Friday, 23 December 2011

சொல்லாமலே இருந்து விடுகிறேன்

மௌனமாய் மறைந்து போனவளே !

நகர்கின்ற நாட்களில் புதைந்திருந்த
என் அறிவுக்கெட்டாத
வாழ்க்கையின் சிதிலங்கள்
உன்னைக்கண்ட பின் தான்
அர்த்தம் பெற்றதைப் போல இருக்கின்றன.

நின்று கொண்டே கழிந்து போகும்
இந்த மானுடத்தின்
தற்காலிக மயக்கங்கள்
நிரந்தரமாகத் தோற்றம் கொண்டது
உன்னுடைய நிழழில் கீழ்
நானிருக்க விரும்பியதால்தான்...

சொல்லாத ஒன்று காதலாவதில்லை-
நான் உன்னிடம்
ஒன்றுமே சொல்லியதில்லை...

தொட்டுக்கொள்ளாத ஒன்று காமமாவதில்லை-
உன்னைத் தொட
நான் கனவிலும் எண்ணியதில்லை...

சொல்லாத ஒன்றை காதலாகவும்
தொடாத ஒன்றை காமமாகவும்
இரண்டுக்கும் இடைவெளி என்பது
அர்த்தமில்லாத ஒன்று  என்பதை
உன்னுடன் நானிருந்த
அந்த ஒற்றை நிமிடங்கள்
இந்த உலகிற்குச் சொல்லிக்கொண்டிருக்கும்.

உன்னுடன் இருக்க நான் விரும்பியது
உன்னைப் பற்றித் தெரியாத
என் அறியாமை....

நீ என்னுடன் இருக்க விரும்பாதது
என்னைப்பற்றி நீ அறிந்த
உன் புத்திசாலித்தனம்.

நாம்
இருவருமே நம் இருவரிடம் இல்லை.
உன்னுடைய பார்வையில்
இந்த நேரம் நான் மங்கலாகியிருப்பேன்..
நினைவில் அகப்படாத உருவமற்ற
நிழழாகியிருப்பேன்;

உன்னிடம் நான் இல்லை-அது நீ விரும்பியது
என்னிடம் நீ இப்போதும் இருக்கிறாய்- இது நான் விரும்பியது

நான் சொல்லாத காதலும்
நீ சொல்லாத சொற்களும்
என்னை வாழவைத்தால்....
வைத்துவிட்டுத்தான் போகட்டுமே!

எங்கோ இருக்கிறோம்.
வாழ்வைத்தொலைத்த நிராசை
உன்னை நெரிக்காதிருக்கட்டும்.
ஏனெனில்-அது
உன் கழுத்தை நெரிக்கும்போது
மங்கலான நான்
முற்றிலும் மறைந்து போயிருப்பேன்.
அதில் உனக்கு வெட்கம் இல்லை;
 நீ...அப்படித்தான்...

என்னுள் இருக்கும் நீ-
எப்போதும் பிய்த்தெறிய முடியாத
என் நகச்சதையாகவே இருக்கிறாய்.
அதில் எனக்கு வெட்கமொன்றும் இல்லை.
 நான் இப்படித்தான்.


சரவணன். கா.

Also visit www.solitaryindian.blogspot.com to read my blogs in English



Monday, 5 December 2011

காதலிக்குப் புரியாத என் முதல் காதல் கவிதை

நான் மதுரையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம், அரசரடியில் இருந்து தெப்பக்குளத்திற்கு 4 ஆம் எண் கொண்ட நகரப் பேருந்து ஒன்று இயங்கி வந்தது. நேரடியாகச் செல்லும் பேருந்து என்பதால் அதில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். கூட்டத்தில் அழுகிய பழம் போல் நசுங்க எனக்குப் பயம்; ஆனால் அந்தப் பேருந்தை விட்டு விட்டால் பெரியார் பஸ் நிலையத்தில் வேறு பஸ் பற்றி செல்ல அதிக நேரம் பிடிக்கும் என்பதால் வாசலில் தொற்றிக்கொண்டாவது செல்லும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன். படிந்து சீவப்பட்ட எண்ணைத் தலையும், கட்டம் போட்ட உள்ளே செருகப்படாத சட்டையும், என்னுடைய அக்காவுடன் சண்டை போட்டு, ஒப்புக்கொள்ள வைத்து பிடுங்கிய தொன்னூறு ரூபாயில் வாங்கிய 'பாட்டா' செருப்பும், 'பாண்ட்ஸ்' முகப்பவுடரில் செய்யப்பட்ட செயற்கைத் திருநீறுமாய் என்னை பார்த்தால் பெண்கள் கனவில் வர முற்றிலும் இலாயக்கற்றவனாகத்தான் இருந்திருப்பேன். பெண்களின் கனவில்தான் நான் வருவதில்லை; ஆனால் என் கனவில் பெண்கள் எப்போதும் வருவதுண்டு. அப்படி வந்த எண்ணிலடங்காதவர்களில் ஒருத்திதான்  4 ஆம் நம்பர் பேருந்தின் இடது பக்கம் வாசலின் அருகே முதல் சீட்டில் எப்போதுமே அமர்ந்து வரும் குள்ளமாகவும், உருண்டை முகம் கொண்டவளாகவும்,  நீளமான கூந்தலுமாக சற்றே கருத்த நிறத்துடனும் இருந்தவள். அவளிடம்தான் வாசலில் தொத்திக்கொண்டு செல்லும் சமயம் புத்தகத்தையும் சாப்பாட்டு 'டபரா' வையும் வைத்துக் கொள்ளச்சொல்வேன். கொஞ்ச நாட்களில் கனவில் வரும் மற்றைய இளம்பெண்களைப் பின் தள்ளி ஒரே ஒருத்தியாய் தனிக்காட்டு ராணியாக என் கனவில் வலம் வர ஆரம்பித்தாள். காதல் என்னைப் பீடித்துக்கொண்டது. அவளை நான் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்.

என் காதலை எப்படிச் சொல்வது? பேசுவதற்கு தைரியம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு கடிதம் எழுதலாம் எனத் தீர்மானித்தேன். சாதாரணக் காதல் கடிதமாக இருக்கக்கூடாது. கவி நயம் பொங்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது காதலை இலக்கியமாக வெளிப்படுத்தலாம் என்று தீர்மானித்தேன். மூளையைக் கிண்டிக் கிளறி நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாணியில் ஒரு தலையும் காலும் இல்லாத கவிதை ஒன்று எழுதினேன். அதனை சாப்பாட்டு 'டபராவுக்கும்' புத்தகங்களுக்கும் இடையில் நீட்டிக்கொண்டிருக்குமாறு படிக்க வசதியாக வைத்தேன். பஸ் வந்தபோது லாவகமாக அதனைப் பிடித்துக்கொண்டு வழக்கம்போல் அவளிடம் புத்தகத்தையும் சாப்பாட்டையும் தந்தேன். படிக்கிறாளா என்பதைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன்....ஆஹா....படிக்கிறாள்....படிக்கும் போது என்னைப் பார்க்காததால் தைரியமாக அவள் முக பாவனைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். ஒன்றுமே வெளிக்காட்டாமல் உட்கார்ந்திருந்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது...என்ன இவள்! கல்லைப் போல் உட்கார்ந்திருக்கிறாள்...? சிறிய சிரிப்பையாவது எதிர்பார்த்து ஏமாந்தேன். கூட்டம் குறைந்திருந்தபோது புத்தகத்தை அவளிடம் இருந்து வாங்கிக்கொண்டேன். ஆனால் அந்தக் கடிதம் இல்லை. ஆஹா....பிடித்துபோய் வைத்துக்கொண்டாளா!....லேசாகப் பேசிபார்க்கலாமா? தைரியம் இன்னும் வராமல் இருந்தது.

கல்லூரி நிறுத்தம் வந்த போது இறங்கிவிட்டேன். அவளும் பின்னாலேயே இறங்கினாள். இறங்கியபின் என்னை ''ஹலோ..' என்று கூப்பிட்டாள். என் பெயர் அவளுக்குத் தெரியாது.
''இந்தப் பேப்பர் உங்கள் புத்தகத்தோடு இருந்தது. உங்கக்கிட்ட தந்தபொது கீழே விழ்ந்திருக்கிறது. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இறங்கும்போதுதான் கால்களுக்குக் கீழே கிடைத்தது. ஏதோ எழுதியிருந்தது. இந்தாங்க'' என்று என்னிடம் தந்தாள்.

கொஞ்ச நஞ்ச தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு லேசாகக் கேட்டேன். ''அதுவா...அது ஒன்றுமில்லை...அதைப் படிச்சீங்களா என்ன?''
''ஆமா..படிச்சேன்...ஆனா ஒன்னுமே புரியல..''

அதற்கு மேல் அவளுக்குப்பேச பிரியம் இல்லாததைப்போல நடந்து சென்று விட்டாள்.

அந்தக் 'காதல்' கடிதத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தேன். எனக்கு மட்டுமே புரிவதைப் போலிருந்தது. புரியாததை எழுதி என் காதலுக்கு நானே உலை வைத்து விட்டதைப்போல இருந்தது.

இது நடந்து பதிமூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 

...............     ...................     ..................

நேற்று என் பழைய டயரி ஒன்றைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது அந்தக் கவிதை என் கண்களில் பட்டது.
அந்தக் கவிதை இதுதான்..

''பொருள் சேர்க்கும் பொருளற்ற வாழ்வு யான் வேண்டேன்;
அருளென்றெழும் அகந்தையான் அற்பமும் யான் வேண்டேன்;
பெண் சிகராய்! செவி நீளும் உன் நயனக் கடைப்படும்
கண்கவர் குப்பையிலு மொன்றேனும் ஆகேனோ''

                                                                                                                        சரவணன்.

அதன் பொருள் இதுதான்.

''செல்வத்தைச் சேர்க்கும் அர்த்தமில்லாத வாழ்க்கையை நான் வேண்டவில்லை; செல்வம் சேர்ந்தபின் வந்து சேரும் ஆணவம் மிக்க அற்பத்தனமான வாழ்க்கையையும் நான் வேண்டவில்லை; பெண்களில் சிகரம் போன்றவளே! காது வரை நீண்டிருக்கும் உன் அழகிய கண்களில் படும் கண்களைக் கவரும் குப்பைகளில் ( அந்த சமயம் சினிமா சுவரொட்டிகளைக் குறிப்பிட்டு எழுதினேன்) ஒன்றாகவாவது ஆக மாட்டேனா? ''

இப்படியெல்லாம் காதலைத் தெரிவித்தால் காதல் மூச்சுத் திணறி மரித்துவிடும் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

இன்று வரை அந்தப் பெண்ணின் பெயர் எனக்குத் தெரியாது.

 எங்கிருக்கிறாள் என்பதும் தெரியாது.

அவ்வப்போது ''அந்த நாலாம் நம்பர் பஸ்காரி  இப்ப எங்கடா இருக்கா'' என்று என் அக்கா கிண்டலாகக் கேட்கும்போது மட்டும் அந்தக் கல்லூரி காதல் மனதில் ஒரு வீசு வீசிவிட்டுப் போகும்.


சரவணன். கா

Also visit www.solitaryindian.blogspot.com  to read my blogs in English  

Sunday, 4 December 2011

சோர்வு தெரியாத தூரம்

சாவை நோக்கித் தினம் தினம்
தேய்வது காலடிச்சுவடுகளாக இருந்தாலும்
விடியலில் காத்திருக்கும்-
புதைந்த நம்பிக்கை
புகைப்படலமாக படரும்
உயிர்ப்பின் ரகசியம்.

