Monday, 18 October 2021

பெருங்கோபமும் பேரன்பும்- வேல ராமமூர்த்தியின் அசாத்திய நாவல் “குற்றப் பரம்பரை” குறித்த சில பார்வைகள்.


மத்திய அரசுப்பணியில் தென்னிந்தியாவைத் தவிர இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த போது (சுற்றிக்கொண்டு இருந்தபோது என்று சொன்னால்பொருந்தும்), தமிழ்நாட்டுக்கு விடுமுறைக்குச் சென்று வரும் என்னுடைய கான்ஸ்டபிள்கள் அவ்வப்போது கொண்டு வரும் தமிழ் மாத வார இதழ்களில் ஜூனியர் விகடனும் ஒன்று. அப்படி படிக்கக் கிடைத்த ஒன்றிரண்டு இதழ்களில் வேல ராமமூர்த்தி எழுதிய “கூட்டாஞ்சோறு” என்ற தொடரைப் படிக்க நேர்ந்தது. முன்பின் அறிமுகம் இல்லாத எழுத்தாளராகத் தோன்றினார். யாரோ எழுதிப்பழகுகிறார்களோ, ஜூனியர் விகடன் ஏதோ களம் அமைத்துத் தந்திருக்கிறதோ என்று எண்ணியதுண்டு. அந்தத் தொடரைப் பார்த்து நான் நிதானிக்கக் காரணம் அதில் சொல்லப்பட்ட ஊர்களின் பெயர்கள்தான். கொம்பூதி, பெருநாழி, பெரும்பச்சேரி, கமுதி என்ற பெயர்கள் அடிபட்டவுடன் என் கவனம் இயல்பாக அந்தத் தொடரில் லயித்தது. நம்மூர் பக்கம் இருக்கும் பெயர்களாச்சே என்ற ஆர்வம். அதுவும் அடிதடிகளுக்கு பெயர்போன ஊர்களாச்சே என்ற பதட்டம். தொடர்ந்து ஜூனியர் விகடன் கிடைக்கப் பெறாமல் போனதால் என்னால் அதைத் தொடர்ச்சியாகப் படிக்க இயலவில்லை. எனினும் வேல ராமமூர்த்தி என்ற பெயர் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஆழமாகப் புகுந்துவிட்டது என்பதை மட்டும் உணர முடிந்தது. அதற்குப் பிறகு அவர் எழுதிய கதைகளைப் படிக்க நேரம் காலம் சரியாக அமையவில்லை. 

கடந்த வாரம் என்னுடைய மாதாந்திரக் கொள்கையின்படி புத்தகங்கள் வாங்க இணையத்தில் புத்தகங்களைத் தேடிக்கொண்டு இருந்தபோது அவர் எழுதிய “குற்றப் பரம்பரை” கண்ணில் தென்பட்டது. அடிமனதில் எங்கோ வாசம் குறையாமல் ஊறிப்போயிருந்த அவர் பெயர் இந்த நாவலைப் பார்த்தவுடன் புது வாசம் கொண்டு கண்களின் வழியே அந்த நாவலைத் தழுவிக்கொண்டு வாங்கச் சொல்லி என்னை வற்புறுத்தியது.  பதிமூன்று வருடங்களுக்கு முன்பு என்னைத் தொட்டும் தொடாமலும் வருடிச் சென்ற “ கூட்டாஞ்சோறு”தான் கொஞ்சம் உருமாற்றம் பெற்று இப்போது “குற்றப் பரம்பரை”யாக என்னிடம் வந்திருக்கிறது என்ற உண்மை தெரிந்தபோது இது ஏன் நடந்திருக்கிறது என்ற லேசான அயற்சி ஏற்படத்தான் செய்தது. இத்தனை நாள் இந்தக்கதையைப் படிக்கத் தவறிவிட்டாயடா என்று புத்தி எடுத்து சொல்வதைப்போல இருந்தது  அந்த அயற்சி. 

படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்க மனமில்லாமல், படித்தபின் குலையைச் சுரண்டி தூங்கவிடாமல் செய்யும் படைப்புகளுல் இதுவும் ஒன்று என்பது வாசிக்க வாசிக்கப் புரிந்தது. வேல ராமமூர்த்தியின் எழுத்து ஆழம் புரிந்தது. ஓர் அசாத்தியமான கலைஞன் என்ற உண்மை புரிந்தது. மிகத் திறமைமிக்க வட்டார மொழி கதை சொல்லி அவர் என்ற பேருண்மை புரிந்தது.  தற்போது திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். 

