்விடாமல் காப்பாற்றும் என்பது இலக்கியப்பிரியர்கள்
கண்ட உண்மை. அவ்வகையில் அளவில் மிகச்சிறியதாகவும், பிறந்த மண்ணின் கலாச்சார
பிம்பங்களை கலப்படமில்லாமல் சொல்வதில் அளப்பதற்கரிய ஆற்றல் கொண்ட அரிய சில தமிழ்கதைகளுல்
ஒன்றாக “வாடிவாசலை” நான் கருதுகிறேன்.
அப்படி என்ன ஆற்றல் கொண்ட கதை இந்த நாவலில் காணக்கிடைக்கிறது
என்ற கேள்விக்கு கதை என்னவோ இதுதான் என்று
இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம். கிராமம் ஒன்றில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. காளைகளை
அடக்க அங்கு வந்திருக்கும் இளைஞர்களில் பிச்சி என்பவன் அடக்கமுடியாத காரிக்காளை
(கரிய நிறமுடைய காளை) என்று பெயர்பெற்ற பெரியபட்டி ஜமீன்தாரின் காளையை அடக்க
வந்திருப்பதாக சொல்கிறான். சிலர் எள்ளி நகையாடுகிறார்கள். அவன் செத்துப்போக
வந்திருப்பதாக சிலர் பரிதாபப்படுகிறார்கள். இறுதியில் அதை அடக்குகிறான். முன்பு
அவன் தந்தை அம்புலி அந்தக் காளையை அடக்க முயன்று அதில் தோல்வியடைந்து காயம்பட்டு
இறந்து விடுகிறான். அவன் இறக்கும் தறுவாயில் சொன்ன வார்த்தைகளுக்காக தான்
அக்காளையை அடக்க வந்ததாகச் சொல்கிறான் பிச்சி. இறுதியில் அந்தக் காளை ஜமீன்தாரால்
சுட்டுக்கொல்லப்படுகிறது.
செல்லப்பா என்ன நினைத்துக்கொண்டு இந்தக்கதையை எழுதினாரோ அதை
அவருடைய மனோதர்மத்திற்கு விட்டுவிடுவது நல்லது. ஜல்லிக்கட்டு குறித்த தனது அடங்காத
ஆவலை அவர் இக்கதை மூலம் வெளிப்படுத்தி திருப்திப்பட்டுக் கொண்டாரா அல்லது
ஜல்லிக்கட்டும் அது குறித்த ஒரு மரபு சார்ந்த விலாவாரியான விசாரிப்பும் தமிழ்
இலக்கியத்தளத்தில் அவசியம் பேசப்பட வேண்டிய ஒன்று என்று நினைத்தாரா...
தெரியவில்லை.
தெரிந்தே அரங்கேறவிருக்கும் ஆபத்துக்களை தவிர்க்கும் கடமையை
முன்னிட்டு தற்கால அரசாங்கம் ஜல்லிக்கட்டு விளையாட்டை பல பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்படுத்தி வருகிறது. இருந்தும்
ஆங்காங்கே பெருங்காயங்களும் உயிரிழப்பும் நிகழ்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
வலிய வரும் ஆபத்தை நேருக்கு நேராக ஒருவித தைரியத்துடன் எதிர்கொள்ளும் இளைஞர்களின்
மனநிலை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. குண்டுகளை எதிர்பார்த்து சண்டைக்குச்
செல்லும் போர்வீரனின் மனநிலையை ஒத்தது அது. ஆனால் விளையாட்டு என்றாலும் உயிரிழப்பு
ஏற்பட வாய்ப்பு உண்டு என்ற நிதர்சனமான உண்மையோடு மரணம் நிகழும் சாத்தியத்தைத்
தரும் களம் ஒன்றை வெறும் விளையாட்டு மைதானமாக மட்டும் பார்ப்பதில் காளை அடக்குபவன்
போர் வீரனில் இருந்து பெருமளவில் வேறுபடுகிறான். சாகப்போகிறவனும் சாகடிப்பவனும்
ஒரே மனநிலையில் எதிர் துருவங்களில் நின்று சண்டையிடும்போது காணக்கிடைக்கும்
உளவியலும் தான் வெறும் ஒரு விளையாட்டுப் பொருள்தான்; தான் அடக்கப்படுவதும் கூட
வெறும் விளையாட்டுதான் என்ற உண்மையை
அறியாமல் தன்னை அடக்க வருபவனை பரம எதிரியாகக் கருதி அவனைக் கொல்லும் அளவுக்கு ஒரு
காளை வெறிகொள்ளும்போது காணக்கிடைக்கும் உளவியலும் தத்தம் செயல்தளங்களில் முற்றிலும்
மாறுபட்டவை. அந்தப் பகுத்தறிவு காளைக்கு இல்லாமல் இருப்பதுதான் ஜல்லிக்கட்டு
விளையாட்டின் கருமையம். அது இருந்திருந்தால் காளையும் காளையை அடக்குபவனும் வெறும்
பல்லாங்குழிதான் விளையாட வேண்டியிருக்கும்.
