Tuesday, 5 April 2016

ஓர் ஓவியனின் கதை ( An Artist’s Story)

என்னிடமிருந்து ஒரு சில வார்த்தைகள்: 

இலக்கிய ஆர்வலர்களுக்கு அறிமுகம் அவசியப்படாத ஒரு இலக்கியவாதிதான் ஆன்டன் செகாவ். ரஷ்ய இலக்கியம் உலக அளவில் அறியப்பட பங்களிப்பு செய்த சில முக்கியமான இலக்கியவாதிகளுல் இவரும் ஒருவர். இவர் எழுதிய சுமார் 200 க்கும் மேற்பட்ட  சிறுகதைகளில் 25 சிறந்த கதைகளை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாகப் பதிப்பிக்கலாம் என்ற நோக்கில் நான் மொழிபெயர்த்துள்ள கதைகளில் இந்தக்கதையும் ஒன்று. புத்தகமாக வந்தாலும் சரி; இணையத்தளத்தில் வெளியிடப்பட்டாலும் சரி. சென்று சேரவேண்டிய இலக்கு ஒன்றாக இருந்தால் போதுமானது. இலக்கு தமிழ் அறிந்த சமுதாயம். அந்த 25 சிறுகதைகளையும் அவ்வப்போது என்னுடைய “காற்றின் தீராத பக்கங்களில்” வெளியிடுகிறேன். இதையும் ஒரு பத்து பேர் படிப்பார்கள் என்ற நம்பிக்கைதான் என்னை இன்னும் எழுதத்தூண்டுகிறது.  வழக்கம்போல் நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிவரும் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை படிக்கும் அன்பர்களுக்கு என் நன்றிகள்.

ஆணையும் பெண்ணையும் படைத்து அவர்களுக்கு இடையில் ஒன்றை புகுத்தி இதுதான் காதல்; காதல் என்று வரும்போது தகப்பனும் தாயும் எப்படி இருப்பார்கள்; சுற்றி இருப்பவன் எப்படி இருப்பான்; எல்லாவற்றுக்கும் மேலாக காதலி எப்படி காதலிக்க வேண்டும்; காதலித்த பிறகு அவள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் சொல்லிக்கொடுத்த விதிகளையும் அதன் மூலம் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட கட்டுப்பாடுகளையும் உண்மை போல் கண்டு மயங்கி தங்கள் சமுதாயம் கண்டுபிடித்திருக்கும் காதல்தான் உலகின் தலை சிறந்த காதல் என்று சொல்லித்திரியும் கூட்டம் தமிழ்நாட்டின் எல்லைகளைத்  தாண்டினால் தாங்கள் வகுத்த காதலின் எல்லைக்கோடுகளும் சமுதாயம் சார்ந்த வரையறைகளும் மாறிவிடுவதைக் காணமுடியும்.

இந்தக் கதை An Artist’s Story என்ற புகழ்பெற்ற காதல் கதையின் மொழிபெயர்ப்பு. இந்தக்கதையைப் படிப்பவர்கள் நம் சினிமா ஊடகங்கள் காட்டும் காதலை மனதில் வைத்துக்கொண்டு படிக்கமாட்டார்கள் என்று 
நம்புகிறேன்.

நான் இந்த மொழிபெயர்ப்பை இங்கே வெளியிட என்னுடைய இலக்கிய ஆர்வத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை; இதை வெளியிட்டு நான் பண ரீதியான லாபம் அடையவில்லை என்றும், கதாசிரியரின் காப்பு உரிமையை மீறவில்லை என்றும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.    

ஓர் ஓவியனின் கதை ( An Artist’s Story)

ஆங்கிலத்தில்: ஆன்டன் செகாவ் எழுதிய  An Artist’s Story”

தமிழில்: சரவணன். கா

T....மாகாணத்தின் மாவட்டங்களுள் ஒன்றில், அதிகாலையில் சீக்கிரம் எழுந்துவிடும் பழக்கம் கொண்ட விவசாயிகள் அணிகின்ற மேலங்கியை அணிந்துகொண்டும், மாலை நேரங்களில் 'பீர்' குடித்துக்கொண்டு யாருடைய கருணையும் ஒருபோதும் தனக்குக் கிடைத்ததில்லை என்று ஓயாமல் என்னிடம் புகார் செய்தவண்ணமும் இருக்கும் பைலோக்குரோவ் என்ற இளம் நிலச்சுவான்தாரின் பண்ணையில் நான் வசித்துக் கொண்டிருந்த காலம் ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம். அவன் பண்ணையிலிருந்த ஒரு விடுதியில் வசித்தான்அகலமான உட்பகுப்புகள் கொண்ட, நான் தூங்கப் பயன்படுத்தும் ஒரு சோஃபாவைத் தவிர வேறு எந்த மரச்சாமானும் இல்லாத, வீணாக நேரத்தைக் கழிப்பதற்காக நான் பயன்படுத்திய ஒரு மேசை மட்டுமே இருந்த அந்த ஒரு பெரிய அறையில்தான் நான் வசித்தேன். அரவமற்ற பருவகாலங்களில் கூட பழைய அமோஸ் அடுப்புகளில் இருந்து அலுப்புதரும் சத்தம் ஒன்று வந்து கொண்டே இருக்கும். இடிமுழக்கங்கள் கேட்கும்போது அந்த மொத்த வீடும் விரிசலடைந்து துண்டு துண்டாவதைப் போல அதிரும். குறிப்பாக இரவு நேரத்தின் போது மின்னல் கீற்றின் வெளிச்சத்தில் அந்த வீட்டின் பத்து ஜன்னல்களும் திடீர் திடீரென்று  பளிச்சிடும்போது பயங்கரமானதாகவே அது தோன்றும்.

விதிவசம் என்று சொல்ல்லாம். நிரந்தரமான சோம்பேறித்தனத்திற்கென்று சபித்துவிடப்பட்டவன் போல ஒரு வேலையும் செய்யாமல் நான் இருந்தேன். மணிக்கணக்காக சன்னலின் வெளிப்புறமாக வானத்தையும், பறவைகளையும், தெருவையும் பார்த்துக்கொண்டும், தபாலில் எனக்கு வந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்துக்கொண்டும் அதன்பின் தூங்கிப்போவதுமாகவும் இருந்தேன். சில நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே சென்று மாலை நேரங்களில் மிகவும் நேர தாமதமாகும் வரை உலாத்திக் கொண்டிருப்பேன்.

ஒருநாள் நான் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எனக்கு அறிமுகம் இல்லாத ஓர் இடத்துக்குள் தெரியாமல் நுழைந்து விட்டேன். சூரியன் ஏற்கனவே அஸ்தமனமாகத் தொடங்கியிருந்தான். பூத்துக்குலுங்கும் 'ரை' மரங்களின் மீது மாலையின் ரம்மியம் விழத் தொடங்கியிருந்தது; இரண்டு வரிசைகளில் நெருக்கமாக நடப்பட்டிருந்த மிகவும் உயரமாக நின்று கொண்டிருந்த ஃபிர் மரங்கள் இரண்டு நெருக்கமான சுவர்களைப் போல வளர்ந்து ஓர் அழகிய வெளிச்சமில்லாத பாதையை தோற்றுவித்திருந்தன; நான் எளிதாக வேலியின் மீது ஏறி தெருவின் வழி நடந்து மண்ணில் இரண்டு 'இன்ச்' ஆழமாகப் பதிந்திருந்த ஃபிர் மரங்களின் ஊசி இலைகளின் வழியே சறுக்கிக்கொண்டு வந்தேன். அந்த மாலைப் பொழுது அசைவற்றதாகவும் இருண்டு போனதாகவும் இருந்தது. ஆங்காங்கே உயரமான மரங்களின் உச்சியில் மின்னிக் கொண்டிருந்த பளிச்சென்ற பொன்னிறம் சிலந்தி வலைகளின் ஊடே வானவில்லை உண்டுபண்ணியிருந்தது. ஆழமான, மூச்சுத்திணறலை உண்டுபண்ணும் மரப்பிசினின் நெடியொன்று அங்கே இழையோடிக்கொண்டிருந்தது.  பின்னர் நீண்டு படர்ந்திருந்த எலுமிச்சை மரங்களின் ஊடே விரிந்திருந்த பாதையில் நுழைந்தேன். இங்கேயும் கூட வெறுமையும் வயோதிகமும்தான் வீற்றிருந்தன. என் காலடிகளுக்குக் கீழே கிடந்த கடந்த வருடத்தின் இலை தழைகள் துக்கத்துடன் மடிந்து கரகரத்தன. மாலையின் நிழல்கள் மரங்களுக்கு மத்தியில் ஒளிந்து விளையாடின. வலது புறமிருந்த பழைய தோட்டத்திலிருந்து பொன்னிற ஓரியோல் பறவையின் தளர்ந்த, சுருதியில்லாத இன்னிசை வந்துகொண்டிருந்தது. கண்டிப்பாக அதற்கும் வயதாகி விட்டிருக்க வேண்டும். ஒருவழியாக எலுமிச்சை மரங்களின் வரிசை முடிவுக்கு வந்தது. இரண்டு மாடிகளும், ஒரு மாடமும் கொண்ட ஒரு புராதன வெள்ளை நிறமுள்ள வீட்டிற்கு அருகில் நடந்து சென்றேன். திடீரென எனக்கு முன்னால் ஒரு திறந்த வெளி மைதானமும், பெரிய குளம் ஒன்றும், பச்சை நிறக் குற்றிலை நாணற்புல் கூட்டமும், அக்கரையில் உயரமான குறுகிய மணிக்கோபுரமும் அதன் மேல் அஸ்தமனச் சூரியனின் கதிர்களைப் பிரதிபலித்தவாறே மின்னிக்கொண்டிருந்த சிலுவையுமாக இருந்த ஒரு கிராமமும் என் பார்வைக்கு வந்தன.

ஒரு கணம் நான் அந்த நிலப்பரப்பை சில காலங்களுக்கு முன் என்னுடைய குழந்தைப் பருவத்தில் ஏற்கனவே பார்த்திருந்ததைப் போல அது எனக்கு மிகச் சமீபமான, மிகவும் பழக்கமானதான ஒரு கவர்ச்சியை என் மேல் வீசியது.

மைதானத்தில் இருந்து விளைநிலங்களை நோக்கி அழைத்துச் சென்ற வெண்ணிற கற்களுக்கு அருகில் பழங்கால வடிவத்தில் சிங்கங்களுடன் திடகாத்திரமான இரண்டு வாயிற்கதவுகள் காணப்பட்டன. அவற்றிற்கு மேல் இரண்டு இளம்பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி , மூத்தவள், ஒல்லியாக வெளிறிய முகத்துடன் கச்சிதமாக முடியப்பட்ட பழுப்பு நிற பின்னலுடன் மிகவும் அழகானவளாகவும், பிடிவாத குணம் தெறிக்கின்ற சிறிய வாயுடனும், முகத்தில் ஒரு கடுகடுப்பான வெளிப்பாடும், என்னை அறவே கண்டுகொள்ளாதவளாகவும் இருந்தாள். இன்னொருத்தி, மிகவும் இளையவளாய் பதினேழு அல்லது பதினெட்டு வயதிற்கு மேற்படாதவளாய் இருந்தாள். அவளும் ஒல்லியாகவும், வெளிறிய முகத்துடனும் பெரிய வாயுடனும், பெரிய பெரிய கண்களுடனும், நான் கடந்து சென்ற போது ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டும் நின்றாள். ஆங்கிலத்தில் எதையோ சொன்னாள். தர்ம சங்கடத்துடன் நெளிந்து கொண்டிருப்பவளைப் போல காணப்பட்டாள். அந்த இரண்டு கவர்ச்சியான முகங்களும் ஏற்கனவே பல காலமாய் எனக்கு பரிச்சயமானவைகளாகத் தோன்றின. ஒரு மகிழ்ச்சி நிறைந்த கனவு ஒன்றைக் கண்டு களித்ததைப்போல ஓர் உணர்வுடன் நான் வீடு திரும்பினேன்.

பின்னர் ஒருநாள் காலைப் போழுது பைலோக்குரோவும் நானும் அந்த வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக வண்டியொன்று புற்களைச் சரசரத்தபடி வளாகத்துக்குள் வந்து நின்றது. அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி அதில் உட்கார்ந்திருந்தாள். அது அவர்களில் மூத்தவள். சில கிராம மக்களின் குடிசைகள் தீக்கிரையாகியிருந்ததால் அவர்களுக்கு உதவி நிவாரணச் சந்தா கேட்டுப்பெறவேண்டி அவள் அங்கே வந்திருந்தாள். உண்மையான சிரத்தையுடனும், அதற்குத் தகுந்த மனப்பாங்குடனும், ரத்தினச் சுருக்கமாகவும் அவள் பேசினாள். சியானோவோ கிராமத்தில் எத்தனை வீடுகள் எரிந்துபோய் விட்டன, எத்தனை ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் வீடின்றி நிராதவராகிவிட்டனர், தற்போது அவள் உறுப்பினராக உள்ள நிவாரணக்குழு தொடக்கத்தில் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்துள்ளது என்பதையெல்லாம் எங்களை நோக்காமலேயே சொல்லிக்கொண்டிருந்தாள். எங்களுடைய கையெழுத்தைப் பெறவேண்டி சந்தா பட்டியலை எங்களிடம் தந்து, பின்னர் அதனை வாங்கி வைத்துக்கொண்டு எங்களிடம் இருந்து விடை பெற எத்தனித்தாள்.

