நான் மதுரையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம், அரசரடியில் இருந்து தெப்பக்குளத்திற்கு 4 ஆம் எண் கொண்ட நகரப் பேருந்து ஒன்று இயங்கி வந்தது. நேரடியாகச் செல்லும் பேருந்து என்பதால் அதில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். கூட்டத்தில் அழுகிய பழம் போல் நசுங்க எனக்குப் பயம்; ஆனால் அந்தப் பேருந்தை விட்டு விட்டால் பெரியார் பஸ் நிலையத்தில் வேறு பஸ் பற்றி செல்ல அதிக நேரம் பிடிக்கும் என்பதால் வாசலில் தொற்றிக்கொண்டாவது செல்லும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன். படிந்து சீவப்பட்ட எண்ணைத் தலையும், கட்டம் போட்ட உள்ளே செருகப்படாத சட்டையும், என்னுடைய அக்காவுடன் சண்டை போட்டு, ஒப்புக்கொள்ள வைத்து பிடுங்கிய தொன்னூறு ரூபாயில் வாங்கிய 'பாட்டா' செருப்பும், 'பாண்ட்ஸ்' முகப்பவுடரில் செய்யப்பட்ட செயற்கைத் திருநீறுமாய் என்னை பார்த்தால் பெண்கள் கனவில் வர முற்றிலும் இலாயக்கற்றவனாகத்தான் இருந்திருப்பேன். பெண்களின் கனவில்தான் நான் வருவதில்லை; ஆனால் என் கனவில் பெண்கள் எப்போதும் வருவதுண்டு. அப்படி வந்த எண்ணிலடங்காதவர்களில் ஒருத்திதான் 4 ஆம் நம்பர் பேருந்தின் இடது பக்கம் வாசலின் அருகே முதல் சீட்டில் எப்போதுமே அமர்ந்து வரும் குள்ளமாகவும், உருண்டை முகம் கொண்டவளாகவும், நீளமான கூந்தலுமாக சற்றே கருத்த நிறத்துடனும் இருந்தவள். அவளிடம்தான் வாசலில் தொத்திக்கொண்டு செல்லும் சமயம் புத்தகத்தையும் சாப்பாட்டு 'டபரா' வையும் வைத்துக் கொள்ளச்சொல்வேன். கொஞ்ச நாட்களில் கனவில் வரும் மற்றைய இளம்பெண்களைப் பின் தள்ளி ஒரே ஒருத்தியாய் தனிக்காட்டு ராணியாக என் கனவில் வலம் வர ஆரம்பித்தாள். காதல் என்னைப் பீடித்துக்கொண்டது. அவளை நான் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்.
என் காதலை எப்படிச் சொல்வது? பேசுவதற்கு தைரியம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு கடிதம் எழுதலாம் எனத் தீர்மானித்தேன். சாதாரணக் காதல் கடிதமாக இருக்கக்கூடாது. கவி நயம் பொங்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது காதலை இலக்கியமாக வெளிப்படுத்தலாம் என்று தீர்மானித்தேன். மூளையைக் கிண்டிக் கிளறி நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாணியில் ஒரு தலையும் காலும் இல்லாத கவிதை ஒன்று எழுதினேன். அதனை சாப்பாட்டு 'டபராவுக்கும்' புத்தகங்களுக்கும் இடையில் நீட்டிக்கொண்டிருக்குமாறு படிக்க வசதியாக வைத்தேன். பஸ் வந்தபோது லாவகமாக அதனைப் பிடித்துக்கொண்டு வழக்கம்போல் அவளிடம் புத்தகத்தையும் சாப்பாட்டையும் தந்தேன். படிக்கிறாளா என்பதைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன்....ஆஹா....படிக்கிறாள்....படிக்கும் போது என்னைப் பார்க்காததால் தைரியமாக அவள் முக பாவனைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். ஒன்றுமே வெளிக்காட்டாமல் உட்கார்ந்திருந்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது...என்ன இவள்! கல்லைப் போல் உட்கார்ந்திருக்கிறாள்...? சிறிய சிரிப்பையாவது எதிர்பார்த்து ஏமாந்தேன். கூட்டம் குறைந்திருந்தபோது புத்தகத்தை அவளிடம் இருந்து வாங்கிக்கொண்டேன். ஆனால் அந்தக் கடிதம் இல்லை. ஆஹா....பிடித்துபோய் வைத்துக்கொண்டாளா!....லேசாகப் பேசிபார்க்கலாமா? தைரியம் இன்னும் வராமல் இருந்தது.
