இலக்கிய ஆர்வலர்களுக்கு
ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன்டன் செகாவ் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
ரஷ்ய இலக்கியம் உலக அளவில் அறியப்பட பங்களிப்பு செய்த சில முக்கியமான இலக்கியவாதிகளுல்
இவரும் ஒருவர். இவர் எழுதிய சுமார் 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகளில் 25 சிறந்த கதைகளை தமிழில் மொழிபெயர்த்து புத்தகமாகப் பதிப்பிக்கலாம்
என்ற நோக்கில் நான் மொழிபெயர்த்துள்ள கதைகளில் இந்தக்கதையும் ஒன்று. புத்தகமாக வந்தாலும்
சரி; இணையத்தளத்தில் வெளியிடப்பட்டாலும் சரி. சென்று சேரவேண்டிய இலக்கு ஒன்றாக இருந்தால்
போதுமானது. அந்த 25 சிறுகதைகளையும் அவ்வப்போது என்னுடைய “காற்றின் தீராத பக்கங்களில்” வெளியிடுகிறேன். இதையும் ஒரு பத்து பேர் படிப்பார்கள் என்ற நம்பிக்கைதான்
என்னை இன்னும் எழுதத்தூண்டுகிறது. வழக்கம்போல் நான் ஆங்கிலத்திலும்
தமிழிலும் எழுதிவரும் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை படிக்கும் அன்பர்களுக்கு என் நன்றிகள்.
மனித விருப்பு வெறுப்புகளை
ஒரு நீதிபதி ஸ்தானத்தில் இருந்து அலசி தீர்ப்பு சொல்லிப்போவது ஓர் இலக்கியவாதிக்கு
அழகும் அல்ல. அப்படி தீர்ப்பு சொல்லிப்போகும் படைப்புகள் இலக்கியத்தரத்துக்கு வருவதும்
இல்லை. அப்படிப்பட்ட படைப்புகள் வாசகனுடைய ரசனையையும் சிந்திக்கும் திறனையும் குறைத்து
எடை போடும் சாதாரண பிரச்சார கருவிகள் என்ற அளவில் நின்று விடுகின்றன. கதாபாத்திரங்களின்
குணாதிசயங்களை நகைச்சுவையாகவோ, இவர்கள் இப்படி இருக்கிறார்கள் இனம் காணுவதும் எச்சரிக்கையாக
இருப்பதும் படிக்கின்ற உனது வேலை; எனது வேலை அல்ல என்று படம்பிடித்து, அதே சமயம் ஒரு
சமூக உணர்வுடன் சொல்லிவிட்டு நகரும் படைப்புகள் இலக்கிய உலகில் ஏதோ ஒரு இடத்தில் தனக்கென்று
ஒதுக்கப்பட்ட இடத்தில், அது சிறியதாக இருந்தாலும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பது
போல அமர்ந்துதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நையாண்டி சிறுகதைதான் ஆன்டன் செகாவ்
எழுதிய Aborigines என்ற சிறுகதை. அந்தக்கதையை தமிழில்
மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். தகுதியான கருத்துக்களை அன்பர்கள்
எனக்கு அனுப்பலாம்.
பழங்குடிகள்
காலையில் மணி
ஒன்பதிற்கும் பத்திற்கும் இடைப்பட்டதாக இருக்கும். இவான் லியாஷ்கெவ்ஷ்கி என்பவன்
போலந்து நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒரு லெஃப்டினன்ட். கொஞ்ச காலத்திற்கு முன்பாகவோ
அல்லது அதற்குப் பின்போ தலையில் காயம்பட்டதால் தெற்கு மாகாணங்களில் இருந்த நகரம்
ஒன்றில் தன்னுடைய ஓய்வூதியத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவன். அவனை ஒரு நிமிடம்
சந்தித்து பேசிவிட்டுச் செல்வதற்காக வந்திருந்த ஃப்ரான்ஸ் ஸ்டெபானிட்ச் ஃபிங்க்ஸ்
என்ற நகரக் கட்டடக் கலைஞனுடன் தன் வீட்டில் திறந்த சன்னலுக்குப் பக்கத்தில்
அமர்ந்தவாறு பேசிக்கொண்டிருந்தான். இருவருமே தங்களது தலைகளை சன்னலுக்கு வெளியே
நீட்டியவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். குண்டாக, குட்டையாக, வியர்த்துத்
தொங்கிக்கொண்டிருந்த கன்னச் சதைகளுடன், முழு நீலக் கலரில் கால்சட்டையும், பொத்தான்கள்
திறந்த நிலையில் அணிந்திருந்த கோட்டுடனுமாகத் தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்த லியாஷ்கெவ்ஷ்கியின்
வீட்டுக்குச் சொந்தக்காரனான அந்தப் பழங்குடி இனத்தவன் இருந்த வாசலின் திசையை
நோக்கி அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பழங்குடி இனத்தவன் ஆழ்ந்த
சிந்தனையில் மூழ்கியிருந்தான். தன்னுடைய பூட்சுக் கால்களின் முனையை ஒரு குச்சியால்
நோண்டியவாறு தன்னை மறந்த நிலையில் உட்கார்ந்து இருந்தான்.