குற்றப் பரம்பரை சொல்வது என்ன? 

களவைத் தவிர வேறு எதையும் தொழிலாக அறியாத ஒரு கூட்டத்தின் கதை என்று சொல்லிப் போகலாம். சாதிப் பிரச்சினைகளை கதையோட்டத்தில் தந்துவிட்டு வாசகனைத் தீர்மானிக்கவிட்டுவிட்டு செல்லும் கதை எனலாம். மேஜிக்கல் ரியலிசம் என்று சொல்லக்கூடிய ஓர் உத்தியை மூலக்கதாப்பாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே தெளித்து செல்லும் ஒரு பிராசீனமான கதை என்று சொல்லிவிடலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ராமனாதபுரம் மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக அறியப்படும் சாதிப் பிரச்சினையின் ஆதி அந்தத்தை ஒரு நூறு ஆண்டு கால விவரிப்பில் அறிந்து சொல்லும் ஓர் ஆவணமாக இந்தக் கதையை அணுகலாம். 

சமூகவியலில் ஆர்வம் கொண்ட மாணவன் ஒருவனுக்கு மேலே சொன்ன காரணங்கள் இந்த கதையை அறிந்து கொள்ளத் தேவையான முகாந்திரமாக அமையும். இதையும் தாண்டி குற்றப் பரம்பரை சொல்ல வருவது எதுவாக இருக்க முடியும்? வேயன்னா என்ற தனிமனிதனின் தீரமா? அரசாங்கம் தவறென்று சொல்லும் களவைத் தங்கள் குலத்தொழில் என்று சொல்லி அதில் தொடர்புடைய கொலை,கொள்ளை யாவற்றையும் தங்களின் வீரத்தின் ஒரு பகுதி என்று இறுமாப்பு கொண்டு திரியும் ஒரு கூட்டத்தின் அறியாமையா? கொள்ளை அடித்து வரும் நகைகளின் மதிப்பைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல்குடிக்கும் கள்ளுக்காகவும்,கறிக்காகவும்,அன்றாட உணவுக்காகவும் பச்சமுத்துவிடம் தந்துவிடும் வெள்ளந்தி குணமா? இந்த உலகில் மனிதனுக்குத் தேவையானது உணவு மட்டுமே அன்றி நகையோ பணமோ வீடோ சொத்தோ இல்லை என்ற சாந்தமான மனமா? உணவு கிடைத்துவிட்டால்வேயன்னாவின் கூட்டம் களவைப்பற்றி நினைத்துப் பார்க்க மாட்டாது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. களவு என்ற விஷயம் இங்கே பிரச்சினையாகப் பார்க்கப்படவில்லை. சொத்து சேர்க்க விரும்பாத, அடுத்தவனை கெடுக்க நினைக்காத, நினைக்கத் தெரியாத, இயற்கையோடு இயைந்து வாழும்,  ஒரு ஞான நிலையில் இருக்கும்ஓர் அப்பாவி மக்கள் கூட்டத்தை புலம் பெயரும்படி அடித்து விரட்டி வாழ்வாதாரத்தைப் பிடுங்கிகொண்டு, வாழ வழி இல்லாமல் செய்துவிட்டு  பசிக்காக அவர்கள் திருப்பி அடிக்கும் ஓர்எதிர்வினையை குற்றம் என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கும் அடக்குமுறை சமூகத்தின் அசிங்கமான முகத்தைத்தான்குற்றப்பரம்பரை நமக்குக் காட்டுகிறது. இந்தக் காட்சி நாவலின் பல இடங்களில் காணக்கிடைக்கிறது. ஒரு சமூகத்தை அதன் வாழ்வாதாரத்தில் இருந்து துரத்தும் அரசு, அவர்களை புணர் நிர்மாணம் செய்யும் பணி மட்டும் தனதில்லை என்று விலகிக்கொள்கிறது. துரத்தப்பட்டவன் பசிக்காகவும் உரிமையை மீட்டெடுக்கவும் கத்தி எடுக்கும்போது அவனைக் குற்றவாளியாக்கி சிறையில் அடைக்கிறது. இந்த தடுமாற்றம் நிறைந்த புரிதலின்மையை இன்றைய நக்ஸலைட் பிரச்சினையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். மத்திய இந்தியாவின் சில இடங்களில் இன்றும்தொடர்ந்து வரும் நக்ஸலைட் வன்முறையின் பின்னால் வாழ்வாதாரம் பறிபோன, பறிபோய்க்கொண்டு இருக்கின்ற, பறிகொடுத்துவிட்டு பரதேசிகளாய் நிற்கும் அவலம் ஒரு மறுக்கமுடியாத காரணமாக நிற்கிறது. அந்த இடங்களில் எல்லாம் பணியாற்றிவன் என்ற முறையிலும் அந்த நக்ஸல் வன்முறையில் கொல்லப்பட்டிருக்க கூடிய நிலையில் முன்னின்றவன் என்ற முறையிலும் இந்தக் காரணம் மிக முக்கியமான காரணம் என்று என்னால் சொல்ல முடியும்.