''எங்களையெல்லாம் சுத்தமாக மறந்து விட்டீர்கள், ப்யோடர் பெட்ரோவிட்ச்'' என்று பைலோக்குரோவிடம் அவனுடைய கைகளைக் குலுக்கிக் கொண்டே சொன்னாள். '' வாருங்கள்....மேலும்....திரு.....N ( என்னுடைய பெயரைக் குறிப்பிட்டாள் ) அவர்களும் தன்னுடைய படைப்புகளைப் பாராட்டும் அன்பர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள விரும்புவாராயின் அவரும் வந்து எங்களைப் பார்க்கலாம். அம்மாவும் நானும் மிக்க மகிழ்ச்சியடைவோம்'' என்றாள்.

நான் தலையைக் குனிந்து ஆமோதித்தேன்.  

அவள் சென்றபின்னர், ப்யோடர் பெட்ரோவிட்ச் அவளைப் பற்றி என்னிடம் சொல்லத் தொடங்கினான். அந்தப் பெண் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள் என்றும், அவளுடைய பெயர் லிடியா வோட்சானினோவ் என்றும், தன்னுடைய அம்மாவுடனும் சகோதரியுடனும் அவள் வசித்துக்கொண்டிருந்த, குளத்திற்கு அப்பால் கிராமம் போன்று தோற்றமளித்த, அந்த பண்ணையின் பெயர் ஷெல்கோவ்கா என்றும் என்னிடம் சொன்னான். ஒருகாலத்தில் அவளுடைய தந்தையார் மாஸ்கோவில் ஒரு முக்கியமான பதவியில் இருந்தார்; பிரிவி கவுன்சிலராக அவர் அந்தஸ்து வகித்தபோது மரணமடைந்துவிட்டார். நல்ல வசதிகள் அவர்களுக்கு இருந்த போதும் கோடையிலும், குளிர்காலத்திலும் எங்கேயும் போகாமல் தங்களது பண்ணையிலேயே வோல்ட்சானினோவ் குடும்பத்தார் வசித்தனர். அவளுடைய சொந்த ஊரிலேயே இருந்த ஸெம்ஸ்ட்வோ மாகாணப் பள்ளியிலேயே ஓர் ஆசிரியையாக அவள் வேலை பார்த்தாள். இருபத்தைந்து ரூபில்களை மாதச் சம்பளமாகப் பெற்றாள். தன்னுடைய சம்பளத்தைத் தாண்டி அவள் தனக்கென்று வேறு செலவுகள் வைத்துக்கொண்டதில்லை. தன் வாழ்க்கைக்குத் தேவையானதை தானே சம்பாதித்துக் கொள்வது குறித்து அவளுக்கு தன் மீது பெருமை உண்டு.

''ஒரு சுவாரஸியமான குடும்பம்தான்'' என்று சொன்னான் பைலோக்குரோவ். ''நாம் ஒரு நாள் அங்கே செல்லலாம். உன்னைப் பார்ப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.'' என்றான்.

ஒருநாள் விடுமுறை தினத்தன்று பிற்பகல் வேளையில் வோல்ட்சானினோவ் குடும்பத்தாரை நினைவு கூர்ந்தபடி அவர்களைப் பார்ப்பதற்காக ஷெல்கோவ்காவிற்குச் சென்றோம். அவர்கள்-- அம்மாவும் இரண்டு மகள்களும் -- வீட்டில் இருந்தார்கள். அவர்கள் தாயார், எகாடெரினா பாவ்லோவ்னா, ஒருகாலத்தில் மிகவும் அழகானவளாக இருந்திருக்க வேண்டும்; ஆனால் இப்போது ஆஸ்த்மா நோயினாலும், மன அழுத்தத்தாலும், நினைவு தவறியவளாகவும், வயதுக்கு மீறிய தளர்ச்சியாலும் அவதியுற்றவளாய் ஓவியம் குறித்த உரையாடல் மூலம் எங்களை உபசரித்துக் கொண்டிருந்தாள். ஷெல்கோவ்காவிற்கு நான் வந்தாலும் வருவேன் என்பதை தன் மகள் மூலம் கேட்டறிந்தபின்னர், தான் மாஸ்கோவில் கண்காட்சிகளில் பார்த்த என்னுடைய இரண்டு மூன்று இயற்கைக் காட்சி ஓவியங்களை அவசர அவசரமாக நினைவு கூர்ந்தாள். அவைகளின் மூலமாக நான் என்ன சொல்ல விழைந்தேன் என்று என்னிடம் கேட்டாள். லிடியா, அல்லது அவர்கள் லிடா என்று அழைத்த அவள், என்னிடம் பேசுவதைக் காட்டிலும் பைலோக்குரோவிடம் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தாள். அவன் ஏன் ஸெம்ஸ்ட்வோவில் இருப்பதில்லை என்றும், அதனுடைய கூட்டங்களில் ஏன் கலந்து கொள்வதில்லை என்றும் ஆர்வமாகவும் புன்னகை புரியாமலும் அவனிடம் வினவிக் கொண்டிருந்தாள்.

''அது சரியில்லை, ப்யோடர் பெட்ரோவிட்ச்'' என்று குற்றம் சாட்டியபடி அவள் சொன்னாள். ''அது சரியில்லை....அது தவறு'' என்றாள்.

''அது உண்மைதான் லிடா ''-- அது உண்மைதான் '' என்று அவள் தாயாரும் ஒத்துப் பாடினாள். ''அது சரியில்லைதான்.''

'' நம்முடைய மொத்த மாவட்டமும் பாலகினின் கைகளில் உள்ளது.'' என்று என்னைப் பார்த்து பேசியவாறே பேச்சைத் தொடர்ந்தாள். '' ஸெம்ஸ்ட்வோ ஆணையத்தின் தலைமை அதிகாரி அவன். இந்த மாவட்டத்தின் எல்லாப் பதவிகளையும் தன்னுடைய மருமகன்களுக்கும், மாப்பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டான். தன் விருப்பம் எதுவோ அதனைச் செய்கிறான்; அவனை எதிர்க்க வேண்டும்; இளைஞர்கள் யாவரும் சேர்ந்து சக்திமிகு கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும்; ஆனால் நீங்களே பாருங்கள்!...நம்மிடம் இருக்கும் இளைஞர்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்கள் என்பதை. வெட்கக் கேடு, ப்யோடர் பெட்ரோவிட்ச்'' என்று சொல்லிக் கொண்டு போனாள்.

அவர்கள் ஸெம்ஸ்ட்வோவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இளையவளான ஜென்யா அமைதியாக இருந்தாள். ஆழமான அவ்விவாதத்தில் அவள் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. வளர்ந்து விட்டவள் என்று அவளுடைய குடும்பத்தாரால் இன்னும் அவள் கருதப்படவில்லை. ஒரு குழந்தையைப் போலவே இன்னும் மிசூஸ் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தாள். ஏனெனில் அப்படித்தான் அவள் தன்னுடைய ஆங்கிலேய ஆயாவை குழந்தையாக இருந்தபோது கூப்பிடுவது வழக்கம். எல்லா நேரமும் ஓர் ஆர்வக் குறுகுறுப்புடன் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆல்பத்திலிருந்த புகைப்படங்களை நான் பார்க்கும்போது அவள் எனக்கு விளக்குவாள்:  ''இது மாமா...அது குரு.....என்று தன்னுடைய விரல்களை புகைப்படங்களுக்குக் குறுக்கே நகர்த்தியவாறே சொல்வாள்அவள் அவ்வாறு செய்யும்போது என் தோளுடன் அவளுடையதை ஒரு குழந்தையைப் போல உரசிக் கொள்வாள். அப்படி அவள் செய்யும்போது அவளுடைய மிருதுவான, பருவமெய்தாத மார்பகங்களையும், அவளுடைய மெல்லிய தோள்களையும், சடையையும், துப்பட்டா துணியால் இறுக்கமாக வடிவம் பெற்ற அவளுடைய ஒல்லியான சிறிய உடலையும் அருகில் இருந்து என்னால் பார்க்க முடிந்தது.

நாங்கள் குரோக்கெட்டும்* டென்னிசும் விளையாடினோம்; தோட்டத்தில் நடந்தோம், தேநீர் அருந்தினோம். இரவு உணவின் போது நெடுநேரம் உட்கார்ந்து இருந்தோம். உட்பகுப்புகள் கொண்ட பெரிய காலியான அறைக்குப் பின்னால் சவுகரியமான இதமான சிறிய வீட்டில் நான் சங்கோஜமற்றவனாக உணர்ந்தேன். அங்கே சுவர்களில் எண்ணை ஓவியங்களையொத்த படங்களோ பணிவுடன் பேசுவதற்கு வேலையாட்களோ இல்லை. அங்கிருந்த எல்லாமும், எனக்கு இளமையாகவும், தூய்மையானததாகவும் தோன்றின. லிடாவும், மிசூஸும் இருந்ததால் அப்படித் தோன்றியிருக்கலாம். எல்லாப் பொருட்களும் ஒருவித பண்பட்ட தன்மையுடன் விளங்குகின்ற ஒரு சூழல் அங்கே நிலவியது. இரவு உணவின் போது லிடா மீண்டும் ஸெம்ஸ்ட்வோ பற்றியும், பாலகின் பற்றியும், பள்ளிக்கூடங்கள் பற்றியும் நூலகங்கள் பற்றியும் பைலோக்குரோவிடம் பேசினாள். அவள் ஓர் ஆக்க சக்தி கொண்ட உண்மையான, குறிக்கோள்கள் உடைய பெண்ணாகத் திகழ்ந்தாள். அவள் வாய் கிழியப் பேசுபவளாக இருந்தபோதும்,, அதிக சத்தம் எழுப்பிக்கொண்டு பேசுபவளாக இருந்தபோதும் அவள் பேசுவதைக் கேட்பதற்குச் சுவாரஸியமாகவே இருந்தது. -- ஒருவேளை அவள் பள்ளிக்கூடத்தில் அந்த மாதிரி பேசுவதற்குப் பழக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதே சமயம், ப்யோடர் பெட்ரோவிட்ச் ஒவ்வொரு உரையாடலையும் தர்க்கமாக மாற்றிவிடும் பழக்கத்தை தன் பள்ளி நாட்களில் இருந்தே தன்னுடன் தக்கவைத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு மந்தமானவனாகவும், ஜடமானவனாகவும், கடமைக்கு காரியம் செய்பனாகவும், தான் ஒரு புத்திசாலி, முற்போக்கு எண்ணங்கள் கொண்டவனைப் போன்று தோற்றமளிப்பதற்காக தவறு காணவியலாக் கவலையுடன் இருப்பவனாகவும் இருந்தான். அதீதமான அங்க அசைவுகளால் அவன் ஒரு 'காய்கறிப் பசை' (சாஸ்) வைக்கும் குடுவையைத் தட்டி விட்டுவிட்டான். மேசையின் மீது இருந்த துணியில் பெரிய திட்டு ஒன்றை அவன் உண்டு பண்ணிவிட்டதை என்னைத் தவிர வேறு எவரும் பார்க்க வில்லை.

அன்றைய தினம் நாங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்ற போது இருட்டாகவும், அசைவற்றதாகவும் இருந்தது.

''நல்ல குடும்ப வளர்ப்பு என்பது குழம்பைத் தட்டி விடாமல் இருப்பதில் இருந்து தெரிவதில்லை; யாரேனும் தட்டி விடும்போது அதனைக் கண்டும் காணாதது போல இருப்பதில்தான் தெரிகிறது'' என்று ஒரு பெருமூச்சுடன் சொன்னான் பைலோக்குரோவ். ''ஆமாம்... ஓர் அற்புதமான அறிவுள்ள குடும்பம்தான்! எல்லா நாகரீகமான சமுதாயங்களிருந்தும் நான் விலகிப் போய் விட்டேன். எப்படி நான் விலகிப்போய்விட்டேன் என்பது பயங்கரமான ஒன்று. எல்லாம் வேலையால், வேலையால், வேலையால்.''''  என்றான்..