“அசாதாரணமான மக்கள்
இவர்கள் என்று நான் அடித்துச் சொல்கிறேன்” என்று கோபத்துடன் அந்தப் பழங்குடி
இனத்தவனைப் பார்த்தவாறு பொருமினான் லியாஷ்கெவ்ஷ்கி. “ இங்கே அந்தப் பெஞ்சில் வந்து
அமர்ந்துவிட்டானா.......பின்னர் பார்......அப்படியே உட்கார்ந்து இருப்பான். மாலை
வரும்வரை அந்த வீணாய்ப்போனவன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு அப்படியே
உட்கார்ந்து இருப்பான். இவர்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். வீணர்கள்!
தெருப்பொறுக்கிகள்! அடப் பொறுக்கி நாயே! உன்னுடைய வங்கிக்கணக்கில் பணம் இருந்தாலோ,
உனக்கென்று ஏதாவது நிலபுலன்கள் இருந்து அதில் பலபேர் உனக்காக வேலை செய்து
கொண்டிருந்தாலோ இப்படி உட்கார்ந்திருப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால்
உன்னுடைய பெயரில் ஒரு சல்லிக்காசு கூட இல்லை, இன்னொருவன் தருகின்ற ரொட்டியைத் தின்று
உயிர் வாழ்கிறாய், உன்னுடைய குடும்பத்தைப் பட்டினி போட்டிருக்கிறாய்---- பேய்
வந்து உன்னைக் கவ்விக் கொண்டு போகட்டும்! நீ நான் சொல்வதை நம்ப மாட்டாய் ஃப்ரான்ஸ்
ஸ்டெபனிட்ச், சில சமயங்களில் நான் இந்தச் சன்னலின் வழியாக வெளியே குதித்து அந்த
வீணனைக் குதிரைச்சவுக்கு கொண்டு நன்றாக விலாச வேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு எனக்குக்
கோபம் கோபமாக வருகிறது! இங்கே வாடா! நீ ஏன் வேலை எதுவும் செய்யமாட்டேன் என்கிறாய்?
என்ன கருமத்திற்காக அங்கேயே உட்கார்ந்திருக்கிறாய்?
அந்தப் பழங்குடியானவன்
லியாஷ்கெவ்ஸ்கியைக் கண்டும் காணாததைப் போலவும் பார்த்தான். எதையோ சொல்வதற்கு
எத்தனித்தான். ஆனால் முடியவில்லை. சோம்பேறித்தனமும், வெயிலின் கசகசப்பான
கொடுமையும் அவனுடைய பேசும் சக்தியை முடக்கிப் போட்டிருந்தன...சோம்பேறித்தனமாக
கொட்டாவி விட்டுக்கொண்டு வாய்க்குமேலே சிலுவை குறியிட்டுக்கொண்டு சூடான காற்றில்
குளித்த வண்ணம் புறாக்கள் பறந்து கொண்டிருந்த ஆகாயத்தை நோக்கி தன்னுடைய கண்களை
உயர்த்தினான்.
“மரியாதைக்குரிய நண்பா!
உன்னுடைய முடிவுகளில் நீ இத்தனை கடுமையாகக் கண்டிப்பாக இருக்கக் கூடாது” என்று ஒரு
பெருமூச்சுடன் தன் கைக்குட்டையால் தனது வழுக்கைத் தலையை துடைத்தவாறே சொன்னான்
ஃபிங்க்ஸ். “அவர்களுடைய இடத்தில் உன்னை வைத்துப் பார். வியாபாரம் இப்போது கொஞ்சம்
மந்தமாகி உள்ளது. எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது, மோசமான அறுவடை,
வணிகத்தில் தேக்கம்”
“அடக் கடவுளே! என்ன
பேசுகிறாய் நீ! என்று ஆத்திரம் வந்தவனாய் தன்னுடைய இரவு உடையை அவனைச் சுற்றிப்
போட்டு இழுத்தவாறு கத்தினான் லியாஷ்கெவ்ஸ்கி. “அவனுக்கு வேலை இல்லை, வாணிகம் இல்லை
என்றே வைத்துக்கொள்வோம். அவன் ஏன் தன்னுடைய வீட்டில் கூட வேலை எதையும் செய்ய
மாட்டேன் என்கிறான்? பேய் அவனைத் தின்று தொலைக்கட்டும்! நான் ஒன்றைச் சொல்கிறேன்!
