துள்ளி விளையாடும் பள்ளிக்கூட வயது
துயரமாக இருந்திருக்க வேண்டிய
அவசியம் இல்லை.
மாலையில் விளையாட்டு...
விளையாடும் சுள்ளான்கள்
என் இனம் இல்லை.
''எதற்காகப் பிறந்தேன்?''- கேட்டுக்கொண்ட
மானசீகக்கேள்வி
அப்பாவின் காதுகளில் வீழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
விளையாட்டு...
விதிவிலக்காகிப் போன நாட்கள் அவை.
காலாவதியாய்ப் போன கணக்குப் பாடங்கள்
கனவை மொய்த்த நாட்கள் அவை.
அரைக்காலும் மாகாணியும்
ஆறுவயதுச் சிறுவனை அறுவைசிகிச்சை
செய்த நாட்கள் அவை.
அவ்வார்த்தைகளின் அர்த்தத்தை
வாத்தியாரும் அறிந்ததில்லை
ஆனால்...அவையாவும்
என் அப்பாவுக்குப் பிரியமானவை..
அறியாத விடைகள்- என்
அம்மா கண்ணசைவுகளில்.
அடியைத் தவிர்க்க அவரறியாத சமயம்
அவரிடம் சொல்ல வேண்டும்.
பாரதி புரட்சிக் கவி- அது
அப்பாவுக்கு தெரிய வாய்ப்பில்லை.
மாகாணி மரித்துவிட்டது
அரைக்கால் அவசியம் இல்லை-
கலைமகளே சொன்னாலும்
நம்பாத ஒருமைவாதி அவர்.
விடை தெரியாமைக்கு நான் வாங்கிய அடிகள்
கணக்கில் சேர்த்தியில்லை.
அதுதான் என் அப்பா....
வக்கிரத்தை வார்த்தைகளில் வடிக்கும்
வார்த்தைச் சிற்பி அவர்...
கற்பனையில் வராத உறவுகளை
வசவு வாக்கியமாக வசியம் செய்யும்
வஷிஷ்டர் அவர்...
அம்மா வீட்டில் இல்லை --
அப்பா எனக்கு அரக்கன்.
அடியிலிருந்து தப்ப
அம்மாவின் மடி தேவையாயிருந்தது.
அரவணைத்த அம்மாவுக்குக் கிடைத்தவை
தமிழில் தரம் பெறத்தகாதவை.
குழந்தையாகக் கண்மாயில் குளிப்பது
குதூகலமான அனுபவம்.
நீந்தத் தெரியாமல் நீந்திக் களித்த
அந்த நாட்கள்- இன்று
கனவிலும் வர மறுக்கும் மரண வலி.
அப்பாவுடன் குளிக்கச் செல்லும் நாட்களில்...
அம்மாவுக்குத் தெரியும்
நீந்தத் தெரியாத தன் பிள்ளை
முதுகு வீங்கிப்போய்,
முனகிக்கொண்டு வருவான் என்று.
அதுதான் என் அப்பா....
எப்படியோ வளர்ந்த நான்
நாட்டின் எந்தப் பகுதிக்கோ குடிமகனானேன்.
இற்றுவிட்டதான என் இளமைக்காலம்;
அற்றுப்போய்விட்டதாகவே அமைந்த என் வாழ்வு.
கிடைத்த அரசு வேலை
அப்பாவுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.
''ஜெயலலிதாவுக்கு மூன்று லட்சம்
தராமல் வேலை கிடைப்பதாவது''--
குழப்பிவிட்ட டீக்கடை அருச்சுனனின்
சவடாலில் அவருக்கு நம்பிக்கை இருந்தது.
'ஏ அப்பா வேலை கிடைச்சது தெரியுமா?'
உற்சாகத்திற்கு அவர் தந்த விடை--
''அட போடா இவனே! வேலை கிடைச்சிருச்சாமுல''
எப்படி நம்ப வைப்பது?..
சவாலாகவே இருந்தது....
வளர்ந்து விட்டதால் அடி நின்றிருந்தது.
ஆனால் எகத்தாளம் குறையவில்லை.
நான் சீருடையில் அனுப்பிய புகைப்படம் -அவர்
என்னை வேறு மாதிரி
பார்க்கச் செய்திருந்தது.
புருவம் உயர ''என் குடும்பத்தில் அரசாங்க வேலையா!''
பார்த்த பார்வையில்- இன்னும்
நம்பிக்கையின்மை.
கொள்ளைக் கடன்
இரண்டு வருடங்களில்
அடைபட்ட போது பிரகாசித்த கண்கள்
'இவன் வேறு மாதிரியானவனோ!.
நான் அந்திமத்தில் பெற்ற அர்த்தனாரியோ இவன்!.
தரித்திரத்தில் விளைந்த தறுதலை இல்லையோ இவன்!
படிப்பதற்காக அடிப்பதையே
பழக்கமாகக் கொண்டிருந்த
அப்பாவுக்கு
நான் என்ன படித்திருக்கிறேன் என்பது
இன்று வரைக்கும் கூட தெரியாது.
புரியாத புதிரைப் போன்ற
குதர்க்கம் நிறைந்தவர் அவர்...
மாநிலம் தாண்டிய
மொழி தாண்டிய
தமிழ்க் கலாச்சாரம் தாண்டிய
நான் செய்த திருமணம்
அப்பாவை
ஆச்சரியம் கொள்ள வைக்கவில்லை.
''எந்தக் கொம்பன் அவனுக்கு உதவினான்?
குப்பையில் விளைந்த குண்டுமணியடா அவன்.
அவன் விரும்பியதைச் செய்ய
அவனுக்கு உரிமை இருக்குடா"
என்று அவர் பேசியதாக
பின்னர் கேட்க நேர்ந்தபோது
அப்பா வேறு மாதிரியாகத் தோன்றினார்.
அடித்த அடிகள் மந்தமாருதமாயின.
தொலைபேசியில் கூப்பிடும் போதெல்லாம்
''நல்லாயிருக்கியாப்பா''- அந்த
ஒற்றை விசாரிப்பில்- அவர்
கண்கள் கலங்குவதை நான் உணர்ந்திருக்கிறேன்..
அது
என் கண்களில் நீர் வரச் செய்யாமல் இருந்ததில்லை.
அப்பா!!!
உங்கள் மேல் கொண்ட வெறுப்புதானே
இது நாள் வரை
என்னைச் சுகிக்கச் செய்திருந்தது.
நீங்கள் மாறியது ஏன்?
மாறாமல் இருந்திருந்தால்
நான் வெறுப்புடனேயே காலம்
தள்ளியிருப்பேனே.
Visit www.solitaryindian.blogspot.com to read my writings in English