Friday, 23 December 2011

சொல்லாமலே இருந்து விடுகிறேன்

மௌனமாய் மறைந்து போனவளே !

நகர்கின்ற நாட்களில் புதைந்திருந்த
என் அறிவுக்கெட்டாத
வாழ்க்கையின் சிதிலங்கள்
உன்னைக்கண்ட பின் தான்
அர்த்தம் பெற்றதைப் போல இருக்கின்றன.

நின்று கொண்டே கழிந்து போகும்
இந்த மானுடத்தின்
தற்காலிக மயக்கங்கள்
நிரந்தரமாகத் தோற்றம் கொண்டது
உன்னுடைய நிழழில் கீழ்
நானிருக்க விரும்பியதால்தான்...

சொல்லாத ஒன்று காதலாவதில்லை-
நான் உன்னிடம்
ஒன்றுமே சொல்லியதில்லை...

தொட்டுக்கொள்ளாத ஒன்று காமமாவதில்லை-
உன்னைத் தொட
நான் கனவிலும் எண்ணியதில்லை...

சொல்லாத ஒன்றை காதலாகவும்
தொடாத ஒன்றை காமமாகவும்
இரண்டுக்கும் இடைவெளி என்பது
அர்த்தமில்லாத ஒன்று  என்பதை
உன்னுடன் நானிருந்த
அந்த ஒற்றை நிமிடங்கள்
இந்த உலகிற்குச் சொல்லிக்கொண்டிருக்கும்.

உன்னுடன் இருக்க நான் விரும்பியது
உன்னைப் பற்றித் தெரியாத
என் அறியாமை....

நீ என்னுடன் இருக்க விரும்பாதது
என்னைப்பற்றி நீ அறிந்த
உன் புத்திசாலித்தனம்.

நாம்
இருவருமே நம் இருவரிடம் இல்லை.
உன்னுடைய பார்வையில்
இந்த நேரம் நான் மங்கலாகியிருப்பேன்..
நினைவில் அகப்படாத உருவமற்ற
நிழழாகியிருப்பேன்;

உன்னிடம் நான் இல்லை-அது நீ விரும்பியது
என்னிடம் நீ இப்போதும் இருக்கிறாய்- இது நான் விரும்பியது

நான் சொல்லாத காதலும்
நீ சொல்லாத சொற்களும்
என்னை வாழவைத்தால்....
வைத்துவிட்டுத்தான் போகட்டுமே!

எங்கோ இருக்கிறோம்.
வாழ்வைத்தொலைத்த நிராசை
உன்னை நெரிக்காதிருக்கட்டும்.
ஏனெனில்-அது
உன் கழுத்தை நெரிக்கும்போது
மங்கலான நான்
முற்றிலும் மறைந்து போயிருப்பேன்.
அதில் உனக்கு வெட்கம் இல்லை;
 நீ...அப்படித்தான்...

என்னுள் இருக்கும் நீ-
எப்போதும் பிய்த்தெறிய முடியாத
என் நகச்சதையாகவே இருக்கிறாய்.
அதில் எனக்கு வெட்கமொன்றும் இல்லை.
 நான் இப்படித்தான்.


சரவணன். கா.

