Thursday, 13 December 2012

கைப்பேசி மானபங்கங்களும் பெண்களின் தற்கொலைகளும்

(இந்தக் கட்டுரை என்னுடைய ஆங்கில வலைப்பதிவில் நான் பதிவு செய்துள்ள “Mobile phone molestations and girls’ suicides என்ற ஆங்கிலக் கட்டுரையின் மிகநெருங்கிய தமிழ் வடிவம். வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பை எதிர்பார்க்க வேண்டாம். ஆங்கில மூலத்திற்கு www.solitaryindian.blogspot.com  என்ற இணைப்பை அணுகவும்)

மற்ற நவீனகாலத்திய தொடர்பு சாதனங்களுக்கு மத்தியில் புகைப்படம் எடுக்கும் வசதியுடன் கூடிய கைப்பேசிகள் நம்முடைய காதல் முயக்கம் கொண்ட வஞ்சகர்களின் கைகளில் மிகவும் எளிதாகக் கையாளுவதற்கான எல்லா தகுதிகளையும் கொண்டவைகளாக இருக்கின்றன. நெடுநாளைக்கு முன்பாக இல்லை, தமிழ் செய்தித்தாள் ஒன்றில் செய்தி ஒன்று படித்தேன். அதில் சிறுமி ஒருத்தியின் புகைப்படத்தை அவள் குளிக்கும்போது அவளுடைய நெருங்கிய சொந்தக்காரன் ஒருவன் மறைந்திருந்து எடுத்து பின்னர் அதைக் காட்டி அவளை தன்னுடைய இச்சைக்கு உடன்படும்படி வற்புறுத்தி இருக்கிறான். மறுக்கும் பட்சத்தில் அந்த படங்களை  இணையத்தளங்களில் ஒட்டிவிடப்போவதாகவும் மிரட்டி வந்திருக்கிறான். பயந்து போன அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டாள் என்பதே அந்த செய்தி.

இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால் இந்த மாதிரியான செயல்கள் எல்லா இடங்களிளும் அவற்றின் வீரியம் தெரியாமல் சம்பந்தப்பட்ட பெண்களின் சம்மதத்தோடோ அல்லது அவர்களுக்கே தெரியாத வகையிலோ நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இறுதியில் பார்க்கப்போனால் செத்துப்போவது அந்தப் பெண்கள்தான். அந்த மாதிரியான படங்களில் காட்டப்படுவது ஆண்குறியாக இருந்தால் அதில் தொடர்புடையவன் அதனை மீண்டும் காட்டி தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் சமுதாயம் இது. அதே நேரத்தில் அதுவே பெண்களுடையதாக இருக்கும் போது அவள் உச்சக்கட்டமான நடவடிக்கையாக தன்னைத் தானே மாய்த்துக்கொள்கிறாள். அறியாத சிறுமிகள் தங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ இந்த மாதிரியான கழுகுகளுக்கு இரையாவதைப் பார்க்கும்போது உண்மையாகவே வலிக்கிறது. பள்ளிச்சிறுமிகள் மட்டுமல்ல, சில நேரங்களில் படித்த பெண்களும் கூட இந்த மாதிரியான வலையில் சிக்குண்டு விடுகிறார்கள். முந்தையவர்கள் இந்த உலகத்திலேயே அவர்களை மட்டுமே காதலிப்பதாக நடிக்கும் அவர்களுடய காதலனால் அவர்களுடைய காதலை அந்தக் கழுதைக்கு நிரூபிக்க வேண்டி அந்த மாதிரியான செயல்களைச் செய்ய வேண்டி சபலப்படுத்தப்/நிர்ப்பந்தப்படுத்தப் படுகிறார்கள். பிந்தையவர்களோ தங்களின் படித்த, தொழில் நுட்பக்கூர்மை கொண்ட, உண்மையான, மிகவும் நம்பகமான காதலர்களால் அல்லது கணவர்களால் அந்தமாதிரியான வீடியோக்கள் தாங்கள் பார்ப்பதற்கு மட்டுமே பிறர் பார்ப்பதற்கு அல்ல என்று உறுதியளிக்கப்படுவார்கள். எல்லாம் முடிந்தபின்னர் அந்த வீடியோக்களை தங்களது அந்தரங்கமான இடம் தாண்டி பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிறுமியின் ஒரு பெண்ணின் மானத்தைச் சிதைப்பதில் கொஞ்சம் கூட மன உறுத்தல் இன்றி செயல்படுபவர்களாக இந்த மூர்க்கர்கள் இருக்கிறார்கள். சில சமயங்களில் கைப்பேசி மற்றும் மடிக்கணிணி பழுதுபார்க்கும் கடைகளில் ஏற்கனவே அழிக்கப்பட்டு இருந்தாலும் அந்த மாதிரியான வீடியோக்களை மீட்பு மென்பொருள் உதவியுடன் மீண்டும் பிரித்து எடுத்துவிடுகிறார்கள். இது மாதிரி அழிக்கப்பட்ட கோப்புகள் மறுசுழற்சி தொட்டியில் (recycle bin) இருந்து அகற்றப்பட்டாலும்கூட மடிக்கணிணியின் அடிப்படை நினைவுத் தகட்டில் (hard Drive) அவற்றை சுலபமாக மீட்டெடுத்துவிட முடியும் என்ற உண்மை பல நேரங்களில் இந்த விவரம் தெரிந்தகுஞ்சுகளுக்கும் கணவன்களுக்கும் தெரிவதில்லை. பின்னர் அவையாவும் இணையம் முழுவதும் வைரஸ் வியாதியைப் போல  வலம்வரும்.            

இது குறித்து என்ன செய்யலாம்?

முதலில் இளம்பெண்கள் ஓர் உண்மையை மனதில் கொள்ளவேண்டும்: அதாவது இந்த மாதிரியான விஷயங்கள் எந்தவொரு உறுத்தலின் அறிகுறியும் இல்லாமல் அரங்கேற்றப்படும் ஓர் அசிங்கமான வக்கிரமான சமுதாயத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்று சொல்லப்படுவர்களே இந்த மாதிரியான கழிசடைக்காரியங்களைச் செய்வதில் முதலாவதாக இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வகையிலான உறவில் இருக்கும் ஒரு சிறுமியோ பெண்ணோ தங்களுக்கென்று ஒரு தனிப்பட்ட இடைவெளி என்று அழைக்கப்படும், அதாவது ஒரு நாகரீக எல்லைகொண்ட எவரும் தாண்டக்கூடாத இடைவெளி இருப்பதை கண்டிப்பாக நினைவில் கொள்ளவேண்டும். உறவு முறை சொல்லிக்கொண்டுவரும் எவனோ, நண்பரோ, காதலர்களோ வீடாக இருந்தாலும் சரி, கல்லூரியாக இருந்தாலும் சரி இல்லை வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி, இந்தத் தனிப்பட்ட இடைவெளியைத் தாண்டிவர அனுமதிக்கப்படும்போதுதான் அவளுடைய தனிமையும் கண்ணியமும் லேசாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக தங்களுடைய மகள் விஷயத்தில்  பெற்றோர்கள் கூட இந்த இடைவெளிக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நுழைவதை நிறுத்திவிட வேண்டும் என்பேன் நான். இந்த இடைவெளியின் முக்கியத்துவத்தையும், அது எந்த அளவு அவளுடைய கண்ணியத்திற்கு அவசியமானது என்பதையும் அவர்கள் அவளுக்குச் சொல்லித் தரவேண்டும்.   