“வாடிவாசல்” காளையை அடக்கும் வெறும் கதையல்ல. காளைகளை
அடக்குவதன் மூலம் சிலர் தமது வீரத்தையும் தைரியத்தையும் தெரியப்படுத்தும்
நிகழ்ச்சிகளின் தொகுப்பும் அல்ல அது. சமதளத்தில் நின்று சமர் புரியும் வாய்ப்பு
மறுக்கப்பட்ட சமூகத்தின் வெவ்வேறு துருவங்களைச் சேர்ந்தவர்கள் வாய்பேச முடியாத
பகுத்தறிவு இல்லாத காளைகளை பகடையாக்கி தத்தம் வெறியைத் தணித்துக்கொள்ளும்
இடமாகத்தான் “வாடிவாசல்” புரியப்படுகிறது. இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள்,
விவரிப்புகள், மண் வாசனை தவறாத கிராமிய வழக்குகள், அந்தப் பகுதியில் வாழ்ந்தாலன்றி
புரியாத சில சொற்றொடர்கள் யாவும் எழுத்துப்பூர்வமான, உணர்வுப்பூர்வமான இலக்கிய
ஆர்வத்தை கிளற வல்லமை படைத்தவையே. எனினும் இவை மூலம் செல்லப்பா முன் நிறுத்தும்
சமூகம் தொடர்பான புரிதல் இதனினும் மேம்பட்டது. முக்கியமாக ஒரு காட்சியை நான் குறிப்பிடவேண்டும். பெரியபட்டி
ஜமீனின் காரிக்காளையை பிச்சி அணைவது மிகவும் ஆபத்தானது என்று கிழவன் ஒருவன்
பிச்சியை எச்சரிக்கை செய்யும்போது இன்னொருவன் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; ஏதோ
ஜமீன்தார் காளை எதற்கு வம்பு என்று ஒதுங்கிப்போகிறார்களே தவிர பயம் எல்லாம்
ஒன்றும் இல்லை என்கிறான். காளையின் தகுதியும் அதன் பலம் குறித்த சந்தேகமும்
பெரும்பாலும் அது வளரும் இடம் மற்றும் அது எவ்விதம் சந்தைப் படுத்தப்பட்டு
இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது என்பதை சூசகமாக சொல்லியிருப்பார்
செல்லப்பா. சமூக அந்தஸ்தில் உயர்வான இடத்தில் இருக்கும் சாதாரண விஷயங்களும்
அசாதாரணமான முறையில் இனங்காணப்படுகின்றன. அந்தக் காரிக்காளையைப் பற்றி ஜமீன்தாரே
பெரு மதிப்பு வைத்திருக்கிறார். அது அடக்க முடியாத ஒன்று என்பதில் அவருக்கு
எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. தான் அதனை அடக்க விரும்பும் மனக்கிடக்கையை
பிச்சி அவரிடம் அடக்கமாகச் சொல்லும்போது அவருடைய தற்செருக்கு லேசாகக் காயம்
அடைகிறது. இதை எப்படியடா உன்னால் அடக்க முடியும் அது நந்தியின் அவதாரமடா என்று
தனக்குத் தானே எண்ணிக்கொண்டு தேற்றிக்கொள்கிறார். இருந்தும் இவன் அடக்கிவிடுவானோ
என்ற பயத்தை தன்னுடைய செய்கைகளின் மூலமும் பேச்சின் மூலமும் தன்னையுமறியாமலேயே அவ்வப்போது
வெளிப்படுத்துவதை காணும் போது தான் வளர்ப்பது அடக்கமுடியாத காளையொன்றும் இல்லை;
அது அடக்கப்பட்டால் அடக்கப்படுவது காளையல்ல; தானும், காளையைச் சொல்லி தன்னோடு
சேர்ந்து வளர்ந்து விட்ட பெயரும்தான் என்பதை அவர் அறிந்துதான் வைத்திருக்கிறார்
என்பது புரிகிறது. இந்தப்பயம் பிச்சியின் கைவலிமையைப் பார்க்கும்போது
உறுதிப்படுகிறது. ஆதிக்க வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் ஜல்லிக்கட்டு
மைதானம் என்ற தளம் ஒன்றில் தனது அதிகாரம் செல்லுபடியாகாது என்பதும் அவருக்கு
நன்றாகத் தெரியும். அவரை ஒரு மகாமோசமானவராக செல்லப்பா சித்தரிக்கவில்லை என்பது ஓர்
ஆறுதலான விஷயம். இது போன்ற சூழ்நிலைகளில் தங்களது கவுரவத்தின் பிரதிநிகளாக
களத்தில் நிற்கும் காளைகளை அடக்க நினைப்பதே தவறு; அதை செய்ய முயல்பவனை எப்படியாவது
அகற்றவேண்டும் என்ற மட்டமான புத்தி கொண்டவராக ஜமீன்தார் சித்தரிக்கப்படாதது வீரம்
செறிந்த கலாச்சாரம் ஒன்று இன்னும் கலப்படம் இல்லாமல்தான் கிராமப்புறங்களில்
இன்றும் அரங்கேறி வருகிறது என்ற உண்மையை செல்லப்பா கூற எத்தனிப்பது தெரியும்.
