எந்தவோர் உண்மையான இலக்கியவாதியும் எழுத்தாளனாகவோ கவிஞனாகவோ தன்னைத் தானே சுயமதிப்பீடு செய்து கொண்டு இலக்கியம் படைக்க முன்வருவதில்லை. அவ்வாறு படைக்கப்படும் படைப்புகள் இலக்கியங்கள் என்ற எல்லைக்குள் வருவதில்லை. எழுத்துத் திறனும் கவித்திறனும் ஒருவனின் இரத்தத்தில் ஊறியிருக்கும் பட்சத்தில்தான் இலக்கியம் என்ற ஒன்று ஜனனம் பெறும். காலத்தை வென்று நிற்கும் படைப்புகள் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நீர்குமிழி அனுபவங்களாலும் , இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பிதம் செய்து கொண்டு செயற்கையாகப் பிரஸ்தாபித்துக் கொள்ளும் பக்குவ நடையில் இயற்றப்பட்டவைகளாக இருந்ததில்லை. அவ்வாறாக தன்னுடைய கலப்படம் கலவாத அனுபவங்களையும், சொந்த வாழ்வின் துக்கங்களையும், இலக்கியவாதிகளுக்கு உரித்தான தனித்துவ கற்பனா விலாசத்தையும் தன்னிலைப் பார்வையில் மட்டுமன்றி படர்க்கையின்பால் செம்மையாகச் சொல்லத் தெரிந்த அரிய இலக்கிய கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் அசாமி மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் திருமதி இந்திரா கோஸ்வாமி. துயரங்களால் நெய்யப்பட்ட தன் வாழ்க்கையின் தளர்ச்சிக் கோடுகள் தன் முகத்தில் தெரியா வண்ணம் புன்னகை ஒன்றையே ஆபரணமாக வாழ்நாள் முழுவதும் பூண்டிருந்தவர். அரிதாரம் பூண்டு அவதாரம் எடுக்கும் ஓர் உண்மையான மேடைநாடகக் கலைஞனின் தற்காலிகக் கண்கவர் வண்ணத்தை தன் நிரந்தர வடிவாகக் கொண்டிருந்த அபூர்வமான ஒரு பெண் எழுத்தாளர் அவர். கடைவரை நீளும் மையிட்ட புருவங்களும், தன் கலாச்சாரத்தை வெட்கப்படாமல் பறைசாற்றும் அகன்ற குங்குமப் பொட்டும், முடிந்துகொள்ள முடியாத கற்றை முடியும் இலக்கிய அன்பர்கள் மத்தியில் அவர் மறைந்து விட்டாலும் அவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
தற்கால இந்திய இலக்கியத்தின் முன்னோடியாக இருந்து மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தந்தவர் இந்திரா கோஸ்வாமி. அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் 1942 ல் பிறந்தார். சிறுவயதிலேயே மன அழுத்த நோய்க்கு ஆட்பட்டு பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றவர். திருமணம் ஆன பதினெட்டு மாதங்களிலேயே தன் கணவரான மாதவன் ஐயங்காரை விபத்து ஒன்றில் பறிகொடுத்து விதவையானவர். வாழ்க்கையை தூக்க மாத்திரைகளுக்கு அர்ப்பணித்துவிட்டு தன் போக்கில் இலக்கியப் பயணம் மேற்கொண்ட ஒரு தனிமை எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி. மிசோரம் மாநிலத்தின் ஷில்லாங் நகரில் உள்ள க்ரியோலின் அருவியில் அவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சிகளும், தூக்க மாத்திரைகளுக்கு அடிமையானதும் அவருடைய சுய சரிதமான ''முடிவு பெறாத சுய சரிதை'' யில் காணக் கிடக்கின்றன.
கொஞ்ச காலம் அசாமின் கோல்பாராவில் உள்ள ராணுவப் பள்ளியில் பணியாற்றிய பின் உத்தரப் பிரதேசத்தின் விருந்தாவனில் அவர் ஒரு விதவையாக இருந்து பெற்ற அனுபவங்களையும் , அங்கிருந்த விதவைகளின் வாழ்வுப் போராட்டத்தையும், வாழ விரும்பும் அந்த ஏந்திழைகளின் ஏக்கத்தையும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் அபலை விதவைகளைப் பற்றி அவர் கரிசனத்தோடு பார்த்த பார்வைகளையும் அவர் எழுதிய ''The Blue necked Braja'' என்ற புதினத்தில் காணலாம். தன் கணவர் இறந்த பின் தான் சந்தித்த சமுதாயத்தைப் பற்றியும் ஒட்டுமொத்த விருந்தாவன விதவைகளைப் பற்றியும் அவர் எழுதிய இந்த புதினம் பெரும் கண்டனத்துக்குள்ளானது. இன்றும் இந்திய இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்ற சில படைப்புகளில் அதுவும் ஒன்று. விருந்தாவனத்தில் இருந்தபோதுதான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட துளசிதாசரின் இராமாயணத்தையும் அசாமி மொழியில் மாதவ கண்டலி பதினான்காம் நூற்றாண்டில் எழுதிய அசாமி இராமாயணத்தையும் ஒப்பீடு செய்து ''இராமாயணம்- கங்கையிலிருந்து பிரம்மபுத்திரா வரை'' என்ற ஆராய்ச்சி நூலை எழுதினார்.
