என் கன்றுக்குட்டிக் காதல்
திரும்பித் திரும்பிப் பார்த்தாலும் மனதின் ஏதோ ஒரு பகுதியை தன்னுள் அடக்கி மகிழ்ச்சி தரும் சில தருணங்கள் எல்லோரின் வாழ்க்கையிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்றல்
தோலுரித்த இளவேனில் பனித்துளிபோல் சுகமான நினைவுகளை வருடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட
ஓர் அனுபவம்தான் என் மனதில் இன்னும் மங்கலாக ஒளிர்ந்து கொண்டு இருக்கும் என் கன்றுக்குட்டி
காதல் அனுபவம். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருந்தாலும் அந்த ஏழு வயதில் ஏற்பட்ட
அந்த அன்புணர்வு அழகான உணர்வு என்றுதான் இன்றைக்கும் நினைக்கத் தோன்றுகிறது.
தமிழகத்தின் மிகவும் காய்ந்து போன
மாவட்டம் என்ற பிரசித்தி பெற்ற ராமனாதபுரம் மாவட்டத்தில் நான் பிறந்த ஊர் இன்னும்
காய்ந்து போன ஒரு கருவேலங்காடு. கருவேலமும் பனையும் தவறிப்பிறந்த சில வேப்ப
மரங்களும்தான் என் ஊரின் பசுமை அடையாளங்கள். ஊரின் எல்லைக்குள் எங்கே தோண்டினாலும்
கடல் நீரின் கரிப்பை தனக்குள் செறிவாகக் கொண்டு வெளியே வரும் பருகவே
லாயக்கற்றதாகப் பத்து ஊருக்கும் போதுமான நிலத்தடி நீர். கோடை காலத்தில் தண்ணீருக்கு ஆளாய்ப் பறக்கும் என்
ஊர் “தண்ணியில்லா ஊர்” என்று தென் மாவட்டங்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது. பூமியில் நிலவிய வெம்மையும் கடலின்
ஈரப்பதம் கொண்ட உப்புக்காற்றும் வெள்ளைத் தோல் கொண்டவர்களைப்
பொறாமையுடன் நோக்கும் கரியவர்களாக என் ஊர் மக்களை
மாற்றியிருந்தது. என் கருப்பு நிறத்தைக் கண்டு என் முதல் வகுப்பு ஆசிரியர் திரு
திருப்பதி அவர்கள் ( இறைவனைச் சேர்ந்து விட்டவர்) என்னைக் கருப்பட்டி என்று
அழைத்தது இப்போது எனக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை.
வருடம் 1985. அப்போது இரண்டாம் வகுப்பில்
படித்துக்கொண்டிருந்தேன். சரோஜா டீச்சர் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார்.
படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவனாக
இருந்தேன். விளையாட்டிலும் ஆர்வமுண்டு. ஆங்கில வாசனை இல்லாத
தொடக்கப்பள்ளி அது. தற்போது ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகள் வந்து விட்டதாகக்
கேள்விப்படுகிறேன். அன்று அது தேவையில்லாதது போலிருந்தது. படிப்பதையே
அவசியமற்றதாகக் கருதிய அறியாமைச் சமூகம் அது.
அன்று என்னுடைய வகுப்பு டீச்சர் பாடம் எடுத்துக்
கொண்டிருந்தார். (எல்லாப் பாடங்களையும் அவரே எடுப்பார்; பாடங்களுகென்று
தனி ஆசிரியர்கள் என்ற விதி அப்போதில்லை). அப்போதுதான் புதிய கல்வி ஆண்டு
தொடங்கி இருந்தது. ஒரு வயதான பெண்மணியும் ஏழு வயதான
சிறுமி ஒருத்தியும் பக்கத்து வகுப்பறைக்குள் சென்றார்கள்.
வகுப்புகளுக்கு மத்தியில் தடுப்பு ஏதுமில்லை. சுமாராக பெரிய அனுமானமாகப் பிரிக்கப்பட்ட
திறந்த வகுப்புக்கூட்டம் அது. ஒரே சமயத்தில் ஒரே பாடங்கள் எடுக்கப்படுவதால்
குழப்பங்கள் நேர்வதில்லை. நான் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். என்னுடைய ஊருக்குச் சம்பந்தமில்லாத சிகப்புத் தோலுடன் இருந்தாள். வயதான பெண்மணி
நிச்சயமாக அவளுடைய அம்மாவாக இருக்க முடியாது. அம்மா வழிப்பாட்டியாகவோ அப்பா
வழிப்பாட்டியாகவோ இருக்கலாம் என்று நினைத்தேன்.
"எப்படி இவ்வளவு செவப்பா அழகாக
இருக்கா?'' நினைத்துக்கொண்டே பாடத்தைக்கேட்டேன்.