கேள்! அவனுடைய வீட்டில் எந்த வேலையுமே இல்லையா என்ன? கொஞ்சம் பாரடா
காட்டுமிராண்டித் தனமான முட்டாளே! வீட்டுப்படிகள் எல்லாம் துண்டு துண்டாக உடைந்து
போயிருக்கின்றன. மரப்பாதை குழிக்குள் விழுந்து போயிருக்கிறது, வேலி உலுத்துப்போய்
காணப்படுகிறது. நீ போய் அதையெல்லாம் பார்த்து சரி செய்யலாமே. இல்லை எப்படிச் செய்ய
வேண்டும் என்று தெரியாவிட்டால் சமையல்கட்டுக்குள் சென்று உன்னுடைய மனைவிக்காவது
உதவியாக இருந்து தொலைக்கலாமே! உன்னுடைய மனைவி ஒவ்வொரு நிமிடமும் தண்ணீர் கொண்டு
வருவதற்கோ வடிநீரைச் சுமந்துகொண்டு செல்வதற்கோ அங்கும் இங்கும் ஆளாய்ப் பறந்து
ஓடிக்கொண்டிருக்கிறாள். அவளுக்குப் பதிலாக நீ ஏன் ஓடக்கூடாது ராஸ்கல்? உனக்கு
ஒன்று ஞாபகத்தில் இருக்க வேண்டும் ஃப்ரான்ஸ் ஸ்டெபானிட்ச், அவனுக்கு ஆறு ஏக்கரில்
தோட்டம் துறவுகள் உண்டு. பன்றிப்பண்ணைகளும் கோழிப்பண்ணைகளும் அவனுக்கு
இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் வீண். ஒரு பயனும் இல்லை. பூந்தோட்டம் புல் மண்டிப்போய்
கிடக்கிறது, ஏறத்தாழ வறண்டு போன நிலையில் காணப்படுகிறது. சமையல் தோட்டத்தில்
சிறுவர்கள் பந்து விளையாடுகிறார்கள். அப்படியென்றால் அவன் சோம்பேறியான ஒரு
காட்டானாக அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்? நான் ஒன்றை உனக்கு உறுதியாகக் கூற
முடியும். ஒன்றரை ஏக்கர் நிலம்தான் என்னுடைய உபயோகத்துக்கும் வீட்டுக்கென்றும்
ஒதுக்கப்பட்டிருக்கிறது. இருந்துமே நீயே பார்க்கலாம். முள்ளங்கிகள், இலையமுதுகள், சீரகம்,
வெங்காயம் என்று எதையெதையோ நீ அங்கே பார்க்கலாம். அந்தக் கருங்காலியோ அவை
எல்லாவற்றையும் சந்தையிலிருந்தல்லவா வாங்குகிறான்”
“அவன் ஒரு ரஷ்யன். அவனை
ஒன்றும் சொல்லித் திருத்த முடியாது” என்று அர்த்தம் பொதிந்த பூடகமான
புன்முறுவலுடன் சொன்னான் ஃபிங்க்ஸ். “ அது ரஷ்ய ரத்தத்திலேயே
ஊறிப்போயிருக்கிறது.......அவர்கள் மிகவும் சோம்பேறித்தனமான மனிதர்கள். இந்த
எல்லாச் சொத்துக்களையும் ஜெர்மானியர்களிடமோ போலந்து நாட்டவர்களிடமோ
கொடுத்திருந்தால் ஒரே வருடத்தில் இந்த நகரத்தை நீ அடையாளம் கண்டுகொள்ள முடியாது.
அந்த அளவுக்கு அந்த இடத்தை மாற்றி இருப்பார்கள்.”
நீலநிறப் பேண்ட்
அணிந்திருந்த அந்தப் பழங்குடியானவன் கையில் ஒரு வடிகட்டியுடன் திரிந்து
கொண்டிருந்த சிறுமி ஒருத்தியை கையசைத்துக் கூப்பிட்டான். ஒரு கோபெக் மதிப்புள்ள
சூரியகாந்தி விதைகளை அவளிடமிருந்து வாங்கினான். அவற்றை ஒவ்வொன்றாக உடைக்க
ஆரம்பித்தான்.
“என்ன சாபப்பட்ட இனம்
இது!” என்று கோபம் கொப்பளிக்கச் சொன்னான் லியாஷ்கெவ்ஸ்கி. “இவர்களுக்குத் தெரிந்த
வேலை இது மட்டும்தான். சூரிய காந்தி விதைகளை நொறுக்குவது, அரசியல் பேசிக்கொண்டு
திரிவது! பேய்கள் வந்து இவர்களை கவ்வட்டும்”
நீல நிறக்காற்சட்டையைக்
கோபத்துடன் பார்த்துக்கொண்டிருந்த லியாஷ்கெவ்ஸ்கி கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக வெறி
கொண்டவனாக மாறினான். வாயில் உண்மையாகவே நுரை தள்ளும் அளவுக்கு மிகவும் உணர்ச்சி
வசப்பட்டான். போலந்து மொழி வாசனையுடன் தன்னுடைய கண்களுக்குக் கீழே இருந்த கீழிமைப்
பைகள் வீங்கும் வரை ஒவ்வொரு வார்த்தையையும் விஷமாகக் கக்கினான். பின்னர் ரஷ்யப்
“பொறுக்கிகளையும், கருங்காலிகளையும், ராஸ்கல்களையும்” ஏக வசனம் பேசிவிட்டு கண்களை
உருட்டி விழித்தவாறு போலந்து மொழியின் வசவு வார்த்தைகளை அருவியாகப் பொழிந்து
கொண்டிருந்தான். “ சோம்பேறி நாய்கள்! சாபப்பட்ட இனம்! பேய்கள் வந்து இவர்களைக்
கவ்வட்டும்”
அந்தப் பழங்குடி
இனத்தவன் இந்த வசவு வார்த்தைகளையெல்லாம் தெளிவாகக் கேட்டான். ஆனால் அலட்டிகொள்ளாத
அவனுடைய சிறிய உருவத்தைத் தொலைவில் இருந்து பார்த்தபோது அது அவனைப் பாதிக்கவில்லை
என்பது தெரிந்தது. ஈக்களின் ரீங்காரத்தைக் கேட்டுப் பழகியதைப்போல இந்த மாதிரியான
விஷயங்களை நெடுங்காலமாகவே வெளிப்படையாக்க் கேட்டுக் கேட்டு அவனுடைய காதுகள்
புளித்துப்போயிருந்தன. அதை எதிர்த்து வாதாடுவது அர்த்தமில்லாத ஒன்று என்பது
அவனுக்குத் தெரிந்திருந்தது. தான் ஒவ்வொரு முறையும் பார்க்க வரும்போது
சோம்பேறித்தனமான, ஒன்றுக்கும் உதவாத பழங்குடிகளின் மீதான ஒரு கசப்புப்
பிரச்சாரத்தை ஃபிங்க்ஸ் கேட்க வேண்டியிருந்தது! ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான
பிரச்சாரத்தை!