ஒருவன் ஒரு முன்மாதிரியான விவசாயியாக வேண்டுமெனில் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி அவன் பேசினான். அவன் எப்படிப்பட்ட ஓர் உடல் பெருத்த சோம்பேறி என்று நினைத்துக்கொண்டேன். அவன் எதையாவது முக்கியம் என்று கற்பிதம் செய்துகொண்டு பேசும்போது ''எர்...ர்ர்ர்...'' என்று தீவிரமாக முயற்சி செய்து கொண்டு பேசுவான்; பேசுவதைப் போலத்தான் வேலையும் செய்வான்-- மெதுவாக, எப்போதும் தாமதமாக, கை நழுவிப் போன பின்.....ஒரு தடவை தபாலில் சேர்க்கச் சொல்லி சொல்லி நான் கொடுத்த கடிதங்களை அவன் வாரக்கணக்கில் தன் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு திரிந்ததிலிருந்து அவனுடைய வேலைத்திறனில் எனக்கு நம்பிக்கை அற்றுப் போயிருந்தது.

''எல்லாவற்றையும் விட கடினமானது என்னவென்றால் .....'' என்று எனக்குப் பக்கத்தில் நடந்து வந்த போது முணுமுணுத்தான்...''எல்லாவற்றையும் விட கடினமானது என்னவென்றால், ஒருவன் உழைக்கலாம், இருந்தும் எவனிடமிருந்தும் கரிசனம் பெறாமல் இருப்பதுதான் கடினமான விஷயம்.....கரிசனமே இல்லை''

II
நான் வோல்ட்சானினோவ் குடும்பத்தைப் பார்ப்பதென தீர்மானித்துகொண்டேன். ஏதோ ஒரு விதிமுறை போல் மாடத்தின் கீழ்ப் படிக்கட்டில் போய் அமர்ந்தேன். என்னைப் பற்றிய ஓர் அதிருப்தியால் இடையறாமல் சலனமடைந்தவனாக இருந்தேன். என்னுடைய வாழ்க்கை சடுதியில் செல்வதைப்போலவும், சுவையேயில்லாததைப் போலவும் கடந்து போய்க்கொண்டிருந்தது. மிகவும் கனமாக வளர்ந்து விட்ட என் இதயத்தை நெஞ்சைக் கீறி வெளியே எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும்போல தோன்றியது. இதற்கிடையில்தான் மாடத்தில் எழுந்த பேச்சு சத்தத்தையும் உடைகள் சலசலப்பதையும், புத்தகங்களின் பக்கங்கள் திருப்பபடுவதையும் நான் கேட்க நேர்ந்தது. பகல் பொழுதில் லிடா நோயாளிகளைப் பேணுபவளாகவும், புத்தகங்களை இரவல் தருபவளாகவும், அடிக்கடி கிராமத்துக்குள் ஒரு சிறிய குடையுடன் தொப்பியணியாமல் செல்பவளாகவும், மாலை வேளைகளில் சத்தமாக ஸெம்ஸ்ட்வோ பற்றியும், பள்ளிக்கூடங்களைப் பற்றியும் பேசுபவளாகவும் இருப்பாள் என்ற எண்ணத்திற்கு நான் பழக்கப்பட்டவனாக மாறிப்போயிருந்தேன். ஒல்லியான அழகான சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் ஆடம்பரங்களை வெறுத்த அவள் உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நோக்கித் திரும்பினால் தன்னுடைய சிறிய செவ்விதழ் வடிவான வாயை அசைத்து சுரத்தில்லாமல் இப்படிச் சொல்வாள்:

"அதில் உனக்கு ஆர்வம் இல்லை''

அவளுக்கு என்னைப் பிடிக்காது. அவள் என் மீது ஒருவித துவேசம் கொண்டிருந்தாள். அதற்குக் காரணம் நான் ஓர் இயற்கைக் காட்ச்களை வரையும் ஓவியன் என்பதுதான். அவளுடைய சித்தத்தை வியாப்பித்திருந்த விவசாயிகளுக்கு கிடைக்காத உணவும் இதமும் என்னுடைய ஓவியங்களில் இல்லை. அவள் எதன் மீது நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தாளோ அவைகளை புறக்கணிப்பவனாக நான் இருந்தேன். எனக்கு ஞாபகம் இருக்கிறது. பைக்கல் ஏரிக்கரையோரம் ஒருமுறை நான் பயணம் செய்துகொண்டிருந்த போது குதிரை மீது நீல நிற சீனத்துணியால் நெய்யப்பட்ட சட்டையும், கீழாடையும் அணிந்து கொண்டு வந்த ஒரு 'புரியட்' இனப்பெண்ணை சந்தித்தேன்; அவளுடைய குழலை எனக்கு விற்க முடியுமா என்று அவளைப் பார்த்துக்கேட்டேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது என்னுடைய ஐரோப்பிய முகத்தையும், தொப்பியையும் காழ்ப்புடன் அவள் பார்த்தாள். ஒரு கணப்பொழுதில் என்னுடன் பேசுவதில் சலிப்படைந்தாள். தன் குதிரையைப் பார்த்து கத்தியழைத்து பின்னர் வேகமாகச் சென்று விட்டாள். ஏறக்குறைய அதே மாதிரியான மன நிலையில்தான் லிடாவும் என்னை வேற்றுகிரகத்தவனைப் போல வெறுத்து ஒதுக்கினாள். அவள் என்னை வெறுப்பதை வெளிப்படையாக ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை; ஆனால் அதனை நான் உணர்ந்தேன். மாடத்தின் கீழ்ப்படிக்கட்டில் உட்கார்ந்து இருப்பது எரிச்சலாக இருந்தது. ஒருவன் மருத்துவனாக இல்லாதபோது விவசாயிகளுக்கு மருத்துவம் பார்ப்பது அவர்களை ஏமாற்றுவது போலத்தான்; ஒருவனிடம் ஆறாயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் கருணையுள்ளவனாக இருப்பது எளிதானதுதான்.

அதே சமயம் அவளுடைய சகோதரி மிசூஸுக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை; என்னைப் போலவே அட்சர சுத்தமான சோம்பேறித்தனத்துடன் தன்னுடைய வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். காலையில் எழுந்த உடனே ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு படிப்பதற்காக மேல் மாடம் சென்று கரங்கள் கொண்ட குழிந்த இருக்கையில் கால்கள் தரையில் படாதவாறு போய் அமர்ந்து விடுவாள்; அல்லது அவளுடைய புத்தகத்துடன் எலுமிச்சை மரங்கள் நிறைந்த பாதைக்குள் மறைந்து போய்விடுவாள். மொத்த நாளையும் படிப்பதிலேயே செலவிடுவாள்; தன்னுடைய புத்தகத்தை பேராசையுடன் ஆழ்ந்து மேய்வாள். களைத்துப்போன, கலங்கிப்போன அவள் கண்களில் இருந்தும், முற்றிலும் வெளுத்துப் போய்விட்ட அவளுடைய முகத்தில் இருந்தும் மட்டுமே எந்த அளவு அந்தத் தொடர்ச்சியான படிப்பு அவளுடைய மூளையை வற்றிவிடச்செய்திருக்கிறது என்பதை ஒருவரால் அனுமானிக்க முடியும். நான் வரும்போது லேசாக வெட்கப்படுவாள். புத்தகத்தை வைத்து விட்டு தன்னுடைய பெரிய விழிகளால் என் முகத்தை ஏறிட்டு நோக்குவாள். நடந்து போயிருந்த எதைப்பற்றியாவது மிகவும் ஆவலுடன் விளக்கிச் சொல்லுவாள். ----உதாரணத்திற்கு, வேலைக்காரர்கள் தங்குமிடத்தில் இருந்த புகைபோக்கி தீப்பற்றிக்கொண்டது என்பாள்; அல்லது கூட்டத்திலிருந்த ஒருவன் குளத்தில் இருந்து பெரிய மீன் ஒன்றைப் பிடித்தான் என்பாள். சாதாரண நாட்களில் அவள் வழக்கமாக லேசான வண்ண சட்டையுடனும், நீல நிற பாவாடையுடனும் இருப்பது வழக்கம். நாங்கள் ஒன்றாக நடப்போம், செர்ரிப் பழங்களை பொறுக்கிக்கொண்டு 'ஜாம்' தயாரிப்போம், படகில் செல்வோம், அப்படி அவள் செர்ரிப் பழங்களை எடுக்கக் குதிக்கும்போதோ படகில் துடுப்புப் போடும் போதோ அவளுடைய ஒல்லியான, ஒடியும்படியான கரங்கள் அவளுடைய மெல்லிய ஒளி ஊடுருவும் சட்டையினூடே தெரியும். அல்லது ஏதேனும் ஒரு வரைபடத்தை நான் வரையும் போது எனக்குப் பக்கத்தில் நின்று கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஒரு ஜூலை மாதக் கடைசியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணியளவில் வோல்ட்சானினோவ் குடும்பத்தாரைப் பார்ப்பதற்காக வந்தேன். வீட்டை விட்டு கொஞ்ச தூரமாக விலகி, அந்தக் கோடையில் நன்றாக வளர்ந்திருந்த வெண்காளான்களைத் தேடியபடியே பூங்காவில் உலாத்திக் கொண்டிருந்தேன். பிறகு ஜென்யாவுடன் வந்து அவைகளைப் பிடுங்க வசதியாக அவைகள் இருக்கும் இடங்களைக் குறித்துக்கொண்டேன். இளஞ்சூடான தென்றல் அங்கே வீசிக்கொண்டிருந்தது. லேசான விடுமுறைதின உடை அணிந்து ஜென்யாவும், அவளுடைய தாயாரும் தேவாலயத்திலிருந்து வீட்டை நோக்கி வருவதைப்பார்த்தேன். காற்றில் தன்னுடைய தொப்பியைப் பிடித்துக்கொண்டு வந்தாள் ஜென்யா. அதற்குப் பிறகு மேல்மாடத்தில் அவர்கள் தேநீர் அருந்துவது எனக்குக் கேட்டது.

என்னுடைய நிரந்தரமான சோம்பேறித்தனத்திற்கு நிரூபணம் காண முயற்சி செய்து கொண்டிருக்கும் என்னைப்போன்ற வீண் பேர்வழிகளுக்கென்றே  கிராமப்புற வீடுகளில் உள்ள இந்த மாதிரியான விடுமுறைதினங்களின் கோடைகால காலைப்பொழுதுகள் தங்களுக்குள் குறிப்பிடும்படியான ஒரு கவர்ச்சியை பதுக்கித்தான் வைத்திருக்கின்றன. பசுமையான தோட்டம் இன்னும் பனித்துளியால் ஈரமானதாக, சூரிய ஒளியில் மின்னிக்கொண்டு மகிழ்ச்சியுடன் மலர்ந்து காணப்படும்போது, வீட்டிற்கு அருகே மிக்னோனெட்டின் வாசனையும், அரளியின் வாசனையும் கமழ்கிறபோது, தேவாலயத்திலிருந்து சற்று முன்பு வீடு திரும்பிய இளைஞர்களும் யுவதிகளும் கவர்ந்திழுக்கும் உடைகள் அணிந்து, ஆனந்தமாக தோட்டத்தில் அமர்ந்து சிற்றுண்டி உண்ணும்போது, ஆரோக்கியமான, நன்றாக உண்டு கொழுத்த அழகிய மக்கள் அந்த நாள் முழுவதும் செய்யப்போவது ஒன்றுமே இல்லை என்று ஒருவருக்குத் தெரியும்போது வாழ்க்கை இப்படியே இருந்து விடாதா என்று எண்ணத் தோன்றும். இப்போது, எனக்குக் கூட அந்த மாதிரியான நினைவுகள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தேன்--- குறிக்கோளில்லாமல், வேலை வெட்டி ஏதும் இல்லாமல், நாள் முழுவதும், கோடைகாலம் முழுவதும் அதைப்போலவே நடை பயிலத் தயாரானேன்.

ஒரு கூடையுடன் ஜென்யா வெளியே வந்தாள். தோட்டத்தில் என்னைக் கண்டுபிடிப்பாள் என்று அவளுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம் அவள் முகத்தில் இருந்தது. அல்லது அது பற்றி முன்னறியும் திறனாக இருக்கலாம். காளான்களை சேகரித்துக்கொண்டு பேசலானோம். அவள் கேள்வி கேட்கும் போது என்னை முந்திக்கொண்டு கொஞ்சம் முன்னே செல்வாள். அப்போதுதான் அவளால் என்னுடைய முகத்தை பார்க்க முடியும் என்பதால் அப்படிச் செய்வாள்.

''நேற்று கிராமத்தில் ஓர் அதிசயம் நடந்தது'' என்று ஆரம்பித்தாள். ''அந்த ஊனமான பெண் பெலேஜியா கடந்த வருடம் முழுவதும் நோயாளியாக இருந்தாள். எந்த மருத்துவரும், மருந்தும் எந்த நல்லதையும் அவளுக்குச் செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று ஒரு கிழவி வந்தாள்; அவளுடைய காதில் எதையோ ஓதினாள். அவளுடைய நோய் பறந்தோடி விட்டது.'' என்றாள்.