குற்றப் பரம்பரை இரண்டு தளங்களில் புரிந்துகொள்ளப்படும்போது அதன் உண்மையான படைப்பியல் நோக்கம் நமக்கு தெளிவாகிறது. ஒன்று, கதை நேரடியாகச் சொல்லிச்செல்ல விரும்பும் சாதிய ஒழிப்பு பற்றிய ஒரு கவலை தோய்ந்த தீனக்குரல். அதாவது சுமுகமாக வாழும் இரண்டு சமூகங்கள் சாதியின் பெயர் சொல்லி அடித்துக்கொண்டால் அதில் இரண்டு சமூகங்களின் நலனை கருத்தில் கொள்ளாத மூன்றாவது சுயநல சக்தி ஒன்று இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, தான் வாழ பிறரைக் கொல்லத் தயங்காத அந்த தீயசக்தியின் கையில் மாட்டிகொள்ளாமல் அதை நிராகரிக்கும் பக்குவத்தை சம்பந்தபட்ட சமூகங்கள் பெற வேண்டும் என்ற அக்கறைநிறைந்த குரல். இது இந்த நாவலின் அடிநாதம்.  இரண்டாவது ஒரு கலைப்படைப்பு என்ற ரீதியில் இந்த நாவல் கட்டமைத்து இருக்கும் கதைப்போக்கு, சொல்லாடல், கலாச்சார பதிவு, தனிமனித ஒழுக்கம், வீரம், வஞ்சம், அக்கறைப்படுவது போல காட்டிகொண்டு தனக்கு வேண்டாததையோ அல்லது தான் சார்ந்திருக்கும் அரசாங்கம் விரும்பாத ஒன்றை செய்தாலோ மகன் கூட தந்தையைக் கொல்லலாம் என்ற சமூகத்தின் போலித்தனமான முகம், நாகரீகபடுத்துதல் என்ற முறையில் நியாயபடுத்தப்படும் அடக்குமுறைகள் என்று இன்னும் எத்தனையோ படிமங்களைத் தாங்கி நிற்கிறது இந்தக் கதை. இரண்டாவதாக அறியப்படும் கதையின் இந்தவெவ்வேறு அடுக்குகள்தான் தமிழ் இலக்கியத்தில் இந்த நாவலை ஓர் உன்னத இடத்தில் உட்கார வைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தக் கதையின் மையம் வேயன்னா என்ற வேலுச்சாமி. நெஞ்சுரமும் எவருக்கும் தலை குனியாத நேர்மையும் கொண்ட நேர்த்தியான வடிவம். நம்பியவனுக்கு உயிரைத்தரும் வெள்ளைமனமும்,கொடுத்த வாக்கை சாகும்வரை காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கையும் கொண்டவர். இவ்வளவு நல்ல குணங்களையும் களவு என்ற சமூகம் அங்கீகரிக்காத தொழிலை செய்துகொண்டு கடைபிடிக்கும் முரட்டு சுபாவம் கொண்டவர். கசாப்பு கடைக்காரனுக்கு ஆட்டை வெட்டுவது எவ்வளவு சாதாரணமான, மனசாட்சிக்கு விரோதமான செயல் இல்லையோ அதை ஒத்தது வேயன்னாவின் கூட்டம் களவு என்ற தொழிலில் வைத்திருக்கும் நம்பிக்கை. அது ஒரு தொழில். களவின் போது உயிர் சேதம் இல்லாமல் முடிந்தால் நன்றாக இருக்குமே என்று வெள்ளந்தியாக நினைக்கும் கூட்டம். ஒருவேளைஉயிர் சேதம் ஏற்பட்டால் உயிரைக் கொடுக்கவும்,உயிரை எடுக்கவும் தயக்கம் காட்டாத கூட்டம். இவர்கள் செய்யும் களவுத்தொழில் அவர்களுடைய சமூகத்தில் பெரியஅங்கீகாரத்தைப் பெற்று இருக்கிறது. அடுத்த தலைமுறையும் வயிறு நிறைக்க களவு கற்றுகொள்ள வேண்டும் என்று நிரப்பந்திக்கும் அளவுக்கு களவு என்பது அவர்கள் வாழ்வில் மிக மிகச் சாதாரண நிகழ்வாகிஇருக்கிறது. சைவம் சாப்பிடும் ஒருவன் மிருக வதையை எப்படி எதிர்ப்பானோ அதைப்போல களவை எதிர்க்கிறது அரசாங்கம். காரணம் களவினால் பாதிக்கப்பட்டவன் புகார் செய்கிறான். அவனைக் காக்க களவு என்பதைக் குற்றமாக கருதுகிறது அரசாங்கம். இங்கே வேயன்னாவின் கூட்டம் செய்யும் களவு பற்றி கொஞ்சம் ஆழமான புரிதல் அவசியமாகிறது. 