தாங்கள் எந்த மாதிரியான ஆண்களைத் தினம் தினம் சந்தித்துப் பழகிக்கொண்டு இருக்கிறோம் என்பது பல நேரங்களில் சிறுமிகளுக்கோ பெண்களுக்கோ தெரிவதில்லை. எவனாவது ஒருவன் அவளுடைய அத்தைப் பையன் என்று சொல்லிகொண்டு வந்தால் தாங்கள் இல்லாத சமயத்தில் தான் மட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு அவன் உள்ளே நுழைய அவனை அனுமதித்த அவளுடைய பெற்றோர்கள்தான் முதன்மையான குற்றவாளிகள். இந்த மாதிரி நுழைபவர்கள் யாருக்கும் தெரியாமல் குளியலறை சன்னலிலோ கூரை விசிறியிலோ மறைக்கப்பட்ட புகைப்படக் கருவியை பொருத்திவிட்டு சென்றுவிடும் நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கின்றன. தொழில் தேர்ச்சி பெறாத வகையில் எடுக்கப்பட்ட, ஒரே திசையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் இதற்குச்சான்று. பாலின சமானத்தைப் பற்றிப் பேசுவது என்னுடைய காதுகளில் இசைபோலத்தான் பாய்கிறது. ஆனால் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடும் போது பெண்களின் கற்புதான் சிரமத்திற்கு உள்ளாகி விடுகிறது. ஆண்கள் தரமற்றவர்களாக இருக்கும்போது வெறுமனே ஆண்களும் பெண்களும் கலந்து பழகவேண்டும் என்று கண்மூடித்தனமாக போதனை செய்யமுடியாது. தாங்கள் நுழைந்த நேரம் சரியான நேரம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் அறிவுத்திறன் கொண்ட ஆண்களுடன் பெண்கள் கலந்து பழகும்போது அது எந்தப் பிரச்சினையையும் உண்டு பண்ணுவதில்லை. சமயம் பார்த்துக் காத்திருப்பவர்களுடன் அல்ல.

இரண்டாவதாக, தீங்கற்றதாகக் கருதப்படும் ஆண்களின் எல்லைமீறலை எளிதாக எடுத்துக்கொள்வதும், கிறுக்குத்தனமான தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்களை நோக்கிய உறவு சம்பந்தப்பட்ட  உரிமை என்று அதனை கருதுவதும் சமயங்களில் இந்த மாதிரியான அசிங்கமான விவகாரங்களில் கொண்டு வந்து நிறுத்திவிடும்.

மூன்றாவதாக, பெண்கள் ஆண்களுடன் கொள்ளும் காதல், பிணைப்பு போன்ற விவகாரங்களில் தேவைக்கதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடாது. ஆண்கள் என்ன செய்தாலும் அவர்களை கண்மூடித்தனமாக நம்பவும்கூடாது. புகைப்படம் எடுக்கும் வசதிகொண்ட கைப்பேசிகளை தயாரிப்பதை நிறுத்தும்படி அதனைத் தயாரிப்பவர்களைக் கேட்டுக்கொள்வது என்பது முற்றிலும் இயலாத காரியம். ஆண்களை நம்பாமல் இருப்பதால் ஒன்றும் குறைந்து போய்விடப்போவதில்லை. தாங்கள் விரும்பாத ஒன்றைச் செய்து ஒருவர் மீதான தங்களுடைய காதலை நிரூபிக்க அவசியம் அவர்களுக்கு கண்டிப்பாக இல்லை என்பது பெண்களுக்குப் போதிக்கப்படவேண்டும். ஒருவன் நல்லவனாக இருந்தால் அவன் தன்னுடைய காதலியிடம் இருந்து அவளுக்குப் பிடிக்காத ஒன்றை வற்புறுத்தமாட்டான். அவர்களை தொலைவிலேயே வைத்திருங்கள். எப்போதும் உங்களுடைய தனிப்பட்ட இடைவெளிக்கு மதிப்புக் கொடுங்கள். எந்த ஒரு வீணனையும் அதற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். அதையும் மீறி நுழைந்தால் அதனை மிகவும் கடுமையாக அணுகுங்கள், உங்களுடைய கண்ணீயத்தின் மீதான சுயமரியாதையின் மீதான ஆக்கிரமிப்பாக அதனைக் கருதுங்கள்.

நான்காவதாக அவர்கள் உங்கள் முன்னிலையில் புகைப்பட கைப்பேசியைக் கையாளும்போது கவனமாக இருங்கள். அவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவன் எப்போதுமே நல்லவனாகவே இருப்பான். ஆனால் அவன் எப்படிப்பட்டவன் என்பது யாருக்குத் தெரியும்? குளிக்கும்போது, தூங்கும்போது, நெருக்கமாக இருக்கும்போது படம் எடுப்பது என்பது அவனை உங்களுடைய தனிப்பட்ட இடைவெளிக்குள் நுழைய அனுமதித்தால் அன்றி நடக்க சாத்தியமில்லை. உங்களுக்கு பத்து வயதாகும்போது உங்களுடைய தந்தையும் சகோதரனும் கூட உங்களை சிரமபடுத்தும் எல்லைக்குள் நுழையும் உரிமையை இழந்து விடுகிறார்கள். கவனமாக இருக்க வேண்டும் பெண்களே! இந்தச்சமூகம் இன்னும் ஆணாதிக்க சமூகமாகவே இருக்கிறது. நான் சொல்வது மடத்தனமானதாக தோன்றலாம்...இருப்பினும் நான் சொல்வது உண்மையில் இருந்து தொலைவில் இருக்கும் ஒன்றல்ல.