அகல நீளம் அறியாத
வாழ்க்கைப் பாதையில்
அடுத்த கட்டம் என்னவென்று தெரியாத
குருட்டுப்பயணம்

இருந்தும் இல்லாமலுமான
உறவுமுடிச்சுப் பின்னலின்
புரியாத தொடக்கம்
அறிவுக்கெட்டாத முடிவுப்புள்ளி.

பொருளே எட்டாத
வாடிவதங்கும் மலராக
இளமையில் ஆடி
முதுமையில் வாடும்
அந்திமத்தில் அடங்கிப்போகும்
ஆசையொழியாத என் மூச்சு.

தெரிந்துதான் பயணிக்கிறேனா?
அப்படித்தான் தோன்றுகிறது.

அர்த்தம் தேடியே
அடங்கவேண்டியவனா நான்?
தெரியாத ஒன்றை தெரிவதில்தானே
என் தெளிதல் ஒளிந்திருக்கிறது.

என் தெளிவு.....

தினம் தினம் பார்க்கும்
அறிமுகம் இல்லாத மனிதர்கள்...

பார்த்தபின்னும் தெரிந்து கொள்ள
அவசியம் இல்லாத மனிதர்கள்...

என் வரவை அறிந்தோ அறியாமலோ
எங்கோ கத்திக்கொண்டிருக்கும் குருவிகள்...

தினமும் பார்த்தாலும் அகால வேளையில் வரும்போது
என்னைப்பார்த்துக் குரைத்து அடங்கும் தெரு நாய்...

சம்பந்தமே இல்லாமல்
ஒரு வார்த்தை கூட பேசாமல்
கண்ஜாடைகூட காட்டாமல்
ரயிலிலும், பஸ்ஸிலும்
பயணத்தை சுகமாக்கிச் செல்லும் இளம்பெண்கள்...

நாளை மரணம் என்பதைப் போல்
இன்றே முழுமையைத் தேடும்- என்
அவசரம்

களைப்படைய வைக்கும் என் நெடுந்தூரப் பயணம்
எனக்கு....
சுவாரஸியமாகவே இருக்கிறது.



சரவணன். கா


Please also visit  www.solitaryindian.blogspot.com to read my blogs in English.

Saturday, 3 December 2011

இந்திரா கோஸ்வாமி (14 நவம்பர் 1942- 29 நவம்பர் 2011) - சிரிப்பினில் மறைந்திருக்கும் கலப்படமற்ற இலக்கிய ஆளுமை.


எந்தவோர்  உண்மையான இலக்கியவாதியும் எழுத்தாளனாகவோ கவிஞனாகவோ தன்னைத் தானே சுயமதிப்பீடு செய்து கொண்டு இலக்கியம் படைக்க முன்வருவதில்லை. அவ்வாறு படைக்கப்படும் படைப்புகள் இலக்கியங்கள் என்ற எல்லைக்குள் வருவதில்லை. எழுத்துத் திறனும் கவித்திறனும் ஒருவனின் இரத்தத்தில் ஊறியிருக்கும் பட்சத்தில்தான் இலக்கியம் என்ற ஒன்று ஜனனம் பெறும். காலத்தை வென்று நிற்கும் படைப்புகள் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நீர்குமிழி அனுபவங்களாலும் , இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பிதம் செய்து கொண்டு செயற்கையாகப் பிரஸ்தாபித்துக் கொள்ளும் பக்குவ நடையில் இயற்றப்பட்டவைகளாக இருந்ததில்லை. அவ்வாறாக தன்னுடைய கலப்படம் கலவாத அனுபவங்களையும், சொந்த வாழ்வின் துக்கங்களையும், இலக்கியவாதிகளுக்கு உரித்தான தனித்துவ கற்பனா விலாசத்தையும்  தன்னிலைப் பார்வையில் மட்டுமன்றி படர்க்கையின்பால் செம்மையாகச் சொல்லத் தெரிந்த அரிய இலக்கிய கூட்டத்தைச் சேர்ந்தவர்தான் அசாமி மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் திருமதி இந்திரா கோஸ்வாமி. துயரங்களால் நெய்யப்பட்ட தன் வாழ்க்கையின் தளர்ச்சிக் கோடுகள் தன் முகத்தில் தெரியா வண்ணம் புன்னகை ஒன்றையே ஆபரணமாக வாழ்நாள் முழுவதும் பூண்டிருந்தவர். அரிதாரம் பூண்டு அவதாரம் எடுக்கும் ஓர் உண்மையான மேடைநாடகக் கலைஞனின் தற்காலிகக் கண்கவர் வண்ணத்தை தன் நிரந்தர வடிவாகக் கொண்டிருந்த அபூர்வமான ஒரு பெண் எழுத்தாளர் அவர். கடைவரை நீளும் மையிட்ட புருவங்களும், தன் கலாச்சாரத்தை  வெட்கப்படாமல்  பறைசாற்றும் அகன்ற குங்குமப் பொட்டும், முடிந்துகொள்ள முடியாத கற்றை முடியும் இலக்கிய அன்பர்கள் மத்தியில் அவர் மறைந்து விட்டாலும் அவரை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
 தற்கால இந்திய இலக்கியத்தின் முன்னோடியாக இருந்து மிகச் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தந்தவர் இந்திரா கோஸ்வாமி. அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரில் 1942 ல் பிறந்தார். சிறுவயதிலேயே மன அழுத்த நோய்க்கு ஆட்பட்டு பலமுறை தற்கொலை செய்து  கொள்ள முயன்றவர். திருமணம் ஆன பதினெட்டு மாதங்களிலேயே தன் கணவரான மாதவன் ஐயங்காரை விபத்து ஒன்றில் பறிகொடுத்து விதவையானவர். வாழ்க்கையை தூக்க மாத்திரைகளுக்கு அர்ப்பணித்துவிட்டு தன் போக்கில் இலக்கியப் பயணம் மேற்கொண்ட ஒரு தனிமை எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி. மிசோரம் மாநிலத்தின் ஷில்லாங் நகரில் உள்ள க்ரியோலின் அருவியில் அவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சிகளும், தூக்க மாத்திரைகளுக்கு அடிமையானதும் அவருடைய சுய சரிதமான ''முடிவு பெறாத சுய சரிதை'' யில் காணக் கிடக்கின்றன.

கொஞ்ச காலம் அசாமின் கோல்பாராவில் உள்ள ராணுவப் பள்ளியில் பணியாற்றிய பின் உத்தரப் பிரதேசத்தின் விருந்தாவனில் அவர் ஒரு விதவையாக இருந்து பெற்ற அனுபவங்களையும் , அங்கிருந்த விதவைகளின் வாழ்வுப் போராட்டத்தையும், வாழ விரும்பும் அந்த ஏந்திழைகளின் ஏக்கத்தையும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் அபலை விதவைகளைப் பற்றி அவர் கரிசனத்தோடு பார்த்த பார்வைகளையும் அவர் எழுதிய ''The Blue necked Braja'' என்ற புதினத்தில் காணலாம். தன் கணவர் இறந்த பின் தான் சந்தித்த சமுதாயத்தைப் பற்றியும் ஒட்டுமொத்த விருந்தாவன விதவைகளைப் பற்றியும் அவர் எழுதிய இந்த புதினம் பெரும் கண்டனத்துக்குள்ளானது. இன்றும் இந்திய இலக்கியத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்ற சில படைப்புகளில் அதுவும் ஒன்று. விருந்தாவனத்தில் இருந்தபோதுதான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட துளசிதாசரின் இராமாயணத்தையும் அசாமி மொழியில் மாதவ கண்டலி பதினான்காம் நூற்றாண்டில் எழுதிய அசாமி இராமாயணத்தையும் ஒப்பீடு செய்து  ''இராமாயணம்- கங்கையிலிருந்து பிரம்மபுத்திரா வரை'' என்ற ஆராய்ச்சி நூலை எழுதினார்.

தில்லிக்கு வந்த பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் அசாமி மொழித் துறைக்குத் தலைவரானார். தில்லியில் அவர் வசித்த நாட்களில்தான் இந்திய இலக்கிய உலகம் மறக்க இயலாத படைப்புகளை அவர் எழுதினார். ஹிருதய், நங்கோத் சொஹர், பொரோஃபர் ராணி போன்ற தில்லியைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட புதினங்களையும் அஹிரோன், துருப்பிடித்த வாள், உதய பானு, தாசரதியின் காலடிகள், சின்னமஸ்தாவில் இருந்து வந்தவன் போன்ற புகழ்பெற்ற புதினங்களையும் அவர் எழுதினார். இந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த சீக்கியர்களைக் கொன்று குவித்த கலவரம் பற்றி அவர் தன்னுடைய ''இரத்தம் தோய்ந்த பக்கங்கள்'' என்ற புதினத்தில் தான் நேரில் கண்டதை அப்படியே பதிவு செய்தார். இதை ஒரு புதினம் என்று சொல்வதை விட ஓர் ஆராய்ச்சி நூல் என்று சொல்வது பொருந்தும் . இந்த நூலை எழுதுவதற்கு முன் அவர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரிலேயே சென்று முதல் கையகச் சாட்சிகளைப் பெற்று ஆய்ந்த பின்னரே அதனை எழுதினார்.

அசாமில்  புகழ் பெற்ற சக்தி கோவில் ஒன்று உள்ளது. கமக்யா கோவில் என்பது அதன் பெயர். அங்கே மிருக வதை என்பது ஆயிரம் வருடங்களாக நடைபெற்று வரும் ஒரு பாரம்பரியம். அதைக் கண்டித்தும் இந்து மத நூல்களை மேற்கோள் காட்டியும் சக்தி தேவிக்குத் தேவையானவை மலர்களே தவிர மாமிசம் இல்லை என்று அவர் தனது ''சின்ன மஸ்தாவிலிருந்து வந்தவன்'' என்ற புதினத்தில் வாதாடியபொது பழமைவாதிகளின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். அது கிளப்பி விட்ட ஆர்வமே அந்தப் புதினத்தை மிகப் பிரபலப்படுத்தியது.

அவருடைய இலக்கியப் பங்களிப்புகள் 1983 ல் சாகித்ய அகாதமி விருதாகவும் 2001 ல் ஞானபீடப்பரிசாகவும் அங்கீகாரம் செய்யப்பட்டன. ஓர் இலக்கியவதியாக இருந்து கொண்டு புத்தகங்களுக்கு மத்தியில் உறங்கிவிடாமல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் பயங்கரமான தீவிரவாத அமைப்பு என்று அறியப்பட்ட உல்ஃபா ( ULFA- United Liberation Front Of Asom) க்கும் இந்திய அரசுக்கும் சமாதான உடன்படிக்கை ஏற்பட அவர் மேற்கொண்ட சமூக நலன் கருதிய முயற்சிகள் இலக்கிய உலகம் தாண்டியும் நினைவு கூரப்பட்டுக்கொண்டிருக்கும்.

எழுத்துலகில் கவிஞர், புதின எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற பன்முகம் கொண்ட  இந்திரா கோஸ்வாமி இன்று நம்மிடையே இல்லை. இலக்கியவாதிகள் மட்டுமே மறைபவர்கள். இலக்கியங்கள் அல்ல. கோஸ்வாமியின் படைப்புகளை இந்திய இலக்கிய உலகம் நினைவில் வைத்திருக்கும் வரை அவர் இறப்பு ஒன்றும் இறப்பாக இருக்கப் போவதில்லை.

பின் குறிப்பு : மேலே சொன்ன நூல்களைத் தவிர கோஸ்வாமி அவர்கள் எழுதிய பல நூல்கள் இந்தக் கட்டுரையில் சொல்லப்படவில்லை. தற்காலிகமாக எனக்குக் கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் மட்டுமே இதனை எழுதியுள்ளேன். அவருடைய புத்தகங்களைப் படிக்க சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களை இணையத்தின் மூலம் தொடர்பு  கொள்ளலாம்.