Also visit www.solitaryindian.blogspot.com to read my blogs in English



Monday, 5 December 2011

காதலிக்குப் புரியாத என் முதல் காதல் கவிதை

நான் மதுரையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம், அரசரடியில் இருந்து தெப்பக்குளத்திற்கு 4 ஆம் எண் கொண்ட நகரப் பேருந்து ஒன்று இயங்கி வந்தது. நேரடியாகச் செல்லும் பேருந்து என்பதால் அதில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். கூட்டத்தில் அழுகிய பழம் போல் நசுங்க எனக்குப் பயம்; ஆனால் அந்தப் பேருந்தை விட்டு விட்டால் பெரியார் பஸ் நிலையத்தில் வேறு பஸ் பற்றி செல்ல அதிக நேரம் பிடிக்கும் என்பதால் வாசலில் தொற்றிக்கொண்டாவது செல்லும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன். படிந்து சீவப்பட்ட எண்ணைத் தலையும், கட்டம் போட்ட உள்ளே செருகப்படாத சட்டையும், என்னுடைய அக்காவுடன் சண்டை போட்டு, ஒப்புக்கொள்ள வைத்து பிடுங்கிய தொன்னூறு ரூபாயில் வாங்கிய 'பாட்டா' செருப்பும், 'பாண்ட்ஸ்' முகப்பவுடரில் செய்யப்பட்ட செயற்கைத் திருநீறுமாய் என்னை பார்த்தால் பெண்கள் கனவில் வர முற்றிலும் இலாயக்கற்றவனாகத்தான் இருந்திருப்பேன். பெண்களின் கனவில்தான் நான் வருவதில்லை; ஆனால் என் கனவில் பெண்கள் எப்போதும் வருவதுண்டு. அப்படி வந்த எண்ணிலடங்காதவர்களில் ஒருத்திதான்  4 ஆம் நம்பர் பேருந்தின் இடது பக்கம் வாசலின் அருகே முதல் சீட்டில் எப்போதுமே அமர்ந்து வரும் குள்ளமாகவும், உருண்டை முகம் கொண்டவளாகவும்,  நீளமான கூந்தலுமாக சற்றே கருத்த நிறத்துடனும் இருந்தவள். அவளிடம்தான் வாசலில் தொத்திக்கொண்டு செல்லும் சமயம் புத்தகத்தையும் சாப்பாட்டு 'டபரா' வையும் வைத்துக் கொள்ளச்சொல்வேன். கொஞ்ச நாட்களில் கனவில் வரும் மற்றைய இளம்பெண்களைப் பின் தள்ளி ஒரே ஒருத்தியாய் தனிக்காட்டு ராணியாக என் கனவில் வலம் வர ஆரம்பித்தாள். காதல் என்னைப் பீடித்துக்கொண்டது. அவளை நான் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்.

என் காதலை எப்படிச் சொல்வது? பேசுவதற்கு தைரியம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு கடிதம் எழுதலாம் எனத் தீர்மானித்தேன். சாதாரணக் காதல் கடிதமாக இருக்கக்கூடாது. கவி நயம் பொங்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது காதலை இலக்கியமாக வெளிப்படுத்தலாம் என்று தீர்மானித்தேன். மூளையைக் கிண்டிக் கிளறி நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாணியில் ஒரு தலையும் காலும் இல்லாத கவிதை ஒன்று எழுதினேன். அதனை சாப்பாட்டு 'டபராவுக்கும்' புத்தகங்களுக்கும் இடையில் நீட்டிக்கொண்டிருக்குமாறு படிக்க வசதியாக வைத்தேன். பஸ் வந்தபோது லாவகமாக அதனைப் பிடித்துக்கொண்டு வழக்கம்போல் அவளிடம் புத்தகத்தையும் சாப்பாட்டையும் தந்தேன். படிக்கிறாளா என்பதைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன்....ஆஹா....படிக்கிறாள்....படிக்கும் போது என்னைப் பார்க்காததால் தைரியமாக அவள் முக பாவனைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். ஒன்றுமே வெளிக்காட்டாமல் உட்கார்ந்திருந்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது...என்ன இவள்! கல்லைப் போல் உட்கார்ந்திருக்கிறாள்...? சிறிய சிரிப்பையாவது எதிர்பார்த்து ஏமாந்தேன். கூட்டம் குறைந்திருந்தபோது புத்தகத்தை அவளிடம் இருந்து வாங்கிக்கொண்டேன். ஆனால் அந்தக் கடிதம் இல்லை. ஆஹா....பிடித்துபோய் வைத்துக்கொண்டாளா!....லேசாகப் பேசிபார்க்கலாமா? தைரியம் இன்னும் வராமல் இருந்தது.