கல்லூரி நிறுத்தம் வந்த போது இறங்கிவிட்டேன். அவளும் பின்னாலேயே இறங்கினாள். இறங்கியபின் என்னை ''ஹலோ..' என்று கூப்பிட்டாள். என் பெயர் அவளுக்குத் தெரியாது.
''இந்தப் பேப்பர் உங்கள் புத்தகத்தோடு இருந்தது. உங்கக்கிட்ட தந்தபொது கீழே விழ்ந்திருக்கிறது. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இறங்கும்போதுதான் கால்களுக்குக் கீழே கிடைத்தது. ஏதோ எழுதியிருந்தது. இந்தாங்க'' என்று என்னிடம் தந்தாள்.
கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு லேசாகக் கேட்டேன். ''அதுவா...அது ஒன்றுமில்லை...அதைப் படிச்சீங்களா என்ன?''
''ஆமா..படிச்சேன்...ஆனா ஒன்னுமே புரியல..''
அதற்கு மேல் அவளுக்குப்பேச பிரியம் இல்லாததைப்போல நடந்து சென்று விட்டாள்.
அந்தக் 'காதல்' கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். எனக்கு மட்டுமே புரிவதைப் போலிருந்தது. புரியாததை எழுதி என் காதலுக்கு நானே உலை வைத்து விட்டதைப்போல இருந்தது.
இது நடந்து பதிமூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
............... ................... ..................
நேற்று என் பழைய டயரி ஒன்றைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது அந்தக் கவிதை என் கண்களில் பட்டது.
அந்தக் கவிதை இதுதான்..
''பொருள் சேர்க்கும் பொருளற்ற வாழ்வு யான் வேண்டேன்;
அருளென்றெழும் அகந்தையான் அற்பமும் யான் வேண்டேன்;
பெண் சிகராய்! செவி நீளும் உன் நயனக் கடைப்படும்
கண்கவர் குப்பையிலு மொன்றேனும் ஆகேனோ''
சரவணன்.
அதன் பொருள் இதுதான்.
''செல்வத்தைச் சேர்க்கும் அர்த்தமில்லாத வாழ்க்கையை நான் வேண்டவில்லை; செல்வம் சேர்ந்தபின் வந்து சேரும் ஆணவம் மிக்க அற்பத்தனமான வாழ்க்கையையும் நான் வேண்டவில்லை; பெண்களில் சிகரம் போன்றவளே! காது வரை நீண்டிருக்கும் உன் அழகிய கண்களில் படும் கண்களைக் கவரும் குப்பைகளில் ( அந்த சமயம் சினிமா சுவரொட்டிகளைக் குறிப்பிட்டு எழுதினேன்) ஒன்றாகவாவது ஆக மாட்டேனா? ''
இப்படியெல்லாம் காதலைத் தெரிவித்தால் காதல் மூச்சுத் திணறி மரித்துவிடும் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
இன்று வரை அந்தப் பெண்ணின் பெயர் எனக்குத் தெரியாது.
எங்கிருக்கிறாள் என்பதும் தெரியாது.
அவ்வப்போது ''அந்த நாலாம் நம்பர் பஸ்காரி இப்ப எங்கடா இருக்கா'' என்று என் அக்கா கிண்டலாகக் கேட்கும்போது மட்டும் அந்தக் கல்லூரி காதல் மனதில் ஒரு வீசு வீசிவிட்டுப் போகும்.
சரவணன். கா
Also visit www.solitaryindian.blogspot.com to read my blogs in English