சரவணன். கா

Also visit www.solitaryindian.blogspot.com  to read my blogs in English.
         

Tuesday, 8 November 2011

தமிழும் ஞானபீடமும்


தமிழும் ஞானபீடமும்


வங்கத்தின் உலகப்புகழ் பெற்ற இயக்குனர் சத்யஜித்ரே ஒருமுறை ஆஸ்கர் விருதைப் பற்றிச் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. ''ஆஸ்கர் என்பது அமெரிக்க அரசால் சிறந்த ஆங்கில மொழி குறிப்பாக அமெரிக்க ஆங்கில மொழித் திரைப்படங்களுக்காகக் கொடுக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட விருது. அதனைப் பெற்றால்தான் நம் திரைப்படங்களின் தரம் உலகத் தரத்தில் உள்ளது என்று சொல்லுவதற்கில்லை'' என்பதுதான் அவருடைய கருத்து. தற்போது வெளி நாட்டுத் திரைப்படங்களுக்கும் தனியாக ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. அனேகமாக அதனைப் பெற்றால்தான் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கிறது என்ற நிதர்சனமான உண்மையும், வேறு பல காரணிகளும் அந்தத் தனி வகை ஆஸ்கர் வழங்கப்படுவதற்குக் காரணமாக இருக்கலாம். சமமான தரத்தைக் கொண்ட பல திரைப்படங்கள் ஒருசேரப் போட்டிபோடும்பொது ஒரே ஒரு திரைப்படம் அந்த மிகப் பிரசித்தி பெற்ற விருதைப் பெறுகிறது. அவ்வாறு அங்கீகரிக்கப்படுகின்ற திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களை விட எல்ல வகையிலும் சிறந்திருந்த காரணத்தால்தான் விருதைப் பெற்றன என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். ஏறக்குறைய இதே போன்ற நிலைதான் தமிழ் ஞானபீடப் பரிசை வெல்லுவதிலும் நிலவுகிறது.


இந்தியாவில் மாநில மொழிகளில் வெளிவரும் இலக்கியப்படைப்புகளுக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த விருதாக ஞானபீடம் கருதப்படுகிறது. இதைத் தவிர்த்து இந்திய அரசால் தரப்படுகின்ற சாகித்ய அகாதமி விருதும் அந்தந்த வருடங்களில் வெளியாகின்ற சிறந்த மாநில மொழி படைப்புகளுக்குத் தரப்படுகிறது. இவ்வாறு இந்த விருதுகள் வழங்கப்பட்ட படைப்புகள் இந்தியாவின் இதர மொழிகளிலும் சில சமயம் மற்ற உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் அந்தஸ்தையும் பெருமையையும் அடைகின்றன. இந்த விருதுகளால் அறியப்ப்படும் அடையாளத்திற்காகவே இந்த நாட்டின் ஒவ்வொரு இலக்கியவாதியும் தன் இலக்கியப் பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக இந்த விருதுகளைக் குறிப்பாக ஞானபீடப் பரிசைக் கருதுகிறார். ஆனால் தமிழுக்கு இதுவரை கிடைத்த ஞானபீடப்பரிசு இரண்டே இரண்டுதான். 1977 ல் அகிலனின் ''சித்திரப்பாவை'' ஞானபீடத்தைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தது. அதற்குப் பிறகு இருபத்து மூன்று வருடங்கள் கழித்து 2000 த்தில் ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்ட ஞானபீடபரிசு. அவ்வளவுதான். ஆனால் அதே சமயம் மற்ற மொழிகளுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நோக்கும்போது தமிழ் இலக்கியப் போக்கு பின் தங்கி விட்டது என்று சொல்லுவதை விட தமிழ் இலக்கியத்தை சந்தைப்படுத்தும் திறன் குன்றி விட்டது என்று சொல்வதே பொருந்தும். மலையாளத்திற்கு ஐந்து விருதுகள், ஹிந்திக்கு ஒன்பது விருதுகள், கன்னடத்திற்கு எட்டு விருதுகள், உர்து மொழிக்கு நான்கு விருதுகள், குஜராத்தி மொழிக்கு மூன்று விருதுகள் என்ற நிலையைப் பார்க்கும்போது, தரமான இலக்கியப்பயணத்தில் இருந்து தமிழ் விலகிச் செல்ல ஆரம்பித்துவிட்டது போலத் தோன்றலாம். ஆனால் அது உண்மை என்று கூறுவது பித்துக்குளித்தனம். 


ஓர் இலக்கியத்தின் தரம் என்பது அது சார்ந்த சமுதாயத்தையும் மரபையும் இயல்பையும் அதன் பிறப்பின் காலத்திற்குத் துரோகம் செய்யாமல் பதிவு செய்து பிற்காலச் சந்ததிக்கு அவர்கள் பயணித்த பாதையின் பண்பை மறக்கவியலாதவர்களாக மாற்றுவதில் இருக்கிறது. அப்படி தத்தம் கடமைகளைச் செம்மையாகச் செய்த தமிழ் இலக்கியங்கள் ஐம்பதுகளுக்குப்பின் ஏராளமாகவே வெளிவந்திருக்கின்றன. கடந்த அறுபது வருடங்களில் இரண்டே படைப்பாளிகள்தான் ஞானபீடக் குழுவின் கண்களில் பட்டிருக்கிறார்கள் என்றால் இந்தப் பரிசைப்பற்றி பெரிய அளவில் யாரும் அங்கலாய்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறென். புதுமைப்பித்தன் போன்ற ஒரு படைப்பாளன் மிக அபூர்வமாகவே பிறப்பதுண்டு. ஞானபீடப்பரிசு அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் புதுமைப்பித்தனுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக நான் நினைக்கவில்லை. கா. ந. சு, லா.ச. ராமாமிர்தம் ( இந்தியாவின் மிக முக்கியமான இலக்கியகர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்று  கமில் சுவலபிலால் புகழப்பட்டவர்), தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி , கு. அழகிரிசாமி, கு.பா. ராஜகோபாலன், கி. ராஜநாராயணன்,மௌனி, நா. பிச்சமூர்த்தி என்று பழைய பட்டியலில் உள்ள படைப்பாளிகளும், இந்திரா பார்த்தசாரதி, பொன்னீலன், அசோகமித்திரன், பிரபஞ்சன் மற்றும் தற்போது எழுதிவரும் ஜெயமொகன் என்று புதுப்பட்டியலில் இருக்கும் படைப்பாளிகளும் ஞானபீடப்பரிசு தரப்படாததினால் மற்ற மொழிகளின் படைப்புகளை விட தரம் தாழ்ந்த படைப்புகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்கள் என்பதாக அர்த்தம் கொள்ள வேண்டும் என்று நம்மை நிர்ப்பந்திக்கிறது ஞானபீடப்பரிசின் புறக்கணிப்பு மனப்பான்மை. ஜெயகாந்தனுக்கு அளிக்கப்பட்டபோது போது கூட ஜெயகாந்தன் அந்த பரிசை ஜனாதிபதிக்கு முன்பாகவே அதை நிராகரிக்க வேண்டும் நான் மானசீகமாக எண்ணியதுண்டு. அதை அவரே ஒரு பேட்டியில் வேறு விதமாகக் கூறியிருந்தார். ''இது அங்கீகாரமல்ல; அங்கீகாரத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்'' ( it is not a recognition; but an endorsement). அந்தப் பரிசை அவர் நிராகரித்திருந்தால் தமிழின் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும் என்பது என் அபிப்ராயம்.


இதையும் தாண்டி நமக்கு இந்தப்பரிசு கிடைத்தேயாக வேண்டும் என்று புலம்பும் தமிழ் படைப்பாளிகளுக்கு என் பக்கத்தில் இருந்து ஒரு சிறு விண்ணப்பம். நம் மொழியின் படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றியும் ஆங்கிலமொழி வாயிலாக உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள். காட்டையும் கட்டாந்தரையையும் மிக அழகாகச் சொல்லத் தெரிந்த நம் தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் செல்வாக்கு பெற்ற ஓர் இலக்கிய ஆளுமையாக உருவெடுக்க வேண்டுமானால் தேசிய அளவிளான வாசகக்கூட்டத்தையும் சர்வதேச அளவிலான தெரிதலையும் கவர்ந்திழுக்கக் கூடிய வல்லமை பெற்றிருந்தாக வேண்டும். தமிழின் சல்மா மலையாளத்தின் கமலா தாஸின் படைப்பாற்றலையும் ஆங்கிலப் புலமையையும் பெற்றிருந்தால் அவருடைய படைப்புகள் கமலா தாஸின் படைப்புகளுக்கு நிகராகப் பேசப்பட்டிருக்கும். கமலா தாஸ் தான் செய்யவில்லை என்றால் எம்.டி.வாசுதேவன் நாயரோ அனந்தமூர்த்தியோ உலகுக்கு அவரை அறிமுகம் செய்துவைக்கத் தயாராக இருக்கிறார்கள். தமிழில் அப்படி யாரும் இல்லை.மலையாளத்தின் எம்.டி. வாசுதேவன் நாயர், தகழி, கன்னடத்தின் யு.ஆர். அனந்தமூர்த்தி, க்ரீஷ் கர்னாட் போன்றோர் அந்த மாதிரியான ஆளுமைக்குச் சான்றுகள். இது கைகூடாதவரை இந்த மாதிரியான பரிசை பெறுவதற்கரிய பரிசாக எண்ணி மயங்க வேண்டிய அவசியம் இல்லை.




கா. சரவணன்.


You may visit www.solitaryindian.blogspot.com to read my blogs in English.    

Saturday, 29 October 2011

என் கன்றுக்குட்டிக் காதல்

என் கன்றுக்குட்டிக் காதல்

திரும்பித் திரும்பிப் பார்த்தாலும் மனதின் ஏதோ ஒரு பகுதியை தன்னுள் அடக்கி மகிழ்ச்சி தரும் சில தருணங்கள் எல்லோரின் வாழ்க்கையிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்றல் தோலுரித்த இளவேனில் பனித்துளிபோல் சுகமான நினைவுகளை வருடிக்கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஓர் அனுபவம்தான் என் மனதில் இன்னும் மங்கலாக ஒளிர்ந்து கொண்டு இருக்கும் என் கன்றுக்குட்டி காதல் அனுபவம். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருந்தாலும் அந்த ஏழு வயதில் ஏற்பட்ட அந்த அன்புணர்வு அழகான உணர்வு என்றுதான் இன்றைக்கும் நினைக்கத் தோன்றுகிறது.  

தமிழகத்தின் மிகவும் காய்ந்து போன மாவட்டம் என்ற பிரசித்தி பெற்ற ராமனாதபுரம் மாவட்டத்தில் நான் பிறந்த ஊர் இன்னும் காய்ந்து போன ஒரு கருவேலங்காடு. கருவேலமும் பனையும் தவறிப்பிறந்த சில வேப்ப மரங்களும்தான் என் ஊரின் பசுமை அடையாளங்கள். ஊரின் எல்லைக்குள் எங்கே தோண்டினாலும் கடல் நீரின் கரிப்பை தனக்குள் செறிவாகக் கொண்டு வெளியே வரும் பருகவே லாயக்கற்றதாகப் பத்து ஊருக்கும் போதுமான நிலத்தடி நீர். கோடை காலத்தில் தண்ணீருக்கு ஆளாய்ப் பறக்கும் என் ஊர் “தண்ணியில்லா ஊர்”  என்று தென் மாவட்டங்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தது.  பூமியில் நிலவிய வெம்மையும் கடலின் ஈரப்பதம் கொண்ட உப்புக்காற்றும் வெள்ளைத் தோல் கொண்டவர்களைப் பொறாமையுடன் நோக்கும் கரியவர்களாக என் ஊர் மக்களை மாற்றியிருந்தது. என் கருப்பு நிறத்தைக் கண்டு என் முதல் வகுப்பு ஆசிரியர் திரு திருப்பதி அவர்கள் ( இறைவனைச் சேர்ந்து விட்டவர்) என்னைக் கருப்பட்டி என்று அழைத்தது இப்போது எனக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை.

