சுமார் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு என்னால்
மறக்க முடியாத இந்தக் காதல் கதையை என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்வேன் என்று
கனவிலும் நான் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லைதான். இது வேறு யாருடைய காதல்
கதையும் அல்ல. என்னுடைய சொந்தக் காதல் கதைதான் இது. இந்தக்கதையில் வரும் சில
கதாபாத்திரங்கள் கற்பனையில் உலவியவர்கள் அல்ல. உயிரோட்டமுள்ள மனிதர்கள். பெயர்கள்
மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இக்கதையில் குறிப்பிடப்படும் ஒரு பெண்ணின் பெயர் அவளுடைய உருவத்தை குறிப்பது அல்ல. அறிமுகமே இல்லாத ஒரு நிலையில் அந்தப் பெண் குறித்து என் மனதில் நினைவில் இருப்பது அந்த பெயர் மட்டும்தான். அன்பு என்று வரும்போது ரஸக்குறைவாகத் தோன்றும் பெயர்களும் இலக்கிய ரசனைக்கு ஒத்துப்போகக் கூடிய ஒன்றுதான்
இக்கதையில் குறிப்பிடப்படும் ஒரு பெண்ணின் பெயர் அவளுடைய உருவத்தை குறிப்பது அல்ல. அறிமுகமே இல்லாத ஒரு நிலையில் அந்தப் பெண் குறித்து என் மனதில் நினைவில் இருப்பது அந்த பெயர் மட்டும்தான். அன்பு என்று வரும்போது ரஸக்குறைவாகத் தோன்றும் பெயர்களும் இலக்கிய ரசனைக்கு ஒத்துப்போகக் கூடிய ஒன்றுதான்
பதினைந்து வருடங்களுக்கு முன்.................
இடம்: புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
நெருங்கிய தொடர்புடைய இடங்கள்: பல்கலைக்கழகத்தின் தப்தி மற்றும் சபர்மதி
விடுதிகள்.
அழகான பெண்கள் யாரையாவது பார்த்தால் உடனே காதல்
தொற்றிக்கொண்டு விட்டது என்று நினைத்துக்கொண்டு அடிக்கடி கண்ணாடி பார்க்கத்தூண்டும்
அந்த வயதில்தான் என்னுடைய மேற்படிப்புக்காக புதுதில்லி ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகம் சென்றேன்.
எப்படியாவது ஐ.பி.எஸ் அதிகாரியாகி விடவேண்டும்
என்று எவரோ போட்டுவிட்ட விதை வெறியாகிப்போனதால் என்னுடைய சுயத்தை இழந்தவனாய்
திணிக்கப்பட்ட குறிக்கோள் ஒன்றை என்னுடைய குறிக்கோள் என்று மயங்கி கால் போன
போக்கில் நடந்து எனது என்னவென்று தெரியாத ஒரு பயணத்தின் தற்காலிக நிறுத்தமாய் நான்
வந்து சேர்ந்த இடம்தான் அந்தப் பல்கலைக்கழகம். ஆங்கிலத்தில் பேசினாலோ அல்லது பேச
முயற்சி செய்தாலோ கேலிபேசும் தமிழகக் கல்லூரி வளாகத்தில் ஏதோ முயன்று எனக்குக் கொஞ்ச
நஞ்சமாய் பரிச்சயமாகி இருந்த ஆங்கிலம் வெகுவாய் செம்மையடைந்தது இந்தப்
பல்கலைக்கழகத்தில்தான். தமிழகப் பல்கலைக்கழகங்கள் போல் அல்லாமல் அன்றாடம்
மற்றவர்களுடன் சாதாரணமாகப் பேசுவதற்கே ஆங்கிலம் தேவை என்ற நிர்ப்பந்தம்தான் அதற்குக்
காரணமாக இருந்திருக்க முடியும். இந்திய அளவீடுகளில் சொல்லப்போனால் படிப்பதற்கு
சிறந்த இடம் அது. அதே சமயம் பாழாய்ப் போவதற்கும் அருமையான இடம் அதுதான். தான்தோன்றித்
தனமாக தற்குறியைப்போல திரிந்தாலும் இந்தப்பல்கலைக்கழகத்தின் பெயரைச் சொன்னால் ஏதோ
அறிவாளிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று இந்த சமுதாயம் எண்ணிக்கொள்ளும் என்று
அங்குள்ள அறிவாளிகள் எண்ணிக்கொள்வதுண்டு.