''இது என்ன பெரிய விஷயம்'' என்று சொல்லியவாறே நான் தொடர்ந்தேன். ''நோயாளிகளிடமும், வயதான பெண்களிடமும் மட்டுமே நீ அதிசயத்தைத் தேடக்கூடாது...ஆரோக்கியம் என்பதே அதிசயம் இல்லையா? வாழ்க்கை என்பதே அதிசயம் இல்லையா? புரிதலுக்கு அப்பால் எதுவெல்லாம் இருக்கிறதோ அது எல்லாமே ஓர் அதிசயம்தான். ''

''புரிதலுக்கு அப்பால் இருக்கிறதைப் பற்றி நீ பயப்பட்டதில்லையா?''

''இல்லை...எனக்குப் புரியாத ஒரு விஷயத்தை நான் தைரியமாக எதிர்கொள்கிறேன். அவைகளால் நான் கலங்கடிக்கப்படுவதில்லை. அவைகளைவிட மேலானவன் நான். சிங்கங்களை விட, புலிகளைவிட, நட்சத்திரங்களைவிட தான் மேம்பட்டவன் என்பதை மனிதன் உணர வேண்டும். இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் விட, அது அதிசயமாகவே தோன்றினாலும் கூட, அவனுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தாலும் கூட தான் மேம்பட்டவனாக அவன் உணர வேண்டும். இல்லையேல் அவன் மனிதனே இல்லை; எதைப் பார்த்தாலும் பயந்து ஒளியும் எலி''

ஓர் ஓவியனாக இருந்துகொண்டே பல விஷயங்களைப் பற்றிய விஷய ஞானம் உள்ளவனாகவும், எனக்குத் தெரியாதவைகளைப் பற்றியும் சரியாக ஊகிக்கத் தெரிந்தவனாகவும் நான் இருக்கிறேன் என்று ஜென்யா நம்பினாள். சாவேயில்லாத, அழகான ஓர் உலகில் அவளை நான் அறிமுகம் செய்ய வேண்டி ஏக்கம் கொண்டாள். ---அவள் கற்பனை செய்த அந்த மேல் உலகில், நான் வீட்டில் அமைதியாக அமர்ந்திருக்கிறேன். அவள் என்னிடம் கடவுளைப் பற்றிப் பேசினாள்; சாவேயில்லாத வாழ்வைப் பற்றிப் பேசினாள்; அதிசயமானவைகளைப் பற்றிப் பேசினாள்; சாவிற்குப் பின்பு நானும் என்னுடைய கற்பனையும் நிரந்தரமாக அழிந்து போய்விடுவோம் என்பதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத நான் அவளுக்குப் பதில் தந்தேன்: ''ஆமாம்...நாம் எல்லோருக்கும் சாவற்ற வாழ்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது.'' அவள் என்னைக் கவனித்தாள்; நம்பினாள்; சான்றுகளைக் கேட்கவில்லை.

நாங்கள் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது அவள் திடீரென்று நின்றாள். பின் சொன்னாள்:

''நம் லிடா ஒரு குறிப்பிடத்தகுந்த பெண் --இல்லையா. நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். எந்த நிமிடமும் என்னுடைய உயிரையும் அவளுக்குத் தர தயாராக இருக்கிறேன். ஆனால் ...எனக்குச் சொல்''---- என்று ஜென்யா தன்னுடைய விரல்களால் என் சட்டையைத் தொட்டுக்கொண்டு கேட்டாள்: '' எனக்குச் சொல், நீ ஏன் அவளுடன் எப்போதும் வாதம் புரிந்து கொண்டே இருக்கிறாய்? நீ ஏன் எரிச்சலடைகிறாய்?''

''அவள் செய்வது தவறு என்பதால்தான்''

ஜென்யா தனது தலையை ஆட்டினாள். அவளுடைய கண்களில் கண்ணீர் கட்டிக்கொண்டது.

''எப்பேர்ப்பட்ட புரிந்து கொள்ள முடியாத விஷயம் அது'' என்று சொல்லிக்கொண்டாள். அந்த நிமிடத்தில்தான் லிடாவும் எங்கிருந்தோ வந்து சேர்ந்திருந்தாள். கையில் ஒரு சாட்டையுடன் ஒல்லியான சூரிய ஒளியில் மின்னும் ஓர் அழகு தேவதையாக படிக்கட்டில் நின்றவாறே அங்கிருந்த ஆண்களில் ஒருவனுக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டு இருந்தாள். சத்தமாக பேசிக்கொண்டிருந்தபோதே அவசர அவசரமாக இரண்டு மூன்று நோவு கண்ட கிராமத்தார்கள் அவளிடம் வந்தனர். பின்பு பரபரப்பான கவலை தோய்ந்த முகத்துடன் அவள் அறைகளில் நடந்து கொண்டிருந்தாள். ஒன்றன் பின் ஒன்றாக அலமாரிகளைத் திறந்து பார்த்த பின் மேல்மாடிக்கு விரைந்தாள். அவர்கள் அவளைக் கண்டுபிடித்து இரவு உணவு கூப்பிடுவதற்கு முன்பு வெகு நேரமாகிப்போயிருந்தது. நாங்கள் எங்களுடைய ' சூப்'பைக் குடித்து முடித்திருந்த சமயம் அவள் அங்கே வந்தாள். இந்த சிறிய விஷயங்களைக் கூட நான் கரிசனத்துடன் நினைவில் வைத்திருக்கிறேன். சிறப்பாக ஒன்றும் நிகழாவிட்டாலும் அந்த மொத்த நாளையும் நான் தெளிவாக ஞாபகம் வைத்திருக்கிறேன். இரவு உணவுக்குப் பின் மேல் மாடத்தின் கீழே உள்ள படிக்கட்டில் நான் உட்கார்ந்து கொண்ட போது ஜென்யா நீண்ட கரங்கள் கொண்ட சாய்வு இருக்கை ஒன்றில் படிப்பதற்காகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். நாங்கள் அமைதியாக இருந்தோம். நீல வானம் முழுவதையும் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அருமையான மழையும் தூறத்தொடங்கி இருந்தது. வெம்மையாகவும் இருந்தது. காற்றின் வேகமும் சற்றுத் தணிந்துவிட்டிருந்தது. அந்த நாள் முடிவுறாத ஒன்று என்பதைப் போன்று தோன்றியது. எகாடெரினா பாவ்லோவ்னா தூக்கக் கலக்கத்துடனும் கையில் ஒரு விசிறியுடனும் மேல்மாடத்தை நோக்கி வந்தாள்.

''! அம்மா'' என்று ஜென்யா அவளுடைய கைகளை முத்தமிட்டவாறு சொன்னாள்: ''பகலில் தூங்காமல் இருப்பது உங்களுக்கு நல்லதில்லை''

அவர்கள் இருவரும் பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள். ஒருவர் தோட்டத்திற்குள் சென்றால் இன்னொருவர் மேல்மாடத்தில் நின்று கொண்டிருப்பார்மரங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டு அழைப்பார்கள்: ''.........ஜென்யா!'' அல்லது '' அம்மா!....எங்கிருக்கிறாய்? அவர்கள் இருவரும் எப்போது சேர்ந்தே வணங்குவார்கள். ஒரே மாதிரியான தெய்வ நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது; அவர்கள் பேசாதிருக்கும்போது கூட ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்கள். பிறரைப் பற்றிய அவர்களது எண்ணப் போக்கும் ஒன்றாகவே இருந்தது. எகாடெரினா பாவ்லோவ்னா கூட என்னைப் பற்றி புரிந்தவளாகவும், என் மீது பிரியம் கொண்டவளாகவும் ஆகியிருந்தாள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் நான் வரவில்லை என்றால்கூட யாரையாவது அனுப்பி நான் நலம்தானா என்பதை விசாரித்துவிடுவாள். அவளும் கூட என்னுடைய ஓவியங்களை உற்சாகத்துடன் உற்று நோக்குவாள். அதே மாதிரியான திறந்த மனதுடன், மிசூஸைப் போலவே கலகலவென்று பேசும் ஆயத்தத்துடன் என்ன நடந்தது என்பதை அவள் எனக்குச் சொன்னாள். அவளுடைய குடும்ப ரகசியங்களையும் என்னிடம் மனம் திறந்து பேசினாள்.

அவளுடைய மூத்த மகளிடத்தில் அவளுக்குப் பூரண மதிப்பிருந்தது. லிடா பாசப்பரிமாற்றங்களைப் பற்றிக் கவலைப் படாதவள். ஆழமான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவாள். அவள் தன்னுடைய வாழ்க்கையை தனிப்பட்ட விதத்தில் வாழ்ந்தாள். தன்னுடைய அறையிலேயே எப்போதும் அமர்ந்துகொண்டு எப்படி ஒரு கப்பற்படைத் தளபதி தன்னுடைய மாலுமிகளுக்கு ஒரு புனிதனாகவும், புதிரானவனாகவும் தெரிகிறானோ அதைப்போலவே அவள் தன் அம்மாவுக்கும் சகோதரிக்கும் தெரிந்தாள்.

''நம்முடைய லிடா ஒரு குறிப்பிடத்தகுந்த பெண்'' என்று அவள் அம்மா அடிக்கடி சொல்வாள். '' இல்லையா என்ன ? என்றும் கேட்பாள்.

மழை தூறிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட நாங்கள் லிடாவைப் பற்றிப் பேசினோம்.

''அவள் ஒரு குறிப்பிடத்தகுந்த பெண்'' என்றாள் அவளுடைய அம்மா. தைரியம் இழந்தவளாய், ஒரு சூழ்ச்சிக்காரியைப்போல் அடிக்குரலில் இதையும் சேர்த்துச் சொன்னாள்: ''அவளைப் போன்ற இன்னொருத்தியை நீ சுலபமாக பார்க்க முடியாது. அவள் மட்டும்தான்... உனக்குத் தெரியுமா? நான் கொஞ்சம் சங்கடத்துக்கு உள்ளானவளாக மாறத் தொடங்கிவிட்டேன்இந்தப் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, புத்தகங்கள்----எல்லாம் ரொம்பச் சரிதான், ஆனால் ஏன் உச்சக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும்? அவளுக்கு இருபத்து மூன்று வயதாகிறது. உனக்குத் தெரியுமா? தன்னைப் பற்றி கவனமாக சிந்திக்க இதுதான் தக்க சமயம். அவளுடைய புத்தகங்களுடனும், ஆஸ்பத்திரியுடனும் அவளுடைய வாழ்க்கையும் கண்டு கொள்ளப்படாமலேயே கை நழுவிப் போய்விட்டது என்பதை அவள் இனி காண்பாள். .....அவளுக்குத் திருமணமாக வேண்டும்.''

படித்ததினால் வெளிறிப் போயிருந்த ஜென்யா, சரி செய்யப்படாதிருந்த தன் முடியுடன் தலையை உயர்த்தினாள். அது என்னவோ தன்னிடம் சொல்லப்பட்டதைப் போல தன் அம்மாவைப் பார்த்துக் கூறினாள்.

''அம்மா, எல்லாம் கடவுளின் கைகளில் இருக்கிறது''

திரும்பவும் அவளுடைய புத்தகத்திற்குள் தன்னைப் புதைத்துக் கொண்டாள்.

பைலோக்குரோவ் தன்னுடைய 'டூனிக்' குடனும், அலங்கார பின்னல் செய்யப்பட்டிருந்த சட்டையுடனும் வந்தான். நாங்கள் குரோக்கெட்டும் டென்னிசும் விளையாடினோம். இருட்டியபோது இரவு உணவின்போது நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தோம். பள்ளிக்கூடங்களைப் பற்றியும், மொத்த மாவட்டத்தையும் தன் பெரு விரலுக்குக் கீழே வைத்திருந்த பாலகினைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். வோல்ட்சானினோவ் குடும்பத்தாரை விட்டு மாலைப்பொழுதில் நான் விலகிச் சென்ற போது இந்த உலகில் எவ்வளவு நீளமாக எது இருந்தாலும் அது முடிவுக்கு வந்தேயாக வேண்டும் என்று ஒரு துயர மனோபாவத்துடன் ஒரு நீண்ட, நீண்ட சோம்பேறித்தனமான நாளைப் பற்றிய அபிப்ராயத்தை என்னுடன் எடுத்துச் சென்றேன்.

ஜென்யா வாசல் வரைக்கும் வந்து விடையனுப்பினாள். ஒருவேளை காலையிலிருந்து இரவு வரை நாள் முழுதும் என்னுடன் அவள் இருந்த காரணத்தாலோ என்னவோ! அவளில்லாமல் சோர்வாக உணர்ந்தேன். அந்த அழகான குடும்பம் எனக்கு அருமையாகவும், அன்பானதாகவும் இருந்தது. அந்தக் கோடைகாலத்தில் முதன் முறையாக ஓவியம் வரைய ஏக்கம் ஒன்று எனக்குள் வந்தது.