வருடம் 1985.  அப்போது இரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். சரோஜா டீச்சர் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார். படிப்பில் ஆர்வம் கொண்ட மாணவனாக இருந்தேன். விளையாட்டிலும் ஆர்வமுண்டு. ஆங்கில வாசனை இல்லாத தொடக்கப்பள்ளி அது. தற்போது ஆங்கிலவழி தொடக்கப்பள்ளிகள் வந்து விட்டதாகக் கேள்விப்படுகிறேன். அன்று அது தேவையில்லாதது போலிருந்தது. படிப்பதையே அவசியமற்றதாகக் கருதிய அறியாமைச் சமூகம் அது.

அன்று என்னுடைய வகுப்பு டீச்சர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். (எல்லாப் பாடங்களையும் அவரே எடுப்பார்; பாடங்களுகென்று தனி ஆசிரியர்கள் என்ற விதி அப்போதில்லை). அப்போதுதான் புதிய கல்வி ஆண்டு தொடங்கி இருந்தது. ஒரு வயதான பெண்மணியும் ஏழு வயதான சிறுமி ஒருத்தியும்  பக்கத்து வகுப்பறைக்குள் சென்றார்கள். வகுப்புகளுக்கு மத்தியில் தடுப்பு ஏதுமில்லை. சுமாராக பெரிய அனுமானமாகப் பிரிக்கப்பட்ட திறந்த வகுப்புக்கூட்டம் அது. ஒரே சமயத்தில் ஒரே பாடங்கள் எடுக்கப்படுவதால் குழப்பங்கள் நேர்வதில்லை. நான் அந்தச் சிறுமியைப் பார்த்தேன். என்னுடைய ஊருக்குச் சம்பந்தமில்லாத சிகப்புத் தோலுடன் இருந்தாள். வயதான பெண்மணி நிச்சயமாக அவளுடைய அம்மாவாக இருக்க முடியாது. அம்மா வழிப்பாட்டியாகவோ அப்பா வழிப்பாட்டியாகவோ இருக்கலாம் என்று நினைத்தேன்.

"எப்படி இவ்வளவு செவப்பா அழகாக இருக்கா?'' நினைத்துக்கொண்டே பாடத்தைக்கேட்டேன். அவளுடைய எடுப்பான தாடை என்னுடைய கவனத்தைக் கவர்ந்து இருந்தது. லேசான முக்கோண வடிவிலான முகமும் அதிகம் சதைப்பிடிப்பில்லாத கன்னமும் அவளை இன்னும் அழகாக்கி காட்டின. அங்கும் இங்கும் எதையோ பார்த்துக்கொண்டு நின்றாள்.


'டீச்சர்! இவ எம்பேத்தி. ஒன்னாம் கிளாஸ் என் மக ஊர்ல படிச்சா. இப்ப நம்ம ஊருக்கு வந்துட்டாக. அதான் ரெண்டாம் கிளாஸில் இந்தப்பள்ளிக்கூடத்துல  சேக்கலாம்னு வந்தேன். எட்மாஸ்டர் எங்க இரிக்கார் சொல்றியளா? என்ற வித்தியாசமான உச்சரிப்பும் இழுவையுடனான வார்த்தைகளும் என்னை மீண்டும் அச்சிறுமியை நோக்கி இழுத்தன. அவள் இரண்டு மூன்று இலந்தைப் பழங்களை வாயில் குதக்கி வைத்துக்கொண்டு வாத்தியாரையும், அவள் பாட்டியையும் அப்பாவித்தனமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். " எப்படி இவள் இவ்வளவு செவப்பா அழகாக இருக்கா?'' மீண்டும் நினைத்துக்கொண்டேன். என்னையுமறியாமல் நான் கருப்பாகப் பிறந்தது எனக்கு வெறுப்பைத்தந்தது.

அவள் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துவிட்டாள். அது எனக்கு மிகவும் சந்தோசமாயிருந்தது. அவளைப் பார்க்க வசதியாக வகுப்பின் இடதுபக்க முதல் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டேன். நான் யாரென்பதே அவளுக்குத் தெரியாது. ஒரு சமயம் வகுப்பின் 'லீடர்' என்ற முறையில் அவள் வகுப்பிலிருந்து 'டஸ்டரை' வாங்கி வரச்செல்லும்போது அவளை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவள் என்னைப் பார்க்கக் கூட எத்தனித்தது இல்லை.

அவள் என்னைப் பார்க்கவே மாட்டாள் என்ற எண்ணம் வந்தபின் அவள் கவனத்தைத் திருப்பும் முயற்சியில் ஈடுபடலானேன். காய்ந்த இலந்தைக்கொட்டைகளைப் பொறுக்கிவைத்துக்கொண்டு யாரும் பார்க்காத போது அவள் மீது ஒருமுறை எறிந்த போது என்னைப் பார்த்துக் கேட்டாள்

" ஏண்டா எம்மேல இலந்தக் கொட்டய எறியிறே? சார்கிட்ட சொல்லவா?”


எனக்குப் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஏன் எறிந்தேன் என்பது எனக்கே தெரியாது. என்னை ஏன் பார்க்க மாட்டேன் என்கிறாள் என்ற ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றும் எனக்குத் தோன்றவில்லை.

''அய்யய்யோ! சொல்லாதே. நான் இனிமே எறிய மாட்டேன்''- என்று தாழ்வான குரலில் சொன்னேன் நான்.

அதன் பிறகும் அவள் கவனம் என் மீது இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஒருவேளை நான் கருப்பாக இருப்பதால் அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருநாள் மதிய நேரம் உணவுக்குப்பின்னர், டீச்சரின் மேசையின் மீது உட்கார்ந்திருந்தேன். வழக்கத்துக்கு மாறாக அந்தச் சிறுமியும் கொஞ்சம் முன்னரே வந்து விட்டாள். வகுப்பில் வேறு யாரும் இல்லாததால் என்னிடம் வந்தாள். குட்டைப் பாவாடையும் தோள்பட்டையில் குஞ்சம் வைத்த சட்டையும் அணிந்து இருந்தாள். நடக்கும்போது யாரையும் சட்டை செய்யாத ஓர் அலட்சியம் இருந்தது.

''உம் பேரு என்னடா?'' ஆப்பிள் பழமொன்றைக் கடித்தபடி என்னைப் பார்த்துக் கேட்டாள். என் பெயரைச் சொன்னேன்.

''அன்னிக்கி ஏண்டா எலந்தைக் கொட்டய எம்மேல எறிஞ்ச?''

''சும்மாதான். நீ நல்லா அழகா இரிக்கியா! அதனாலதான் அப்படிச் செஞ்சேன்''

''அப்புடீன்னா''

''தெரியல. உம் பேர் என்ன?''

அவள் தன் பெயரைச் சொன்னாள்.

''நீ இந்த ஊரா? “

 “ ஆமாடா”

 “ நீ எப்படி இவ்லோ சிவப்பா இருக்கே?” உள்ளுக்குள் அரித்துக்கொண்டு இருந்த அந்தக் கேள்வியை அவளிடம் கேட்டேன்.

 “ தெரியலயே. எங்க ஊட்டிலயும் அப்படித்தான் நான் நல்ல சிவப்புன்னு சொல்வாங்க. நீ ஏண்டா இப்படி கன்னங்கரேல்ல்னு இருக்கே?”

 “எனக்கும் தெரியலயே”

 “இனிமே எலந்தைக் கொட்டைய எம்மேல எறியக்கூடாது. சரியா?” என்று மிரட்டும் தொனியில் ஆணையிடுவது போல பேசினாள்.

 திடீரென்று எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. “ நாம ரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவோமா?'' என்று உளறிவிட்டேன்.

எந்தவொரு ஆச்சரியமும் காட்டாமல் ''அட களிச்சல்லே போயிருவே! ( களிச்சள் என்பது கோழிகளுக்கு வரும் ஒரு வியாதி. களிச்சள் வந்த கோழி பிழைப்பதரிது) உன்ன ஏண்டா நான் கலியாணம் பண்ணனும்?''என்று கண்களை விரித்துக் கொண்டு கேட்டாள். உன்னை சும்மா விடப்போவதில்லை என்பது போல இருந்த்து அவள் என்னைப் பார்த்த பார்வை.

எனக்கு இதற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.  ஆனால் எனக்கு அவளைக் கலியாணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

அடுத்த நாள் காலை வகுப்பில் பிரளயம் ஏற்பட்டது. அந்தச்சிறுமியின் பாட்டி வந்துவிட்டார் .

''எவன் அவன் அந்த கருவாப்பயல்? எம்பேத்திய கண்ணாலம் கட்ட ஆசப்படுறானமுள்ள. எங்கே அந்த கொள்ளையிலே போறவன்? என்று பெரிய அளவில் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார். நான் என்னுடைய ஆசிரியருக்குப்பின்னால் மறைந்து கொண்டேன்.

''அதோ அவந்தான் அப்படிச் சொன்னான்'' என்னைக்காட்டி அவள் தன் பாட்டியின் கவனத்தை என் மீது திருப்பினாள்.

''இவனா? அடப்பாவி! முளச்சு மூணு இல விடலயடா உனக்கு. அதுக்குள்ள கண்ணாலம் கேக்குதா உனக்கு'' என்று ஓங்கி என்னை அறைய முயன்றார்.

 ''கொஞ்சம் பொறுங்க. இவன் அப்படிப் பண்றவன் இல்லியே. நான் பாத்துக்கிறேன். குழந்தைங்க. நீங்க போங்க நான் கவனிக்கிறேன்'' என்று சமாதானப் படுத்தினார் என் ஆசிரியர். 

 'அப்பாடா தப்பித்தேன்'

 '' இவள் ஏன் என்னைக் காட்டிக் கொடுத்தாள்'' எனக்கு அந்த வயதிலும் வலித்தது.

ஆசிரியரும் குழந்தைகள் ஏதோ விளையாடியிருப்பார்கள் என்று இரண்டு அறை விட்டதோடு மறந்து விட்டார்.

அதற்குப் பிறகு அவளிடம் பேச எனக்குத் துணிவில்லை. அவளைப்பார்த்தால் போதும்; ஆட்காட்டி விரலை உயர்த்தி ஆட்டிக்காட்டுவாள். 'என்னிடம் இனிமேல் என்னிடம் வாலாட்டாதே என்பதே அதன் பொருள்.

தொடக்கப்பள்ளியை முடித்தபின் ஆறாம் வகுப்பைச் சென்றடைந்தபோது, அவள் படிப்பை நிறுத்தியிருந்தாள். நானும் அப்படி ஒருத்தி இருந்தாள் என்பதையும் மறந்து போய்விட்டேன் . அவளுக்குப் பிறகு நான் சந்திக்க நேரிட்ட பெண்கள் அவளைவிடவும் அழகாகத் தெரிந்தார்கள். அவர்கள் பலரையும் நான் மனமாரக் காதலித்ததுண்டு. என்னிடம் பேசாத பெண்கள் எனக்கு மிக அழகாகத் தோன்றினார்கள் . அவர்கள் மீது இருக்கும் ஈர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளவே நான் அவர்களுடன் அர்த்தமான பேச்சுக்களை அனுமதித்ததில்லை. சில சமயங்களில் அழகான பெண்களிடம் பேசிய பின் அவர்களிடம் தெரிகின்ற அறிவுகெட்டதனம் எனக்கு ஏமாற்றத்தைத் தந்ததனால்தான் என்னவோ அழகாய்த் தெரிகின்ற பெண்களை நான் அணுகுவதில்லை. அவர்களும் என்னை அணுகியதில்லை. ஆனால் நான் அழகாக இருக்கிறேன் என்பதல்ல அதன் பொருள்.