அரசு தரும் மானியத்தின் உதவியால் புதுதில்லியில்
மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குள் பிழைப்பு நடத்தத் தகுந்த இடம் அந்தப்
பல்கலைக்கழகம். படிப்பில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதற்காக அரசு
இந்தப்பல்கலைக்கழகத்திற்கு இன்றும் கூட அதிக அளவில் மானியம் வழங்கிக்கொண்டு
இருக்கிறது. அதற்குத் தகுந்தவாறு ஒரு சில துறைகளில் குறிப்பிடத்தகுந்த வகையில்
ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன என்பது ஓரளவுக்கு உண்மை. இருந்தும் இங்கு படிக்க
வரும் தொன்னூறு சதவீதம் பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகிவிடலாம் என்ற கனவில் மிதந்து
கொண்டு மானியம் தரும் சொகுசை பயன்படுத்திக்கொண்டு ஆராய்ச்சி என்பதை
பெயரளவில்தான் செய்துகொண்டு
இருக்கிறார்கள் என்பதும் உண்மை. சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் தொழிற்சாலையாகத்தான்
இந்தப் பல்கலைக்கழகம் இன்றும் விளங்கிக்கொண்டு இருக்கிறது என்பது இந்தத் தேர்வுகள்
எழுதிக்கொண்டு இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். மாணவர் அரசியல், செயல்பாடுகள்,
அரசியல் விழிப்புணர்வு குறித்த அறிவார்ந்த கருத்தரங்குகள், நாட்டின் தலைசிறந்த
துறை நிபுணர்கள் எந்த ஒரு படாடோபமும் இன்றி ஏதாவது ஓர் உணவு விடுதிக்குள் தரும்
கருத்துச்செறிவு நிறைந்த சொற்பொழிவுகள் என இந்தப்பல்கலைக்கழகத்திற்கு இன்னொரு
முகமும் உண்டு.
இப்படிப்பட்ட பல பெருமைகளைத் தனக்குள் அடக்கி
வைத்துள்ள இந்தப் பல்கலைக்கழகம் ஒரு நுழைவுத் தேர்வு மூலமாக என்னையும் ஏற்றுக்கொண்டது.
ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் என்னைக் காதல்வசப்படவும் செய்துவிட்டது.
உடம்பிலும் மனதிலும் ஏற்படும் வேதியியல் மாற்றம் எல்லா பெண்களையும் கண்டால்
வருவதில்லை. ஒவ்வொருவனின் கண்களுக்கும் ஒருத்தி தேவதையாய் தென்படுகிறாள். சிவப்பாய்
இருக்கும் ஒருத்தனுக்கு கருப்பாய் இருக்கும் ஒருத்தியைப் பிடிக்கிறது. அழகான
பெண்களுக்கு குட்டையும் கருப்பாகவும் இருக்கும் ஒருவனைப் பிடிக்கிறது. சமயங்களில்
இந்த இரண்டு பேருக்கும் இடையில் என்னடா இருக்கிறது; எதைப் பார்த்து இந்த இரண்டு
பேரும் காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஆச்சரியம் தோன்றும்படி அவர்களுடைய
தோற்றம் இருக்கும். உயரமும் குள்ளமும், கருப்பும் சிவப்பும், ஒல்லியும் குண்டும்
என தொடர்பில்லாத முரண்பாடுகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டு நிற்குமானால் அது
இந்தக் காதலில்தான் இருக்கும். இந்த அளவீடுகளை கணக்கில் கொண்டு அதற்குத்
தகுந்தவாறு தங்களின் தேவையான துணையைக் கணித்துக் கொண்டு காதலிக்க ஆரம்பித்தவர்கள்
தங்கள் வாழ்க்கை பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து
செல்வதைக் காணலாம். புற அழகைக் கண்டு உடம்பின் ஆகர்ஸன வேகம் தந்த காமம் மிகுந்த
உந்தல் அந்த அழகின் எல்லை இதுதான் என்று தெரிந்தவுடன் அதே வேகத்தில் தணிந்து
விடுவதும் அதனால் ஏற்படும் சலிப்பும்தான் இதற்குக் காரணம். சிவந்த கன்னங்களைக் கொண்ட சீமாட்டிகளும்,
புகைப்போக்கிகளை சுத்தம் செய்யும் கரிய கன்னங்களைக்கொண்ட தொழிலாளிகளும் ஒரு நாள்
மண்ணில் புதையுண்டுதான் ஆகவேண்டும் என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இந்தமாதிரியான
காதலர்களுக்குத் தெரிவதில்லை. நான் இப்படி சொல்வதால் அழகான பெண்களும் அழகான
ஆண்களும் தங்களுக்கு நிகரான அழகான ஜோடியைத் தேர்ந்தெடுக்க முனையும்போது
அவர்களுக்கு இடையில் காதல் இல்லை; வெறும் உடற்கவர்ச்சிதான் இருக்கிறது என்று
அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது. அவர்களுக்கு இடையிலும் உண்மையான காதல் இருக்கலாம்.