ஊடகங்களும் ஒரு பொறுப்பான பங்கு வகிக்க வேண்டும்---குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிடும் அதே நேரத்தில் பலியானவர்களின் புகைப்படத்தை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அது அவளை மேலும் மேலும் மானபங்கப்படுத்திவிடுகிறது. பள்ளிக்கூடங்களில் தொடக்கத்தில் இருந்தே  மாணவிகளை எப்படி மதிக்க வேண்டும் என்பது மாணவர்களுக்கும், தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் ஆண்களை எப்படி அணுக வேண்டும் என்பது மாணவிகளுக்கும் சொல்லித்தரப்பட வேண்டும். பாலினம் குறித்த ஓர் உளவியல் ரீதியான புரிதலோடு பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் மற்றும் ஒன்றும் அறியாத சிறுமிகள் தாங்கள் பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வாறெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்பன போன்ற விஷயங்களும் சொல்லித்தரப்படவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்துவிடுவதனால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. இருந்தாலும் அதை அப்படியே ஒதுக்கிவிடவும் முடியாது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் துறைகள் இன்னும் கடுமையானதாகவும் இந்த மாதிரியான குற்றங்களை இந்த மாதிரியான ஆண்கள் மீண்டும் புரியத்துணியாத வகையில் தடுப்புவீரியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்தக்குற்றங்களை வெறுமனே இத்தனை வருடங்கள் என்ற கணக்கில் தண்டனை பெறும் கொள்ளைக்குற்றம் போலவோ சில்லறைத் திருட்டுக் குற்றம் போலவோ கருதி செயல்பட்டால் ஒரு பெண்ணின் உடல் மீது நடத்தப்படும் ஒரு குற்றத்தின் வீரியம் புரிந்துகொள்ளப்படாமலேயே போய்விடும்.

சரவணன்.கா

To read my blogs in English please visit www.solitaryindian.blogspot.com 

Wednesday, 10 October 2012

அரளித்தாகம்


எவருக்கும் பிடிக்காது
என்னிடம் தினம் பேசும்
அரவமற்ற இரவுகள்....
தெளிவில்லாத நிலவுகள்...
தெருக்கூச்சல் அடங்கிய பொழுதுகள்....

எவருக்கும் தெரியாது
சகதிக்குள் புதைய விரும்பும்
ஆற்றுச் சரளையாய் என் மனம்....
புகைந்த புல்லாய் புழுங்கும் -என்
விதவை உடலம்...

விழாதவரை இருந்தது வீரியம்....
வீழ்ந்தபின் சரிந்தது சுயம்...
தொடாமைவரை இருந்தது தெளிவு
தொட்டபின் ஆனது கலக்கம்...

தணிந்தது போல்தான் இருந்தது தாகம்.
தணிக்க வந்தது ஜீவநதியல்ல...
சூரியன் கண்டு சுண்டும் பனித்துளி....
அதுதான் என்
வற்றிய பொட்டலின்
ஒரே ஈர அடையாளம்!  

தெரியாத இருட்டில் தொடரும்
என் தாகம் தணியாத பயணம்....
தெரிந்தபின் முடிவுறும்
என் அரளித்தாகம்.

சரவணன்.கா

Friday, 14 September 2012

வேலாயுத மாமா...

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம். என்னுடைய வீட்டுக்கு முன்னால் இருந்த வீட்டில் எழுபது வயது மதிக்கத் தக்க வயதான ஒருவர் எப்போதும் எதையோ தன்னுடைய சிறிய ட்ரான்ஸ்சிஸ்டரில் கேட்டபடியே இருப்பார். அவர்தான் வேலாயுத மாமா. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவருடன் நான் பேசியதில்லை. அவரும் என்னைக் கண்டுகொண்டதே இல்லை. நான் ஒருவன் இருப்பதும் அவருக்குத் தெரியாது. எப்பொதும் முதல் இரண்டு பொத்தான்களை கழற்றிய நிலையில் வெள்ளைச் சட்டையும் மடித்துக் கட்டிய வெள்ளைக் கதர் வேட்டியுடனும் செருப்பில்லாத கால்களுடன் நடந்து வருவார். அவரை இரண்டு இடங்களில் பார்க்கலாம். ஒன்று அவர் வீடு மற்றொன்று ஊரில் இருந்த பொது நூலகம். புத்தகத்திலிருந்து அவர் முகத்தை நீக்கி மற்றவர்களை அவர் ஏறெடுத்துப் பார்த்து நான் பார்த்ததில்லை. மிகவும் குறைவாகப் பேசுவார். அவர் வீட்டிற்கும் என் வீட்டிற்கும் ஏதோ திட்டி மறப்பாடு என்று என்னுடைய அம்மா சொல்லியிருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. திட்டி மறப்பாடு என்பது ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்தோடு எதற்காகவோ சண்டையிட்டுக் கொண்டு குல தெய்வங்களை சாட்சியாகக் கூப்பிட்டு இனிமேல் எந்தக் காலத்திலும் பேசிக்கொள்ளவே மாட்டோம் என்ற ஒரு ஒப்புதலுக்கு வருவது. அப்படி மறுபடியும் பேசிக்கொள்ள வேண்டுமென்றால் சாட்சியாக இருந்த அந்த்த் தெய்வங்களின் முன்னிலையில் அனுமதி பெற்ற பின்னரே பேசிக்கொள்ள முடியும். பிறகு இரண்டு குடும்பங்களும் துண்ணூறு (திருநீறு) பூசிக்கொள்வார்கள். அப்படி என்ன சண்டை?

ஒரு நாள் மகமு அத்தை அவித்த நெல்லை வீட்டு முற்றத்தில் காயப்போட்டுக்கொண்டிருந்தபோது நான் மணலில் விளையாடிக்கொண்டிருந்தேன். காற்றில் பறந்த மணல் மகமு அத்தையின் முகத்தில் பட்டுவிட்டது. உடனே சண்டைக்கு வந்துவிட்டது. என்னுடைய அம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. நான் வேண்டுமென்றே யாரோ ஒருவரின் தூண்டுதலால் அப்படிச் செய்தேனாம்! என் வீட்டின் மேல் மண்ணை அள்ளித் தூவியது அது. என் குடும்பம் விளங்காமல் போக என்ன வசவெல்லாம் இருக்கிறதோ அத்தனை வசவுகளையும் அள்ளி வீசியது. கை விரல்களை நெட்டி முறித்த்து. அந்த மகமு அத்தையின் கணவர்தான் வேலாயுத மாமா. அது என்ன மகமு! வித்தியாசமான பெயராக எனக்கு அப்போது அது தோன்றியது. பிறகுதான் தெரிந்தது அது மகமாயி என்ற பெயரின் சுருக்கம் என்பது. அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் எங்களுக்கு உறவினர்கள்தான். ஆனால் எப்படி என்று எனக்குத் தெரியாது.