எனக்கு மத்திய அரசில் வேலை கிடைத்த பின் ஊருக்குச் செல்வதே அரிதான பழக்கமாய் மாறிப்போயிருந்தது. ஒரு நாள் என் ஊரிலிருந்து ராமனாதபுரத்திற்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். என் வலது பக்கத்தில் ஒரு பெண்ணும் அவள் கணவனும் மூன்று குழந்தைகளும் நின்றுகொண்டிருந்தார்கள். எனக்கு அந்தப் பெண்ணை அடையாளம் தெரியவில்லை.

திடீரென்று அந்தப் பெண் என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டாள்.

'' டேய்! நீ சரவணாதானே! அப்பிடியே இரிக்கியேடா. கொஞ்சமும் கூட குண்டாகவில்ல. இப்ப எங்கடா இருக்க?''

ஆஹா!!  இவள் அவளாச்சே! நொடிகளில் அவள் குறித்த பால்ய கால நினைவுகள் பளிச்சென்று வந்து போயின.  

 அவள் பெயரைச் சொல்லி “ நீ எப்படி இருக்கே? இதெல்லாம் உங்குழந்தைகளா?'' நானும் ஆச்சரியப்பட்டதைப் போலக் கேட்டுவைத்தேன். உண்மையில் ஆக்சரியமாகத்தான் இருந்தது. ஒருவேளை இவளை காதல் செய்து திருமணம் செய்து கொண்டிருந்தால் இப்படித்தான் இரண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் காத்துக்கொண்டு இருந்திருப்பேனோ என்று தோன்றியது.

 இன்னும் அவள் என்னை 'டா' போட்டுக் கூப்பிட்டது அழகாக இருந்தது. கொஞ்சம் கருத்துப் போயிருந்தாள். முன்னம் இருந்த செழுமை இல்லாமல் போய் ஏகத்துக்கும் குண்டாகியிருந்தாள். அப்படி செழுமையாக இருந்த முகம் இந்த அளவு பொலிவு இழக்குமா என்று நினைத்த போது உடல் அழகு என்பதை ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் இறைவன் கொடுப்பான் போலும் என்று எண்ணிக்கொண்டேன்.

''ஆமாண்டா. இவர் என் ஊட்டுக்காரர். (வீட்டுக்காரர்)- கரிய நிறத்துடன் பயில்வான் போலிருந்த அவரைக் காட்டிச் சொன்னாள். அவர் என்னைப்பார்த்து லேசாகச் சிரித்தார். “நீ என்னடா பண்றே?

''நான் இப்ப இங்க இல்ல. வட நாட்டுப் பக்கம் வேல பாக்கிறேன்'' என்றேன் நான்.

''சவூதி கிவூதி போகலயாடா நீ?'' மாறாத அதே அப்பாவித்தனத்துடன் கேட்டாள்.

''இல்ல. இங்கியே நல்ல சம்பளம் எனக்கு. அதான் இங்கேயே இருக்கேன்'' என்றேன் நான்.

அவளுடைய கணவர் அவளைப் பார்த்துக் கேட்டார்.

''உனக்கு இவரை எப்படித்தெரியும்?''

 ''அதுவா! ரெண்டாம் கிலாஸில் படிச்சப்போ எனக்குப் பழக்கம். பக்கத்து கிளாஸ் இவன். ஒரு நா இவன் என்னக் கலியாணம் பண்ணிக்கலாம்னு சொல்லித் தொலச்சானா. பெத்தா (பாட்டி) இவனை அடிக்க வந்துட்டாக. அப்புறம் டீச்ச்ர்தான் இவனப் புடிச்சு வச்சாக'' என்று அடக்க முடியாத சிரிப்போடு சொன்னாள்.

 அவளுடைய கணவனும் இதைக்கேட்டு சிரித்தார்.

''அதப் போய் இன்னும் யாவகம் வச்சிரிருக்கியா?'' தர்ம சங்கடத்துடன் நெளிந்து கொண்டே சொன்னேன்.

 ''உன்னப் பத்தி அது ஒன்னுதானடா எனக்கு யாவகத்தில் இருக்கு." என்று அவள் சொன்னபோது அவள் மனதில் நான் இன்னும் ஒரு 'ஜோக்கராகத்தான்' இருந்திருக்கிறேன் என்று தெரிந்தது.

பஸ் வந்து விட்டது. அவள் பஸ்ஸில் ஏறிக்கொண்டு என்னைப்பார்த்துக் கேட்டாள்.

''நீ வரலயாடா?''

''இல்ல. என் பிரண்டு வருவான். அவனுக்காக வெயிட் பண்றேன்.  அப்புறமா வாறேன்''

உண்மையில் அந்தப் பஸ்ஸில் போவதற்கு எனக்குக் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது.

******           *******            ******            *******       ******          ******            ****             ******


இதை எழுதிக்கொண்டிருந்தபோது தமிழ் தெரியாத என் மனைவி என்னைப்பார்த்து ஆங்கிலத்தில் கேட்டாள்.

''வாட் ஆர் யு ரைட்டிங் சீரியஸ்லி? (ஈடுபாட்டுடன் என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?)

''நதிங்க் சீரியஸ். ஐ ஆம் ஜஸ்ட் ரைட்டிங்க் எபௌட் அ செகண்ட் ஸ்டேண்டர்ட் ஸ்டுடண்ட்ஸ் க்ரஷ் ஆன் ஹிஸ் க்லாஸ் மேட். - என்று பதிலளித்தேன்.( முக்கியமாக ஒன்றுமில்லை. இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் வகுப்பு மாணவி ஒருத்தியின் மீது கொண்ட கன்றுக்குட்டி காதலைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்)

'' மை காட்! செகண்ட் ஸ்டேண்டர்ட்!! மஸ்ட் பி அ நாட்டி பாய் ( கடவுளே! இரண்டாம் வகுப்பா!! கட்டாயமாக குறும்பனாகத்தான் இருப்பான்'')- ஆச்சரியத்துடன் என்னைப்பார்த்தாள்.

 ''நாட் நெசெசரி. மைட் ஹேவ் பீன் சீரியஸ் இன் ஹிஸ் லவ்  ( அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை. தன் காதலில் தீவிரமானவனாகவும்  இருந்திருக்கலாம்) என்று சொல்லிவிட்டு எழுதுவதைத் தொடர்ந்தேன் நான். 

 

நினைவுகளுடன்

சரவணன். கா

 

Sunday, 23 October 2011

நாம் இப்படியில்லை

நாம் இப்படியில்லை


நான் விரும்பாதபடி என்னை நீ பார்க்காதே
அப்படிப்பார்க்க உன்னை நான் இதுவரை அனுமதிக்கவில்லை.
வரம்பு மீறிய பரிகாசம் 
நம் இருவருக்குமே உகந்ததில்லை.


உனக்குத் தெரியாது
சுகமான நிழலின் கீழ் நினைவுக்கு வர மறுக்கிற  
வன்முறையின் முகத்தில் ஜனனம் பெற்ற என் ஆதி;
பரிச்சயமாகத் தோன்றும் புதிதான நாட்கள்;
நறுமணம் தர மறுக்கும் புதிய மலர்கள்.


சுகமான எல்லாம் எனக்கு அனுபவப்புதுமையானவை
அலங்கோலத்தில் தொடங்கிய என் ஆதி 
நன்றிற்கும் தீதிற்கும் விளக்கவுரை கேட்டதில்லை;


இதுதான் நான்.


என்னில் இருந்து பிரிய மறுக்கும் 
வெந்ததின் மிச்சங்கள் 
உன் சந்தோசத்தை என்னைச் சந்தேகம் கொள்ளச் செய்கின்றன.
உன்னில் இருந்து பிரிய மறுக்கும் 
வேட்கையின் மிச்சங்கள்
என் சந்தோசத்தை உன்னைச் சந்தேகம் கொள்ளச் செய்கின்றன.


உன்னுடைய உலகில் 
என்னுடைய எண்ணங்கள் பரிச்சயமற்றவை.
என்னுடைய உலகில் 
உன்னுடைய எண்ணங்கள் கேலிக்கூத்தானவை
விதி விலக்கிப் பிறந்தவர்களா நாம்?


இல்லை.

நம் உலகங்கள் வேறு;
நம் விருப்பங்கள் வேறு;
நம் இயலுமையும் இயலாமையும் 
வெவ்வேறு தளங்களில் சமமானவை;
ஒப்பீடுதான் அறிவிலித்தனம்.
கட்டாயம்தான் அடிமுட்டாள்தனம்.
கற்பதே தேவையற்றது என்னும்போது
நாம் கற்பித்துக் கொள்வது அதிகப்பிரசங்கித்தனம்.


அண்ணாந்து பார்
விதியின் வலிய கோடரி  
ஒன்றாய் வாழச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது.
சீக்கிரம் வா- அது
விழும் முன் 
நம்மை ருசிக்கத் தவமிருக்கும் 
நம் கத்திகளைப் புதைத்து விடுவோம்.


கா.சரவணன்




இதனையும் நீங்கள் படிக்க விரும்பலாம் 




அன்பர்கள் www.solitaryindian.blogspot.com  என்ற தளத்தை அணுகி நான் இன்று பதிவு செய்துள்ள " Gadaffi's Death and the End of Iraq War- America's unfinished agenda on Middle east Oil " என்ற கட்டுரையைப்  படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

Friday, 14 October 2011

பந்தயம்


 செகாவ்- ரஷ்யாவின் மகத்தான இலக்கிய மாமேதைகளில் ஒருவர். தொழிலால் மருத்துவர். அவர் ரஷ்ய மொழியில் எழுதிய ''பந்தயம்'' என்ற சிறுகதை புகழ் பெற்ற ஒன்று. அதன் ஆங்கில வடிவத்தை என்னால் இயன்ற வரை தமிழில் தர முயன்றிருக்கிறேன். மொழிபெயர்ப்பு எனக்குப் புதிதல்ல- ஆனால் என் மொழிபெயர்ப்பு உங்களுக்குப் புதிது. இன்னும் சிறந்த வடிவம் பெற உங்கள் கருத்துக்களை வெண்டுகிறேன்.  வாழ்க்கையைத் தத்துவார்த்தமாகப் பார்க்க வாசகனைத் தூண்டும் வகையில் அமைந்த மிகச் சில இலக்கியப் படைப்புகளில் இதனை இன்றியமையாத ஒன்றாக நான் கருதுகிறேன். 


பந்தயம் ((Tamil Translation of Anton Chekhov’s THE BET)

அது இலையுதிர்காலத்தின் இருண்டு போன ஓர் இரவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஓர் இலையுதிர் கால சாயங்காலப்பொழுதில் தான் கொடுத்த ஒரு விருந்தினை நினைத்தவாறே அந்த வட்டிக்கடைக்காரன் தன்னுடைய படிக்கும் அறையில் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தான். அவ்விருந்தில் சில அறிவாளிகள் இருந்தனர்; சுவையான விவாதமும் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. பல விவாதங்களுக்கு மத்தியில் மரண தண்டனையைப்பற்றியும் அவர்கள் பேசலானார்கள். அங்கே வந்திருந்த சில பத்திரிக்கையாளர்களையும் படித்த சிலரையும் தவிர விருந்தினர்களில் பெரும்பாலானோர் மரண தண்டனையை மறுதலித்தார்கள். மரண தண்டனை என்பது காலாவதியாய்ப்போன, கிறித்தவ நாடுகளுக்குப் பொருந்தாத, கண்ணியமற்ற ஒன்றென்று அவர்கள் கருதினார்கள். அவர்களில் சிலர் மரண தண்டனைக்குப்பதிலாக ஆயுள் தண்டனை தரப்படவேண்டும் என்றார்கள்.