தில்லிக்கு வந்த பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் அசாமி மொழித் துறைக்குத் தலைவரானார். தில்லியில் அவர் வசித்த நாட்களில்தான் இந்திய இலக்கிய உலகம் மறக்க இயலாத படைப்புகளை அவர் எழுதினார். ஹிருதய், நங்கோத் சொஹர், பொரோஃபர் ராணி போன்ற தில்லியைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட புதினங்களையும் அஹிரோன், துருப்பிடித்த வாள், உதய பானு, தாசரதியின் காலடிகள், சின்னமஸ்தாவில் இருந்து வந்தவன் போன்ற புகழ்பெற்ற புதினங்களையும் அவர் எழுதினார். இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த சீக்கியர்களைக் கொன்று குவித்த கலவரம் பற்றி அவர் தன்னுடைய ''இரத்தம் தோய்ந்த பக்கங்கள்'' என்ற புதினத்தில் தான் நேரில் கண்டதை அப்படியே பதிவு செய்தார். இதை ஒரு புதினம் என்று சொல்வதை விட ஓர் ஆராய்ச்சி நூல் என்று சொல்வது பொருந்தும் . இந்த நூலை எழுதுவதற்கு முன் அவர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரிலேயே சென்று முதல் கையகச் சாட்சிகளைப் பெற்று ஆய்ந்த பின்னரே அதனை எழுதினார்.
அசாமில் புகழ் பெற்ற சக்தி கோவில் ஒன்று உள்ளது. கமக்யா கோவில் என்பது அதன் பெயர். அங்கே மிருக வதை என்பது ஆயிரம் வருடங்களாக நடைபெற்று வரும் ஒரு பாரம்பரியம். அதைக் கண்டித்தும் இந்து மத நூல்களை மேற்கோள் காட்டியும் சக்தி தேவிக்குத் தேவையானவை மலர்களே தவிர மாமிசம் இல்லை என்று அவர் தனது ''சின்ன மஸ்தாவிலிருந்து வந்தவன்'' என்ற புதினத்தில் வாதாடியபொது பழமைவாதிகளின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். அது கிளப்பி விட்ட ஆர்வமே அந்தப் புதினத்தை மிகப் பிரபலப்படுத்தியது.
அவருடைய இலக்கியப் பங்களிப்புகள் 1983 ல் சாகித்ய அகாதமி விருதாகவும் 2001 ல் ஞானபீடப்பரிசாகவும் அங்கீகாரம் செய்யப்பட்டன. ஓர் இலக்கியவதியாக இருந்து கொண்டு புத்தகங்களுக்கு மத்தியில் உறங்கிவிடாமல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் பயங்கரமான தீவிரவாத அமைப்பு என்று அறியப்பட்ட உல்ஃபா ( ULFA- United Liberation Front Of Asom) க்கும் இந்திய அரசுக்கும் சமாதான உடன்படிக்கை ஏற்பட அவர் மேற்கொண்ட சமூக நலன் கருதிய முயற்சிகள் இலக்கிய உலகம் தாண்டியும் நினைவு கூரப்பட்டுக்கொண்டிருக்கும்.
எழுத்துலகில் கவிஞர், புதின எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட இந்திரா கோஸ்வாமி இன்று நம்மிடையே இல்லை. இலக்கியவாதிகள் மட்டுமே மறைபவர்கள். இலக்கியங்கள் அல்ல. கோஸ்வாமியின் படைப்புகளை இந்திய இலக்கிய உலகம் நினைவில் வைத்திருக்கும் வரை அவர் இறப்பு ஒன்றும் இறப்பாக இருக்கப் போவதில்லை.
பின் குறிப்பு : மேலே சொன்ன நூல்களைத் தவிர கோஸ்வாமி அவர்கள் எழுதிய பல நூல்கள் இந்தக் கட்டுரையில் சொல்லப்படவில்லை. தற்காலிகமாக எனக்குக் கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இதனை எழுதியுள்ளேன். அவருடைய புத்தகங்களைப் படிக்க சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களை இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
சரவணன். கா
Also visit www.solitaryindian.blogspot.com to read my blogs in English.