என்னிடம் ஒரு வண்டி இருந்தது. வண்டி என்றால் மனிதர்களை சுமந்து செல்லும் வண்டி அல்ல. நான் ஓட்டி விளையாடுவதற்கு நானாகத் தயார் செய்து கொண்ட வண்டி. நெல் அவிக்கும் அண்டாவின் வாய்ப்பகுதியில் இருக்கும் ஒரு பெரிய வளையத்தை எடுத்து, கொக்கி போல் வளைக்கப்பட்ட ஒரு சிறு கம்பியின் ஊடே அந்த வளையத்தை ஒரு குறிப்பிட்ட விசையில் தள்ளிக்கொண்டு போனால் உய்ங்...ங் என்ற சத்தத்துடன் அது உருண்டு செல்லும். அந்த வயதில் அது என்னுடைய அடையாளமாக இருந்தது. அந்தச் சத்தம் எங்காவது கேட்டால் நான் அக்கம் பக்கத்தில்தான் இருக்கிறேன் என்பதை கண்டு கொள்ளலாம். எதையுமே கண்டு கொள்ளாதவராக இருந்த வேலாயுத மாமாவை அந்த சத்தம் அசைத்தது. அந்த சத்தம் அவருக்கு எப்படியிருந்த்தோ தெரியவில்லை. ஒரு நாள் நான் அப்படி அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு சென்ற போது அவராகவே என்னைக் கூப்பிட்டார். “ யாரப்பா அது?’’

என்னடா இது இது நாள் வரை பேசாத வேலாயுத மாமா திடீரென்று பேசுகின்றாரே என்று எனக்கு குழப்பமாக இருந்தது. திட்டி மறப்பாடு உள்ள குடும்பமாயிற்றே என்று வாசலில் உட்கார்ந்திருந்த என்னுடைய அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். திட்டிமறப்பாடு குறித்த எந்த ஒரு விசனமும் அம்மாவின் முகத்தில் இல்லை என்பது தெரிந்தது. “ நாந்தான் சரவணன்” என்றேன் நான்.

“எந்த சரவணன்? என்று திரும்பக் கேட்டார் மாமா.

‘என்ன சொல்வது?’ “அதுதான்...கார்மேக ஆசாரி மவன் சரவணன். உங்க வீட்டுக்கு எதுக்கே இருக்கோமில்ல அந்த வீடு” என்று கொஞ்சம் சத்தம் போட்டுச் சொன்னேன். கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். எங்கள் இருவருக்கும் இடையே நடந்து கொண்டிருந்த சம்பாஷணையைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் என்னுடைய அம்மாவும் எங்கோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். பிறகு என்னைப் பக்கத்தில் அழைத்தார். அவருக்கு கண்கள் சரியாகத் தெரியவில்லை போலும். “ உம்பேர் சரவணாவா? என்ன படிப்பு படிக்கிறே? என்று என்னுடைய தலையை வருடியவாறே கேட்டார். “

“அஞ்சாப்பு படிக்கிறேன்”

“இது என்ன வண்டி? உனக்கு யார் தந்தா”

“யாரும் தரல...நானாத்தான் செஞ்சேன்”

எப்புடி”

“பழைய அண்டா ஒண்ணு இருந்துச்சா...அதிலே இருந்து எடுத்தேன். இந்தக் கம்பியை அம்மா வளச்சுக் குடுத்துச்சு”

“யாரு அலகா?” (அழகு என்பது என் அம்மாவின் பெயர்)

“ம்ம்ம்”

“அது சரி...நீ இங்கதான் இருக்கேன்னு ஏன் இது வரைக்கும் சொல்லல?”

“நீங்க சண்டக் கார வீடுன்னு அம்மா சொல்லியிருக்கு”

“எப்ப சண்டை போட்டாங்களாம்?”

“ஒரு நா மண்ணுல விளயாடிட்டு இருந்தேனா...மகமு அத்தை அம்மா கூட சண்டை போட்டுச்சு. அதுக்கு அப்புறம் யாரும் பேசுறதில்லை”

“யாரு அந்தக் கிறுக்கியா? அவளுக்கு தெருச்சண்டைண்ணா ரொம்பப் பிடிக்கும்.” என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மகமு அத்தை கையில் சாணியுடன் அங்கே வந்துவிட்டது. என்னை ஒரு முறை உற்றுப் பார்த்தது. “ ஏன்...கெழடு தட்டினதுக்கு அப்புறம் எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இருக்க முடியலையோ” என்று சத்தம் போட்டு கிண்டலாகக் கேட்டது. வேலாயுத மாமா அதற்கு பதில் சொல்லவில்லை. ‘அவ கிடக்குறா கிறுக்கு முண்டை. நீ நல்லா படிப்பியா’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

“ம்ம்ம். நல்லாப் படிப்பேன். சரி நான் வர்றேன்.” – அங்காள ஈஸ்வரி கோயில் முற்றத்தில் பம்பரம் விளையாடும் கூட்டமும் கோலி விளையாடும் கூட்டமும் என்னை பிடித்து இழுத்தன.

அதன் பிறகு வேலாயுத மாமா என்னுடைய பால்ய பருவத்தின் அறிவு வளர்ச்சியில் ஒரு முக்கியமான அங்கமாக மாறினார். அடுத்த நான்கு ஐந்து மாதங்களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் அவரைப் பார்க்கப் போய்விடுவேன். அவர் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் சொல்லிக் கொடுத்த விதம் என்னுடைய நெஞ்சில் இன்றும் நீங்காமல் நின்று கொண்டிருக்கிறது. நான் ஆறாம் வகுப்பு படித்து முடிக்கும் முன்பே இந்த இரண்டிலும் வருகின்ற ஏறக்குறைய எல்லாக் கதாப்பாத்திரங்களையும் பற்றிய அறிதல் வந்திருந்தது. இந்தக் கதைகளில் வருகின்ற உடல் சம்பந்தப்பட்ட சேர்க்கைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அதிக பட்சமான நாகரீக வார்த்தைகளை உபயோகிப்பார். உதாரணத்திற்கு முனிவர் ஒருவர் தன்னுடைய பத்தினியுடன் மான் வடிவம் எடுத்து உடலுறவில் ஈடுபட்டிருக்கும்போது பாண்டு தவறுதலாக அம்பெய்தி அவரைக் கொல்ல நேர்ந்ததைச் சொல்ல வரும்போது “அவர்கள் போகம் செய்து கொண்டிருந்த போது” என்பார். “ போகம் என்றால் என்ன மாமா?” என்று கேட்டால் “ அது கூடிக் குலவிக்கொண்டிருப்பது” என்பார். இன்னொரு சந்தர்ப்பத்தில் சத்தியவதி பிறந்த முறையைச் சொல்ல வரும்போது ‘விந்து’ என்ற வார்த்தையை அவர் உபயோகப் படுத்தியதே இல்லை. “மன்னன் ஒருவன் (பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது) வேட்டைக்குச் செல்லும் போது அவனுக்கு அவனுடைய மனைவியின் ஞாபகம் வந்து விட்டது. தவிர்க்க முடியாமல் அவனுடைய ஆகர்ஷ்ணம் விந்துவாக வெளியாகிவிட்டது என்று சொல்ல வரும்போது “அவனுடைய இந்திரியம் கழன்று விட்டது” என்று சொல்வார். அதை ஒரு இலையில் பத்திரமாக மடித்து தன்னுடைய புறாவிடம் கொடுத்து ராணியிடம் சேர்ப்பிக்கும்படி சொல்லிக் கொடுத்தது, அதனை வழியிலேயே ஒரு வல்லூறு மறித்து இலையைக் கிழித்தது, நடந்த சண்டையில் நழுவி ஆற்றின் மேல் விழுந்த விந்தை மீன் ஒன்று கவ்வியதால் அது கர்ப்பமானது என்று எல்லாவற்றையும் விலாவாரியாக்ச் சொல்லும்போது, தான் ஒரு பத்து வயது சிறுவன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற ஒரு சுயபுத்தி தந்த செம்மையான சொற்செறிவுடன்தான் அவர் பேசுவார். அவர் என்னிடம் கதை சொல்லும் போது அது கோர்வையாக இருக்காது. துண்டு துண்டாக சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளின் நிரலாகவே அது இருக்கும். ஆனால் எதுவும் தவறிவிட்டதாக எனக்கு நினைவு இல்லை.