யார் கண்டது?
இப்படிப்பட்ட காதல் குறித்த ஒரு
மனோபாவத்துடன்தான் நானும் அங்கே திரிந்து கொண்டு இருந்தேன். வகுப்புக்கு
அவ்வப்போது செல்வதும் ஹாஸ்டலுக்கு வருவதும் இரவில் சாப்பிட்டு விட்டு மிகவும் முனைப்போடு
தேர்வுக்கு தயாரவதும் என என்னுடைய நேரம் கழிந்து கொண்டு இருந்தது. நான் தங்கி
இருந்தது தப்தி எனப்படும் விடுதியில். இந்த விடுதியில் ஆண் பெண் இருபாலருக்கும்
தனித்தனி பிரிவுகள் உண்டு. ஆண்கள் பகுதிக்கு பெண்கள் எந்த தயக்கமும் இன்றி வரலாம்.
எவ்வளவு நேரம் என்றாலும் தங்கிக்கொள்ளலாம். இருவரின் தனிமையை அங்கே யாரும் தடை
செய்யப்போவதில்லை. யாரும் கேட்கவும் முடியாது. ஆனால் அதேசமயம் பெண்கள் பகுதிக்கு
ஆண்கள் செல்ல முடியாது. என்னதான் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து இருந்தாலும்
அவர்களுடைய இடத்திற்கு ஆண்கள் செல்வது ஒரு வரம்பு மீறிய செயல் என்பதை இந்திய
சமூகம் வலியுறுத்தி வருவதை இந்தப் பல்கலைக்கழகமும் ஒத்துக்கொண்டுதான் உள்ளது. அப்படி
ஒரு சமயம் நான் இரவு உணவுக்கு செல்லும்போதுதான் அந்தப் பெண்ணைப்பார்த்தேன்.
தேவைக்கு அதிகமாகவே குள்ளமானவள். மொத்தமாக 35
கிலோ எடைதான் இருப்பாள். சிவந்த நிறம். ஒரு அழகான பெண் ஒருத்தி சத்துணவு
சாப்பிடாமல் தன்னுடைய உடம்பை சரியான விகிதாசாரத்தில் குறுக்கிக் கொண்டால்
வரக்கூடிய ஒரு உருவம்தான் அவளுடையது. அவளுடைய உண்மையான உயரம் என்ன என்பதைக்
காட்டும் விஷயங்கள் அவள் அருகில் இல்லை எனில் அவள் உண்மையிலேயே எல்லா அவயங்களையும்
அழகாகப் பெற்ற ஒருத்தி போலத்தான் புகைப்படத்தில் தெரிவாள். அவளைப் பார்த்தவுடன்
முதல் முறையாக என்னுடைய இதயம் தேவையே இல்லாமல் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.
என்னவாயிற்று எனக்கு!! இவள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறாள்? வேறு எந்தப்பெண்னையும்
பார்க்கும்போது இந்தமாதிரி எனக்கு தோன்றவில்லையே! கண் முழுவதையும் பார்க்க
முடியாதபடி கனமான கண்ணாடி ஒன்று அணிந்து இருந்தாள். என்னை பார்த்தாளோ
பார்க்கவில்லையோ எனக்குத்தெரியவில்லை. அவளுடைய நினைவாகவே சாப்பிட்டுவிட்டு
விடுதிக்குள் நுழைந்தேன்.