வேயன்னா செய்யும் களவு பெரிய பெரிய பணக்காரர்களைக் குறி வைத்துதான் செய்யப்படுகிறது. அப்படியே களவாடிகொண்டு வரும் விலைமதிப்பற்ற பொருட்களை தான் வைத்துக்கொள்ளாமல்,அதனுடைய மதிப்பை பற்றிக் கவலைப்படாமல் வயிற்றுக்குச்சோறும் கறியும்,குடிக்க கள்ளும் மட்டும் கிடைத்தால் போதும் என்று அத்தனை நகை ஆபரணங்களையெல்லாம் பச்சமுத்து என்ற தானிய வியாபாரியிடம் பண்டமாற்று செய்யும்போது இவர்கள் செய்யும் களவு சொத்து சேர்த்து சுயநலம் வளர்க்கும் செயலாகத் தெரியவில்லை. மாறாக அன்றாடம் வயிற்றுக்குத் தேவையான உணவைச்சேகரிக்கும் ஒரு சாதாரண செயலாக மட்டுமே தெரிகிறது.  இதைத்தான் வேயன்னாவின் மகன் சேது ஒரு கட்டத்தில் யோசித்துப் பார்க்கிறான். வெறும் கள்ளுக்கும் கறிக்குமா இந்தத் திருட்டுப் பட்டம்? அய்யாவிடம் எடுத்துச் சொன்னால் கேட்பாரா? கேட்பார் என்று நினைத்துக் கொள்கிறான். இனிமேல் களவுக்குப் போகக்கூடாது என்று சத்தியம் வாங்கும்போது களவை விட்டால் வேறு தொழில் அறியாத வேயன்னாவின் மக்களுக்கு எந்தஒரு வழியையும் காண்பிக்காமல் அவர்கள் பட்டினியின் காரணமாக சத்தியத்தை மீறும்போது (வையத்துரை மீறுகிறான். வேயன்னா அல்ல) அவர்கள் எல்லோரையும் குற்றவாளியாக்கிப் பார்க்கிறது வெள்ளையனின் சட்டம். சொந்த நிலம் இருந்தால் விவசாயம் செய்து பிழைக்கலாம் என்று வேயன்னா சலிப்பாக சொல்லும்போது பட்டினியின் நிதர்சனம் புரிகிறது. 