“ஆனால் ...நான் போக
வேண்டுமே” என்று தனக்கு நேரமில்லாததை நினைவில் கொண்டு சொன்னான் ஃபிங்க்ஸ். “குட்
பை”
“ நீ எங்கே போகிறாய்?”
“உன்னை ஒரு நிமிடம்
பார்த்துவிட்டுச் செல்லவே நான் வந்தேன். பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கட்டிடத்தின்
கீழே உள்ள அறையின் சுவர் விரிசல் கண்டிருக்கிறது. எனவே என்னை வந்து பார்க்கும்படி
கேட்டுக்கொண்டார்கள். நான் கண்டிப்பாக உடனடியாக செல்ல வேண்டும்”
“ம்.....ம்....சமோவரைக் கொண்டு வரும்படி வர்ஹாவிடம் சொல்லியிருக்கிறேன்.” என்று
ஆச்சரியம் தொனிக்கும் குரலின் சொன்னான் லியாஷ்கேவ்ஸ்கி. “ கொஞ்ச நேரம் இங்கே இரு.
நாம் கொஞ்சம் தேநீர் அருந்தலாம். பின்னர் நீ போகலாம்”
ஃபிங்க்ஸ் பணிவுடன்
தன்னுடைய தொப்பியைக் கழற்றி மேசையின் மீது வைத்தான். தேநீர் அருந்துவதற்காக
காத்திருந்தான். தேநீர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதும் பழங்குடிகள் எல்லாம்
மீண்டு வரமுடியாத அளவுக்கு சீரழிந்து போயுள்ளார்கள் என்று மீண்டும் அவன் அதே
பல்லவியைப் பாடினான். ஒரே ஒரு காரியத்தை மட்டும் செய்யலாம் என்றும் சொன்னான். எந்தப்பாகுபாடும்
இல்லாமல் அவர்களையெல்லாம் அள்ளிக்கொண்டுபோய், கடுங்காவலுடன் கடினமான வேலைகள்
செய்வதற்கு அனுப்பலாம் என்றான்.
“ஏன் தெரியுமா! என்
வார்த்தைச் சத்தியம்” என்று இன்னும் சூடேறியவனாய் சொன்னான். “ அங்கே
உட்கார்ந்திருக்கும் அந்த முட்டாள் எதற்காக வாழ்கிறான் என்று நீ கேட்கலாம்! மாதம்
ஒன்றுக்கு ஏழு ரூபிள்கள் வாங்கிக்கொண்டு அவனுடைய வீட்டில் நான் தங்கிக்கொள்ள வீட்டை
வாடகைக்கு விட்டிருக்கிறான். பெயரளவுக்கு நடக்கும் பகல் நேர விருந்துகளுக்கு
செல்வான். அவ்வளவுதான்! அவன் உயிர் வாழ்வதே அதற்காகத்தான். ஏமாற்றுக்காரன்.
பேய்கள் அவனை விழுங்கட்டும்! அவனுக்குச் சம்பாத்தியமும் இல்லை, வருமானமும் இல்லை.
அவர்கள் மந்தப்புத்தி கொண்டவர்களும் வீணர்களும் மட்டுமல்ல, பெரிய திருட்டுப்பயல்களும்
கூட. நகர வங்கியில் இருந்து கடன் பெற்றுக்கொண்டே இருப்பார்கள். அதைவைத்துக்கொண்டு
அவர்கள் செய்வது என்ன? மாஸ்கோவிற்கு காளை மாடுகளை அனுப்பும் ஏதாவது ஒரு
திட்டத்திலோ அல்லது புதிதாக அறிமுகமாகியிருக்கும் இயந்திரத்தில் எண்ணையிடுவதற்கான சாதனம்
செய்வது எப்படி என்ற ஏதாவது திட்டத்திலோ கொண்டு போய் பணத்தைக் கொட்டுவார்கள்.