ஒவ்வொரு நாளும் இரவு உணவுக்குப்ப் பின்னர் ஜீவா
பிரதர் அறைக்கு சென்று விடுவேன். அங்கே உட்கார்ந்து கொண்டு இலக்கியம், இசை என்று
எதையாவது கதைத்துக்கொண்டு இருப்போம். ஜீவா பிரதருக்கு இளையராஜா இசை என்றால் உயிர்.
இளையராஜா இசையில் ஒரு சகாப்தம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். தினமும்
குறைந்தது ஐந்து ஆறு ஆங்கில வார்த்தைகளை கற்றுக்கொண்டு வந்து அதை எப்படியெல்லாம்
வாக்கியங்களில் பிரயோகம் செய்யலாம் என்று விவாதித்துக்கொண்டு இருப்போம். அவர்
என்னை விட ஆறு அல்லது ஏழு வருடங்கள் மூத்தவர். அவருடைய அறையில் “தொத்தை” குமாரும்
இருந்தான். இரண்டு கால்களுக்கும் இடையில் கைகளை விட்டுக்கொண்டு காலையில் பத்து மணி
வரை தூங்குவதும், பின்னர் எழுந்து அரைகுறையாக்க் குளித்துவிட்டு ஈரமான தலையில்
“ஜெல்” அப்பிக்கொண்டு ஜட்டிக்குள் “சென்ட்’ அடித்துக்கொண்டு ஓடுவதும்தான் அவனுடைய
அன்றாட வேலை. மகா சோம்பேறியாக இருப்பதை பார்த்து நாங்களாக அவனுக்கு கொடுத்த
பெயர்தான் “தொத்தை”.
“ஏன்டா
இப்படி இருக்கே?” என்று கேட்டால் “ இதுதாண்டா இன்னைக்கு ட்ரெண்டு” என்று சொல்லிவிட்டு
தலையை சிலுப்பிக் கொள்வான். விரல்களால் வகிடு எடுத்துக்கொள்வான். எந்த
கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லும் பழக்கமே அவனுக்கு இருந்தது இல்லை. பதிலுக்குக்
காத்திருப்பதே அனாவசியம் என்பதைப்போல நகர்ந்து விடுவான். ஜீவா பிரதருக்கும்
இவனுக்கும் கருத்திலோ அனுபவத்திலோ எந்த ஒரு புள்ளியிலும் உடன்பாடு என்ற ஒன்று
இருந்தது இல்லை. அவன் அங்கே இருந்தது ஜீவா பிரதருக்கும் ஒரு பொழுதுபோக்காகவே
இருந்திருக்க வேண்டும். அவன் இல்லாவிட்டாலும் எங்களுக்கு வெறுமையாகத்தான் இருக்கும்.
அன்று அவருடைய அறைக்குள் நுழைந்தவுடன் “ ஜீவா
பிரதர்....குள்ளமா செவப்பா சோடாப்புட்டி கண்ணாடி மாட்டிக்கிட்டு ஒருத்தி இன்னைக்கு
வந்தா. அவள் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டேன்.
“இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா எப்படிடா
தெரியும். எத்தனையோ பேர் குள்ளமா இருக்கு இங்கே. கொஞ்சம் விவரமா சொல்லு”
“இல்லங்க ....அவளைப் பார்த்ததில் இருந்து மனசு
நிலை கொள்ள மாட்டேங்குது. நல்ல சிவப்பு...ஜடை போட்டு பின்னிக்கொள்ளும் தலைமுடி,
பரட்டை மாதிரி இருக்க மாட்டா. அநியாயத்துக்கு குள்ளமா இருப்பா. ரொம்ப அழகா
இங்க்லீஷ் பேசுறா. முக்கியமா நம்மூர் பொண்ணு ஒருத்தி குண்டா இருப்பாளே. அவளோட ரூம்
மேட்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் எப்பவும் ஒண்ணாவே வர்ராங்க”
ஜீவா பிரதர் படுக்கையில் இருந்து கொண்டு
யோசித்துக்கொண்டு இருக்கும்போது “ அட அந்த பொண்ணூதாங்க. எனக்குத் தெரியும்.” என்று
குறுக்கே விழுந்தான் தொத்தை.