'' இதனை நான் ஒத்துக்கொள்ள முடியாது'' என்று கூவினான் விருந்தைத் தந்தவன். “நான் மரண தண்டனையையும் சோதித்துப் பார்த்ததில்லை; ஆயுள் தண்டனையையும் சோதித்துப் பார்த்ததில்லை. ஆனால் எந்தவொரு முன் அனுபவமும் அவசியமில்லாமல் ஒருவன் தீர்மானிக்க வேண்டும் என்னும்போது மரண தண்டனை ஆயுள் தண்டனையைக்காட்டிலும் கண்ணியமானது; மனிதாபிமானமிக்கது என்று சொல்வேன். மரண தண்டனை ஒருவனை உடனடியாகக் கொல்லுகிறது; ஆனால் ஆயுள் பூராவுமான தண்டனை அணு அணுவாகக் கொல்லுகிறது. எந்தக் கொலையாளி அதிக மனிதாபிமானமுள்ளவன்? உங்களை சில நிமிடங்களில் கொல்பவனா அல்லது ஆயுள் முழுக்க இழுத்தடித்து மெதுவாகக் கொல்பவனா?'' என்று கேட்டான் அவன்.

''இரண்டுமே கண்ணியமற்றவை. ஏனெனில் இரண்டுக்குமே ஒரே குறிக்கோள்தான்- உயிரை எடுப்பது. நாடு என்பது கடவுள் அல்ல. விரும்புகிற போது உயிர்ப்பிக்க முடியாத ஒன்றை எடுப்பதற்கு நாட்டுக்கு உரிமை இல்லை'' என்று கருத்து தெரிவித்தான் வந்திருந்த விருந்தினர்களில் ஒருவன்.

வந்திருந்த விருந்தினர்களில் இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க வக்கீலும் ஒருவன். அவனிடம் அபிப்ராயம் கேட்கப்பட்டபோது அவன் சொன்னான்:

"மரண தண்டனை ஆயுள் தண்டனை இரண்டுமே கண்ணியமற்றவைதான்; ஆனால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை இந்த இரண்டில் ஒன்றை என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுப்பேன்; ஒன்றுமே இல்லையென்பதை விட குறைந்த பட்சம் வாழ்வது என்பது சிறந்தது இல்லையா?"

ஓர் உயிர்ப்பான விவாதம் அரங்ககேறத் தொடங்கியது. அந்த நாட்களில் இளமையுடனும் அதற்கே உரிய படபடப்பும் உடையவனாய் இருந்த வட்டிக்கடைக்காரன் திடீரென்று இதைக்கேட்டு உணர்ச்சிவசத்தால் உந்தப்பட்டான்; அருகே இருந்த மேசையின் மீது தன் முஷ்டியால் ஓங்கிக் குத்தி அந்த இளம் வக்கீலைப் பார்த்து கத்தினான்:

''அது உண்மையாக இருக்க முடியாது. நான் இரண்டு மில்லியன் டாலர்கள் பந்தயம் கட்டுகிறேன். உன்னால் ஐந்து வருடங்கள் கூட தனிமையில் அடைப்பட்டு இருக்க முடியாது"

"இதை நீ உண்மையிலேயே நேர்மையாகச் சொன்னால் இந்தப் பந்தயத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் ஐந்து வருடங்களுக்கு அல்ல; பதினைந்து வருடங்களுக்கு" என்றான் அந்த இளம் வக்கீல்.

"பதினைந்தா!! ஒத்துக்கொள்கிறேன்" என்றலறினான் வட்டிக்கடைக்காரன். "கனவான்களே! இதோ இரண்டு மில்லியன் டாலர்களை பணயமாகக் கட்டுகிறேன்

நானும் ஒத்துக்கொள்கிறேன். நீ உனது மில்லியன்களைப் பணயம் வைக்கிறாய். நான் என் சுதந்திரத்தைப் பணயம் வைக்கிறேன்" என்றான் அந்த இளைஞன்.

இவ்வாறாக அந்த முட்டாள்தனமான காட்டுமிராண்டிப் பந்தயம் செயலாக்கம் பெற்றது. எண்ண இயலாத அளவுக்கு இருந்த மில்லியன்களால் ஏற்கனவே சீரழிந்தும் ஊதாரியாகவும் ஆகிப்போயிருந்த வட்டிக்கடைக்காரன் இந்தப் பந்தயத்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இரவு உணவின் போது அவன் இளம் வக்கீலைப் பார்த்துக் கிண்டல் செய்து பேசினான்;

"இன்னும் நன்றாகச் சிந்தித்துப் பார் இளம் காளையே! இன்னும் உனக்குக் கால அவகாசம் இருக்கிறது. இரண்டு மில்லியன்கள் என்பது எனக்கு ஒன்றுமே இல்லாத தொகை. ஆனால் நீ உன் வாழ்வின் மிகச் சிறந்த மூன்று அல்லது நான்கு வருடங்களை இழக்கப்போகிறாய். மூன்று அல்லது நான்கு வருடங்கள் என்று நான் சொல்லக் காரணம் அதற்கு மேல் நீ உயிரோடு இருக்கப்போவதில்லை என்பதுதான். மகிழ்ச்சியழிந்து போன மனிதா! இன்னொன்றையும் மறந்து விடாதே! வற்புறுத்தலின் பேரில் அடைபட்டு கிடப்பதை விட தானாக முன் வந்து அடைபட்டு கிடப்பதை பொறுத்துக் கொள்வதென்பது மிகவும் கடினமான காரியம். எந்த நேரத்திலும் சுதந்திரமாக நான் வெளியே செல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்ற எண்ணமே சிறையில் அடைபட்டு வாடும் உன் மொத்த வாழ்நாட்களை விஷமாக்கிவிடும். உனக்காக நான் வருந்துகிறேன்"

இதையெல்லாம் நினைத்தபடி அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த வட்டிக்கடைக்காரன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்; '' அந்தப் பந்தயத்தின் குறிக்கோள்தான் என்ன? அந்த மனிதன் தன் வாழ்க்கையின் பதினைந்து வருடங்களை தொலைப்பதனாலும் நான் இரண்டு மில்லியன் டாலர்களை தூக்கி எறிவதனாலும் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? ஆயுள் தண்டனையைக் காட்டிலும் மரண தண்டனை சிறந்தது என்பதை அது நிரூபித்து விடுமா என்ன? இல்லை..இல்லை. இவை எல்லாம் அறிவுக்குப் புறம்பானவை; அர்த்தமற்றவை. என்னைப் பொறுத்தவரை அது கவலையறியாத ஒரு மனிதனின் மனோவியாதி ; அவனைப் பொறுத்த வரை பணத்தின் மீதான வெறும் பேராசை...'

அந்த மாலைப்பொழுதில் அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதையும் அவன் நினைத்துப்பார்த்தான். வட்டிக்கடைக்காரனின் தோட்டத்தில் அவனுக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் அந்த இளம் வக்கீல் தன்னுடைய அஞ்ஞாத சிறை வாழ்க்கை வருடங்களை இறுக்கமான கண்காணிப்பில் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. மேலும் பதினைந்து வருடங்களில் மனிதர்களைப் பார்க்க வேண்டியோ, மனிதக்குரலைக் கேட்க வேண்டியோ, கடிதங்களை, செய்தித்தாள்களைப் பெற வேண்டியோ விடுதியின் வாசலைத் தாண்டி வர அந்த வக்கீலுக்குச் சுதந்திரம் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது. இசைக்கருவிகள் மற்றும் புத்தகங்கள் வைத்துக்கொள்ளவும், கடிதங்கள் எழுதவும், மது அருந்தவும், புகைப்பிடிக்கவும் அவன் அனுமதிக்கப்பட்டான். ஒப்பந்தத்தின்படி, இவற்றிற்காகவே பிரத்தியேகமான சிறு சன்னல் ஒன்று செய்யப்பட்டு அதன் மூலமாக அவனுடைய வெளி உலகுடனான ஒரே தொடர்பு நிர்ணயம் செய்யப்பட்டது. அவனுக்குப் பிரியமான எதையும் அவன் பெறலாம்- புத்தகங்கள், இசை, மது இத்யாதி... எந்த அளவினதாக இருந்தாலும் சரி...எழுதிக்கேட்பதன் மூலம் அவனுக்குக் கிடைக்கும்...ஆனால் அந்தச் சிறிய சன்னலின் வழியே மட்டும்தான். அவனுடைய சிறைவாசம் முற்றிலும் தனிமையானது என்பதை உறுதி செய்யும் வகையில் அந்த ஒப்பந்தம் எல்லா விரிவான சிறிதான தகவல்களையும் தந்திருந்தது. அந்த இளைஞன் முழுமையாகப் பதினைந்து வருடங்களைக் கழிக்க வேண்டும்...அதாவது நவம்பர் 14,1870 பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி நவம்பர் 14, 1885 பன்னிரண்டு மணி வரையில்... ஒப்பந்தத்தில் இருந்து ஏதேனும் ஒரு சிறு மீறல்...அதாவது காலக்கெடு முடிய இரண்டு நிமிடங்கள் இருக்கும் பட்சத்தில் செய்யப்படும் மீறல் கூட வட்டிக்கடைக்காரனை இரண்டு மில்லியன் டாலர் பணம் தந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து விடுவித்து விடும்.

அவனுடைய முதல் வருட சிறைவாசத்தில் அந்தக்கைதி கடுமையான தனிமையாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தான் என்பதை அவன் எழுதிய குறுங்குறிப்புகளிலிருந்து ஒருவரால் அனுமானம் செய்ய முடிந்தது. அவன் தங்கி இருந்த விடுதியில் இருந்து பியானோவின் இசையை இரவு பகலாகக் கேட்க முடிந்தது. மதுவையும் புகையிலையையும் அவன் மறுத்து விட்டான். மது ஆசைகளைத் தூண்டிவிடுகிறது; ஆசைகள் ஒரு சிறைவாசியின் மிக மோசமான எதிரி என்று அவன் எழுதியிருந்தான். அது தவிர, தனிமையில் நல்ல மதுவைக் குடிப்பதைப் போன்ற பயங்கரமான ஒன்று எதுவும் இல்லை எனவும் கூறியிருந்தான். மேலும், புகையிலை அறையின் காற்றை அசுத்தப்படுத்திவிடுகிறது. முதல் வருடத்தில் அனுப்பப்பட்ட புத்தகங்கள் லேசான கருத்துக்களை பிரதானப்படுத்தியவையாகவும், புதினங்கள் சிக்கலான காதல் கதைக்களங்களை உடையனவாகவும், பிற கதைகள் துப்பறியும் கதைகளாகவும், கற்பனைக்கதைகளாகவும் மற்றும் இன்ன பிறவானவையாகவும் இருந்தன.

இரண்டாம் வருடத்தில் விடுதியில் பியானோ இசை கேட்கவில்லை. இந்த முறை கைதி இலக்கியங்களைக் கேட்கலானான். ஐந்தாம் வருடத்தில் இசை மீண்டும் கேட்டது; கைதி மீண்டும் மதுவைக் கோரினான். இத்தனை வருடங்களாக அந்த வக்கீல் சாப்பிடுவது, குடிப்பது, படுக்கையில் விழுந்து கிடப்பது, அடிக்கடி கொட்டாவி விடுவது, கோபத்துடன் தனக்குள்ளே பேசிக்  கொள்வதையல்லாமல் வேறொன்றையும் செய்யவில்லை என்று அவனை சன்னலின் வழியாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். அவன் புத்தகங்கள் படிப்பதில்லை. சிலசமயம் இரவு நேரங்களில் எழுதுவதற்காக உட்காருவான்; அப்படியே எழுதுவதில் பல மணி நேரங்களைச் செலவிடுவான். காலையில் தான் எழுதியவை எல்லாவற்றையும் கிழித்தெறிவான். ஒரு தடவைக்கு மேலாக அவன் அழுத சத்தம் கூட கேட்டதுண்டு.