அவளுடைய எடுப்பான தாடை என்னுடைய கவனத்தைக் கவர்ந்து இருந்தது. லேசான முக்கோண
வடிவிலான முகமும் அதிகம் சதைப்பிடிப்பில்லாத கன்னமும் அவளை இன்னும் அழகாக்கி
காட்டின. அங்கும் இங்கும் எதையோ பார்த்துக்கொண்டு நின்றாள்.
'டீச்சர்! இவ எம்பேத்தி. ஒன்னாம்
கிளாஸ் என் மக ஊர்ல படிச்சா. இப்ப நம்ம ஊருக்கு வந்துட்டாக. அதான் ரெண்டாம்
கிளாஸில் இந்தப்பள்ளிக்கூடத்துல சேக்கலாம்னு வந்தேன். எட்மாஸ்டர் எங்க இரிக்கார்
சொல்றியளா? என்ற வித்தியாசமான உச்சரிப்பும் இழுவையுடனான
வார்த்தைகளும் என்னை மீண்டும் அச்சிறுமியை நோக்கி இழுத்தன. அவள் இரண்டு மூன்று
இலந்தைப் பழங்களை வாயில் குதக்கி வைத்துக்கொண்டு வாத்தியாரையும், அவள் பாட்டியையும் அப்பாவித்தனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். "
எப்படி இவள் இவ்வளவு செவப்பா அழகாக இருக்கா?'' மீண்டும்
நினைத்துக்கொண்டேன். என்னையுமறியாமல் நான் கருப்பாகப் பிறந்தது எனக்கு
வெறுப்பைத்தந்தது.
அவள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்டாள்.
அது எனக்கு மிகவும் சந்தோசமாயிருந்தது. அவளைப் பார்க்க வசதியாக வகுப்பின் இடதுபக்க
முதல் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டேன். நான் யாரென்பதே அவளுக்குத் தெரியாது.
ஒரு சமயம் வகுப்பின் 'லீடர்'
என்ற முறையில் அவள் வகுப்பிலிருந்து 'டஸ்டரை'
வாங்கி வரச்செல்லும்போது அவளை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது. அவள் என்னைப் பார்க்கக் கூட எத்தனித்தது இல்லை.
அவள் என்னைப் பார்க்கவே மாட்டாள் என்ற
எண்ணம் வந்தபின் அவள் கவனத்தைத் திருப்பும் முயற்சியில் ஈடுபடலானேன். காய்ந்த
இலந்தைக்கொட்டைகளைப் பொறுக்கிவைத்துக்கொண்டு யாரும் பார்க்காத போது அவள் மீது
ஒருமுறை எறிந்த போது என்னைப் பார்த்துக் கேட்டாள்
" ஏண்டா எம்மேல இலந்தக் கொட்டய
எறியிறே? சார்கிட்ட சொல்லவா?”
எனக்குப் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஏன் எறிந்தேன் என்பது எனக்கே தெரியாது. என்னை ஏன் பார்க்க மாட்டேன் என்கிறாள் என்ற
ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றும் எனக்குத் தோன்றவில்லை.
''அய்யய்யோ! சொல்லாதே. நான் இனிமே
எறிய மாட்டேன்''- என்று தாழ்வான குரலில் சொன்னேன் நான்.
அதன் பிறகும் அவள் கவனம் என் மீது இல்லை
என்பதை நினைக்கும்போது மிகவும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஒருவேளை நான் கருப்பாக இருப்பதால் அவளுக்கு என்னைப்
பிடிக்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டேன்.
ஒருநாள் மதிய நேரம் உணவுக்குப்பின்னர், டீச்சரின் மேசையின் மீது
உட்கார்ந்திருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அந்தச் சிறுமியும் கொஞ்சம் முன்னரே
வந்து விட்டாள். வகுப்பில் வேறு யாரும் இல்லாததால் என்னிடம் வந்தாள்.
குட்டைப் பாவாடையும் தோள்பட்டையில் குஞ்சம் வைத்த சட்டையும் அணிந்து இருந்தாள்.
நடக்கும்போது யாரையும் சட்டை செய்யாத ஓர் அலட்சியம் இருந்தது.
''உம் பேரு என்னடா?'' ஆப்பிள் பழமொன்றைக் கடித்தபடி என்னைப் பார்த்துக் கேட்டாள். என் பெயரைச்
சொன்னேன்.
''அன்னிக்கி ஏண்டா எலந்தைக் கொட்டய எம்மேல எறிஞ்ச?''
''சும்மாதான். நீ நல்லா அழகா
இரிக்கியா! அதனாலதான் அப்படிச் செஞ்சேன்''
''அப்புடீன்னா''
''தெரியல. உம் பேர் என்ன?''
அவள் தன் பெயரைச் சொன்னாள்.