''எனக்குச் சொல், நீ ஏன் இந்த மாதிரியான பயங்கரமான, வெற்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாய்?'' என்று வீட்டிற்குப் போன போது பைலோக்குரோவைப் பார்த்துக் கேட்டேன். '' என்னுடைய வாழ்க்கை பயங்கரமானது, கடினமானது, சலிப்பு நிறைந்தது. காரணம் நான் ஓர் ஓவியன். ஒரு வித்தியாசமான பேர்வழி. என்னுடைய இளமைக்காலத்திலிருந்தே பொறாமை மற்றும் சுய அதிருப்தி ஆகியவற்றால் சூழப்பட்டவனாகவும், என் வேலையில் நம்பிக்கையற்றவனாகவும் இருந்து வந்திருக்கிறேன். நான் எப்போதுமே ஏழையாக இருப்பவன். நான் ஒரு நாடோடி. ஆனால் நீ....நீ ஓர் ஆரோக்கியமான, சராசரியான மனிதன். நிலச் சுவான்தார், ஒரு கனவான். நீ ஏன் இந்த மாதிரியான ரஸக்குறைவான வகையில் வாழ வேண்டும்? வாழ்க்கையிலிருந்து எதையுமே நீ ஏன் குறைவாகவே பெறுகிறாய்? உதாரணத்திற்கு நீ ஏன் லிடாவுடனோ, ஜென்யாவுடனோ காதலில் விழக்கூடாது?''

''நான் வேறொரு பெண்ணைக் காதலிக்கிறேன் என்பதை நீ மறந்து விடுகிறாய்'' என்று பதிலளித்தான் பைலோக்குரோவ்.

அவனுடன் விடுதியைப் பகிர்ந்து கொண்ட லியூபோவ் இவானோவ் என்ற பெண்ணைப் பற்றித்தான் அவன் குறிப்பிட்டான். மிகவும் குண்டான கோளமாகப் பெருத்த, நல்ல விலைபோகக் கூடிய கொழுத்த வாத்தைப்போன்ற, ரஷ்யாவின் தேசிய உடையையும், பாசிகளையும் அணிந்து கொண்டு தோட்டத்தில் நடை பயிலும் அந்தப் பெண்ணை ஒவ்வொரு நாளும் நான் பார்த்ததுண்டு. ஒரு சிறிய சிறிய குடையை எப்போது தன்னுடன் வைத்திருப்பாள்; வேலையாள் அவளை இரவு உணவுக்கோ, தேநீர் அருந்துவதற்கோ ஓயாது கூப்பிட்டுக்கொண்டே இருப்பான். மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒரு கோடை விடுமுறைக்காக விடுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாள். பைலோக்குரோவின் விடுதியில் நிரந்தரமாகத் தங்கினாள். அவள் அவனை விட பத்து வயது மூத்தவள். அவன் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது கூட அவளுடைய அனுமதியைக் கோர வேண்டிய அளவுக்கு அவன் மேல் தன்னுடைய கூர்மையான கண்காணிப்பைப் பதித்திருந்தாள். அடிக்கடி ஓர் ஆழமான ஆண் தன்மையுடன் அழுவதுண்டு; அதன் பிறகு அவள் நிறுத்தவிட்டால் நான் என்னுடைய அறையை விட்டு விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று நான் அவளுக்கு செய்தி அனுப்புவேன்; அவள் நிறுத்தி விடுவாள்.

நாங்கள் வீட்டையடைந்தபோது பைலோக்குரோவ் சோஃபாவில் உடகார்ந்தவாறே நெற்றியில் சுருக்கங்கள் விழும்படி எதையோ ஆழமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தான். நான்தான் காதலில் விழுந்துவிட்டேன் என்பதைப்போன்ற ஒரு மென்மையான உணர்வுடன் கூடிய மனநிலையில் நான் அறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தேன். வோல்ட்சானினோவ் குடும்பத்தைப் பற்றிப் பேசவிரும்பினேன்.

''பள்ளிக்கூடங்களுக்கும், ஆஸ்பத்திரிகளுக்கும் தான் அர்ப்பணிப்பதைப் போல தன்னை அர்ப்பணிக்கும் ஸெம்ஸ்ட்வோவின் உறுப்பினன் எவனையாவது மட்டுமே லிடாவால் காதலிக்க முடியும்.'' என்று சொன்னேன். '' ! அந்த மாதிரியான பெண்ணொருத்திக்காக ஸெம்ஸ்ட்வோவுக்குள் மட்டும் நுழைய மாட்டார்கள். தேவதைக் கதைகளில் வருகிற பெண்ணைப்போல் இரும்புக்காலணிகளைக் கூட கழற்றி எறிந்து விடுவார்கள். அந்த மிசூஸ்...என்ன ஓர் இனிமையான பெண் அவள்....அந்த மிசூஸ்'' என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டேன்.

பைலோக்குரோவ், எர்ர்....எர்... என்று இழுத்தான். இழுத்தவாறே வயதானதால் வருகின்ற பக்க விளைவுகளைப் பற்றி நீண்ட்தொரு சிக்கலான விவாதத்தை ஆரம்பித்தான்-- குற்றம் காணும் குணம். நான் அவனை எதிர்த்துப்பேசுகிறேன் என்ற தொனியில் ஒரு தன்னம்பிக்கையுடன் பேசினான். ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டு வெறுமனே பேசும்போதும், அவன் எப்போது போய்த்தொலைவான் என்று ஒருவருக்குத் தெரியாத போதும் உண்டாகும் ஆழமான மன உளைச்சலை நூற்றுக்கணக்கான மைல்கள் பரப்பளவு கொண்ட, ஆள் நடமாற்றமற்ற, வெறுமையான, எரிந்துபோன ஸ்டெப்பி புல்வெளிகள் கூட உண்டுபண்ண முடியாது.

''குற்றம் காணும் குணத்தையோ நல்லதைக் காணும் குணத்தையோ பற்றியது அல்ல இந்த விஷயம்'' என்று எரிச்சலடைந்தவாறே நான் சொன்னேன். ''அதற்கு எளிமையான அர்த்தம் என்னவென்றால் நூற்றில் தொன்னூற்று ஒன்பது பேருக்கு அறிவு என்பது இல்லை என்பதுதான்''

பைலோக்குரோவ் அது தன்னை நோக்கிச் சொல்லப்பட்டதைப்போல எடுத்துக்கொண்டான். காயம் பட்டவனாக எழுந்துபோய்விட்டான்.


III

''இளவரசர் மாலாஸியோமோவில் தங்கியிருக்கிறார். உனக்கு ஞாபகப்படுத்தி வந்து பார்க்கும்படி சொன்னார்'' என்று லிடா தன் தாயாரிடம் கூறினாள். அவள் அப்போதுதான் உள்ளே வந்து தன் கையுறைகளைக் கழற்றிக்கொண்டிருந்தாள். ''பெரிய ஒரு சுவையான செய்தி ஒன்றை அவர் எனக்குத் தந்துள்ளார்....மாலாஸியோமோவில் ஒரு மருத்துவ நிவாரண மையம் நிறுவுவதைப் பற்றி மாகாண சபையில் மீண்டும் கேள்வி எழுப்பப் போவதாக எனக்கு வாக்குறுதி தந்துள்ளார். ஆனால் அது சம்பந்தமாக நம்பிக்கை அவ்வளவாக இல்லை என்றும் சொன்னார்'' என்று சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்துத் திரும்பிக் கொண்டு சொன்னாள். '' என்னை மன்னிக்கவும்...இந்த மாதிரியான விஷயங்கள் உங்களுக்குச் சுவாரஸியமாக இருக்காது என்பதை நான் அடிக்கடி மறந்துபோய் விடுகிறேன்''

எனக்கு எரிச்சலாயிருந்தது.

''ஏன் எனக்கு சுவாரஸியமாக இருக்காது? ''என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு சொன்னேன். என்னுடைய அபிப்ராயத்தை தெரிந்துகொள்ள உனக்கு இஷ்டமில்லை. மற்றபடி இன்னொன்றையும் உனக்கு சொல்லிக்கொள்கிறேன். அந்தக் கேள்வி என்னைப் பொறுத்தவரையில் மிகவும் சுவாரஸியமான ஒன்றுதான்''

''அப்படியா!''

''ஆமாம்...என்னைப் பொறுத்த வரையில் மாலாஸியோமோவோவில் ஒரு மருத்துவ நிவாரண மையம் என்பது முற்றிலும் தேவையில்லாத ஒன்று''

என்னுடைய எரிச்சல் அவளையும் தொற்றிக்கொண்டது; தன்னுடைய கண்களை இடுக்கிக் கொண்டு கிள்ளுக் கீரையாக என்னைப் பார்த்தவாறே என்னை நோக்கிக் கேட்டாள்:

''எது அவசியம்இயற்கைக் காட்சி ஓவியங்களா?

''இயற்கைக்காட்சி ஓவியங்களும் இல்லை..ஒன்றுமே அவசியம் இல்லை..''

அவள் தன்னுடைய கையுறைகளைக் கழற்றி முடித்திருந்தாள். சற்று முன்னம் தபாலில் வந்து சேர்ந்திருந்த செய்தித்தாளைத் திறந்தாள். ஒரு நிமிடத்திற்குப் பிறகு வெளிப்படையாகவே தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகச் சொன்னாள்:

''கடந்த வாரம் பிரசவத்தில் அன்னா இறந்துவிட்டாள். அருகாமையில் ஏதாவது ஒரு மருத்துவ நிவாரண மையம் இருந்திருந்தால் அவள் பிழைத்திருப்பாள். இயற்கைக் காட்சிகளைத் தீட்டும் ஓவியர்கள் கூட இதனைப்பற்றிக் கட்டாயம் கருத்துரை வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்'' என்றாள்.

''இதுபற்றி ஒரு பெரிய நிச்சயமான கருத்து சொல்ல விழைகிறேன். நான் உனக்கு உறுதியாகச் சொல்ல முடியும்'' என்று பதிலளித்தேன். நான் சொன்னதைக் கேட்க விரும்பாதவள் போல செய்த்தாளை மேய்ந்துகொண்டிருந்தாள்.

''என்னுடைய அறிவுக்கெட்டிய வரையில், இந்தப் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், நூலகங்கள், மருத்துவ நிவாரண மையங்கள் எல்லாம் தற்போதைய நிலைமையில் மக்களின் அடிமைத்தனத்தை அதிகப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன. ஒரு பெரிய சங்கிலியால் விவசாயிகள் எல்லாம் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். நீ அந்த சங்கிலியை உடைக்க மாட்டேன் என்கிறாய். ஆனால் அதற்குப்பதில் புதிது புதிதாக இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டே போகிறாய். ---அதுதான் இந்த விஷயத்தைப் பற்றிய என்னுடைய கருத்து'' என்றேன்.

அவள் தன்னுடைய கண்களை என்னை நோக்கி உயர்த்தி வஞ்சப்புகழ்ச்சியாக ஒரு புன்னகை செய்தாள். இட்டுச்செல்லும் கருத்தை உருவாக்க முயற்சித்தவாறே நானும் விடாமல் தொடர்ந்தேன்.

''குழந்தை பிறக்கும்போதே அன்னா இறந்துவிட்டது இங்கே பிரச்சினை இல்லை: பிரச்சினை என்னவென்றால் இந்த அன்னாக்கள், மாவ்ராக்கள், பெலாஜியாக்காள் எல்லோருமே அதிகாலையிலிருந்து இரவு வரை கஷ்டப்படுகிறார்கள். சக்திக்கு மீறி உழைக்கிற காரணத்தால் நோய்வாய்ப்படுகிறார்கள். வாழ் நாள் முழுவதும் தங்களுடைய நோயுற்றிருக்கும், பசித்து வாடும் குழந்தைகளைப் பேண வேண்டி நடுங்கிச் சாகிறார்கள். அவர்களுடைய வாழ் நாள் முழுவதும் மருத்துவம் பார்ப்பதிலேயே கழிந்துவிடுகிறது. சாவையும், நோயையும் பற்றிய பயத்துடன், மங்கிப்போய், இளமையிலேயே முதுமை எய்தி அழுக்குடனும், துர்நாற்றத்துடன் மடிந்து போய்விடுகின்றனர். வளர்ந்தவுடன் அவர்களின் குழந்தைகளும் அதே கதையைத் தொடர்வார்கள். இது இப்படியே பல நூறு ஆண்டுகளுக்கு நடக்கும்; பல்லாயிரக்கணக்கான மக்கள் விலங்குகளைக் காட்டிலும் கீழ்த்தரமாக வாழ்வார்கள். சிறு ரொட்டித் துண்டு ஒன்றிற்காக ஓயாத பயத்துடன் வாழ்வார்கள். அவர்களின் நிலைமையின் மொத்தப் பயங்கரமும் தங்களது ஆன்மாவையும், உருவத்தையும் ஒப்புமையையும் ஒருபோதும் எண்ணிப்பார்க்க முடியாத இயலாமையில் பொதிந்திருக்கிறது. குளிர், பசி விலங்குகளிடம் பயம், உழைத்துத் தேய வேண்டியதன் சுமை யாவையும் பனிக்கட்டி சரிந்து வீழ்ந்துகிடப்பதைப் போல அவர்கள் ஆன்மீக செயல்பாடுகளைச் செய்ய முடியாதபடி ஒவ்வொரு பாதையையும் அடைத்துக் கொண்டு நிற்கின்றன. -----அதாவது, எது மனிதனைக் காட்டுமிராண்டிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறதோ, எந்த ஒன்று வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறதோ அது அவர்களுக்கு உதவுவதற்காக ஆஸ்பத்திரிகளுடனும், பள்ளிக்கூடங்களுடனும் செல்கிறீர்கள்; ஆனால் அவர்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளிடமிருந்து அவர்களை நீங்கள் விடுவிப்பதில்லை. அதற்கு முரணாக புதிய தப்பபிப்ராயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களை இன்னும் நெருக்கமாகப் பிணைக்கிறீர்கள். அவர்களுடைய தேவைகளை அதிகரிக்கிறீர்கள்; மருந்துகளுக்காகவும், புத்தகங்களுக்காகவும் அவர்கள் ஸெம்ஸ்ட்வோவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என்ற உண்மையைப் பற்றிச் சொல்ல முடியாதபடி எப்போதுமில்லாத அளவு இன்னும் சிரமப்பட்டு உழைக்க வேண்டியவர்களாகி விடுகின்றனர்.''