ஆனால் காளைமாடுகள் அனுப்புவதற்கும் எண்ணைவிடுவதற்கும்கூட உன்னுடைய தோளுக்கு மேல்
தலை என்ற ஒன்று இருக்கவேண்டுமேயடா மடச்சாம்பிராணியே! ஆனால் இந்த ராஸ்கல்களுக்கு
பூசணிக் காயல்லவா இருக்கிறது! உண்மையாக அவர்களுடைய எல்லாத் திட்டங்களும் புகைந்து
போய் மடிந்துவிடும்......அவர்கள் எல்லா பணத்தையும் வீண் செலவு செய்வார்கள். பின்னர்
ஏதாவது ஒரு சச்சரவில் போய் மாட்டிக்கொள்வார்கள். பிறகு வங்கியில் வந்து மீண்டும்
கை வைப்பார்கள். அவர்களிடம் இருந்து உனக்கு என்ன கிடைக்கும்? அவர்களுடைய வீடு மறுபடியும்
மறுபடியும் அடகு வைக்கப்படும்; அவர்களுக்கு வேறு சொத்து ஒன்றும் இருப்பதில்லை. ----நெடுங்காலத்திற்கு
முன்பே குடியும் பெருந்தீனியுமாக அது கழிந்து விட்டது. பத்தில் ஒன்பது பேர் பணம்
சுருட்டிகள்! பொறுக்கிகள்! பணத்தை வாங்கிய பின் அதைத் திரும்பச் செலுத்தாமல்
இருப்பதுதான் அவர்களுடைய கொள்கையே.. நகர வங்கி தவிடு பொடியாகிக்கொண்டிருப்பதற்கு
அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
“ நேற்று நான்
யெகோரோவின் வீட்டில் இருந்தேன்” என்று உரையாடலைத் திசைதிருப்ப வேண்டும் என்ற
கவலையுடன் போலந்து நாட்டுக்காரனை இடைமறித்தவாறு பேச ஆரம்பித்தான் ஃபிங்க்ஸ். “
கொஞ்சம் நினைவுபடுத்திப்பார். நான் பிக்கெட் விளையாட்டில் ஆறரை ரூபிள்களை
அவனிடமிருந்து வென்றேன்”.
“நான் கூட உனக்கு ஏதோ
ஒரு பிக்கெட் விளையாட்டின் போது பணம் தரவேண்டி இருக்கிறதல்லவா” என்று நினைவு
வந்ததைப்போல சொன்னான் லியாஷ்கேவ்ஸ்கி. “ அதனை நான் மீண்டும் வெல்ல வேண்டும். ஒரு
ஆட்டம் போடலாமா?” என்று கேட்டான்.
“ஒரே ஒரு முறை” என்று
ஃபிங்க்ஸும் சம்மதித்தான். “நான் பள்ளிக்கூடத்துக்கு விரைவாகச் செல்லவேண்டும்.
உனக்கே அது தெரியும்”
லியாஷ்கேவ்ஸ்கியும்
ஃபிங்க்ஸும் திறந்திருந்த சன்னலின் பக்கத்திலேயே அமர்ந்தார்கள். பிக்கெட்
விளையாட்டைத் தொடங்கினார்கள். நீலக்கலர் பேண்ட்டுடன் அமர்ந்திருந்த பழங்குடியானவன்
ரசித்துக்கொண்டும் ருசித்துக்கொண்டும் நெட்டி முறித்துக்கொண்டு எழுந்தான்.
சூரியகாந்தி விதைகளின் கூடுகள் அவனிடமிருந்து அருவிபோலத் தரையில் வீழ்ந்தன. அந்த
சமயம் பார்த்து நீண்ட தாடியுடன், கசங்கிப்போயிருந்த மஞ்சளும் சாம்பல் நிறமும்
கொண்ட பருத்தியாலான நெடுங்கோட்டுடன் இன்னொரு பழங்குடியானவன் எதிரேயிருந்த
வாயிற்கதவில் தோன்றினான். தன்னுடைய கண்களை குறுக்கிக்கொண்டு நீலவண்ண
காற்சட்டைக்காரனைப் பார்த்து பிரியமாக் கத்தினான்:
“குட் மார்னிங்,
செம்யோன் நிக்கோலைட்ச், வியாழக்கிழமை விஷேஷத்தில் உன்னைப் பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன்”
“அதே பெருமை எனக்கும்
உண்டு காபிடோன் பெட்ரோவிட்ச்”
“என்னுடைய இருக்கைக்கு
வா. இங்கே குளுமையாக இருக்கிறது”
நீலநிறக் காற்சட்டை
ஏகத்துக்கும் மூச்சுவிட்டுக்கொண்டும், கனைத்துக்கொண்டும், ஒரு வாத்தைப் போல
அப்படியும் இப்படியுமாக அசைந்துகொண்டு தெருவைக் கடந்து சென்றது.