''நீ இந்த ஊரா? “
எந்தவொரு ஆச்சரியமும் காட்டாமல் ''அட களிச்சல்லே போயிருவே! ( களிச்சள் என்பது கோழிகளுக்கு வரும் ஒரு வியாதி. களிச்சள் வந்த கோழி பிழைப்பதரிது) உன்ன ஏண்டா நான் கலியாணம் பண்ணனும்?''என்று கண்களை விரித்துக் கொண்டு கேட்டாள். உன்னை சும்மா விடப்போவதில்லை என்பது போல இருந்த்து அவள் என்னைப் பார்த்த பார்வை.
எனக்கு இதற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அவளைக் கலியாணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
அடுத்த நாள் காலை வகுப்பில் பிரளயம்
ஏற்பட்டது. அந்தச்சிறுமியின் பாட்டி வந்துவிட்டார் .
''எவன் அவன் அந்த கருவாப்பயல்?
எம்பேத்திய கண்ணாலம் கட்ட ஆசப்படுறானமுள்ள. எங்கே அந்த கொள்ளையிலே
போறவன்? என்று பெரிய அளவில் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார்.
நான் என்னுடைய ஆசிரியருக்குப்பின்னால் மறைந்து கொண்டேன்.
''அதோ அவந்தான் அப்படிச் சொன்னான்''
என்னைக்காட்டி அவள் தன் பாட்டியின் கவனத்தை என் மீது திருப்பினாள்.
''இவனா? அடப்பாவி!
முளச்சு மூணு இல விடலயடா உனக்கு. அதுக்குள்ள கண்ணாலம் கேக்குதா உனக்கு'' என்று ஓங்கி என்னை அறைய முயன்றார்.
''கொஞ்சம் பொறுங்க. இவன் அப்படிப் பண்றவன் இல்லியே. நான் பாத்துக்கிறேன். குழந்தைங்க. நீங்க போங்க நான் கவனிக்கிறேன்'' என்று சமாதானப் படுத்தினார் என் ஆசிரியர்.
'அப்பாடா தப்பித்தேன்'
'' இவள் ஏன் என்னைக் காட்டிக் கொடுத்தாள்'' எனக்கு அந்த வயதிலும் வலித்தது.
ஆசிரியரும் குழந்தைகள் ஏதோ
விளையாடியிருப்பார்கள் என்று இரண்டு அறை விட்டதோடு மறந்து விட்டார்.
அதற்குப் பிறகு அவளிடம் பேச எனக்குத்
துணிவில்லை. அவளைப்பார்த்தால் போதும்; ஆட்காட்டி விரலை உயர்த்தி ஆட்டிக்காட்டுவாள். 'என்னிடம்
இனிமேல் என்னிடம் வாலாட்டாதே என்பதே அதன் பொருள்.
தொடக்கப்பள்ளியை முடித்தபின் ஆறாம்
வகுப்பைச் சென்றடைந்தபோது, அவள்
படிப்பை நிறுத்தியிருந்தாள். நானும் அப்படி ஒருத்தி இருந்தாள் என்பதையும் மறந்து
போய்விட்டேன் . அவளுக்குப் பிறகு நான் சந்திக்க நேரிட்ட பெண்கள் அவளைவிடவும்
அழகாகத் தெரிந்தார்கள். அவர்கள் பலரையும் நான் மனமாரக் காதலித்ததுண்டு. என்னிடம்
பேசாத பெண்கள் எனக்கு மிக அழகாகத் தோன்றினார்கள் . அவர்கள் மீது இருக்கும்
ஈர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளவே நான் அவர்களுடன் அர்த்தமான பேச்சுக்களை
அனுமதித்ததில்லை. சில சமயங்களில் அழகான பெண்களிடம் பேசிய
பின் அவர்களிடம் தெரிகின்ற அறிவுகெட்டதனம் எனக்கு ஏமாற்றத்தைத் தந்ததனால்தான் என்னவோ
அழகாய்த் தெரிகின்ற பெண்களை நான் அணுகுவதில்லை. அவர்களும் என்னை அணுகியதில்லை.
ஆனால் நான் அழகாக இருக்கிறேன் என்பதல்ல அதன் பொருள்.
எனக்கு மத்திய அரசில் வேலை கிடைத்த பின் ஊருக்குச் செல்வதே அரிதான
பழக்கமாய் மாறிப்போயிருந்தது. ஒரு நாள் என் ஊரிலிருந்து ராமனாதபுரத்திற்குச்
செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். என் வலது பக்கத்தில் ஒரு
பெண்ணும் அவள் கணவனும் மூன்று குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தார்கள். எனக்கு
அந்தப் பெண்ணை அடையாளம் தெரியவில்லை.