பெருநாழி கிராமம் காட்டும் சாதீயம் உள்ளுக்குள்வெகுவாக அரிக்கிறது. வேல ராமமூர்த்தியின் சொந்த ஊர் இந்த பெருநாழி. அவர் எழுதிய சில கதைகளால் சொந்த ஊரிலேயே அவரைக் கொல்வதற்கு பஞ்சாயத்து முடிவெடுத்துகொலை செய்தபின் வரும்நீதிமன்ற செலவுகளை பஞ்சாயத்தே ஏற்கும் என்று முடிவு செய்ததாக ஒரு பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்லி இருந்தார். ஊரில் இருக்கும் ஒரு பொதுக்கிணற்றில் பக்கத்து ஊரான பெரும்பச்சேரி “தன் வாளி” போட்டு நீர் இறைக்கக் கூடாது. அங்கு இருக்கும் மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகம் எனவும்,அவர்களுக்கு தன் வாளி போட்டு நீர் இறைக்க உரிமை இல்லை எனவும் எழுதப்படாத சட்டம் அங்கே அரங்கேறி இருக்கிறது. துருவனின் மனைவி ராக்கு என்பவள் தாகம் மேலிட்டு யாருக்கும் தெரியாமல் தண்ணீர் இறைத்துவிடுகிறாள். அதைப்பார்த்த ஊர்த் தலையாரி மனைவி வீரசுத்தி பஞ்சாயத்தைக் கூட்டுகிறாள். ராக்கு செய்த செயலுக்குத் தண்டனையாக அவள் கணவன் துருவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து சர்க்கரைப்பாகு ஊற்றி கட்டெறும்புகளால் கடிக்க விடுகின்றனர். வேயன்னாவுக்கு விவரம் தெரிய பெருநாழி அலறுகிறது. சாதி வெறி இருக்கிறதே தவிர வேயன்னாவை எதிர்கொள்ளும் துணிவு எவருக்கும் இல்லை. உன் நிலத்தில் உழ அவன் வேண்டும். விவசாயம் செய்ய அவன் வேண்டும். விளையும் நெல்லை தூக்கிக்கொண்டு வர அவன் வேண்டும். எல்லாவற்றுக்கும் அவன் வேண்டும். அப்போதெல்லாம் வராத சாதி கீழே இருந்து ஊறும் தண்ணீரில் வந்து விடுகிறதா என்று உறுமுகிறார் வேயன்னா. இன்று முதல் பெரும்பச்சேரி மக்கள் பெருநாழி கிணற்றில் தன் வாளி போட்டு நீர் இறைப்பார்கள். மறுப்பவன் என் முன் வரட்டும் என்று சொல்லிச் செல்கிறார். மறுநாள் தாகம் தீர்க்க நீர் அள்ளச்செல்லும் பெரும்பச்சேரி மக்களை கிணற்றுக்குள் மிதக்கும் மலம் வரவேற்கிறது. இது உண்மையில் நடந்த சம்பவம் என்று வரலாற்றுப் பதிவு இருக்கிறது. வேல ராமமூர்த்தியின் தகப்பனார் பெயர் வேயன்னா. இந்த நாவலை அவர் தன் தந்தைக்கு அர்ப்பணித்து இருக்கிறார். பஞ்சாயத்து பிரசிடென்டாக இருந்த வேல ராமமூர்த்தியின் தந்தை வேயன்னா தானே முன்னின்று அந்த கிணற்றை மூன்று நாட்களாகத் தூர்வாரி சுத்தப்படுத்தினார் என்று அறிகிறோம். எங்கோ எப்பொழுதோ ஏதோ ஒரு புள்ளியில் பூதாகரமெடுத்த சாதி என்ற அரக்க உணர்வு மக்களின் அன்றாட வாழ்வில் சண்டை போடத் தேவையான ஒரு கருவியாக விசுவரூபம் எடுத்து இன்றைக்கும் ஒரு பெரிய பிரச்சினையாக வளர்ந்து நிற்பதும்,அதை வளர்த்து விட்டால்தான் குளிர்காய முடியும் என்று சாதியை வைத்து சதிராட்டம் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளும் இந்திய ஜனநாயகத்தின் மிகக் கேவலமான அழிக்க முடியாத அத்தியாயங்கள். 