அவருடை உடல் ஒரு வித்தியாசமான வடிவம் கொண்டிருந்தது- பிடித்து இழுக்கும்படி தொங்கிப்போன மார்பு, முற்றிலும் நரைத்துப்போயிருந்தாலும் முடியுடன் இருந்த தலை, உடலெங்கும் பூசியிருந்த திரு நீறு, சில சாவிகளுடன் இருந்த பூணூல், சவ்வாது மணக்கும் அவருடைய கைத்துண்டு. அவர் பக்கத்தில் அமர்ந்து இருந்தால் ஏதோ ஒரு பூஜையறைக்குள் இருக்கும் எண்ணம் ஏற்படும். ஒரு மாதிரியான நறுமணம் அவரிடம் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

வேலாயுத மாமா என்னிடம் ஒன்றை அடிக்கடி வாங்கி வரச் சொல்வார். அது தூக்க மாத்திரை. “ சரவணா...தூக்கமே வர மாட்டேங்குது...நீ போய் காஜா கடையில் ஒரு தூக்க மாத்திரை வாங்கி வா என்று சொல்வார். காஜா என்பவர் ஊரின் உள்ளே ஒரு பலசரக்கு கடை வைத்து இருந்தார். அதில் எல்லாமே இருக்கும். பல் வலிக்கும் மருந்து இருக்கும்! வயலில் அடிக்க பூச்சி மருந்தும் இருக்கும். அவ்வப்போது வருகின்ற நோய் நொடிகளுக்கென்று சில மருந்துகளையும் அவர் வைத்து இருப்பார். அது மருந்துக் கடையோ பல சரக்கு கடையோ உரக்கடையோ அவருடைய கடையை எப்படி அழைத்தாலும் பொருந்தும். அங்கு சென்று நான் தூக்க மாத்திரை கேட்கும் போதெல்லாம் அது யாருக்கு என்று மட்டும் காஜா கேட்பார். நான் சொல்வேன். உடனே சாப்பிட்டு விடும்படி சொல்வார். சேர்த்து வைக்க்க் கூடாது என்ன சரியா என்று சொல்லிக்கொண்டே எனக்கு அதைத் தருவார். நான் அதைக்கொண்டுவந்து வேலாயுத மாமாவிடம் கொடுப்பேன். இந்த மாதிரி நான் அவருக்கு அவ்வப்போது கடந்த ஒரு வருடத்தில் இருபது தடவைக்கும் மேலாக வாங்கி தந்திருப்பேன். தூக்க மாத்திரைகளுக்கு இடையில் அவர் எனக்குக் கதை சொல்வது மட்டும் நிற்கவில்லை.

ஒரு நாள் விளையாடிக்கொண்டிருந்த என்னை ஒருவன் மூச்சிறைக்க வந்து கூப்பிட்டான். “ டேய் சரவணா உன்ன எல்லோரும் அங்கே தேடுறாங்கடா...சீக்கிரம் போ”

“எங்கடா”

“ஒவ் வீட்டிலதான்.”

என்னை எதற்கு தேவையில்லாத நேரத்தில் தேடுகிறார்கள் என்று எண்ணியவண்ணம் வீட்டை நோக்கி என்னுடைய வண்டியைச் செலுத்தினேன். உய்ங் சத்தம் காற்றைக் கிழித்துக்கொண்டு வீட்டை நோக்கிப் பறந்தது. என் வீட்டில் யாரும் இல்லை. நான்கு ஐந்து பேர் வேலாயுத மாமா வீட்டில் குழுமியிருந்தார்கள். “வந்துட்டியாடா...உன்னத்தான் மாமா கேக்குறாரு...போ உள்ளே” என்ற என் அம்மாவின் குரல் கேட்டது. “வாடா இங்கே...என்று என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு என்னுடைய அண்ணன் வேலாயுத மாமாவிடம் கொண்டு சென்றார். “ மாமா...இந்தா சரவணா வந்து விட்டான். கண்ணைத் தொறங்க”

வேலாயுத மாமா லேசாக கண்ணைத் திறந்தார். ஏதோ ஆழமான தூக்கத்தில் இருப்பவரைப் போல தனது வலது கையை அசைத்து என்னை பக்கத்தில் அழைத்தார். எனக்குப் புரிந்து விட்டது. நான் கொடுத்த இருபதுக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை எல்லாம் ஒரு சேர விழுங்கியிருக்கிறார். “சரவணா...எனக்கு வாழ்ந்தது போதும் போலிருக்குது சரவணா...நீ என்ன விட்டுப்புட்டு எங்கே போய்ட்ட? என்று என்னுடைய தலையை வருடிக்கொண்டே முனகலாகப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பத்து வயது சிறுவனிடம் அவர் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தார். மரணத்தின் வாசலில் நின்று கொண்டு தான் கடந்து வந்த வாழ்க்கையின் அர்த்தமின்மையை வாழ்க்கை என்றாலே என்னவென்று தெரியாத சிறுவன் ஒருவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர் மூச்சு நின்று விட்டது. அண்ணன் அவருடைய மூக்குக்கு முன்னால் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து அவை மரணித்துவிட்டதை உறுதி செய்தார். எனக்கு அழத்தோன்ற வில்லை. ஆனால் துக்கமாக இருந்த்து. வேலாயுத மாமா இறந்து போக நான் தான் காரணம் என்ற உண்மை மட்டும் அந்த வயதிலும் எனக்கு வலியைத் தந்தது.   

“இவருக்கு எப்படி இத்தனை தூக்க மாத்திரை கிடைத்தது?? இந்தக் கேள்வி எல்லோரையும் குடைந்தது. யாருக்கும் என் மேல் சந்தேகம் வரவில்லை. என் அம்மாவுக்கு மட்டும் தெரியும். “ நீந்தானப்பா அவருக்கு இந்த மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தே” என்று பின்னாள் மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஒரு முறை என்னிடம் அம்மா கேட்டபோது அது நாள் வரை அழாமல் இருந்த நான் கண்ணீர் சுரப்பிகளில் இருந்து நீர் கரை தாண்டியதைப்போல உடைந்து அழுதேன்.