கல்லூரி நிறுத்தம் வந்த போது இறங்கிவிட்டேன். அவளும் பின்னாலேயே இறங்கினாள். இறங்கியபின் என்னை ''ஹலோ..' என்று கூப்பிட்டாள். என் பெயர் அவளுக்குத் தெரியாது.
''இந்தப் பேப்பர் உங்கள் புத்தகத்தோடு இருந்தது. உங்கக்கிட்ட தந்தபொது கீழே விழ்ந்திருக்கிறது. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இறங்கும்போதுதான் கால்களுக்குக் கீழே கிடைத்தது. ஏதோ எழுதியிருந்தது. இந்தாங்க'' என்று என்னிடம் தந்தாள்.

கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு லேசாகக் கேட்டேன். ''அதுவா...அது ஒன்றுமில்லை...அதைப் படிச்சீங்களா என்ன?''
''ஆமா..படிச்சேன்...ஆனா ஒன்னுமே புரியல..''

அதற்கு மேல் அவளுக்குப்பேச பிரியம் இல்லாததைப்போல நடந்து சென்று விட்டாள்.

அந்தக் 'காதல்' கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். எனக்கு மட்டுமே புரிவதைப் போலிருந்தது. புரியாததை எழுதி என் காதலுக்கு நானே உலை வைத்து விட்டதைப்போல இருந்தது.

இது நடந்து பதிமூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 

...............     ...................     ..................

நேற்று என் பழைய டயரி ஒன்றைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது அந்தக் கவிதை என் கண்களில் பட்டது.
அந்தக் கவிதை இதுதான்..

''பொருள் சேர்க்கும் பொருளற்ற வாழ்வு யான் வேண்டேன்;
அருளென்றெழும் அகந்தையான் அற்பமும் யான் வேண்டேன்;
பெண் சிகராய்! செவி நீளும் உன் நயனக் கடைப்படும்
கண்கவர் குப்பையிலு மொன்றேனும் ஆகேனோ''

                                                                                                                        சரவணன்.

அதன் பொருள் இதுதான்.

''செல்வத்தைச் சேர்க்கும் அர்த்தமில்லாத வாழ்க்கையை நான் வேண்டவில்லை; செல்வம் சேர்ந்தபின் வந்து சேரும் ஆணவம் மிக்க அற்பத்தனமான வாழ்க்கையையும் நான் வேண்டவில்லை; பெண்களில் சிகரம் போன்றவளே! காது வரை நீண்டிருக்கும் உன் அழகிய கண்களில் படும் கண்களைக் கவரும் குப்பைகளில் ( அந்த சமயம் சினிமா சுவரொட்டிகளைக் குறிப்பிட்டு எழுதினேன்) ஒன்றாகவாவது ஆக மாட்டேனா? ''

இப்படியெல்லாம் காதலைத் தெரிவித்தால் காதல் மூச்சுத் திணறி மரித்துவிடும் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இன்று வரை அந்தப் பெண்ணின் பெயர் எனக்குத் தெரியாது.

 எங்கிருக்கிறாள் என்பதும் தெரியாது.

அவ்வப்போது ''அந்த நாலாம் நம்பர் பஸ்காரி  இப்ப எங்கடா இருக்கா'' என்று என் அக்கா கிண்டலாகக் கேட்கும்போது மட்டும் அந்தக் கல்லூரி காதல் மனதில் ஒரு வீசு வீசிவிட்டுப் போகும்.


சரவணன். கா

Also visit www.solitaryindian.blogspot.com  to read my blogs in English  

Sunday, 4 December 2011

சோர்வு தெரியாத தூரம்

சாவை நோக்கித் தினம் தினம்
தேய்வது காலடிச்சுவடுகளாக இருந்தாலும்
விடியலில் காத்திருக்கும்-
புதைந்த நம்பிக்கை
புகைப்படலமாக படரும்
உயிர்ப்பின் ரகசியம்.