ஒருபுறம் சாதி தனது கேவலமான முகத்தைக் காட்டும் வேளையில் பிரிட்டிஷ் அரசாங்கம் தன் பங்குக்கு சட்டம் ஒழுங்கு என்ற போர்வையில் அடக்குமுறைகளை ஏவிவிடுகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த காலகட்டத்தில் குற்றப் பரம்பரை கதை நடந்ததாகக் குறிப்பு வருகிறது. வேயன்னாவின் கொம்பூதி மக்களை அடக்க வரும் பகதூர் துரை ஜாலியன் வாலாபாக்கில் மக்களைக்கொன்று வெள்ளையனிடம் நற்சான்று பெற்றவன் என்ற குறிப்பு வருகிறது. எருதுகட்டு என்ற பெயரில் வேயன்னாவை ஏமாற்றி ஆயுதங்களை அவர் மக்களிடம் இருந்து பிரித்தபின் அவன் ஏவிவிட்ட போலீஸ்காரர்கள் கொம்பூதியை சூறையாடுகிறார்கள். அதற்கான பலனாக வில்லாயுதத்திடம் கத்திக் குத்துப்பட்டு செத்துப்போகிறான் பகதூர் துரை. பல போலீஸ்காரர்கள் கொதிக்கும் எண்ணையில் வெந்து சாகிறார்கள். அடக்குமுறைக்கு அடங்காத ஒரு கூட்டமாகக் கொம்பூதி கிராமம் காட்டப்படுகிறது. வெள்ளைக்கார போலீஸுக்குத் துணை போகும் உள்ளூர் கிழட்டு போலீஸ் போல இனங்காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் சுதந்திர போராட்ட வரலாற்றிலும் அனேகம். 

இந்தக் கதையில் வரும் மாந்தர்களில் நாம் அவசியம் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் என்றால் அது வேயன்னாஇளவயதில் பிரிந்து போய் வெள்ளைக்காரத் தம்பதிகளால் வளர்க்கப்பட்டு பெருநாழிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அவர் மகன் சேது மற்றும் கடைசி வரை சுயநலத்துடன் வாழ்ந்து களவை இனிமேல் செய்யமாட்டோம் என்று வேயன்னா சத்தியம் செய்த பின் திடீரென்று பச்சைத் துரோகியாகி சாதிச் சண்டையைத் தூண்டிவிடும் பச்சமுத்துவும்தான். மற்ற எல்லா கதாப்பாத்திரங்களும் கதைக்குத் தேவைப்பட்டவர்கள் மட்டுமே. இந்த மூன்று கதாப்பாத்திரங்களின் வழியேதான் ஒரு சமூகத்தின் வெள்ளை மனம்சட்டத்தின் பெயரால் ஒரு மனிதனைக் கொல்ல அவனுடைய மகனையே ஏவிவிடும் பிரிட்டிஷ் அரசின் ஏகாதியபத்திய கொள்கைசுயநலம் ஒன்றுக்காக தனது சொந்த இனத்தையே அழித்தாலும் தவறில்லை என்ற எண்ணம் என்று மூன்று முக்கியமான கருதுகோள்களை நம்மால் அடையாளம் காண முடிகிறது. கொலைக்கு அஞ்சாத,கலப்படம் இல்லாத வீரம் செறிந்த மனிதனாக வரும் வேயன்னா எதையும் சுலபமாக நம்பிவிடும் எளிய மனிதனாகவும் வருகிறார். பொருள் சேர்க்கும் ஆசை இல்லாத மனிதராக அவர் இருப்பதற்குக் காரணமான உலகின் நிலையாமை குறித்த புரிதல்,அவரை ஏமாற்றும் மக்களை இனம் காட்டினாலும் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அவருடைய சுத்தமான வீரம் அவருக்குத் துணையாக வரும் என்று நினைக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.               