ஆறாவது வருடத்தின் பின்பாதியில் அந்தக் கைதி மொழிகளையும், தத்துவத்தையும், வரலாற்றையும் அதீத ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தான். இவைகளைக் கற்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டான். அவன் வேண்டிய புத்தகங்களை வாங்கித்தரவே வட்டிக்கடைக்காரனுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. கைதியின் வேண்டுதலின் பேரில் நான்கு வருடங்களில் அறுநூறு கனமான புத்தகங்கள் வரவழைக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில்தான் வட்டிக்கடைக்காரன் தன்னுடைய கைதியிடம் இருந்து கீழ்க்கண்ட கடிதத்தைப் பெற்றான்:

''பிரியமான ஜெயிலர்! இந்த வரிகளை நான் ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். அம்மொழிகளை அறிந்தவர்களிடம் போய் இதனைக் காண்பி. அவர்கள் இதனைப் படிக்கட்டும். இதில் அவர்கள் ஒரு பிழையையேனும் கண்டால் தோட்டத்திற்குள் துப்பாக்கிக்குண்டால் ஒரே ஒரு முறை சுடுமாறு உன்னை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அப்படிச் சுடுவது என்னுடைய முயற்சிகள் வீண் போகவில்லை என்பதைக் காட்டட்டும். எந்த நாட்டிலும் எந்தக் காலக்கட்டத்திலும் வாழ்ந்த அறிவுஜீவிகள் பலதரப்பட்ட மொழிகளைப் பேசி வந்திருக்கிறார்கள். ஆனால் ஒரே மாதிரியான சுடர்தான் அவர்களுக்குள்ளே எரிகிறது. !! அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற என்னுடைய தெய்வீக சந்தோசம் உனக்குத் தெரிந்தால்”. கைதியின் ஆசை நிறைவேறியது; தோட்டத்தில் இரண்டு குண்டுகளை சுடுமாறு வட்டிக்கடைக்காரன் ஆணையிட்டான்.

பத்தாவது வருடத்திற்குப் பின் மேசையின் மீது அசையாமல் உட்கார்ந்திருந்து புதிய ஏற்பாட்டைத் தவிர அவன் வேறொன்றையும் படிக்கவில்லை. நான்கு வருடங்களில் அறுநூறு கற்றறியும் கனமான நூல்களைக் கற்றுத் தேர்ந்த ஒருவன் புரிந்துகொள்வதற்கு எளிதான மெல்லிய புத்தகம் ஒன்றின் பால் ஒரு வருடத்திற்கும் மேலாகக் காலவிரயம் செய்துகொண்டிருந்தது வட்டிக்கடைக்காரனுக்குப் புரியாத புதிராகத் தோன்றியது. இறையியலும், மதங்களின் வரலாற்றைப் பற்றிய புத்தகங்களும் புதிய ஏற்பாட்டைத் தொடர்ந்தன.

அவனுடைய கடைசி இரண்டு வருட சிறைவாசத்தின் போது அந்தக் கைதி மிக அதிக அளவிலான புத்தகங்களை எந்தவித பாரபட்சமும் இன்றி படிக்கலானான். சில சமயங்களில் இயற்கை அறிவியலில் மூழ்கியிருப்பான்; பின் பைரனையும் ஷேக்ஸ்பியரையும் கேட்பான். ஒரே சமயத்தில் பௌதீக சம்பந்தமான புத்தகங்கள், ஒரு மருத்துவக் குறிப்பேடு, ஒரு புதினம் மற்றும் தத்துவம் அல்லது இறையியல் மீதான ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றைக் கோருவதற்காக அவன் எழுதியிருந்த தாள்கள் வந்தன. அவன் படித்தது கப்பலின் உடைபாடுகளுக்கு மத்தியில் கடலில் நீந்திக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் தப்பிப் பிழைப்பதற்காகக் கையில் கிடைத்த பாய்மரக்கழிகளை ஒன்றன் பின் ஒன்றாக பேராசையுடன் கவ்விப்பிடிப்பதை ஒத்திருந்தது.

*    *    *    *    *     *

வட்டிக்கடைக்காரன் இதையெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டு நினைத்துப் பார்த்தான்:

''நாளை பன்னிரண்டு மணிக்கு அவன் தனது சுதந்திரத்தைத் திரும்பப்பெற்றுவிடுவான்; எங்களுடைய ஒப்பந்தப்படி நான் அவனுக்கு இரண்டு மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும்; அப்படி நான் கொடுத்தால் என்னளவில் எல்லாம் தீர்ந்து விடும்; நான் முற்றிலும் சீரழிந்துவிடுவேன்"

பதினைந்து வருடங்களுக்கு முன்பு  மில்லியன் டாலர்கள் என்பது அவன் எண்ணிப்பார்க்க அவசியமற்றவைகளாக இருந்தன. ஆனால் இப்போது தன் கடன்கள் பெரிதா அல்லது சொத்துக்கள் பெரிதா என்று தன்னைக் கேள்வி கேட்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. பங்குச்சந்தையில் பணச்சூதாட்டம், கண்மூடித்தனமான யூகம் மற்றும் அவனுடைய அந்திமக்காலங்களில் கூட அவனால் வெளிவர முடியாத ஊதாரித்தனம் எல்லாம் சேர்ந்து அவனது மொத்தச் சொத்துக்களையும் படிப்படியாக அழிவின் விளிம்புக்கு கொண்டு வந்திருந்தது. தலைக்கனமுள்ளவனாகவும், பயமில்லாதவனாகவும், தன்னம்பிக்கையுடையவனாகவும் இருந்த கோடீஸ்வரன் தன் முதலீட்டில் நிகழும் சிறு ஏற்றத் தாழ்வைக்கூட கண்டு நடுங்கும் சராசரி வட்டிக்கடைக்காரனாக அவன் மாறிப்போயிருந்தான்.

"வீணாய்ப்போன பந்தயம். அந்த மனிதன் ஏன் இன்னும் செத்துத் தொலைக்கவில்லை?" என்று விரக்தியில் தன் தலையை இறுகப்பிடித்துக்கொண்டு தனக்குள்ளே முனகிக்கொண்டான். ''அவனுக்கு இப்போதுதான் நாற்பது வயதாகிறது; என்னிடமிருக்கும் கடைசி பைசாவையும் அவன் பிடுங்கிக்கொள்வான்; திருமணம் செய்து கொள்வான்; வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பான்; பங்குச்சந்தையில் சூதாடுவான்; நான் அவனைப் பொறாமையுடன் ஒரு பிச்சைக்காரனைப் போல பார்க்கும்போது தினம் தினம் அவனிடமிருந்து ஒரே வாக்கியத்தை நான் கேட்கவேண்டியிருக்கும்: எனக்குக் கிடைத்த இந்த சந்தோசமான வாழ்க்கைக்கு நான் உனக்குக் கடமைப்பட்டுள்ளேன். உனக்கு நான் எதாவது உதவுகிறேன்" ......" இல்லை...இது மிகவும் அதிகம். நான் கடனாளியாவதிலிருந்தும் அவமானத்திலிருந்தும் தப்புவதற்கு ஒரே வழி அந்த மனிதன் சாக வேண்டும்"

மணி மூன்று அடித்ததை வட்டிக்கடைக்காரன் கவனித்தான். வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். குளிர்ந்து போயிருந்த மரங்களின் சலசலப்பைத் தவிர வேறு எந்தச் சத்தத்தையும் வெளியிலிருந்து கேட்கமுடியவில்லை. எந்தச் சத்ததையும் எழுப்ப முயலாமல் அலமாரியிலிருந்த பதினைந்து வருடங்களாகத் திறக்கப்படாமல் இருக்கும் அந்த விடுதியின் சாவியை தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினான் வட்டிக்கடைக்காரன்.

தோட்டத்தில் இருட்டாகவும் குளிராகவும் இருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது. புழுக்கமான பனியைக் கிழித்தோடும் காற்று அந்தத் தோட்டத்தில் அலறியபடி வீசிக்கொண்டு இருந்தது. அங்கிருந்த மரங்களை ஓய்வெடுக்க விடாமல் செய்துகொண்டிருந்தது. வட்டிககடைக்காரன் தன் கண்களை இறுக்கிச் சீர் படுத்தி பார்க்க முயன்ற பின்பும் அவனால் நிலத்தையோ, வெண் சிலைகளையோ, விடுதியையோ மரங்களையோ பார்க்கமுடியவில்லை. விடுதி இருந்த இடத்தை அடைந்து இரண்டு முறை காவலாளியை அழைத்துப்பார்த்தான். எந்தப் பதிலும் வரவில்லை. அனேகமாக காவல்காரன் குளிரிலிருந்து தப்ப எங்காவது தஞ்சம் புகுந்திருப்பான். சமையலறையிலோ செடிப்பாத்திகள் உள்ள இடத்திலோ நன்றாகத் தூங்கிக்கொண்டிருப்பான்.

'' நான் நினைத்ததை நடத்தி முடித்து விட்டால் காவல்காரனின் மீதுதான் முதலில் சந்தேகம் வரும்" என்று எண்ணினான் வட்டிக்கடைக்காரன்.

இருட்டில் வாசல்படிகளையும் வாசலையும் உணர்ந்த படி விடுதியின் நுழைவாயிலுக்குள் சென்றான். அங்கிருந்த சிறு பாதை ஒன்றை தட்டித் தடவியபடி தீக்குச்சி ஒன்றைப் பற்ற வைத்தான். அங்கே ஒரு பிராணியும் இல்லை. கட்டிலொன்று காணப்பட்டது. ஆனால் அதன் மேல் படுக்கை ஏதும் இல்லை. மூலையில் ஒரு தகரத்தாலான 'ஸ்டவ்' ஒன்று இருந்தது. கைதியின் அறைக்கு இட்டுச்செல்லும் கதவின் மேல் முத்திரை உருக்குலையாமல் அப்படியே இருந்தது.

தீக்குச்சி அணைந்தபோது நடுக்கத்துடன் கிழவன் அந்தச் சிறுசன்னலின் வழியே எட்டிப்பார்த்தான். கைதியின் அறையில் ஒரு மெழுகுவர்த்தி மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அவன் மேசையின் மீது அமர்ந்திருந்தான். அவனுடைய முதுகு, தலையிலிருந்த முடி மற்றும் கைககளைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. திறந்திருந்த புத்தகங்கள் மேசையின் மீதும், இரண்டு ஈஸி சேர்களின் மீதும், மேசையின் அருகிலிருந்த கம்பள விரிப்பின் மீதும் பரவிக் கிடந்தன.