சரவணன். கா      
  

    
  

Sunday, 1 July 2012

அப்துல்லா....நீ எங்கிருக்கிறாய்?


இடம்: செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், இராமனாதபுரம்.
நேரம் : நண்பகல் 12.45 மணி.
நாள்: ஏப்ரல் 30, 1994
விசேஷம் : என்னுடைய வலது கண் குருடாகிப்போயிருக்க வேண்டியது.

என் வலது கண் குருடாகிப்போயிருக்க வேண்டிய நாள் அது. இன்றோடு ஏறத்தாழ பதினெட்டு வருடங்களைத் தொட்டுவிட்ட மறக்க முடியாத அனுபவம். நான் செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம். ஆண்டு இறுதித் தேர்வுகளை எழுதி முடித்த பின் இரண்டு மாத கோடை விடுமுறையைச் சந்தோசமாக வீட்டில் கொண்டாடுவதற்காக திட்டமிட்டுக்கொண்டிருந்த நேரம். அந்த விடுமுறையில் படித்துமுடித்துவிட வேண்டிய சில புத்தகங்களை எவருக்கும் தந்து விடாதபடி ஊரில் இருந்த பொது நூலகத்தின் நூலகர் திரு சந்தான கிருஷ்ணனிடம்  சொல்லிவைத்திருந்தேன். கலைஞர் கருணாநிதியின் "பொன்னர் சங்கர்'', ராஜாஜியின் "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்", சாண்டில்யனின் "ஜலதீபம்", "மூங்கில்கோட்டை", மற்றும் "மஞ்சள் ஆறு" என்று சில புத்தகங்கள் என் நினைவில் இருக்கின்றன.

பள்ளிக்கூடத்தின் உள்ளேயே இருந்த கேண்டீன் ஒன்றில் இரண்டு மூன்று 'பப்பில் கம்' வாங்கி கால் சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டு வகுப்பறையை நோக்கித் துள்ளித் துள்ளி வந்து கொண்டிருந்த போது எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த ஒரு கிட்டிப்புள்ளின் (சிறிய தடியை அடிக்கப் பயன்படும் பெரிய கனமான கைத்தடி) கனமான முனை இசகு பிசகாமல், குறிபார்த்து வீசப்பட்ட குண்டைப் போல என் வலது கண்ணைப் பதம் பார்த்தது. அவ்வளவுதான்..உலகமே என் கண்களின் முன்னால் இருண்டது. தலை சுற்றியது...அந்த நிமிடத்திலிருந்து என் கண் குருடாகிவிட்டது என்ற பயம் உள்ளுக்குள் இருந்து என்னை ஓர் உலுக்கு உலுக்கியது. அதுவரை நான் அடையாத கோபம், அது நாள் வரை நான் பேசியறியாத கெட்ட வார்த்தைகள் என்னை ஒரு பேயைப்போல ஆட்கொண்டன. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு எல்லாமே கருப்பாகத் தோன்றியது. அடித்தவன் யார் என்று தெரியவில்லை. 'என்னவாயிற்று' என்று என்னை ஒருவன் பார்க்கவந்தான்...அவன்தான் கிட்டியை வீசியவன். அவனுடைய சட்டைக்காலரைப் பிடித்துக்கொண்டு "தேவடியா மவனே! என் கண்ணைப் பொட்டையா ஆக்கிட்டேயடா! தாயோலி உன்னைக் கொல்லாம விடமாட்டேண்டா" என்று கத்திக்கொண்டே என்னையுமறியாமல் அவனைக் கீழே சாய்த்து தொடர்ந்து மிதித்துக்கொண்டே இருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் கூட என்னுடைய வெறியைப்பார்த்துவிட்டு விலக்கிவிட முயற்சிக்க வில்லை. கீழே விழுந்தவன் என் அதீத பலப்பிரயோகத்தினாலும், அடித்துவிட்ட குற்ற உணர்ச்சியாலும் பலம் குன்றிப்போய் கைகளால் முகத்தை மறைத்தவாறு அடியை வாங்கிக்கொண்டிருந்தான். சலசலப்பைக் கேட்ட உடற்கல்வி சொல்லித்தரும்  ஆரிஃப் என்னும் தண்டச்சோறும் , இன்னொரு உடற்கல்வி பிராணி ராமதாஸ் என்ற ஒன்றும் தற்காலிகமாக கிட்டிப்புள் விளையாட்டை நிறுத்தின. என் கண்களில் பட்ட அடியின் தீவிரம் அந்த சொறியன்களைப் பாதிக்கவில்லை. விலக்கிவிட்ட பின் ஏதோ ஒன்றும் நடக்காதது போல் தத்தம் கதை பேசியபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தன.

நான் என்னுடைய வலது கண்ணை இறுகப் பொத்தியபடி என் வகுப்பறைக்குள் நுழைந்து கத்தினேன். " அவ்வளவுதான்! என் கண் பொட்டையாப் போச்சே! பொட்டையாப் போச்சே! எவனோ ஒரு தேவடியா மவன் என் கண்ணைக் குத்திட்டானே! நான் என்ன செய்வேன்!" அப்படிக் கத்திக்கொண்டே மீண்டும் மீண்டும் கண்பட்டையை விலக்கிக் கொண்டு ஏதாவது தெரிகிறதா என்று சோதனை செய்து பார்த்தேன். இன்னும் சுற்றுப்புறம் கருமையாகவே தெரிந்தது. நான் கத்தியதைக்கேட்டு அங்கே வீண்வாதம் பேசிக்கொண்டிருந்த அப்துல்லா என்னிடம் வந்தான். அவன் அதே வகுப்பில் கடந்த ஐந்து வருடங்களாக 'ஃபெயில்" ஆகி அது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கத்தின் சாயல் இல்லாமல் இன்னும் தாட்டியம் செய்துகொண்டும் எவனையாவது அடித்துத் துன்புறுத்திகொண்டும் பலான படங்கள் பார்த்துவிட்டு 'அந்த விஷயங்கள்' குறித்த தன்னுடைய தாங்கு திறனைப்பற்றி விலாவாரியாக வியாக்கியானம் செய்து கொண்டும் காலத்தைப் போக்கிக்கொண்டு இருந்தவன். அவனுக்கும் எனக்கும் நல்ல உறவு என்ற ஒன்று இருந்ததே இல்லை. என்னைப் பார்த்தால் ஏதோ கிள்ளுக்கீரையைப் பார்ப்பது போலப் பார்ப்பான். எப்போது  பார்த்தாலும் முறைத்துக் கொண்டே இருப்பான். வகுப்பில் நான் அவனை பார்க்கும் தோரணை யாரும் அவனை இதுவரை அப்படிப் பார்த்தது இல்லை என்றும், நான் மட்டும்தான் அப்படிப் பார்க்கிறேன் என்றும், பிறகு நேரம் வரும்பொது தக்கவாறு கவனித்துக்கொள்கிறேன் என்று சொல்வான். அதாவது நேரம் வரும்போது என்னை அடித்து நிமிர்த்த சந்தர்ப்பம் வாய்க்கட்டும், பிறகு பார்க்கலாம் என்பதே அதன் பொருள். அப்படிச் சொல்வானே தவிர ஒன்றும் செய்யமாட்டான். அவனுக்கு அவனுடைய பகுதியில் பல தொடர்புகள் உண்டு. தினமும் வந்து சென்றைய தினம் எங்கே சென்று யாரை அடித்தோம் என்று எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பான். அவன் சொல்வது பொய் என்று தோன்றும். ஆனால் அவன் அந்த மாதிரி செய்பவன்தான் என்று அவனுக்கு நெருக்கமாக இல்லாதவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