“டியர்ஸ்
மேஜர்.....என்று முணுமுணுத்துக்கொண்டான் லியாஷ்கேவ்ஸ்கி, “ராணியிடம்
இருந்து......ஐந்தும் பதினைந்தும்,......அந்த ராஸ்கல்கள் அரசியலைப்பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்......உனக்குக் கேட்கிறதா? இங்கிலாந்தைப் பற்றிப் பேச
ஆரம்பித்துவிட்டார்கள்.......எனக்கு ஆறு இதயங்கள் கிடைத்து விட்டன. “
“எனக்கு ஏழு ‘ஸ்பேட்’
கிடைத்து விட்டன. என்னுடைய பாயிண்ட்”
“ஆமாம்....அது
உன்னுடையதுதான். உனக்குக் கேட்கிறதா? அவர்கள் பீக்கன்ஸ்ஃபீல்டைப் பற்றித்தான்
திட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியுமா? ....பன்றிகள்....அந்த பீக்கன்ஸ்ஃபீல்டு
நெடுங்காலத்திற்கு முன்பே செத்துப்போய்விட்டது. .....ஆக எனக்கு இருபத்து ஒன்பது
கிடைத்துள்ளன. .....உன்னுடைய முறை”
“எட்டு....ஒன்பது.....பத்து....ஆமாம்,
அதிசயமான மக்கள் இந்த ரஷ்யர்கள்! பதினொன்று.....பன்னிரண்டு.....இந்தப்
பூமிப்பந்தில் ரஷ்யர்களின் மறைமுகத்திறன் அலாதியானது”
“முப்பது.....முப்பத்தொன்று.....ஒருவர்
ஒரு நல்ல சாட்டையை எடுத்துக்கொள்ள வேண்டும் தெரியுமா....வெளியே போய் அவர்களுக்கு
பீக்கன்ஸ்ஃபீல்டைக் கொடுக்க வேண்டும்......நான் சொல்கிறேன் கேள்! எப்படியெல்லாம்
அவர்களுடைய நாக்கு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது என்று பார்! பிதற்றிக்கொண்டிருப்பது
என்பது வேலை செய்வதைக்காட்டிலும் எளிதான ஒன்று இல்லையா...கிளப்புகளின் ராணியை நீ
எறிந்துவிட்டாய் என்று நினைக்கிறேன். நானும் அதைக் கவனிக்கவில்லை.”
“பதிமூன்று....பதினான்கு.....சகித்துக்கொள்ள
முடியாத அளவுக்கு வெப்பமாக இருக்கிறது...ஒருவன் இந்த மாதிரியான சூட்டில் இருக்கை
ஒன்றின் மீது முழுச் சூரிய வெளிச்சத்தில் உட்கார்ந்திருக்க வேண்டுமென்றால் அவன்
உடம்பு இரும்பால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்! பதினைந்து.....”
முதல்
விளையாட்டிற்குப்பிறகு இரண்டாவது தொடங்கியது......இரண்டாவதைத் தொடர்ந்து மூன்றாவது
தொடங்கியது...ஃபிங்க்ஸ் தோற்றுப்போகிறான். சூதாட்டத்தின் சூட்டில் கொஞ்சம்
கொஞ்சமாக தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தான். மேல்நிலைப்பள்ளியின் அறையில்
கண்டிருந்த விரிசலை அவன் மறந்தான். விளையாடிக்கொண்டு இருக்கும்போதுகூட
பழங்குடியின் மீது ஒரு கண் வைத்து இருந்தான் லியாஷ்கேவ்ஸ்கி. பழங்குடியும்
அவர்களைப் பார்க்கிறான். உரையாடல்களில் ஒருவரைப் பற்றி ஒருவர்
பேசிக்கொள்கிறார்கள். திறந்த வாசலுக்குச் செல்கிறார்கள், அழுக்கடைந்து போயிருந்த
வளாகத்தைக் கடந்து ஆஸ்பன் மரம் ஒன்றின் கீழ் கொஞ்சமாகப் படர்ந்திருந்த நிழலில்
போய் அமர்கிறார்கள். பன்னிரண்டு மணிக்கும் ஒரு மணிக்கும் இடையில் பழுப்பு
நிறக்கால்களுடன் கூடிய ஒரு பருத்த சமையல்காரன் பழுப்புக் கறைகளுடன் இருந்த
குழந்தைவிரிப்பு ஒன்றை அவர்களுக்கு முன்னால் விரித்தான். மதிய உணவை அவர்களுக்குப்
பரிமாறினான். மரக்கரண்டிகளின் உதவிகொண்டு உணவைச் சாப்பிட்டார்கள்,
பறந்துகொண்டிருந்த ஈக்களை விரட்டியவாறே பேசுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
“அடப்பேயே! இந்தக்
கொடுமையின் எல்லை எல்லாவற்றையும் தாண்டிவிட்டது” என்று ஆங்காரத்துடன் கத்தினான்
லியாஷ்கேவ்ஸ்கி. “ என்னிடம் ஒரு துப்பாக்கியோ ரிவால்வரோ இல்லாதது நல்லதாகப்போய்
விட்டது. இல்லையென்றால் அந்தக் கால்நடைகளைச் சுட்டுக்கொன்றிருப்பேன். என்னிடம்
நான்கு ஏமாற்றுக்காரகள் இருக்கிறார்கள்....பதினான்கு.....உன்னுடைய புள்ளி.......இது
என்னுடைய கால்களுக்கு இடையே ஒரு அரிப்பை உண்டுபண்ணுகிறது. அந்தக் காட்டான்களைப்
பார்த்து என்னால் ஆத்திரம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை”
“இந்த அளவுக்கு நீ
உணர்ச்சிவசப்படாதே! அது உனக்கு நல்லதல்ல”
“ஆனால் என்
வார்த்தைகளில் மேல் சத்தியமாகச் சொல்கிறேன். ஒரு கல்லின் பொறுமையைச் சோதித்தது
போதும் “
அவன் மதிய உணவை
முடித்துக்கொண்டபோது நீலநிற காற்சட்டைகளில் இருந்த பழங்குடி இனத்தவன்
வற்றிப்போனவனாய் களைத்துபோனவனாய் சோம்பேறித் தனத்தாலும் வயிறுமுட்டத்
தின்றிருந்ததாலும் நடக்க முடியாமல் நடந்துகொண்டு தெருவைக்கடந்து அவனுடைய
வீட்டையடைந்தான். அப்படியே சோர்வாக தன்னுடைய இருக்கையில் புதைந்து போனான். தூக்கக்
கலக்கத்துடனும் ஈக்களைப்போன்றிருந்த கொசுக்களுடனும் அவன் போராடிக்கொண்டிருந்தான்.
