Friday, 14 October 2011

புதியவனின் வணக்கங்கள்

புதியவனின் வணக்கங்கள்



அன்பர்களுக்கு வணக்கம்

என் பெயர் கா. சரவணன். இந்தத்தளத்திற்குபுதியவன். அதாவது வலைத்தளத்தில் தமிழ்க்கட்டுரைகள் எழுதுவதில் இதுவரை அனுபவம் இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு திரு விசுவநாதன் அவர்களின் ''அழகி'' தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தை வலைத்தளத்தில்  பார்க்கின்ற வரையில் கணினியில் தமிழைத் தட்டச்சு செய்வதென்பது என்னால் இயலாத காரியமாக இருந்தது. திரு விசுவநாதனுக்கு என் உண்மையான நன்றிகள்.

அவ்வப்போது நான் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி வருவதுண்டு. சில கட்டுரைகளுக்கு அன்பர்கள் தொலைபேசியில் வரவேற்பும் கருத்துரையும் தந்திருக்கிறார்கள். இது என்னுடைய முதல் கணினித்தமிழ் முயற்சி. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

இது நம்மைச்சுற்றி நிகழும் சில சுவையான நிகழ்வுகளை, பொதுநல கருத்தால் அறியப்படவேண்டிய நாட்டின் நடப்பு நிகழ்வுகளை மாற்றுக்கருத்து விவாதத்திற்குக்கொண்டுவரும் ஒரு சிறு முயற்சி. இது தவிர தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் மனம் கவர்ந்த சில படைப்புகளைப் பற்றிய உரையாடல்களுக்கும் ஏற்ற களமாக இது அமைந்தால் இன்னும் மகிழ்ச்சி.

உணர்வால் உந்தப்பட்ட
ஓர் உயிரின் எழுச்சி தொடர்பில்லாத காரியத்தை செய்யும்படியான விதிக்குக்கீழ்படிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்ட போதும், தன்னையுமறியாமல் உள்ளுக்குள் உறங்கும் உண்மையான ஆளுமை அவ்வப்போது இதோ நானிருக்கிறேன் ; மறந்துவிடாதே என்று சொல்லும். மனம் விழைந்தது வேறு; விதிவசத்தால் நான் பெற்ற வேலை வேறு. வருத்தம் ஒன்றும் இல்லை . அந்த உயிரின் எழுச்சிதான் நான் நின்று கொண்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் எதையாவது இந்த சமூகத்திற்கு சொல்ல விரும்புவது.


தமிழில் நல்ல புலமை பெற்ற அன்பர்கள் என்னுடைய தமிழ் நடையில் பிழைகள் ஏதுமிருந்தால் மன்னிக்கவும். இரண்டு காரணங்கள் இதற்குண்டு எனலாம். ஒன்று என்னுடைய தமிழ்மொழிக்குறைபாடு; இன்னொன்று வார்த்தைகளை இணைக்கும் சரியான மெய்யெழுத்துக்களை கணினியில் தட்டச்சு செய்ய முடியாத என்னுடைய இயலாமை. ஆங்கிலத்தை மிகக்கவனத்துடன் கையாள நினைக்கிற நாம் ஏனோ நம் தாய் 
மொழியைத்  தான்தோன்றித்தனமாக  உபயோகிக்க நினைக்கிறோம்.


இடையிடையே நான் ஆங்கிலத்தில் எழுதிய, எழுதுகின்ற சில கட்டுரைகளை அவ்வப்போது மொழி பெயர்ப்பு செய்து இங்கே பதிவு செய்கிறேன். (எனக்கு பிடித்தமானவையும் கூட )

நன்றி.

கட்டுரைகளுடன் மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்

கா. சரவணன்.



Also visit   www.solitaryindian.blogspot.com   to read my blogs in English