''உன்னோடு நான் விவாதம் செய்யப் போவதில்லை'' என்று செய்தித்தாளை கீழே வைத்தபடி சொன்னாள். ''இதையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்வேன். மடியில் கையை வைத்துக்கொண்டு ஒருவரால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. மனித இனத்தை நாங்கள் காப்பாற்றவில்லை என்பது உண்மை, மேலும் அனேகத் தவறுகளைக்கூட நாங்கள் செய்யலாம்; ஆனால் எங்களால் எது முடிகிறதோ அதைச் செய்கிறோம். நாங்கள் செய்வது சரி. நாகரீகம் அடைந்த ஒருவரின் மிக உயர்ந்த, மிகப் புனிதமான காரியம் என்னவென்றால் தன் அக்கம்பக்கத்தாருக்கு சேவை புரிவதுதான். எங்களால் எந்த அளவு சிறப்பாக சேவை செய்ய முடிகிறதோ அந்த அளவு சேவை செய்ய முயற்சிக்கிறோம். உனக்கு இதெல்லாம் பிடிக்காது, ஆனால் ஒருவரால் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது''

''அது உண்மைதான், லிடா'' என்று சொன்னாள் அவளுடைய அம்மா. ''அது உண்மைதான்''

லிடாவுக்கு முன்பாக அவள் எப்போதுமே கொஞ்சம் தைரியம் குறைந்தவளாகவே காணப்பட்டாள். பேசும்போது கூட லேசாக நடுங்கிக்கொண்டுதான் பேசினாள். மேம்போக்காக எதையாவது சொல்வதற்கோ, இசகு பிசகாக எதையாவது பேசிவிடவோ அவள் பயந்தாள். அவள் அவளை ஒருபோதும் மறுதலித்தது இல்லை. எப்போதும் ''அது உண்மைதான் லிடா---அது உண்மைதான் என்று ஆமோதித்துக் கொண்டிருப்பது அவள் வழக்கம்.

''விவசாயிகளுக்கு எழுதப்படிக்கக் கற்பிப்பதும், வீணாய்ப்போன கருத்துக்களையும், மழலைப் பாடங்களைக் கொண்ட புத்தகங்களைக் கற்பிப்பதும், மருத்துவ நிவாரண மையங்களை நிறுவுவதும் அவர்களுடைய அறியாமையையும், இறப்பு விகிதத்தையும் குறைக்கப் போவதில்லை. உன்னுடைய சன்னலில் இருந்து வெளிவரும் வெளிச்சம் இந்தப் பெரிய தோட்டத்தை எப்படி வெளிச்சமாக்க முடியாதோ அப்படித்தான்'' என்று நான் சொன்னேன். ''நீ தருவது என்று ஒன்றுமே இல்லை. ஆனால் இந்த மக்களின் வாழக்கையில் குறிக்கிட்டு அவர்களுக்குள் புதிய விருப்பங்களையும் அவர்களின் உழைப்பின் புதிய தேவைகளையும் மட்டும்தான் நீ உருவாக்குகிறாய்'' என்று சொன்னேன்.

''அச்! கடவுளே! ஆனால் ஒருவர் எதையாவது செய்து தொலைக்க வேண்டுமே'' என்று விரக்தியில் சொன்னாள் லிடா. என்னுடைய விவாதங்கள் மதிப்பிலாதவை; அவள் அதையெல்லாம் வெறுக்கிறாள் என்பதை அவளுடைய குரலில் இருந்து ஒருவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

''முதலில் கடினமான உடல் உழைப்பில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும்'' என்றேன் நான். ''அவர்களுடைய அடிமைத்தளையை நாம் லேசாக்க வேண்டும்; கொஞ்சம் மூச்சு விடுவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்கட்டும். அடுப்படியிலும், வண்ணான் துவைக்கும் இடத்திலும், நிலத்திலும் தங்கள் மொத்த வாழ்நாட்களையும் கழிக்கலாகாது. தங்கள் ஆன்மாவைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரம் கிடைக்கட்டும்- தங்கள் ஆன்மீக சக்திகளை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு நேரம் கிடைக்கட்டும். மனிதனின் மிக உயர்ந்த பணி ஆன்மீகச் செயல்பாடுகள்தாம்- உண்மையைப் பற்றியும் வாழ்வின் அர்த்தத்தைப் பற்றியுமான ஒரு நிரந்தரமான தேடல். கரடு முரடான மிருகத்தனமான உடல் உழைப்பை அவர்களுக்கு அவசியமில்லாத ஒன்றாக மாற்றுங்கள். தங்களைச் சுதந்திரமானவர்களாக அவர்கள் உணரட்டும். இந்த மருத்துவமனைகளும், புத்தகங்களும் எந்த மாதிரியான கேலிக்கூத்தானவை என்பதைப் பிறகு பார்ப்பீர்கள். ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான பணி என்ன என்பதை அடையாளம் கண்டுகொள்ளும்போது மதத்தினாலும் அறிவியலாலும் கலைகளினாலும் மட்டும்தான் திருப்திப்படுவான்; இந்த மாதிரியான சில்லறை சமாச்சாரங்களினால் அல்ல'' என்று சொல்லிக்கொண்டே போனேன்.

''உழைப்பதில் இருந்து விடுதலையா?'' என்று சிரித்தாள் லிடா. ''ஆனால் அது முடியுமா? என்று கேட்டாள்.

''ஆமாம்...அவர்களுடைய உழைப்பில் நீயும் ஒரு பங்கை எடுத்துக்கொள். நாம் எல்லோரும் நகரவாசிகள், கிராமவாசிகள் எல்லோரும் எந்தப் பாகுபாடும் இன்றி மனித இனம் தங்களுடைய லௌகீக இச்சைகளைத் திருப்தி செய்யும் பொருட்டு செலவழிக்கும் உழைப்பை நம்மிடையே பங்கிட்டுக் கொள்ள ஒப்புக்கொண்டால் நம்மில் ஒவ்வொருவரும் அனேகமாக ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டும் வேலை பார்க்க வேண்டியிருக்கும். பணக்காரனும், ஏழையுமாக நாம் எல்லோரும் ஒரு நாளில் மூன்று மணி நேரம் மட்டும் வேலை செய்வதாய் கற்பனை செய்து பார்ப்போம். நம்முடைய மீதி நேரம் எல்லாம் சுதந்திரமானவை. இன்னும் கொஞ்சம் கற்பனை செய்து பார்- நம்முடைய உடலையும் உழைப்பையும் இன்னும் குறைவாகச் சார்ந்திருக்க வேண்டி நம்முடைய வேலையை இடம் மாற்றம் செய்வதற்காக இயந்திரங்களைக் கண்டுபிடிப்போம். மிகக்குறைந்த அளவுக்கு நம்முடைய தேவைகளை குறுக்கிக் கொள்ள முயற்சிப்போம். நம்முடைய குழந்தைகள் பசியைப்பார்த்து குளிரைப்பார்த்து பயப்படத்தேவையில்லாதபடி அன்னா, மாவ்ரா, பெலாஜியா போன்றவர்களைப்போல ஆரோக்கியம் குறித்து இடையறாமல் நடுங்கிக் கொண்டிருப்பவர்களாக இல்லாதபடி நம்மை நாம் வலிமைப்படுத்திக் கொள்வோம். இப்படி கற்பனை செய்து பார்- நாம் மருத்துவம் பார்ப்பதில்லை; மருத்துவமனைகள், புகையிலைத் தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு ஆலைகள் வைத்துக்கொள்வதில்லை. எத்தனை ஓய்வு நேரம் நமக்கெலாம் கிடைக்கும்! நாம் எல்லோரும் சேர்ந்து நம்முடைய ஓய்வு நேரத்தையெல்லாம் அறிவியலுக்காகவும் கலைகளுக்காகவும் அர்ப்பணிக்க முடியும். விவசாயிகள் சில நேரங்களில் வேலை செய்வார்கள்; மொத்த சமூகமும் சேர்ந்துகொண்டு ஒரே சமூகமாக வாழ்வின் உண்மையையும் அர்த்தத்தையும் தேட முடியும். எனக்கு நம்பிக்கை உள்ளது- மிகச் சீக்கிரமாகவே நாம் உண்மையைக் கண்டுபிடித்துவிட முடியும். இந்த ஓயாத வேதனைமிக்க, சாவின் அடக்குமுறை பயங்கரத்திலிருந்து, ஏன் சாவிலிருந்தே கூட மனிதன் விடுதலை பெற முடியும்''

''இருந்தாலும் உன்னுடைய கருத்துக்களையே நீ மறுதலிக்கிறாய்'' என்று சொன்னாள் லிடா. ''நீ அறிவியலைப் பற்றிப் பேசுகிறாய்! அதே சமயம் தொடக்கக் கல்வியை எதிர்க்கிறாய்''

''பொதுக்கட்டிடங்களில் இருக்கும் அடையாளங்கள், சில சமயம் ஒருவரால் புரிந்து கொள்ள முடியாத புத்தகங்கள் - இவையல்லாது மனிதனுக்குப் படிக்க வேறு எதுவும் இல்லாதபோது தேவைப்படுவதுதான் தொடக்கக் கல்வி.- அந்தக் கல்வி ரூரிக்க்கின் காலத்திலிருந்தே நம்மிடையே புழங்கி வந்து கொண்டிருக்கிறது; கோகோலின் பெட்ருக் ஷா நீண்ட காலமாக, நிரந்தரமாகப் படித்துக்கொண்டிருக்கிறாள்; இருந்தும் ரூரிக் இருந்த காலத்தில் இருந்ததைப்போலவேதான் இப்போது இந்த கிராமம் இருந்து கொண்டிருக்கிறது. நமக்குத் தேவையானது தொடக்கக்கல்வியல்ல, ஆன்மீக சக்திகளில் ஒரு பரந்தார்ந்த வளர்ச்சிக்குத் தேவையான சுதந்திரம்தான் நமக்குத் தேவையாக இருக்கிறது. தேவைப்படுவது பள்ளிக்கூடங்கள் அல்ல; பல்கலைக்கழகங்கள்தாம் தற்போதைய தேவை''

''மருத்துவத்தையும் கூட நீ எதிர்க்கிறாய்''