இறுதியில் அவரைக் கொல்லும் அவர் மகன் சேது ஒரு சந்தர்ப்பவாதியாகத்தான் தெரிகிறான். இவனுக்கும் கொலையுண்ட பகதூர் துரைக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. இருபது வருடங்களுக்குப் பிறகு அவன் தன்னுடைய குடும்பத்தை சந்திக்கும்போது அவனுக்கு ஏற்படும் சிலிர்ப்பு உணர்வு உண்மையாக இருந்தாலும்அவன்பால் காட்டப்படும் அன்பில் உண்மை உள்ளது என்பதை அவன் அறிந்திருந்தாலும் அதை அவன் தான் மேற்கொண்டு வந்த செயலுக்குத் தேவைப்படும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த எத்தனிப்பது அவன் ஒரு சந்தர்ப்பவாதி என்பதைக் காட்டுகிறது. அவனை வளர்த்த வில்லியம்ஸ் உன்னுடைய மூலத்தை நீ தெரிந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது என்று நினைவூட்டிய போதும் அதற்கென்ன இப்ப அவசரம் என்று கேட்டு மழுப்புகிறான். அவன் வேயன்னாவைப் பிரியும் போது விவரம் தெரிந்த பையனாகத்தான் பிரிகிறான். கைக்குழந்தையாக அல்ல. இந்த இருபது வருடங்களில் தன்னுடைய குடும்பத்தைப் பற்றி கவலைப்பட்டவனாகவும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாதவனாகவுமே அவன் சித்தரிக்கப்பட்டு இருக்கிறான். இந்த கதாப்பாத்திரம் ஒரு சிக்கலான அரசியலைப் பேசும் கதாப்பாத்திரம். இந்திய மக்களுக்கு எதிராகப் போராட  இந்தியர்களையே பயன்படுத்த பிரிட்டிஷ் அரசு கையாண்ட ஒரு யுக்தியின் பிரதிநிதிதான் சேது. வளர்த்தவர்கள் நல்லவர்கள் என்பதால் இந்த யுக்தியின் செயலூக்கம் இவன் வளர்ப்பின் நோக்கம் இல்லை என்று சொல்லி ஒதுங்கிவிட முடியாது. கொல்லப்போவது தன்னுடைய தந்தையைத்தான் என்ற உண்மை பொட்டில் அடிக்கும்போது கூட கிடைத்த செய்தியை ஒரு தடவை மறுபரிசீலனை செய்து பார்ப்போம் என்ற பொறுமை இல்லாத பிரிட்டிஷ் அரசின் வெறும் கைக்கூலி மாதிரிதான் சேது தெரிகிறான். அவனுடைய அவசரமும் கைதாண்டிப் போன நிகழ்வுகளும் அவனைக் கையாளாகாதவனாக ஆக்கி ஒரு சாதாரண கொலைகாரன் என்ற நிலைக்குத் தள்ளி விடுகின்றன. கண்மூடித்தனமாக அவன் சுட்ட குண்டு ஒன்று வேயன்னா நெஞ்சைத் துளைத்து அவரை சாகடிக்கிறது. சகாப்தம் ஒன்றை அவனுடைய வெறி கொண்ட துப்பாக்கி முடிவுக்குக் கொண்டு வந்து விடுகிறது. உண்மை அறிந்த பின் மனம் தளர்ந்து நடக்கிறான். ஆனால் காலம் கடந்துவிடுகிறது. 

இத்தனை களேபரங்களுக்கும் காரணம் பச்சமுத்து. அவன் ஊதிவிட்ட சாதித் தீ கொம்பூதியையும் பெரும்பச்சேரியையும் எரிக்கிறது. வேயன்னா தன் மகனைப்போல பாவித்த வையத்துரை அவர் மகள் அன்னமயிலைக் கடத்திக்கொண்டு போய்விட்டான் என்று அவரையும் கொம்பூதி மக்களையும் நம்ப வைக்கிறான். களவைக் கைவிட்டோம் என்ற வேயன்னாவின் சத்தியம் அவனை நிலைகுலைய வைக்கிறது. இவர் திருட்டை நம்பி இருந்த தன் பிழைப்பு இனிமேல் என்னாவது என்ற சுயநலம் எவன் செத்தால் எனக்கென்ன என்ற மன நிலைக்குத் தள்ளுகிறது. இறுதியில் அவன் மனைவியே அவனைக் கொல்லும்படி வையத்துரையைக் கேட்கிறாள். பச்சமுத்து வையத்துரையால் குத்துப்பட்டு சாகிறான். 