அகல நீளம் அறியாத
வாழ்க்கைப் பாதையில்
அடுத்த கட்டம் என்னவென்று தெரியாத
குருட்டுப்பயணம்

இருந்தும் இல்லாமலுமான
உறவுமுடிச்சுப் பின்னலின்
புரியாத தொடக்கம்
அறிவுக்கெட்டாத முடிவுப்புள்ளி.

பொருளே எட்டாத
வாடிவதங்கும் மலராக
இளமையில் ஆடி
முதுமையில் வாடும்
அந்திமத்தில் அடங்கிப்போகும்
ஆசையொழியாத என் மூச்சு.

தெரிந்துதான் பயணிக்கிறேனா?
அப்படித்தான் தோன்றுகிறது.

அர்த்தம் தேடியே
அடங்கவேண்டியவனா நான்?
தெரியாத ஒன்றை தெரிவதில்தானே
என் தெளிதல் ஒளிந்திருக்கிறது.

என் தெளிவு.....

தினம் தினம் பார்க்கும்
அறிமுகம் இல்லாத மனிதர்கள்...

பார்த்தபின்னும் தெரிந்து கொள்ள
அவசியம் இல்லாத மனிதர்கள்...

என் வரவை அறிந்தோ அறியாமலோ
எங்கோ கத்திக்கொண்டிருக்கும் குருவிகள்...

தினமும் பார்த்தாலும் அகால வேளையில் வரும்போது
என்னைப்பார்த்துக் குரைத்து அடங்கும் தெரு நாய்...

சம்பந்தமே இல்லாமல்
ஒரு வார்த்தை கூட பேசாமல்
கண்ஜாடைகூட காட்டாமல்
ரயிலிலும், பஸ்ஸிலும்
பயணத்தை சுகமாக்கிச் செல்லும் இளம்பெண்கள்...

நாளை மரணம் என்பதைப் போல்
இன்றே முழுமையைத் தேடும்- என்
அவசரம்

களைப்படைய வைக்கும் என் நெடுந்தூரப் பயணம்
எனக்கு....
சுவாரஸியமாகவே இருக்கிறது.



சரவணன். கா


Please also visit  www.solitaryindian.blogspot.com to read my blogs in English.

Saturday, 3 December 2011

இந்திரா கோஸ்வாமி (14 நவம்பர் 1942- 29 நவம்பர் 2011) - சிரிப்பினில் மறைந்திருக்கும் கலப்படமற்ற இலக்கிய ஆளுமை.