ஒவ்வொரு நிமிடமும் தன்னுடைய முடிவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவனைப் போல
விரக்தியாக தன்னைத்தானே பார்த்துகொண்டான். அந்த மாதிரியான ஒரு விரக்தியில் அவனைப்
பார்த்தபோது லியாஷ்கேவ்ஸ்கியின் மொத்த பொறுமையும் எல்லையைத் தாண்டியது. அந்தப்
போலந்துக்காரன் சன்னலின் வழியாகத் தலையை வெளியே நீட்டிக்கொண்டு அவனைப் பார்த்து
உறுமிக்கொண்டு கத்தினான்:
“நன்றாகத் தின்று
விட்டாயா? ஆ! கிழவியே! இனிய டார்லிங்! இதுவரைக்கும் அவன் தனது வயிற்றை அடைத்துக்
கொண்டு இருந்தான். இப்போது அந்த வயிற்றை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று
தெரியாமல் விழிக்கிறான்! என் பார்வையில் இருந்து தொலைந்து போடா.....சொறியனே......!
உன்னை பிளேக் வந்து கொள்ளை கொண்டு போகட்டும்!”
அந்தப் பழங்குடியானவன்
அவனைக் காட்டமாகப் பார்த்தான் . பதில் சொல்லாமல் தன்னுடைய விரல்களை மட்டும்
விளையாட்டாக அசைத்துக் காட்டினான். அவனுக்குத் தெரிந்த ஒரு பள்ளிச் சிறுவன் முதுகில் பள்ளிக்கூடப் பையைச் சுமந்தபடி அவனைக்
கடந்து சென்றான். அவனை நிறுத்தி அவனிடம் என்ன கேட்பது என்று நெடுநேரமாக யோசித்துக்
கொண்டே நின்றான் அவன். பின்னர் அவனைப் பார்த்துக்கேட்டான்:
“நல்லது, அப்புறம்
என்ன?”
“ஒன்றுமில்லையே”
“எப்படி ஒன்றுமில்லாமல்
போகும்”
“ஏன், ஒன்றுமில்லை,
சும்மாதான்”
‘ம்ம்...ம்ம்...எந்தப்
பாடம் மிகவும் கடினமானது?”
“அது அவரவரைப்
பொறுத்தது” என்று அந்தப் பள்ளிச் சிறுவன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.
“அப்படியா!.....ர்..ர்...ர்.......மரத்தை
லத்தீனில் எப்படிச் சொல்வது?
“அர்போர்”
“ஆஹா...ஒருவர்
இதையெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்” என்று அங்கலாய்த்துக்கொண்டது நீலநிறக்
காற்சட்டை. நீ இவைகளையெல்லாம் உள்ளே சென்று படிக்க வேண்டும் . அது கடினமான வேலை,
கடினமான வேலை....உன்னுடைய பிரியமான அம்மா சவுக்கியமாக இருக்கிறாளா?”
“அவள் நன்றாக
இருக்கிறாள்...நன்றி”
“ஆ! நல்லது, ஓடு.”
இரண்டு ரூபிளகளை இழந்த
பிறகு ஃபிங்க்ஸ் பள்ளிக்கூடத்தை நினைத்துப்பார்த்தான். திகிலடைந்தான். “ புனிதமான
தேவர்களே! ஏற்கனவே மூன்று மணியாகிவிட்டது. எப்படி நான் இங்கேயே தங்கிவிட்டேன்?
குட் பை, நான் கட்டாயம் ஓடியாக வேண்டும்”
“அட! மதிய உணவையும்
என்னுடன் சாப்பிடு, பிறகு போகலாம்” என்று சொன்னான் லியாஷ்கேவ்ஸ்கி. “உனக்கு நிறைய
நேரம் இருக்கிறது”
ஃபிங்க்ஸ் தங்கினான்.