“யார்டா அது”
“அந்த பெங்காலி பொண்ணுதான். நம்ம குண்டு கூட
வருமே அதுதான்.”
“அடே சரவணா. எங்கேடா போய் விழுந்தே...உனக்கு
என்னடா பெங்காலி பொண்ணுங்கன்னா ஒரு மயக்கம்?
“மயக்கமும் இல்லை...மண்ணாங்கட்டியும் இல்லை.
அவளை உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? அதை மட்டும் சொல்லுங்க. அதிகமா பேசக்கூடாது”
“இங்க பார்டா...அதிகமா பேசக்கூடாதாம். அவ
பேர்லாம் எனக்குத் தெரியாது. அதை பின்னாடி பார்க்கலாம். நீ எப்படிடா இந்த
குள்ளிகிட்ட விழுந்தே.”
“லவ் அட் பர்ஸ்ட் சைட்” என்று இங்க்லீஷ் பேச
ஆரம்பித்தான் தொத்தை. “போயும் போயும் ஒரு குள்ளி...நொட்டை கண் இவதானா உனக்கு
கிடைச்சா? என்று கிண்டல் செய்தான்.
“உன் வாயைப் பொத்திகிட்டு இருடா தொத்தை நாயே.
ஓங்கி ஒண்ணு செவுல்ல கொடுத்தேன்னு வையி...நேரா உன் ஊர் கன்னியாகுமரில போய் பல்லைத்
தேடுவே”
“அந்த அளவுக்கு உனக்கு காதல்
முத்திருச்சா...பார்க்கிறேன்”
“ஜீவா பிரதர்...இவனை பொத்திகிட்டு இருக்க
சொல்லுங்க. இல்ல நான் கடுப்பாயிருவேன். உன்னை மாதிரி பொறம்போக்குக்கு எப்படிடா
இந்த மாதிரி காதல் பத்தி தெரியும்”
“அது என்னடா அதிசயமான காதல். ஒருவேளை அவ உனக்கு
கிடைச்சா சும்மா பாத்துக்கிட்டேதான் இருப்பியா. ஒண்ணுமே செய்ய மாட்டியா?
“டேய் பண்ணாடை...இப்ப சும்மா இருக்கப்போறியா
இல்லையா? இவன் உருப்படவே மாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கான் ஜீவா பிரதர்”
“டேய்...தொத்தை சும்மா இருடா. எப்ப பாத்தாலும்
ஏண்டா இப்படி சண்டை போடுறீங்க. அப்ப குள்ளியை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டே.
குள்ளின்னாலும் அவ அழகிதாண்டா. அவக்கிட்ட பேசினியா.”
“இன்னும் இல்லை. முயற்சி பண்றேன்.”
அதன்பின் அவளுடைய பெயரைத் தெரிந்து கொள்ள
மிகவும் பிரயத்தனப்பட்டேன். யாரிடம் போய் கேட்பது? ஒருசமயம் விடுதியின்
உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக அறிவிப்பு பலகையில்
ஒட்டப்பட்டு இருந்தது. அவளுடைய அறைத்தோழியின் பெயர் எனக்குத் தெரியும் என்பதால்
அவளுடைய பெயரும் எனக்குத் தெரிய வந்தது. பல்கலைக்கழகத்தின் எந்த மூலைக்குச்
சென்றாலும் அங்கு என் கண்ணில் தென்பட மாட்டாளா என்று ஒரு வித ஏக்கம் கலந்த
எதிர்பார்ப்பு என்னை வந்து சூழ்ந்துகொண்டது. அவ்வப்போது தென்படுவாள். ஒருவன் அவளை
நினைத்துக்கொண்டு காதல்வயப்பட்டு கரையும் தெரியாமல் கண்மாயும் தெரியாமல்
திரிகிறான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. என்னை அவ்வப்போது பார்ப்பாள். தன் மீது
இவன் ஆர்வம் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் அவள் கொஞ்சம் உணர்ந்து இருக்க
வேண்டும். எனினும் பேசுவதற்கு எனக்கு துணிவு பிறக்கவில்லை. என்னுடைய உணர்வுகளை
சொல்லாமலேயே நான் தில்லியை விட்டு போய்விடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது.
சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வு முடிந்த பின்
ஊருக்கு கிளம்பிவிட்டேன். பொருளாதார நெருக்கடியினாலும் முதற்கட்ட தேர்வில் வெற்றி
அடைந்தால் மட்டுமே தில்லி வரவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரிலும் ஊருக்குக்
கிளம்பினேன். முதற்கட்ட தேர்வில் சறுக்கியது. தேர்வில் நேர்ந்த தோல்வி என் காதலை
கொஞ்சகாலம் மறக்கடிக்க முயன்றது. இந்தத் தேர்வுதான் என்னுடைய வாழ்க்கையின் ஒரே
குறிக்கோள் என்ற மடத்தனம் என்னை பீடிக்காததால் அந்த தோல்வி என்னை பெரிதாகப்
பாதிக்கவில்லை. இந்தத் தோல்வியும் நன்மைக்குத்தான் என்று எண்ணிக்கொண்டேன்.
தில்லிக்குப் போகும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. தில்லிக்குப்
போகும் எண்ணம்தான் குறைந்ததே தவிர குள்ளி குறித்த எண்ணம் குறையவில்லை. அவள் மேல் இருந்த
காதல் இன்னும் தீவிரம் அடைந்து கொண்டே வந்தது. மறுபடியும் தேர்வு எழுத முயற்சி
செய்வதைவிட பட்ட மேற்படிப்பு படிப்பது உசிதம் என்று தோன்றியது. மறுபடியும்
படித்ததையே திரும்பப் படித்துகொண்டு மனப்பாடம் செய்யும் சக்தி இருந்தால் வெற்றியாளனாய்
ஆகலாம் என்ற வாக்குறுதியைத் தந்த அந்தத் தேர்வு எனக்கு கொஞ்சம் சலிப்பைத் தந்தது.
பட்ட மேற்படிப்பு நல்ல வழியாகவும் எனக்கு உகந்த ஒன்றாகவும் தோன்றியது.
மேற்படிப்பு
படித்துக் கொண்டு இருந்தபோது குள்ளியின் நினைவுகள் அடிக்கடி வந்தாலும் மனம் கொஞ்சம்
பக்குவம் அடையத் தொடங்கி இருந்தது. தமிழ்த் திரைப்படங்களில் சொல்லப்படும் காதலின்
மகத்துவங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதைப் போல் இருந்தது. என் காதலை நான்
அவளிடம் சொல்லவில்லை. அவளும் கண்டுகொண்டது போல் இல்லை. கண்டும் காணாமல் இருந்தாளா!
வாழ்க்கைத் துணையை மிகக் கவனத்துடன் தேர்வு செய்யும் வாலிபத்தின் ஓர் இன்றியமையாத
கட்டத்தில் நான் இருந்தேன். கற்பனை காதலில் வாழ்ந்துகொண்டும் நானும் காதலித்தேன்;
காதலுக்காக வாழ்ந்தேன் என்று வசனம் பேசித்திரிவதற்கும் என்னுடைய நிகழ்லகால
வாழ்க்கையை பலிபீடத்தில் வைக்க மனம் ஒப்பவில்லை. என்னுடைய மேற்படிப்பின் போது
இன்னொரு பெங்காலி பெண்ணின் மீது காதல் வந்தது. அவள் தேவைக்கு அதிகமாக குள்ளமாக
இருந்தாள என்றால் இவள் தேவைக்கு அதிகமாக குண்டாக இருந்தாள. இவள் மீது வந்ததும்
காதல் மாதிரிதான் இருந்தது. ஆனால் மனம் படபடக்கவோ இதயம் துள்ளிக் குதித்ததாக
நினைவில்லை. நாங்கள் சந்தித்தபோது எப்படி இருந்தோமோ அப்படித்தான் இன்றும் இருக்கிரறொம்
என்று நினைக்கிறேன். தற்போது என்னுடைய மனைவியாக இருப்பது அந்தப் பெங்காலி
பெண்தான்.