இந்தக் காளையை அடக்குவது மகா சிரமமான காரியம்; முடியாத
ஒன்று; யோசித்து அம்முயற்சியை கைவிடுமாறு பிச்சி அறிவுறுத்தப்படும்போது ‘அததுக்கு
ஆளில்லாமலா இருப்பான்’ என்று சத்தம் வெளியே கேட்காதவாறு முனகிக்கொள்கிறான். அந்தக்
காளையை தான் அடக்கப்போகிறேன் என்று மார்தட்டி அவனால் வெளியே கொக்கரிக்க முடியாத
இடத்தில் அவன் வைக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் உண்மை.
மேலும் காளையின் செய்கைகள் வர்ணிக்கப்படும் இடங்களில் அது
சாதாரண மிருகப்பிறவிக்குணம் படைத்த காளையல்ல; மனிதனின் சாதுரியம் நிறைந்த காளை
என்று காட்டப்படுகிறது. அவிழ்த்து விட்டவுடன் தறிகெட்டு ஓடி கண்ணில் கண்டவர்களை
எல்லாம் குத்திக் கிழிக்கும் காளையாக அது காட்சி தரவில்லை. தன்னை நோக்கி
வருபவர்களை மட்டுமே அது நோக்குகிறது. யாரும் அதை நெருங்காவிட்டால் அது யாரையும்
நெருங்கப் பிரியப்படாமல் அப்படியே நிற்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் இந்த
மாதிரியான காளைகளை ‘நின்னுகுத்தி’ காளை என்பார்கள். மிகச் சிறந்த நின்னுகுத்தி
காளையாக அது காட்டப்படுகிறது. இத்தனை புத்திசாலித்தனமாகக் காட்டப்படும் காளை தான்
அடக்கப்பட்டவுடன் தனக்குள் அடக்கிவைக்கப்பட்டு இருக்கும் மிருகக்குணத்தைக் வெளிக்காட்டுகிறது.
வெறிகொண்டு பாய்ந்து பத்து பேரை குத்திக்கொல்கிறது. பின் ஆற்றங்கரைக்குச் சென்று அவமானப்படுத்தப்பட்ட
குழந்தை தண்ணீர் தொட்டிக்கு முன்பாக நின்றுகொண்டு தன் உருவத்தைப் பார்த்து தானே
குமுறி தனது ஆற்றாமையை வெளிப்படுத்துவதுபோல ஆற்று மணலை தன் மீது அள்ளீவீசிக்கொண்டு
நிற்கிறது (செறுக்கடித்துக்கொண்டு நிற்கிறது என்பது வட்டார மொழி)
செல்லப்பா முன் வைக்கும் இந்த மாறுபட்ட காளைக்குணம்
விவாதத்துக்குரியது. எங்கிருந்து இந்த மாதிரியான குணத்தைப் பெற்றது அந்தக் காளை?