ஐந்து நிமிடங்கள் கடந்தன. கைதியிடமிருந்து எந்தவொரு அசைவும் இல்லை. பதினைந்து வருடச் சிறைவாசம் அசையாமல் உட்கார்ந்திருக்க அவனுக்குக் கற்றுத் தந்திருந்தது.     வட்டிக்கடைக்காரன் விரல்களால் கதவைத் தட்டினான். பதிலுக்கு அந்தக் கைதி எந்தவொரு அசைவையும் காட்டவில்லை. பிறகு கதவின் முத்திரைகளை வட்டிக்கடைக்காரன் எச்சரிக்கையாக உடைத்து பூட்டின் சாவித்துளைக்குள் சாவியைக் கவனமாகச் செருகினான். துருப்பிடித்த பூட்டு கரகரப்பான சத்ததை உண்டுபண்ணியது; கதவு க்ரீக்க்க் சத்ததுடன் திறந்து கொண்டது. வட்டிக்கடைக்காரன் காலடிச்சத்தங்களையும் ஆச்சரியம் நிறைந்த கூக்குரலையும் எதிர்பார்த்தான். ஆனால் மூன்று நிமிடங்கள் கழிந்தபின்பும் முன்பு நிலவிய அதே அமைதி அங்கே நிலவியது. உள்ளே செல்ல மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டான்.....

மேசையில் சராசரி மனிதர்களைப் போல தோற்றமளிக்காத ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தான். தோல் எலும்போடு இறுக ஒட்டிப்போய், பெண்களுக்கு உள்ளதைப்போல நீண்டு சுருண்ட கூந்தலும் தாறுமாறாக வளர்ந்திருந்த தாடியுமாக ஓர் எலும்புக்கூடாக அவன் காட்சியளித்தான். அவனுடைய முகம் மண்ணின் நிறமேற்று மஞ்சளாக மாறிப்போயிருந்தது. கன்னங்கள் குழி விழுந்து போயும், நெடியதுமாய் குறுகியதாகவும் போயிருந்த முதுகும், அவனது பரட்டைத் தலையைத் தாங்கிக்கொண்டு இருந்த மெலிந்தும் மென்மையாகவும் ஆகியிருந்த கைகளும் பார்க்கும்போதே வேதனையைத் தருவதாக இருந்தன. அவன். முடிகள் ஏற்கனவே நரைத்துப்போயிருந்தன. வயோதிகம் தந்ததைப் போல் இருக்கும் அவனுடைய அசிங்கமான முகத்தைப் பார்ப்பவர்கள் அவனுக்கு நாற்பது வயதுதான் ஆகிறது என்று நம்ப மாட்டார்கள். கவிழ்ந்திருந்த அவனுடைய தலைக்கு முன்னால் மேசையில் ஒரு வெள்ளைத்தாளும் அதில் மிகச்சிறிய கையெழுத்தில் ஏதோ எழுதப்பட்டு இருந்தது.

''பரிதாபத்துக்குரியவன். நன்றாகத் தூங்கிக்கொண்டு இருக்கிறான். அனேகமாக மில்லியன் டாலர்களைப் பற்றிக் கனவு காண்கிறான் போலும்'' என்று வட்டிக்கடைக்காரன் நினைத்துக்கொண்டான். "ஏற்கனவே பாதியாய்ச் செத்துப்போன இவனைப் படுக்கையில் வீசி...சிறு தலையணை ஒன்றால் மூச்சை நிறுத்த லேசாக ஓர் அழுத்தம்...இது இயற்கையல்லாத மரணம் என்பதை கவனமாக மேற்கொள்ளப்படும் சோதனைகளால் கூட கண்டுபிடிக்க முடியாது''.... இருப்பினும் இவன் என்னதான் எழுதியுள்ளான் என்பதையும் படித்து விடுவோமே''

வட்டிக்கடைக்காரன் அந்தத் தாளை மேசையிலிருந்து எடுத்து கீழ்க்கண்டவற்றைப் படிக்கலானான்:

"நாளை பன்னிரண்டு மணிக்கு நான் எனது சுதந்திரத்தையும் மற்ற மனிதர்களொடு உறவாடும் உரிமையையும் மீண்டும் பெற்றுவிடுவேன்; ஆனால் இந்த அறையிலிருந்து வெளியேறி சூரிய உதயத்தைப் பார்க்கும் முன் சில வார்த்தைகளை உனக்குச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். தூய்மையான மன நிலையுடன் சொல்கிறேன்...என்னையாளும் இறைவனின் முன்பாக...இந்த விடுதலை, இந்த வாழ்க்கை இந்த ஆரோக்கியம் மற்றும் உலகின் நல்ல விஷயங்கள் என்று உன் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இன்ன பிற இத்யாதிகளையும் நான் வெறுக்கிறேன்...

''பதினைந்து வருடங்களாக நான் இந்த உலகின் லௌகீக வாழ்க்கையைப்பற்றி படித்து வருகிறேன். இந்த உலகத்தையும் மனிதர்களையும் நான் பார்க்கவில்லை என்பது உண்மை; ஆனால் உன் புத்தகங்களின் மூலம் நான் நறுமணமிக்க மதுவைக் குடித்திருக்கிறேன்... பாடல்களைப் பாடியிருக்கிறேன்...காடுகளில் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் வேட்டையாடியிருக்கிறேன்... பெண்களைக் காதலித்திருக்கிறேன்..உன் கவிஞர்களாலும் அறிவுஜீவிகளாலும் மாயாஜாலத்தால் உருவகிக்கப்பட்ட நிரந்தர மேகங்களையொத்த அழகான பெண்கள் என்னை இரவில் சந்தித்திருக்கிறார்கள்... என் மனதைச் சுழற்றியடித்த அருமையான கதைகளை என் காதுகளில்  சொல்லியிருக்கிறார்கள்....உன் புத்தகங்களில் நான் எல்பர்ஸ் மற்றும் மௌண்ட் ப்ளாங்க் மலைச்சிகரங்களில் ஏறியிருக்கிறேன்... அங்கேயிருந்தபடி சூரியோதயத்தைப் பார்த்திருக்கிறேன்...அது வானையும், நீலப்பெருங்கடலையும், மலைமுகடுகளையும் தன்னுடைய தங்கச் செந்நிறத்தால் வெள்ளமாக்கியதைக் கவனித்திருக்கிறேன். அங்கே இருந்து தலைக்கு மேல் புயல் மேகங்களைக் கிழிக்கும் மின்னல் ஒளிக்கீற்றைப் பார்த்திருக்கிறேன்...பசுமையான் காடுகளையும், சமவெளிகளையும், ஆறுகளையும், ஏரிகளையும், நகரங்களையும் நான் பார்த்திருக்கிறேன்...சைரன்களின் கீதத்தையும், மேய்ப்பாளர்களின் குழலிசையையும் நான் கேட்டிருக்கிறேன்...கீழே பறந்து என்னோடு பேச வந்த கடவுளின் அழகான பிசாசுகளின் இறகுகளை நான் தொட்டிருக்கிறேன்...உன் புத்தகங்களில் ஆழமே தெரியாத குழிக்குள் என்னை நான் வீசியிருக்கிறேன், ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்கிறேன், கொலைபுரிந்திருக்கிறேன், நகரங்களை எரித்திருக்கிறேன், புதிய மதங்களைப் போதித்திருக்கிறேன், முழு அரசுகளைக் கைப்பற்றியிருக்கிறேன்...

''உன் புத்தகங்கள் எனக்கு ஞானத்தைத் தந்துள்ளன. காலங்காலமாக ஓய்வில்லாத மனிதனின் எண்ணங்கள் உருவாக்கியவை யாவும் என் மூளைக்குள் ஒரு சிறிய அளவுகோளில் சுருக்கப்பட்டுள்ளன. உங்கள் எல்லோரைக்காட்டிலும் நான் அறிவாளி என்பது எனக்கு நன்றாகத் தெரியும்''

''உங்கள் புத்தகங்களை நான் வெறுக்கிறேன். இந்த ஞானமும், இந்த உலகத்தின் ஆசிர்வாதங்களும் எனக்குப் பிடிக்கவில்லை. அவை எல்லாம் கானல் நீரைப் போல மதிப்பே இல்லாதவை; சிறுமையானவை; வெறும் மாயை; ஏமாற்றுத்தனமானவை; நீ கர்வமிக்கவனாக இருக்கலாம். அறிவுள்ளவனாக இருக்கலாம். நல்லவனாக இருக்கலாம்.ஆனால் சாவு என்ற ஒன்று உங்கள் எல்லோரையும் பூமிக்குக் கீழே குழி தோண்டும் எலிக்ககூட்டங்களை விட நீங்கள் சிறந்தவர் இல்லை என்பதைப் போல இந்தப்பூமியின் முகத்தினின்று அகற்றி விடும்...உன் சந்ததி, உன் வரலாறு, அழிவில்லாததாகக் கருதப்படும் உன் அறிவுஜீவிகள் எல்லாமும் இந்தப் பூமிப்பந்துடன் சேர்ந்து எரிந்தோ உறைந்தோ போய்விடும்''

''நீங்கள் பைத்தியங்கள். தவறான வழியில் சென்று விட்டீர்கள். உண்மைக்குப்பதில் பொய்யைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். அழகுக்குப்பதில் அசிங்கத்தைத் தேர்ந்துள்ளீர்கள். திடீரென்று ஆப்பிளும் ஆரஞ்சும் பழங்களைத் தருவதற்குப் பதிலாக தவளைகளையும் பல்லிகளையும் தந்தாலோ, ரோஜாப்பூக்கள் நறுமணத்திற்குப் பதிலாக குதிரையின் வியர்வை நாற்றத்தை தந்தாலோ நீங்கள் ஆச்சரியம் கொள்வீர்கள். அதனால்தான் சொர்க்கத்திற்குப் பதிலாக நர உலகைக் கேட்கும் உங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களைப் புரிந்து கொள்ள நான் விரும்பவில்லை''

''நீ எதற்காகவெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறாயோ அவைகளையெல்லாம் நான் வெறுக்கிறேன் என்பதை நான் செயலில் காட்ட ,முன்பு நான் சொர்க்கமாக நினைத்த ஆனால் தற்போது வெறுக்கின்ற அந்த இரண்டு மில்லியன் டாலர்களை இப்போது வெறுத்தொதுக்குகிறேன். அந்தப்பணத்தைக் கோர உரிமை இல்லாதவனாக மாற வேண்டி நான் இங்கிருந்து ஒப்பந்தம் செய்ய்யப்பட்டதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே வெளியேறுகிறேன்......அதன் மூலம் ஒப்பந்தத்தை முறிக்கிறேன்...

படித்து முடித்த பின் வட்டிக்கடைக்காரன் தாளை மேசையின் மீது வைத்து விட்டு புதிரான அந்த மனிதனின் தலையில் முத்தமிட்டான்; அழத் தொடங்கினான். அந்த விடுதியை விட்டு வெளியே வந்தான். பங்குச்சந்தையில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட சமயத்தில் கூட அவன் தன் மீது இத்தனைக் கழிவிரக்கம் கொண்டதில்லை. வீட்டிற்குச் சென்று படுக்கையில் சாய்ந்த பின்பும் அவனுடைய கண்ணீரும் உணர்ச்சிகளும் பல மணி நேரத்திற்கு அவனைத் தூங்கவிடாமல் செய்தன.

அடுத்த நாள் காலை காவல்காரன் வெளிறிய முகத்துடன் ஓடிவந்து விடுதியில் இருந்த மனிதன் சன்னல் வழியாக ஏறித் தோட்டத்துக்குள் குதித்து வாயிலுக்குச் சென்று பின்னர் மறைந்துவிட்டதாக வட்டிக்கடைக்காரனிடம் சொன்னான். வட்டிக்கடைக்காரன் வேலைக்காரர்களுடன் விடுதி வரை சென்று கைதி வெளியே ஓடிவிட்டதை உறுதி செய்து கொண்டான். தேவையில்லாத கிளர்ச்சிப் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டி மேசையிலிருந்து மில்லியன் டாலர்கள் வெறுக்கப்பட்டிருந்த அந்தத் தாளை எடுத்துக்கொண்டான்; வீட்டுக்குச் சென்று அதனை அலமாரியில் வைத்துப் பூட்டினான்.

ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில் : சரவணன். கா