ஆனால் மதிய உணவு பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்
உட்கார்ந்தான். சாப்பிட்ட பிறகு ஐந்து நிமிடங்கள் சோஃபாவில் உட்கார்ந்து விரிசல்
அடைந்த சுவரை பற்றி எண்ணிப் பார்த்தான். பிறகு தீர்மானமாக தனது தலையை சோஃபாவின்
மெத்தையில் சாய்த்துக்கொண்டு மூக்கு வழியாக ஒரு கூரிய குறட்டை ஒலியுடன் அறையை
நிறைத்தவாறே விழுந்துவிட்டான். அவன் நன்றாக ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது
பிற்பகல் தூக்கத்தை வெறுக்கும் லியாஷ்கேவ்ஸ்கி சன்னல் அருகில் அமர்ந்தவாறே தூங்கி
வழிந்துகொண்டிருந்த பழங்குடிகளைக் கண்டு பொருமிக்கொண்டு இருந்தான்.
“சாபப்பட்ட இனம்!
சோம்பேறித்தனம் உன்னுடைய தொண்டையை அடைத்து இன்னும் சாகடிக்காதது எனக்கு ஆச்சரியமாக
இருக்கிறது. எந்த வேலையும் இல்லை....எந்த அறிவு சம்பந்தமான, ஆன்மா சம்பந்தமான வேலை
என்று எதுவும் இல்லை....சும்மா கிடப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை....அட !
அசிங்கம் பிடித்தவனே!....தூ!....”
ஆறு மணியளவில்
ஃபிங்க்ஸ் எழுந்தான்.
“மேல்நிலைப் பள்ளிக்கூடம்
செல்வதற்குத் தாமதமாகி விட்டது.” என்று நெட்டி முறித்துக்கொண்டே சொன்னான் அவன். “
நாளைக்குத்தான் நான் போக வேண்டியிருக்கும்....இப்போது....எனது பழிவாங்கல்
எப்படியிருந்தது?.......இன்னொரு ஆட்டம் போடுவோமா?”
தன்னுடைய விருந்தாளியை
வழியனுப்பிய பின்னர் ஒன்பது பத்து மணிகளுக்கு இடையில் லியாஷ்கேவ்ஸ்கி தன்னையும்
ஒருமுறை பார்த்துக்கொண்டான். பின்னர் சொல்லிக்கொண்டான்:
“கூறுகெட்டவன்! நாள்
முழுக்கத் தங்கியிருந்து வெறுமனே ஒரு வேலையும் செய்யாமல் காலத்தைக் கடத்திவிட்டுப்
போய்விட்டான்......சும்மாவே இவர்களுக்கெல்லாம் சம்பளம் கிடைத்துவிடுகிறது.....வேலை
மட்டும் செய்வதில்லை. பேய்கள் வந்து இவர்களை விழுங்காதா!....ஜெர்மானியப்
பன்றி....”
சன்னலுக்கு வெளியே அவன்
எட்டிப்பார்க்கிறான். ஆனால் அந்தப் பழங்குடியானவன் அங்கே இல்லை. ஏற்கனவே படுக்கைக்குப்
போயிருந்தான். அவன் பார்த்து பார்த்துப் பொருமிச் சாக அங்கே எவரும் இல்லாமல்
இருந்தார்கள். அந்த நாளில் முதல் முறையாக அவன் தன்னுடைய வாயைப் பொத்திக்கொண்டு
இருந்தான். ஆனால் பத்து நிமிடங்கள்தான் கழிந்திருக்கும். அவனை முற்றிலுமாக
ஆக்கிரமித்து இருந்த அவனுடைய மனஅழுத்தத்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பழையதாய் அழுக்கடைந்து போயிருந்த கரங்கள் அமைந்த சேர் ஒன்றை கோபத்துடன் எட்டி
உதைத்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய பொருமலைத் தொடங்கினான்:
“நீ மட்டும்தான் இந்த
அறையில் இருக்கிறாய்! பழைய குப்பையே! நெடுங்காலத்திற்கு முன்பாகவே உன்னை எரித்துச்
சாம்பலாக்கியிருக்க வேண்டும். உன்னைக் கண்டதுண்டமாக வெட்டிக்கூறு போடவேண்டும்
என்று நான் அவர்களிடம் சொல்ல அடிக்கடி மறந்து தொலைக்கிறேன். அது ஒரு பெரிய
அவமானம்”
பிறகு அவன் தன்
படுக்கைக்குச் சென்று மெத்தையில் இருக்கும் ஒரு ‘ஸ்பிரிங்க்’ மீது கையை வைத்து
அழுத்திப் பார்க்கிறான். மீண்டும் பொருமிக்கொண்டு எரிச்சலாக திட்டத்
தொடங்குகிறான்:
“உத.....வாக்.....கரை
ஸ்பிரிங்க்.....இரவு முழுவதும் என்னுடைய விலா எலும்புகளை எல்லாம் வெட்டிச்
சாய்த்துவிடுமே. நாளைக்கே இந்த மெத்தையைக் கிழித்தெறிந்து வெளியே வீசியெறியும்படி
அவர்களிடம் சொல்கிறேன். ஒன்றுக்கும் உதவாத ஜடமே”
நள்ளிரவில் அவன் நன்றாக
ஆழ்ந்து உறங்குகிறான். பழங்குடிகளின் மீதும், ஃபிங்க்ஸின் மீதும், கரங்கள் அமைந்த
அந்தப் பழைய சேரின் மீதும் கொதிக்கும் வெந்நீரை ஊற்றுவது போல அவன் கனவு
காண்கிறான்.
ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில்: சரவணன். கா