மற்ற காளைகள் பிடிபட்டவுடன் எங்கோ கண்ணுக்குத் தெரியாமல் ஓடோடி மறைந்து விடுவதாகக்
கூறும் செல்லப்பா இந்தக் காளை மட்டும் கெட்ட பெயர் வந்து விடும் என்று அஞ்சும் ஒரு
மனிதன் தொடக்கத்தில் தான் நல்லவன் போல் நடிப்பதையும் அந்த நடிப்பு தான்
எதிர்பார்த்த விளைவைத் தராவிட்டால் தான் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதை கூசாமல்
வெளிப்படுத்தும் விதத்தையும் கற்றுக்கொண்டதைப்போல் நடந்து கொள்ளும் மர்மம் என்ன
என்பதைக் கேட்காமல் கேட்கிறார்? காளை அடக்கப்பட்டவுடன் காளையின் சொந்தக்காரன்
எப்படி தனது மானம் போய்விட்டதாக எண்ணி மருகுவானோ அதை காளையின் செய்கைகள் மூலம்
குறிப்பிட்டுக் காட்டுகிறார் செல்லப்பா. ஆங்கிலத்தில் இலக்கிய விவாதங்களில்
பயன்படும் “Objective Correlation” என்ற கருதுகோளை ஒத்தது
இது. காளையால் அப்படி
செய்ய முடிகிறது. ஆனால் இங்கிதம் கருதியோ சமய சந்தர்ப்பம் கருதியோ சம்பந்தப்பட்ட
மனிதன் எல்லோருக்கும் முன்பு செய்ய முடியாமல் நிற்பதை அவர் குறியீடாகக் காட்டுகிறார்.
தனது துப்பாக்கியால் அதனை சுட்டுக் கொல்வதன் மூலம் காளையை உள்ளே அரித்துக்கொண்டு
இருக்கும் அவமானம் தன்னையும் அரித்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை
உணர்த்துகிறார் ஜமீன்தார். இறுதியில் ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இந்தக் கதை
நிறைவடைகிறது. “மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு; மனுசனுக்கு ரோசம் வந்தாலும்
போச்சு”. இந்த வாக்கியம் அவமானம் என்ற வார்த்தை இருசாரார் தொடர்பான சமூகத்தை
உணர்வு ரீதியாக எவ்விதம் பாதித்து இருக்கிறது என்பதையும் அது மனிதனுக்கும்
மிருகத்துக்கும் உள்ள அறிவின் எல்லையை எந்த அளவுக்கு குறுக்கி ஒரு புள்ளியில்
சமரசம் செய்ய வைத்திருக்கிறது என்பதையும் நமக்கு உணர்த்தி செல்கிறது. நாவலின்
அடிநாதம் இதுதான் என்று நான் கருதுகிறேன். மனிதன்தான் மிருகம்; மிருகம்தான்
மனிதன்.
மூன்று தவ்வலுக்கு தாக்கு பிடித்தாலே காளையை அடக்கி
விட்டதாக அர்த்தம் என்னும் போது பிச்சி அதையும் தாண்டி அதன் கொம்பில் கட்டப்பட்டு
இருக்கும் தங்கத்தைப் பெற காளையை உண்மையிலேயே அடக்க நினைக்கிறான். அதில்
வெற்றியும் பெறுகிறான். அவனுடைய தந்தை இறக்காமல் இருந்தால் பிச்சியின் இந்த வெற்றியே
அவனுக்குப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் அவனுடைய தந்தையின் இறப்பு குறித்து
அவன் செய்யவேண்டியது தங்கத்தையும் தாண்டிய ஒன்றாக எனக்குப் படுகிறது. அது அந்தக்
காளையின் மரணம். அதை அவனால் நேரடியாகச் செய்ய முடியாது. அதைச் செய்யத் தூண்டும்
அளவுக்கு அந்தக் காளையின் சொந்தக்காரரின் செருக்கு குறுக்கொடிக்கப்பட வேண்டும்; அதை
மட்டும்தான் அவனால் செய்ய முடியும். அவன் அதை திறம்படச் செய்கிறான். அதன் மூலம்
அவன் தந்தை ஆத்மா சாந்தியடைவதாக நினைக்கிறான். அவனுடைய பழிவாங்கும் வெறியும் ஓரளவு
தணிகிறது. காளை அவனுடைய நேரடி எதிரியானாலும் உண்மையில் அவன் கொல்ல நினைப்பது
ஜமீன்தாரின் செல்வாக்கை. அவன் அதை செய்து முடிக்கிறான்.
கலாச்சார படிமங்களை நாசூக்காக சொல்வதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்று இருந்தாலும் “வாடிவாசல்” புரிந்துகொள்ள முயலும் சமூகப் பிரச்சினைகளின் பரிமாணம் இன்றைய தமிழ் இலக்கிய சமுதாயம் புறக்கணிக்க முடியாத ஒன்று. இன்று அலங்காநல்லூரிலும் அக்கம் பக்கம் இருக்கும் கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்த சமூக அவலத்தை பின்புலமாகக் கொண்டு இயங்குபவை என்று நான் சொல்ல நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதும் இல்லை. “வாடிவாசலின்” பின்னணியும் அது அறைகூவல் விடுக்கும் சில கேள்விகளும் அந்தந்த தளங்களில் புரிந்துகொள்ளப்படவேண்டும். சில நேரங்களில் அது தற்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சம் அது தற்செயலான ஒன்றாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
சரவணன். கா