அப்படிப்பட்ட அப்துல்லா என்னை வந்து பார்த்தவுடன் அப்படியே உறைந்து போய்விட்டான். "எந்தப் பு....டா மவன்டா இப்படிச் செஞ்சான் ?'' என்று அலறினான். யாரோ ஒருவன் ஏதோ ஒரு பெயரைச் சொன்னான். எந்த நோக்கமும் இல்லாமல் வகுப்பறையின் வாசலுக்கு வந்து மீண்டும் அதே வாக்கியத்தைச் சொல்லிக் கத்தினான். யாருமே பதில் சொல்ல வில்லை. " எப்படிடா இருக்கு சரவணா இப்ப " என்று கேட்டான். "இன்னும் வலிக்குது...ஒன்னுமே தெரியல'' என்றேன் நான். என்னை அப்படியே கைத்தாங்கலாக அணைத்தவாறு சைக்கிள் ஸ்டாண்டிற்கு அழைத்துச் சென்றான். என் வலி பள்ளி நிர்வாகத்திற்கு வலிக்கவில்லை. அப்துல்லாவிற்கு வலித்தது. என்னை சைக்கிளில் பின்னால் உட்காரவைத்து ராமனாதபுரம் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றான். சிறிது தொலைவு சென்ற பின் சைக்கிளை நிறுத்தி "முன்னால் வந்து உட்கார். மயக்கம் போட்டு கீழே உழுந்தாலும் உழுந்துடுவே  " என்று சொல்லி முன் பாரில் உட்கார வைத்து உஸ்...உஸ் என்று பெரிய மூச்சு விட்டபடி சைக்கிளை அழுத்திக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரியை அடைந்தான். மற்ற வகுப்புத் தோழர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். அங்கிருந்த தகுதி பெறாத மருத்துவர்கள் இந்தக் கண்ணை இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்ன போது ஏறத்தாழ அவன் அழுதே விட்டான். " கவலைப்படாதேடா...அல்லா இருக்காரில்ல...அவர் உன் கண்ணைக் காப்பாத்துவாருடா...என்று சொல்லிக்கொண்டு ''அல்லா''...''அல்லா'' என்று இரு முறை சொன்னான். சொல்லிவிட்டு என்னுடைய தலைமாட்டிலேயே உட்கார்ந்து கொண்டான். வீட்டிற்குத் தகவல் சொல்லிவிட்டு யாராவது வரும்வரை காத்திருந்தான்.

என்னுடைய பெரிய அண்ணனுக்குத் தகவல் தெரிந்து அவர் ராமனாதபுரம் வந்தார். அதுவரை பெரிய ஆஸ்பத்திரியிலேயே படுத்துக்கிடந்தேன். வலது கண் வீங்கிப்போய்விட்டது. வெண்பகுதி முழுவதும் குங்குமத்தை பசையாக்கி அப்பியதைப் போல காணப்பட்டது. மெதுவாக கருவிழியும் கொஞ்ச நேரத்தில் சிவப்புக் கலரால் மூடப்பட்டு விடும் என்று தோன்றியது. கண்ணில் குத்து வாங்கிய குத்துச்சண்டை வீரனின் கண்கள் போல எலுமிச்சம் பழம் அளவுக்கு வீங்கி மொத்தக் கண்பார்வையும் மறைந்து விட்டது.

பின்னர் என் அண்ணன் வந்தார். என் வாழ்க்கையை ஒரு குறிப்பிடத்தக்க வகையில் செதுக்கிய சிற்பி அவர். "சந்திரசேகரன் கண்மருத்துவமனை" என்ற தனியார் மருத்துவமனையில் கொண்டுபோய் என்னைச் சேர்க்கும் வரை அப்துல்லா கூடவே இருந்தான். என் அண்ணனைப் பார்த்துச் சொன்னான்: ''ஒன்னும் ஆகாது அண்ணே! நான் அல்லாக்கிட்ட தொழுதிருக்கிறேனில்ல...ஒண்ணும் ஆகாது...

''உன் பெயர் என்னப்பா'' என்று அவனைப் பார்த்துக்கேட்டார் என் அண்ணன்.

"அப்துல்லாண்ணே"  என்று தன்  தோள்களைக் குலுக்கிக்கொண்டவாறே சொன்னான்.

''ரொம்ப நன்றிப்பா...." என்று கொஞ்சம் தழுதழுத்தவாறு சொன்னார் என் அண்ணன். அவர் என்னை நேசித்த விதம் அவரை அழச் செய்திருந்தது.

கொஞ்ச காலத்தில் என் கண் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. அதற்குள் நான் பட்ட சிரமங்கள் கொஞ்சம் அதிகம்தான். அதற்குப்பிறகு பத்தாம் வகுப்பிலும் அப்துல்லா பாஸாகி வந்து படித்தான். அதன் பிறகு என்னவானான் என்று தெரியவில்லை. சிலர் சொன்னார்கள். மிகவும் குண்டாகி சவூதி அரேபியாவில் ஏதோ சொந்த வியாபாரம் செய்ததாகவும் இப்போது எங்கே இருக்கிறான் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.

அப்துல்லா நீ எங்கிருக்கிறாய்..........?

சரவணன்.கா

You can also visit www.solitaryindian.blogspot.com to read my writings in English.

Wednesday, 29 February 2012

என் அப்பாவும் நானும்


துள்ளி விளையாடும் பள்ளிக்கூட வயது
துயரமாக இருந்திருக்க வேண்டிய
அவசியம் இல்லை.

மாலையில் விளையாட்டு...
விளையாடும் சுள்ளான்கள்
என் இனம் இல்லை.
''எதற்காகப் பிறந்தேன்?''- கேட்டுக்கொண்ட
மானசீகக்கேள்வி
அப்பாவின் காதுகளில் வீழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

விளையாட்டு...
விதிவிலக்காகிப் போன நாட்கள் அவை.

காலாவதியாய்ப் போன கணக்குப் பாடங்கள்
கனவை மொய்த்த நாட்கள் அவை.

அரைக்காலும் மாகாணியும்
ஆறுவயதுச் சிறுவனை அறுவைசிகிச்சை
செய்த நாட்கள் அவை.