இந்த நாவலின் கதையோட்டம் சில கேள்விகளுக்கு விடை அளிக்காமல் செல்கிறது. நாவலின் தொடக்கத்தில் வேயன்னாவின் கூட்டம் எதற்காகத் துரத்தப்படுகிறது என்று புரியவில்லை. களவாடிக்கொண்டு போகும் கூட்டத்தைத் துரத்துகிறார்கள் என்று எடுத்துக்கொண்டாலும் சேதுவைக் கண்டவுடன் இதோ இருக்கிறான் நாம் தேடி வந்தவன் என்று சேதுவைப் பிடித்துக்கொண்டு போகும்போது குழப்பம் இன்னும் அதிகமாகிறது. சேதுவை வெள்ளைக்காரர்கள் பிடித்துக்கொண்டு போக என்ன காரணம் என்று தெரியவில்லை. அதற்கான எந்தவொரு முகாந்திரமும் நாவலில் இல்லை. குழந்தை இல்லாத தம்பதிகள் வில்லியம்ஸ் தம்பதிகள் என்ற குறிப்பு வந்தாலும் சேதுவை அவர்கள் குறிவைத்து தூக்கிப்போக என்ன காரணம் என்று தெரியவில்லை. 

ஊரில் இருக்கும் இளவட்டங்களுக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என்ற பேச்சு வரும்போது அன்னமயிலை நரிவேலுவுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று கூழானிக் கிழவி கூறுகிறாள்.அப்போது அதில் சிறு மாறுதல் இருக்கிறது என்று வேயன்னா எதையோ சொல்ல வருகிறார். அன்னமயிலுக்கும் வையத்துரைக்கும் ஏதோ பட்டும் படாமலும் பிரியம் இருப்பது போல தோன்றுகிறது. ஆனால் அதைப்பற்றி எவரும் பிரஸ்தாபிக்கவில்லை. அவர்களும் அதைப்பற்றி பேசவும் இல்லை. இவர்கள் இருவரைப் பற்றிய வேயன்னாவின் உள்ளக்கிடக்கை அவர் இறக்கும்வரை நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. அன்னமயிலுக்கு நரிவேலுவைத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டாலும் அவனைவிடவும் மிகப்பொருத்தமான வையத்துரையை அவளுடன் சேர்க்காமல் இருப்பது வேயன்னா கூட்டத்திலும் அந்த சாதி வேறுபாடு குறித்த உணர்வு இருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. வையத்துரை பெரும்பச்சேரிக்காரன். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன்.  

கதையின் தொடக்கத்தில் குண்டடி பட்டாலும் கதையின் போக்கில் வெள்ளையர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் பற்றிய அறிதல் வேயன்னா கூட்டத்திற்கு இல்லாமல் இருப்பது போல காண்பிப்பது ஒரு சிறு முரண்பாடு. கதாசிரியர் கதையின் தொடக்கத்தில் எழுதிய விஷயங்களை அடுத்தடுத்து எழுதும்போது நினைவில் கொண்டு இந்த முரண்பாடு நிகழாவண்ணம் பார்த்துகொள்வது நல்லது. 

நிறைகுறைகளைத் தாண்டி குற்றப் பரம்பரை தமிழ் இலக்கியத்தில் ஓர் அசாத்திய முயற்சி என்று சொல்வதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. என்னுடைய எழுத்து எந்த எழுத்தாளனையும் நினைவுபடுத்தாது என்று வேல ராமமூர்த்தி சொல்லி இருந்தாலும் அவருடைய துள்ளல் நடை எனக்கு புதுமைப்பித்தனை நினைவுபடுத்துகிறது. பத்தி பத்தியாக நினைத்ததை எல்லாம் கொட்டாமல் சிறு சிறு பத்தியாக துள்ளிச் செல்லும் நடை புதுமைப்பித்தனுடையது. அதை வட்டார மொழிச்செறிவு கூட்டி மெருகூட்டி இருக்கிறார் வேல ராமமூர்த்திஅவர் நடை புதுமைப்பித்தனைப் போல் இருக்கிறது என்று சொன்னால் அது அவருக்குப் பெருமைதான். கோபம் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். 

பெருங்கோபமும் பேரன்பும் கொண்டவராக வேல ராமமூர்த்தி நாவலின் பின்புற அட்டையில் விழித்துப்பார்க்கிறார். இந்த நாவல் அந்த இரண்டு அடைமொழிகளுக்கும் மிகப்பொருத்தமான சான்றாகவே நான் பார்க்கிறேன். 

அன்புடன் 

சரவணன். கா