என்னுடைய வருங்கால மனைவியை நேசித்துக்கொண்டு
இருந்தபோது ஒருநாள் போட்டி தேர்வுகளுக்கு துணைபுரியும் சஞ்சிகை ஒன்றில் கட்டுரை
ஒன்று வெளி வந்து இருந்தது. அதை எழுதியிருந்தவள் குள்ளி. எனக்குத் தலைகால்
புரியவில்லை. இத்தனை நாள் கழித்து இவளின் உருவம் என்னிடம் மீண்டும் வரக் காரணம்
என்ன என்பது புரியவில்லை. அவளுடைய புகைப்படத்தை எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் ஏதோ
காணாததை கண்டுவிட்டதைப்போல காண்பித்துக் கொண்டு இருந்தேன். என்னுடைய வருங்கால
மனைவிக்கு இது எந்த மாதிரியான அசெளகரியத்தைத் தந்து இருக்கும் என்று நான்
யோசிக்கவில்லை. அவளுடைய மௌனம் நிறைந்த விசும்பல்கள் என்னை நிதர்சனத்துக்குக் இழுத்துக்கொண்டு
வந்தன. எனக்கு மனைவியாக வரப்போகிறவளை நான் முழுமையாக நேசித்தாலும் குள்ளியை என்னால்
உதற முடியவில்லை என்ற உண்மையும் ரணமாக வலித்தது. இவளை நான் ஏன் பார்த்தேன்? நான்
யாரென்று கூட அவளுக்குத் தெரியாது. இருந்தும் இந்த மாதிரி எதற்காக உருகித்
தொலைக்கிறேன். மனதில் அவளை சுமந்து கொண்டு இவளுக்கும் உண்மையாக இல்லாமல் இருப்பது
எனக்கே அசிங்கமாகத் தோன்றியது. என்னுடைய மேற்படிப்பின் போது மீண்டும் மத்திய
தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொள்ளும்படி என்னுடைய குடும்ப சூழ்நிலை
வற்புறுத்தியது. அதில் வெற்றி பெறச் செய்து என்னை மத்திய அரசில் ஓர் அதிகாரியாக
ஆக்கி என்னுடைய வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தை திசைமாற்றி சென்றது
என்னுடைய விதி. பின்னர் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
ஒரு சமயம் எதேச்சையாக “எம்ப்லாய்மென்ட் நீயூஸ்”
இதழில் அந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வு பெற்றவர்களின் பட்டியலைப் பார்த்துக்கொண்டு
இருந்தபோது குள்ளியின் பெயர் தென்பட்டது. மீண்டும் பின்னோக்கிய மன ஓட்டம். ஆனால்
இதனைப் பற்றி நான் ஒன்றும் என் மனைவியிடம் பிரஸ்தாபிக்கவில்லை. அது முற்றிலும்
தேவை இல்லாதது போல் இருந்தது. குடிமைப்பணியில் தேர்வு பெற்று வெளியுறவுத்துறை
அதிகாரியாக ஆகி இருந்தாள் குள்ளி. நாலாவது முறை முயன்று வெற்றி பெற்றதாக நேர்காணல்
ஒன்றில் கூறி இருந்தாள். மனதுக்குள் அவளுக்கு வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொண்டேன். இன்றும் அவள் ஒரு வெற்றிகரமான வெளியுறவுத்துறை அதிகாரியாக
பணியாற்றிக்கொண்டு இருக்கிறாள். அவள் குறித்த காதல் இன்னும் என் மனதில்
பசுமையாகத்தான் இருக்கிறது.
இன்னும் ஒன்று என் மனதை உறுத்திக்கொண்டு
இருக்கிறது. குள்ளி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒருவேளை எனக்குக் கிடைத்த
தகவல் தவறானதா என்று தெரியவில்லை. அவ்வப்போது முகநூலில் அவளுடைய புகைப்படங்களைப்
பார்த்துக்கொள்கிறேன். இப்போதும் அழகாகவே இருக்கிறாள். அவளுடைய பணிப் பளு அவளுடைய
சிரிக்காத முகத்தில் தெரிகிறது. இருந்தாலும் என் கண்களுக்கு பதினைந்து
வருடங்களுக்கு முன்பு எப்படித் தெரிந்தாளோ அப்படியேதான் தெரிகிறாள். வெற்றிபெற்ற
பலரின் காதல் அவர்களை வாழ வைக்கிறது. வெற்றி பெற்ற காதல் ஒன்றும் வெற்றி என்பது
என்னவென்றே அறியாத காதல் ஒன்றும் என்னை வாழ வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
உண்மைதான். என்னவோ தெரியவில்லை. என் மகளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நினைவு
வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சரவணன். கா