அவ்வார்த்தைகளின் அர்த்தத்தை
வாத்தியாரும் அறிந்ததில்லை

ஆனால்...அவையாவும்
என் அப்பாவுக்குப் பிரியமானவை..

அறியாத விடைகள்- என்
அம்மா கண்ணசைவுகளில்.
அடியைத் தவிர்க்க அவரறியாத சமயம்
அவரிடம் சொல்ல வேண்டும்.
பாரதி புரட்சிக் கவி- அது
அப்பாவுக்கு தெரிய வாய்ப்பில்லை.
மாகாணி மரித்துவிட்டது
அரைக்கால் அவசியம் இல்லை-
கலைமகளே சொன்னாலும்
நம்பாத ஒருமைவாதி அவர்.
விடை தெரியாமைக்கு நான் வாங்கிய அடிகள்
கணக்கில் சேர்த்தியில்லை.

அதுதான் என் அப்பா....
வக்கிரத்தை வார்த்தைகளில் வடிக்கும்
வார்த்தைச் சிற்பி அவர்...
கற்பனையில் வராத உறவுகளை
வசவு வாக்கியமாக வசியம் செய்யும்
வஷிஷ்டர் அவர்...

அம்மா வீட்டில் இல்லை --
அப்பா எனக்கு அரக்கன்.
அடியிலிருந்து தப்ப
அம்மாவின் மடி தேவையாயிருந்தது.
அரவணைத்த அம்மாவுக்குக் கிடைத்தவை
தமிழில் தரம் பெறத்தகாதவை.

குழந்தையாகக் கண்மாயில் குளிப்பது
குதூகலமான அனுபவம்.
நீந்தத் தெரியாமல் நீந்திக் களித்த
அந்த நாட்கள்- இன்று
கனவிலும் வர மறுக்கும் மரண வலி.
அப்பாவுடன் குளிக்கச் செல்லும் நாட்களில்...
அம்மாவுக்குத் தெரியும்
நீந்தத் தெரியாத தன் பிள்ளை
முதுகு வீங்கிப்போய்,
முனகிக்கொண்டு வருவான் என்று.

அதுதான் என் அப்பா....

எப்படியோ வளர்ந்த நான்
நாட்டின் எந்தப் பகுதிக்கோ குடிமகனானேன்.
இற்றுவிட்டதான என் இளமைக்காலம்;
அற்றுப்போய்விட்டதாகவே அமைந்த என் வாழ்வு.

கிடைத்த அரசு வேலை
அப்பாவுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.

''ஜெயலலிதாவுக்கு மூன்று லட்சம்
தராமல் வேலை கிடைப்பதாவது''--
குழப்பிவிட்ட டீக்கடை அருச்சுனனின்
சவடாலில் அவருக்கு நம்பிக்கை இருந்தது.

'ஏ அப்பா வேலை கிடைச்சது தெரியுமா?'
உற்சாகத்திற்கு அவர் தந்த விடை--
''அட போடா இவனே! வேலை கிடைச்சிருச்சாமுல''
எப்படி நம்ப வைப்பது?..
சவாலாகவே இருந்தது....

வளர்ந்து விட்டதால் அடி நின்றிருந்தது.
ஆனால் எகத்தாளம் குறையவில்லை.
நான் சீருடையில் அனுப்பிய புகைப்படம் -அவர்
என்னை வேறு மாதிரி
பார்க்கச் செய்திருந்தது.
புருவம் உயர ''என் குடும்பத்தில் அரசாங்க வேலையா!''
பார்த்த பார்வையில்- இன்னும்
நம்பிக்கையின்மை.

கொள்ளைக் கடன்
இரண்டு வருடங்களில்
அடைபட்ட போது பிரகாசித்த கண்கள்
'இவன் வேறு மாதிரியானவனோ!.
நான் அந்திமத்தில் பெற்ற அர்த்தனாரியோ இவன்!.
தரித்திரத்தில் விளைந்த தறுதலை இல்லையோ இவன்!

படிப்பதற்காக அடிப்பதையே
பழக்கமாகக் கொண்டிருந்த
அப்பாவுக்கு
நான் என்ன படித்திருக்கிறேன் என்பது
இன்று வரைக்கும் கூட தெரியாது.

புரியாத புதிரைப் போன்ற
குதர்க்கம் நிறைந்தவர் அவர்...

மாநிலம் தாண்டிய
மொழி தாண்டிய
தமிழ்க் கலாச்சாரம் தாண்டிய
நான் செய்த திருமணம்
அப்பாவை
ஆச்சரியம் கொள்ள வைக்கவில்லை.

''எந்தக் கொம்பன் அவனுக்கு உதவினான்?
குப்பையில் விளைந்த குண்டுமணியடா அவன்.
அவன் விரும்பியதைச் செய்ய
அவனுக்கு உரிமை இருக்குடா"
என்று அவர் பேசியதாக
பின்னர் கேட்க நேர்ந்தபோது
அப்பா வேறு மாதிரியாகத் தோன்றினார்.
அடித்த அடிகள் மந்தமாருதமாயின.

தொலைபேசியில் கூப்பிடும் போதெல்லாம்
''நல்லாயிருக்கியாப்பா''- அந்த
ஒற்றை விசாரிப்பில்- அவர்
கண்கள் கலங்குவதை நான் உணர்ந்திருக்கிறேன்..
அது
என் கண்களில் நீர் வரச் செய்யாமல் இருந்ததில்லை.

அப்பா!!!

உங்கள் மேல் கொண்ட வெறுப்புதானே
இது நாள் வரை
என்னைச் சுகிக்கச் செய்திருந்தது.
நீங்கள் மாறியது ஏன்?
மாறாமல் இருந்திருந்தால்
நான் வெறுப்புடனேயே காலம்
தள்ளியிருப்பேனே.



Visit www.solitaryindian.blogspot.com  to read my writings in English

Saturday, 11 February 2012

சிற்பக்கூடம்


கற்களை சிற்சமயம்
இரக்கமின்றி வதைக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள்.

சிற்பமாக வேண்டிய சிதைவுகள்
சிற்பியின் சிந்தனைச் சுவட்டில்.

உளிகளின் தாளம்
கற்களின் மௌனம்
படர்கின்ற காற்றின் நிதானம்

கருக்கொள்ளும்
எங்கிருந்தோ வந்து
ஒளிந்த சிற்பம்.

கற்பிழக்கத் தயாரான கல்லும்
கற்பழிக்கத் துடித்த உளிகளும்
இந்த
சிற்பக்கூடத்தில் பெற்ற
புண்ணிய அனுமதி.

விளைவது விக்கிரகம் என்னும்போது
கற்பிழப்பு பற்றி
கடவுளும் கண்டு கொள்வதில்லை.


சரவணன். கா

You can also visit www.solitaryindian.blogspot.com to read my writings in English