எந்தவோர்  உண்மையான இலக்கியவாதியும் எழுத்தாளனாகவோ கவிஞனாகவோ தன்னைத் தானே சுயமதிப்பீடு செய்து கொண்டு இலக்கியம் படைக்க முன்வருவதில்லை. அவ்வாறு படைக்கப்படும் படைப்புகள் இலக்கியங்கள் என்ற எல்லைக்குள் வருவதில்லை. எழுத்துத் திறனும் கவித்திறனும் ஒருவனின் இரத்தத்தில் ஊறியிருக்கும் பட்சத்தில்தான் இலக்கியம் என்ற ஒன்று ஜனனம் பெறும். காலத்தை வென்று நிற்கும் படைப்புகள் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நீர்குமிழி அனுபவங்களாலும் , இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பிதம் செய்து கொண்டு செயற்கையாகப் பிரஸ்தாபித்துக் கொள்ளும் பக்குவ நடையில் இயற்றப்பட்டவைகளாக இருந்ததில்லை. அவ்வாறாக தன்னுடைய கலப்படம் கலவாத அனுபவங்களையும், சொந்த வாழ்வின் துக்கங்களையும், இலக்கியவாதிகளுக்கு உரித்தான தனித்துவ கற்பனா விலாசத்தையும்  தன்னிலைப் பார்வையில் மட்டுமன்றி படர்க்கையின்பால் செம்மையாகச் சொல்லத் தெரிந்த அரிய இலக்கிய கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் அசாமி மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் திருமதி இந்திரா கோஸ்வாமி. துயரங்களால் நெய்யப்பட்ட தன் வாழ்க்கையின் தளர்ச்சிக் கோடுகள் தன் முகத்தில் தெரியா வண்ணம் புன்னகை ஒன்றையே ஆபரணமாக வாழ்நாள் முழுவதும் பூண்டிருந்தவர். அரிதாரம் பூண்டு அவதாரம் எடுக்கும் ஓர் உண்மையான மேடைநாடகக் கலைஞனின் தற்காலிகக் கண்கவர் வண்ணத்தை தன் நிரந்தர வடிவாகக் கொண்டிருந்த அபூர்வமான ஒரு பெண் எழுத்தாளர் அவர். கடைவரை நீளும் மையிட்ட புருவங்களும், தன் கலாச்சாரத்தை  வெட்கப்படாமல்  பறைசாற்றும் அகன்ற குங்குமப் பொட்டும், முடிந்துகொள்ள முடியாத கற்றை முடியும் இலக்கிய அன்பர்கள் மத்தியில் அவர் மறைந்து விட்டாலும் அவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
 தற்கால இந்திய இலக்கியத்தின் முன்னோடியாக இருந்து மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தந்தவர் இந்திரா கோஸ்வாமி. அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் 1942 ல் பிறந்தார். சிறுவயதிலேயே மன அழுத்த நோய்க்கு ஆட்பட்டு பலமுறை தற்கொலை செய்து  கொள்ள முயன்றவர். திருமணம் ஆன பதினெட்டு மாதங்களிலேயே தன் கணவரான மாதவன் ஐயங்காரை விபத்து ஒன்றில் பறிகொடுத்து விதவையானவர். வாழ்க்கையை தூக்க மாத்திரைகளுக்கு அர்ப்பணித்துவிட்டு தன் போக்கில் இலக்கியப் பயணம் மேற்கொண்ட ஒரு தனிமை எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி. மிசோரம் மாநிலத்தின் ஷில்லாங் நகரில் உள்ள க்ரியோலின் அருவியில் அவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சிகளும், தூக்க மாத்திரைகளுக்கு அடிமையானதும் அவருடைய சுய சரிதமான ''முடிவு பெறாத சுய சரிதை'' யில் காணக் கிடக்கின்றன.

கொஞ்ச காலம் அசாமின் கோல்பாராவில் உள்ள ராணுவப் பள்ளியில் பணியாற்றிய பின் உத்தரப் பிரதேசத்தின் விருந்தாவனில் அவர் ஒரு விதவையாக இருந்து பெற்ற அனுபவங்களையும் , அங்கிருந்த விதவைகளின் வாழ்வுப் போராட்டத்தையும், வாழ விரும்பும் அந்த ஏந்திழைகளின் ஏக்கத்தையும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் அபலை விதவைகளைப் பற்றி அவர் கரிசனத்தோடு பார்த்த பார்வைகளையும் அவர் எழுதிய ''The Blue necked Braja'' என்ற புதினத்தில் காணலாம். தன் கணவர் இறந்த பின் தான் சந்தித்த சமுதாயத்தைப் பற்றியும் ஒட்டுமொத்த விருந்தாவன விதவைகளைப் பற்றியும் அவர் எழுதிய இந்த புதினம் பெரும் கண்டனத்துக்குள்ளானது. இன்றும் இந்திய இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்ற சில படைப்புகளில் அதுவும் ஒன்று. விருந்தாவனத்தில் இருந்தபோதுதான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட துளசிதாசரின் இராமாயணத்தையும் அசாமி மொழியில் மாதவ கண்டலி பதினான்காம் நூற்றாண்டில் எழுதிய அசாமி இராமாயணத்தையும் ஒப்பீடு செய்து  ''இராமாயணம்- கங்கையிலிருந்து பிரம்மபுத்திரா வரை'' என்ற ஆராய்ச்சி நூலை எழுதினார்.