திடீரென்று அந்தப் பெண் என்னைப் பார்த்து
ஆச்சரியத்துடன் கேட்டாள்.
'' டேய்! நீ சரவணாதானே! அப்பிடியே
இரிக்கியேடா. கொஞ்சமும் கூட குண்டாகவில்ல. இப்ப எங்கடா இருக்க?''
ஆஹா!! இவள் அவளாச்சே! நொடிகளில் அவள் குறித்த பால்ய கால
நினைவுகள் பளிச்சென்று வந்து போயின.
''ஆமாண்டா. இவர் என் ஊட்டுக்காரர்.
(வீட்டுக்காரர்)- கரிய நிறத்துடன் பயில்வான் போலிருந்த அவரைக் காட்டிச் சொன்னாள்.
அவர் என்னைப்பார்த்து லேசாகச் சிரித்தார். “நீ என்னடா பண்றே?
''நான் இப்ப இங்க இல்ல. வட நாட்டுப்
பக்கம் வேல பாக்கிறேன்'' என்றேன் நான்.
''சவூதி கிவூதி போகலயாடா நீ?''
மாறாத அதே அப்பாவித்தனத்துடன் கேட்டாள்.
''இல்ல. இங்கியே நல்ல சம்பளம்
எனக்கு. அதான் இங்கேயே இருக்கேன்'' என்றேன் நான்.
அவளுடைய கணவர் அவளைப் பார்த்துக்
கேட்டார்.
''உனக்கு இவரை எப்படித்தெரியும்?''
''அதுவா! ரெண்டாம் கிலாஸில் படிச்சப்போ எனக்குப் பழக்கம். பக்கத்து கிளாஸ் இவன். ஒரு நா இவன் என்னக் கலியாணம் பண்ணிக்கலாம்னு சொல்லித் தொலச்சானா. பெத்தா (பாட்டி) இவனை அடிக்க வந்துட்டாக. அப்புறம் டீச்ச்ர்தான் இவனப் புடிச்சு வச்சாக'' என்று அடக்க முடியாத சிரிப்போடு சொன்னாள்.
அவளுடைய கணவனும் இதைக்கேட்டு சிரித்தார்.
''அதப் போய் இன்னும் யாவகம்
வச்சிரிருக்கியா?'' தர்ம சங்கடத்துடன் நெளிந்து கொண்டே சொன்னேன்.
''உன்னப் பத்தி அது ஒன்னுதானடா
எனக்கு யாவகத்தில் இருக்கு." என்று அவள் சொன்னபோது அவள் மனதில் நான் இன்னும்
ஒரு 'ஜோக்கராகத்தான்' இருந்திருக்கிறேன்
என்று தெரிந்தது.
பஸ் வந்து விட்டது. அவள் பஸ்ஸில்
ஏறிக்கொண்டு என்னைப்பார்த்துக் கேட்டாள்.
''நீ வரலயாடா?''
''இல்ல. என் பிரண்டு வருவான்.
அவனுக்காக வெயிட் பண்றேன். அப்புறமா வாறேன்''
உண்மையில் அந்தப் பஸ்ஸில் போவதற்கு
எனக்குக் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது.
******
******* ******
******* ******
****** ****
******
இதை எழுதிக்கொண்டிருந்தபோது தமிழ் தெரியாத
என் மனைவி என்னைப்பார்த்து ஆங்கிலத்தில் கேட்டாள்.
''வாட் ஆர் யு ரைட்டிங் சீரியஸ்லி?
(ஈடுபாட்டுடன் என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?)
''நதிங்க் சீரியஸ். ஐ ஆம் ஜஸ்ட் ரைட்டிங்க் எபௌட் அ செகண்ட் ஸ்டேண்டர்ட் ஸ்டுடண்ட்ஸ் க்ரஷ் ஆன் ஹிஸ் க்லாஸ் மேட். - என்று பதிலளித்தேன்.( முக்கியமாக ஒன்றுமில்லை. இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் வகுப்பு மாணவி ஒருத்தியின் மீது கொண்ட கன்றுக்குட்டி காதலைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்)
'' மை காட்! செகண்ட் ஸ்டேண்டர்ட்!!
மஸ்ட் பி அ நாட்டி பாய் ( கடவுளே! இரண்டாம் வகுப்பா!! கட்டாயமாக குறும்பனாகத்தான்
இருப்பான்'')- ஆச்சரியத்துடன் என்னைப்பார்த்தாள்.
''நாட் நெசெசரி. மைட் ஹேவ் பீன் சீரியஸ் இன் ஹிஸ் லவ் ( அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை. தன் காதலில் தீவிரமானவனாகவும் இருந்திருக்கலாம்) என்று சொல்லிவிட்டு எழுதுவதைத் தொடர்ந்தேன் நான்.
நினைவுகளுடன்
சரவணன். கா