''ஆமாம்...நோய்கள் என்பது இயற்கையான விஷயம் என்பதைப் படிப்பதற்கு மட்டுமே மருத்துவம் தேவைப்பட வேண்டும். அவைகளை நிவர்த்திக்க அல்ல. ஒருவர் வைத்தியம் பார்க்க வேண்டுமானால் அது நோய்களாக இருக்கக் கூடாது; அது அவைகளுக்குண்டான காரணமாக மட்டுமே இருக்க வேண்டும். முக்கியமான காரணத்தை நீக்கு- அதுதான் உடலுழைப்பு. பிறகு எந்த நோயும் இருக்காது. நோயைக் குணமாக்கும் அறிவியலில் எனக்கு நம்பிக்கையில்லை'' என்று உணர்ச்சிவசப்பட்டவனாய் பேசிக்கொண்டிருந்தேன். ''அறிவியலும் கலையும் உண்மையாக இருக்கும்போது அவை தற்காலிகமான தனிப்பட்ட விளைவுகளைக் குறிவைப்பதில்லை. அழியாத, உலகமயமான அந்தங்களை அவை நோக்குகின்றன- வாழ்க்கையின் உண்மையையும், அர்த்தத்தையும்தான் அவை நோக்குகின்றன. அவை கடவுளை வேண்டுகின்றன; ஆன்மாவைத் தேடுகின்றன; நாட்களின் தேவைகளுடனும் கெட்ட விஷயங்களுடனும் ஆஸ்பத்திரிகளுடனும் நூலகங்களுடனும் அவை பிணைக்கப்படுகின்ற போது வாழ்க்கையை மேலும் சிக்கலாகவும் நாசமாகவும் ஆக்கி விடுகின்றன. நம்மிடையே மருத்துவர்களும், வேதியியலாளர்களும், வக்கீல்களும் படிக்க எழுதத்தெரிந்த பலர் நம்மிடையே ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் உயிரியலாளர்கள், கணித மேதைகள், தத்துவ அறிஞர்கள், கவிஞர்கள் எவரும் இல்லாமலேயே நாம் நிம்மதியாக இருக்கிறோம். நம்முடைய ஒட்டு மொத்த அறிவும், ஒட்டு மொத்த ஆன்மீக சக்தியும் தற்காலிகமான, எளிதில் கடந்து சென்று மறைந்து விடுகிற தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே கழிந்து விடுகின்றன. அறிவியல் மேதைகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் எல்லோரும் கடினமாக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு நன்றிகள்; வாழ்க்கையின் வசதிகள் ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாகிக் கொண்டே போகின்றன. நம்முடைய லௌகீக தேவைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இருந்தும் உண்மை என்பது வெகுதொலைவில் உள்ளது. மனிதன் இன்னும் மிகப்பெரிய பேராசை கொண்ட அசிங்கமான மிருகமாகவே இருக்கிறான்; மனித குலத்தின் பெரும்பகுதி கெட்டுச் சீரழியவே ஒவ்வொன்றும் முயற்சிப்பதைப் போன்று இருக்கிறது. வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் நிரந்தரமாக இழந்து விடுவதைப் போலிருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் ஓர் ஓவியனின் படைப்பு அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது. எவ்வளவுக்கு அவன் அதிக திறமையுள்ளவனாக இருக்கிறானோ அந்த அளவு அதிகமாக அவன் அன்னியனாகவும், புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளவனாகவும் மாறிவிடுகிறான். யாரேனும் ஒருவர் இதனை நோக்கினால், பேராசை கொண்ட அசுத்தமான ஒரு மிருகத்தின் பொழுதுபோக்கிற்காகத்தான் அவன் பணி புரிகிறான் என்பது விளங்கும்: ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் வாழ்க்கை முறையை அவன் ஆதரித்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் தெரியும். எனக்கு வேலை பார்க்கப் பிடிக்கவில்லை; நான் எந்த வேலையையும் செய்யப் போவதில்லை.......எதனாலும் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. இந்த உலகம் முழுவதும் மீள முடியாத சாபத்திற்கு ஆளாகி மூழ்கட்டும்''   

"மிசூஸ்...இந்த அறையை விட்டு வெளியே போ'' என்று தன்னுடைய சகோதரியைப் பார்த்துச் சொன்னாள் லிடா. என்னுடைய வார்த்தைகள் அந்த இளம் பெண்ணிற்குத் தீங்கிழைக்கலாம் என்று எண்ணியிருப்பாள் எனத் தோன்றியது.

''ஜென்யா தன் அம்மாவையும் சகோதரியையும் துயரத்துடன் நோக்கினாள். பின் அறையை விட்டுச் சென்று விட்டாள்.

''மக்கள் தங்களுடைய புறக்கணிப்பு மனப்பான்மையை சாக்குப் போக்கு சொல்லி சரியென்று வாதிட வரும்போது அவர்கள் சொல்கின்ற கவர்ச்சியான விஷயங்கள்தாம் இவை'' என்று கூறினாள் லிடா. ''பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் வேண்டாம் என்று சொல்வது கற்பிப்பதைக் காட்டிலும், வைத்தியம் செய்வதைக் காட்டிலும் எளிதான ஒன்று''

''அது உண்மைதான் லிடா'' ---அது உண்மைதான்'' என்று அவளுடைய அம்மா ஆமோதித்தாள்.

''படைப்பதை விட்டு விடுவேன் என்று நீ பயமுறுத்துகிறாய்'' என்றாள் லிடா. ''உன்னுடைய படைப்புகளுக்கு ஓர் உயர்ந்த மதிப்பை நீ தீர்மானித்து வைத்திருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நாமிருவரும் வாதிட்டுக் கொள்வதை நிறுத்திக்கொள்வோம். சற்று முன் நீ மிகவும் காழ்ப்புடன் பேசிய அறைகுறை மருத்துவமனையையும் நூலகத்தையும் இயற்கைக் காட்சிப் படங்களைவிடவும் மேலானதாக நான் கருதுவதால் இதனைப் நாமிருவரும் ஒருபோதும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை'' என்று சொல்லிவிட்டு தன்னுடைய தாயாரை நோக்கி வெடுக்கெனத் திரும்பிப்பார்த்து முற்றிலும் வித்தியாசமான ஒரு குரலில் பேசத்தொடங்கினாள்: ''நம் இளவரசர் மிகவும் மாறிப் போயிருக்கிறார். ஏற்கனவே பார்த்த சமயம் இருந்ததைவிட மிகவும் மெலிந்து போயிருக்கிறார். விச்சிக்கு அனுப்பப் படுகிறார்''

என்னுடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டியே அவள் தனது அம்மாவிடம் இளவரசனைப் பற்றிப் பேசினாள். அவள் முகம் சிவந்தது; தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்வதற்காக கிட்டப்பார்வை கொண்டவளைப்போல மேசையை நோக்கித் தாழ்வாகக் குனிந்து கொண்டாள்; செய்தித்தாளை படிப்பதைப் போல பாவனை செய்தாள். நான் அங்கிருப்பது அவளுக்கு அசௌகரியமாகத் தோன்றியது. நான் விடை சொல்லிக்கொண்டு வீட்டை நோக்கிக் கிளம்பினேன்.

IV

கதவுகளுக்கு வெளியே எல்லாம் அசையாமல் அமைதியாக இருந்தது. குளத்திற்கு அப்பால் இருந்த கிராமம் ஏற்கனவே ஆழ்ந்து தூங்கி வழிந்துகொண்டிருந்தது. எங்கேயும் ஒரு விளக்கு கூட தென்படவில்லை. நட்சத்திரங்கள் மட்டும் குளத்தில் மங்கலாகப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. சிங்கங்களுடன் காணப்பட்ட வாசற்கதவில் ஜென்யா அசையாமல் நின்று கொண்டிருந்தாள். என்னை விடையனுப்புவதற்காக காத்துக்கொண்டிருந்தாள்.

''கிராமத்தில் எல்லோரும் நன்றாகத் தூங்கிவிட்டார்கள்'' என்று இருட்டில் அவளுடைய முகத்தை அடையாளம் காண முயன்றபடி அவளிடம் சொன்னேன். என்னை நோக்கி நிலைகுத்திக் கொண்டிருந்த அவளுடைய துயரம் நிறைந்த கண்களைப் பார்த்தேன். ''பொதுக் கட்டிடங்களின் காவல்காரர்கள், குதிரைத் திருடர்கள் கூட நன்றாகத் தூங்கிவிட்டார்கள். ஆனால்...நாம்...நன்றாகத் தின்று வளர்ந்தவர்கள், வாதிட்டுக்கொண்டும், ஒருவரையொருவர் எரிச்சலூட்டிக்கொண்டும் இருக்கிறோம்''

அது ஆகஸ்ட் மாதத்தின் ஒரு துக்ககரமான இரவு-----துக்கம் ஏன் என்றால் இலையுதிர்காலத்தின் அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துவிட்டன. செந்நீல மேகங்களுக்குப் பின்னால் நிலவு உதித்துக்கொண்டிருந்தது. சாலையின் மீதும், இருட்டாக இருந்த குளிர்கால சோளக் கொல்லைகளின் மருங்கின் மீதும் அது ஒரு மங்கலான ஒளியைத் தெளித்துக்கொண்டிருந்தது. என்ன காரணத்திற்காகவோ அது அவளைப் பயமுறுத்திகொண்டிருந்தது.

''நீ சொன்னதெல்லாம் சரியென்றுதான் நானும் நம்புகிறேன்'' என்று அந்த இரவின் குளிர்வாடைக் காற்றில் நடுங்கியவாறே அவள் சொன்னாள். '' மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆன்மீக விஷயங்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டால் வெகு விரைவிலேயே அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வார்கள்''

''கண்டிப்பாக...நாமெல்லாம் உயர்ந்த உயிர்கள்..நாம் உண்மையிலேயே மனித அறிவின் மொத்த சக்தியை உணர்ந்து கொள்வோமேயானால், உயர்ந்த முடிவுகளுக்காக வாழ்வோமேயானால் முடிவில் நாம் கடவுள்களைப் போல மாறிவிடலாம். ஆனால் அது நடக்கப் போவதில்லை. இந்த மனித இனம் அறிவின் எச்சம் நீர்த்துப்போகும்வரை கெட்டுச் சீரழிந்தவாறே இருக்கும்''

வாசற்கதவுகள் கண்பார்வையில் இருந்து விலகிய பின் ஜென்யா நின்றாள். என்னுடைய கைகளைப் பற்றிக்கொண்டு குலுக்கினாள்.

''குட் நைட்'' என்று நடுங்கிக்கொண்டே சொன்னாள் ; அவளுடைய தோள்களில் இருந்த மேல்சட்டையைத்தவிர அவளிடம் வேறொன்றும் இல்லை. குளிரில் சுருங்கிக்கொண்டிருந்தாள். " நாளைக்கு வாருங்கள்'' என்றாள்.

தனித்துவிடப்பட்ட எண்ணத்தால் நிராதரவாக உணர்ந்தேன். என் மீதும் மற்றவர்கள் மீதும் எரிச்சலாகவும் அதிருப்தியாகவும் இருந்தது. வீழ்கின்ற நட்சத்திரங்களைப் பார்க்காமல் இருக்க நானும் முயற்சி செய்தேன். ''இன்னும் ஒரு நிமிடம் இரேன்'' என்று அவளிடம் சொன்னேன். ''கெஞ்சிக் கேட்கிறேன்.''

நான் ஜென்யாவைக் காதலித்தேன். நான் வந்தபோது அவள் என்னைச் சந்தித்தாள் என்பதாலோ, நான் செல்லும்போது என்னை விடைசொல்லி அனுப்பினாள் என்பதால் என்னவோ நான் அவளைக் காதலித்து இருக்கக் கூடும். அவள் என்னை எப்போதும் பிரியமுடனும் உற்சாகத்துடனும் உற்று நோக்கினாள். அவளுடைய வெளிறிய முகம், நீண்டு நெளிந்த கழுத்து, நெடிய கரங்கள், அவளது பலவீனம், அவளுடைய சோம்பேறித்தனம், அவளுடைய வாசிப்பு எல்லாம் எவ்வளவு மனதைத் தொடும்படி அழகாய் இருக்கின்றன? அவளுடைய புத்திசாலித்தனம்!! அவளுடைய புத்திசாலித்தனம் சராசரிக்கும் மேலாக இருந்தது என்பது குறித்து எனக்குச் சந்தேகம் இருந்தது. அவளுடைய கருத்துக்களின் விஸ்தாரத்தால் நான் கவரப்பட்டேன். ஒருவேளை அவை என்னை வெறுத்த, பிடிவாதமான, அழகான லிடாவின் கருத்துக்களில் இருந்து வேறுபட்டவையாக இருந்ததால் இருக்கலாம். நான் ஓர் ஓவியன். அதனால் கூட ஜென்யா என்னை விரும்பியிருக்கக்கூடும். என்னுடைய திறமையால் அவளுடைய இதயத்தை வென்றிருந்தேன். அவளுக்காக மட்டுமே நான் ஓவியம் வரைய வேண்டும் என்ற ஓர் உள்ளார்ந்த ஆசை எனக்கு ஏற்பட்டது. நம்பிக்கையற்று தனித்தவனாய் பயனற்றவனாய் என்னைக் குறித்து நான் இந்தத் தன்னிகரில்லாத அழகான இயற்கையின் மத்தியில் உணர்ந்தேன். மரங்கள், நிலங்கள், பனிமூட்டங்கள், சூரிய உதயம் என அந்த அழகான இயற்கையைத் தன்வசப்படுத்திக் கொண்டு என்னுடன் எப்போதுமே இருக்கும் என் சின்னஞ்சிறிய ராணியாக அவளைப்பற்றி நான் கனவு கண்டேன்.

''இன்னும் ஒரு நிமிடம் இரேன்'' என்று அவளை இறைஞ்சினேன். ''உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்''

என்னுடைய மேல் கோட்டைக்கழற்றி குளிர்ந்து போயிருந்த அவளுடைய தோள்களின் மீது போட்டேன். அசிங்கமாய் தோற்றமளிக்கும் என்ற அச்சத்தாலும், ஆண் ஒருவனுடைய கோட்டையணிந்து கொண்டதால் கோணங்கித்தனமாக இருக்கும் என்பதாலும் சிரித்துக்கொண்டே அதைக் கழற்றியெறிந்தாள். அந்தக் கணத்தில் அவளை கைகளால் அரவணைத்துக்கொண்டு அவளுடைய முகத்தை, தோள்களை, கைகளை முத்தங்களால் நிரப்பினேன்.