தில்லிக்கு வந்த பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் அசாமி மொழித் துறைக்குத் தலைவரானார். தில்லியில் அவர் வசித்த நாட்களில்தான் இந்திய இலக்கிய உலகம் மறக்க இயலாத படைப்புகளை அவர் எழுதினார். ஹிருதய், நங்கோத் சொஹர், பொரோஃபர் ராணி போன்ற தில்லியைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட புதினங்களையும் அஹிரோன், துருப்பிடித்த வாள், உதய பானு, தாசரதியின் காலடிகள், சின்னமஸ்தாவில் இருந்து வந்தவன் போன்ற புகழ்பெற்ற புதினங்களையும் அவர் எழுதினார். இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த சீக்கியர்களைக் கொன்று குவித்த கலவரம் பற்றி அவர் தன்னுடைய ''இரத்தம் தோய்ந்த பக்கங்கள்'' என்ற புதினத்தில் தான் நேரில் கண்டதை அப்படியே பதிவு செய்தார். இதை ஒரு புதினம் என்று சொல்வதை விட ஓர் ஆராய்ச்சி நூல் என்று சொல்வது பொருந்தும் . இந்த நூலை எழுதுவதற்கு முன் அவர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரிலேயே சென்று முதல் கையகச் சாட்சிகளைப் பெற்று ஆய்ந்த பின்னரே அதனை எழுதினார்.

அசாமில்  புகழ் பெற்ற சக்தி கோவில் ஒன்று உள்ளது. கமக்யா கோவில் என்பது அதன் பெயர். அங்கே மிருக வதை என்பது ஆயிரம் வருடங்களாக நடைபெற்று வரும் ஒரு பாரம்பரியம். அதைக் கண்டித்தும் இந்து மத நூல்களை மேற்கோள் காட்டியும் சக்தி தேவிக்குத் தேவையானவை மலர்களே தவிர மாமிசம் இல்லை என்று அவர் தனது ''சின்ன மஸ்தாவிலிருந்து வந்தவன்'' என்ற புதினத்தில் வாதாடியபொது பழமைவாதிகளின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். அது கிளப்பி விட்ட ஆர்வமே அந்தப் புதினத்தை மிகப் பிரபலப்படுத்தியது.

அவருடைய இலக்கியப் பங்களிப்புகள் 1983 ல் சாகித்ய அகாதமி விருதாகவும் 2001 ல் ஞானபீடப்பரிசாகவும் அங்கீகாரம் செய்யப்பட்டன. ஓர் இலக்கியவதியாக இருந்து கொண்டு புத்தகங்களுக்கு மத்தியில் உறங்கிவிடாமல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் பயங்கரமான தீவிரவாத அமைப்பு என்று அறியப்பட்ட உல்ஃபா ( ULFA- United Liberation Front Of Asom) க்கும் இந்திய அரசுக்கும் சமாதான உடன்படிக்கை ஏற்பட அவர் மேற்கொண்ட சமூக நலன் கருதிய முயற்சிகள் இலக்கிய உலகம் தாண்டியும் நினைவு கூரப்பட்டுக்கொண்டிருக்கும்.

எழுத்துலகில் கவிஞர், புதின எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட  இந்திரா கோஸ்வாமி இன்று நம்மிடையே இல்லை. இலக்கியவாதிகள் மட்டுமே மறைபவர்கள். இலக்கியங்கள் அல்ல. கோஸ்வாமியின் படைப்புகளை இந்திய இலக்கிய உலகம் நினைவில் வைத்திருக்கும் வரை அவர் இறப்பு ஒன்றும் இறப்பாக இருக்கப் போவதில்லை.

பின் குறிப்பு : மேலே சொன்ன நூல்களைத் தவிர கோஸ்வாமி அவர்கள் எழுதிய பல நூல்கள் இந்தக் கட்டுரையில் சொல்லப்படவில்லை. தற்காலிகமாக எனக்குக் கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இதனை எழுதியுள்ளேன். அவருடைய புத்தகங்களைப் படிக்க சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களை இணையத்தின் மூலம் தொடர்பு  கொள்ளலாம்.

சரவணன். கா

Also visit www.solitaryindian.blogspot.com  to read my blogs in English.