''நாளை வரைக்கும்'' என்று இருட்டின் அமைதியை உடைக்கப் பயப்படுபவள் போல மெதுவாக முணுமுணுத்தாள். என்னை அணைத்துக்கொண்டு சொன்னாள். ''நம் இருவர் இடையே எந்த ரகசியமும் இல்லை. அம்மாவிடமும் அக்காவிடமும் உடனடியாகச் சொல்ல வேண்டும்...மிகவும் பயமாக இருக்கிறது! அம்மாவை சரிகட்டி விடலாம். அவளுக்கு உன்னைப் பிடிக்கும்----ஆனால் லிடா! ''

பின் வாசற்கதவை நோக்கி ஓடிவிட்டாள்.

''குட் பை'' என்று கூப்பிட்டாள்.

அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு அவள் ஓடிச்செல்லும் சத்தத்தைக் கேட்டேன். வீட்டிற்குப் போக விருப்பமில்லாமல் இருந்தது. போவதற்கும் ஒன்றும் இல்லை. கொஞ்ச நேரம் தயங்கியபடியே நின்றேன். அவள் வாழ்ந்து கொண்டிருந்த இனிமையான எளிமையான பழைய வீட்டை மீண்டும் ஒருமுறை பார்ப்பதற்கு மெதுவாகத் திரும்பி நடக்கலானேன். மேல்மாடியின் சன்னலின் வழியாக அந்த வீடு என்னைப்  பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவும், எல்லாவற்றையும் புரிந்துகொண்டதைப் போலவும் தோன்றிற்று. மேல்தளத்திற்கு அருகாமையில் நடந்து சென்றேன். இருட்டில் ஒரு பழைய 'எல்ம்' மரத்தின் கீழே டென்னிஸ் மைதானத்தில்  அருகேயிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தேன். அங்கிருந்து அந்த வீட்டைப்பார்த்தேன். மிசூஸ் தூங்கிய கடைசி மாடியில் பிரகாசமான வெளிச்சம் இருந்தது. பின் அது ஒரு மங்கலான பச்சை நிறத்திற்கு மாறியது-----அவர்கள் விளக்கை மறைப்பானால் மூடியிருக்கவேண்டும். நிழல்கள் அசையத்தொடங்கின......என்னுள் காதலும், அமைதியும், சுய திருப்தியும் நிரம்பி வழிந்தன. ---என்னுடைய உணர்வுகளால் உந்தப்பட்டவனாய் இருக்கின்ற திருப்தி; காதலில் வீழ்ந்துள்ள திருப்தி. அதே நேரம் என்னிடம் இருந்து சில காலடி தூரத்தில் அங்கிருந்த அறைகளில் ஒன்றில் என்னை விரும்பாதவளாகவும், அனேகமாக என்னை வெறுப்பவளாகவும் இருக்கின்ற லிடா இருக்கிறாள் என்ற எண்ணம் என்னை சஞ்சலப்படுத்தியது. ஜென்யா வரமாட்டாளா என்ற எதிர்பார்ப்புடன் அங்கே உட்கார்ந்திருந்தேன்-----கவனித்தவாறே மேல்மாடியில் பேசிக் கொண்டிருக்கிற குரல்களை நான் கேட்க முடிந்ததைப் போல கற்பனை செய்து கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழிந்தது. பச்சை நிற வெளிச்சமும் அணைந்துவிட்டது. நிழல்களும் கண்களுக்குப் புலப்படவில்லை. வீட்டிற்கு நேர் உச்சியில் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. தூங்கிவழியும் தோட்டத்தையும், பாதைகளையும் அது ஒளியூட்டிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு முன்னால் பூத்திருந்த டாலியா மரங்களையும், ரோஜாப் பூக்களையும் தெளிவாகக் காணமுடிந்தது. எல்லாம் ஒரே நிறத்தைக் கொண்டிருந்ததைப் போலக் காட்சியளித்தன. குளிர் கடுமையடையத் தொடங்கியது. தோட்டத்தைவிட்டு வெளியே நடந்தேன். என்னுடைய கோட்டை எடுத்துக்கொண்டு மெதுவாக வீட்டை நோக்கி இலக்கற்ற நடையில் செல்லலானேன்.

மறுநாள் இரவு உணவுக்குப் பின்ன்னர் நான் வோல்ட்சானினோவ் குடும்பத்தைப் பார்க்கச் சென்றிந்தபோது தோட்டத்திற்குச் செல்லும் கண்ணாடிக்கதவு அகலமாகத் திறந்து காணப்பட்டது. தளத்திற்கு மேல் சென்று அமர்ந்து கொண்டேன். மலர்ப்படுக்கையின் பின்னால் இருந்து தோன்றுவாளா, இல்லை புல்வெளியில் இருந்து தோன்றுவாளா இல்லை பாதை ஏதாவது ஒன்றில் இருந்து தோன்றுவாளா அல்லது வீட்டில் இருந்து அவளுடைய குரலைக் கேட்க மாட்டேனா என்று ஒவ்வொரு நிமிடமும் ஜென்யாவை எதிர்பார்த்தவாறு உட்கார்ந்திருந்தேன். பிறகு வரவேற்பறைக்குள் நுழைந்தேன். பிறகு சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தேன். எந்த ஒரு மனித உயிரின் அடையாளமும் தென்படவில்லை. சாப்பிடும் அறையிலிருந்து நீளமான வராண்டாவை ஒட்டியவாறு "ஹால்' வரைக்கும் சென்று திரும்பினேன். அந்த வராண்டாவில் பல கதவுகள் இருந்தன. அவைகளில் ஒன்றிலிருந்து லிடாவின் குரலை நான் கேட்டேன்.

''கடவுள்...........ஒரு காகத்துக்கு........அனுப்பினார்'' என்று சத்தமான அழுத்தமான குரலில் பேசினாள். அனேகமாக ஒப்ப எழுதக் கூறிக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்தேன். ---''கடவுள் ஒரு காகத்துக்குப் பாலாடைக்கட்டித் துண்டை அனுப்பினார்.....ஒரு காகம்....ஒரு பாலாடைக்கட்டித் துண்டு...யார் அங்கே '' என்று திடீரென்று என்னுடைய காலடிகளைக் கேட்டுவிட்டு கூப்பிட்டாள்.

''நான்தான்''

"ஆஹ்...என்னை மன்னிக்கவும்இந்த நிமிடம் உங்களிடம் வரமுடியாது! நான் தாஷாவுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.''

''எகடெரினா பாவ்லோவ்னா தோட்டத்தில் இருக்கிறார்களா?''

''இல்லை, இன்று காலை என் தங்கையுடன் பென்ஸா மாகாணத்தில் உள்ள என்னுடைய அத்தை வீட்டிற்கு சென்று விட்டாள். இந்தக் குளிர்காலத்தில் அனேகமாக அவர்கள் வெளிநாடு செல்லலாம்'' என்று கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு சொன்னாள். ''கடவுள்...காகத்துக்கு... அனுப்பினார்.... ஒரு பாலாடைக்கட்டித்துண்டு...என்ன எழுதிவிட்டாயா? என்று தொடர்ந்தாள்.

நான் ஹாலுக்குள் சென்றேன். குளத்தையும் கிராமத்தையும் வெறித்து நோக்கினேன். ''கடவுள் காகத்துக்கு ஒரு பாலாடைக்கட்டியை அனுப்பினார்...பாலாடைக்கட்டி... என் காதுகளை வந்தடைந்து கொண்டிருந்தது.

எந்த வழியாக முதன்முறையாக நான் இங்கு வந்தேனோ அதே வழியாக திரும்பிச் சென்றேன்----முதன்முறையாக வளாகத்திலிருந்து தோட்டத்தை நோக்கி வீட்டைக் கடந்தவாறு சென்று கொண்டிருந்தேன்....அந்த நேரத்தில் என்னை முந்திக்கொண்டு சென்ற சிறுவன் ஒருவன் ஒரு காகிதத்தை என்னிடம் தந்தான்.

''எல்லாவற்றையும் என் அக்காவிடம் சொன்னேன். உங்களைவிட்டுப் பிரிந்திருக்கும்படி என்னை வற்புறுத்துகிறாள்;; என்று எழுதியிருந்தது. ''அவளுடைய சொல்லைத் தட்டி அவளைக் காயப்படுத்த நான் விரும்பவில்லை. உங்களுக்கு இறைவன் மகிழ்ச்சியைத் தரட்டும். என்னை மன்னித்துவிடுங்கள். என் அம்மாவும் நானும் எந்த அளவு குமுறி அழுது கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை''

அதற்குப்பிறகு ஃபிர் மரங்கள் அடர்ந்த பாதை வந்தது, ஒடிந்து போன வேலி ஒன்று வந்தது... நிலத்தில் ஒரு நேரம் 'ரை'யின் பூக்களும், சோளந்தின்னிப் பறவைகளும் கூப்பிட்டுக்கொண்டிருந்த இடத்தில் இப்போது காகங்களும், நொண்டிக்குதிரைகளும் உலவிக்கொண்டிருந்தன. மலைச்சரிவில் குளிர்காலச் சோளத்தின் பளிச்சென்ற பச்சைத்திட்டுகள் தெரிந்தன. சுவாரஸியமற்ற ஒரு வேலை நாளின் சலிப்பு எனக்கு வந்தது; வோல்ட்சானினோவ் குடும்பத்தாரிடம் நான் பேசியவைகளை எண்ணிப்பார்த்தால் எனக்கு வெட்கமாக இருந்தது. ஏற்கனவே வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதைப் போன்றதொரு சலிப்பு ஏற்பட்டது. வீட்டை அடைந்து, மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அந்த நாள் மாலையிலேயே பீட்டர்ஸ்பர்கிற்கு புறப்பட்டுவிட்டேன்.

-----------------------------------------
வோல்ட்சானினோவ் குடும்பத்தாரை மீண்டும் நான் பார்க்கவே இல்லை. மிகச் சமீபமாக நான் கிரீமியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது புகைவண்டியில் பைலோக்குரோவைச் சந்தித்தேன். ஏற்கனவே இருந்ததைப்போலவே ஒரு ஜெர்க்கினையும், அலங்காரப்பின்னல் செய்யப்பட்டிருந்த சட்டையொன்றையும் அணிந்திருந்தான். எப்படி இருக்கிறான் என்று கேட்டேன். கடவுள் புண்ணியத்தால் தான் நன்றாக இருப்பதாகச் சொன்னான். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். தன்னுடைய பண்ணையை விற்றுவிட்டு சிறியதாக ஒரு பண்ணையை லியூபோவ் இவானோவ்னா பெயரில் வாங்கியுள்ளதாகச் சொன்னான்.

வோல்ட்சானினோவ் குடும்பத்தாரைப் பற்றி அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. லிடா இன்னும் ஷெல்கோவ்கா கிரமத்தில் இருப்பதாகவும் பள்ளிக்கூடத்தில் கற்பித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னான். படிப்படியாக தன்னைப் பின்பற்றும் ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவதில் வெற்றி கண்டுள்ளாள் என்றும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து வலிமையான கட்சியாக மாறியுள்ள்னர் என்பதையும் சொன்னான். மொத்த மாவட்டத்தையும் தற்சமயம் வரை தன் கட்டை விரலின் கீழ் வைத்திருந்த பாலகினை கடந்த தேர்தல் கவிழ்த்துவிட்டது என்றும் சொன்னான். ஜென்யாவைப் பற்றிச்சொல்லும்போது அவள் அந்த வீட்டில் வாழவில்லை என்றும் தற்போது அவள் எங்கே இருக்கிறாள் என்பது தெரியவில்லை என்று மட்டும் சொன்னான்.

நான் அந்த பழைய வீட்டை மறக்கத் தொடங்கியிருந்தேன். சில நேரங்களில் மட்டும், நான் ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கும்போதோ படித்துக்கொண்டிருக்கும்போதோ திடீரென்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் சன்னலில் தெரிந்த பச்சை நிற வெளிச்சத்தையும் இரவில் நான் நிலங்களில் நடந்து செல்லும்போது எழும் என்னுடைய காலடிச் சத்தங்களையும், அந்தக் குளிரில் இதயம் நிறைந்த என் காதலுடன் என் கைகளைத் தேய்த்தவாறே நினைத்துப்பார்க்கிறேன். நான் வருத்தமாக இருக்கும் தருணங்களில், தனிமையில் மன அழுத்தத்துடன் உழலும் போது அந்த நினைவுகள் அரிதாகவே எனக்கு மங்கலாகத் தரிசனம் தருகின்றன. அவளும் என்னைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறேன். -----அவள் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதைப் போல, நாங்கள் சந்திப்போம் என்பதைப்போல...........

மிசூஸ், நீ எங்கே இருக்கிறாய்?



Translated into : Saravanan. K